காட்சி 14.

இடம் : பூந்தோட்டம். காலம் : மாலை

பாத்திரங்கள் : லீலா, பாலசுந்தரம்.

[லீலாவும், பாலசுந்தரமும் கிணற்றங்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.]

பாலு : லீலா இப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் உடம்பு என்ன ஆகும்? உன் அண்ணன் மட்டும் தான் அதிசயமாக ரெங்கோனுக்குப் போயிருக்கிறார்? எத்தனையோ லக்ஷக்கணக்கான ஜனங்கள் தாய் நாட்டைத் துறந்து வயிற்றுப் பிழைப்புக்காக வெளி நாடுகளுக்குச் சென்று எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? லீலா : இருக்கலாம். இருந்தாலும் பிறந்தது முதல் இணை பிரியாது வளர்ந்து, இடையில் பிரிய நேர்ந்தால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்? மேலும் இவ்வளவு நாளாய் எங்களைத் திரும்பிக்கூடப் பாராமல் இருந்த என் மாமாவுக்கு இப்போது திடீரென்று எங்கள் குடும்பத்தின் மீது இரக்கம் பிறந்திருக்கிறது. அம்மாவும் அடிக்கடி அங்கே போக ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாலு : அதனாலென்ன? அண்ணன் தங்கை யென்றிருந்தால் ஒருகாலம் இல்லாவிட்டாலும் ஒருகாலத்தில் சேராமல் இருக்க முடியுமா? உன் அண்ணன்தான் பெரிய ரோஷக்காரர். ஏன்! இந்தச் சமயத்திலாவது ஒத்துப்போய் விஷயத்தை எடுத்துச் சொல்லிக் கேட்டிருந்தால் உன் மாமன், ஏதாவது உதவி செய்திருக்க மாட்டாரா?

லீலா : ஆமாம். அவர் உதவியை எதிர்பார்த்தால் நான் சாகவேண்டியதுதான்.

பாலு : ஏன்?

லீலா : அவருக்கு என்னை நாலாந்தாரமாகக் கல்யாணம் செய்து கொடுப்பதாய் இருந்தால், அவர் எந்த உதவியும் செய்யத் தயாராம்.

பாலு : என்ன! உன்னையா? உண்மையாகவா? இனி மேலா அவர் கலியாணம் செய்துகொள்ள விரும்புகிறார்? பேஷ்! அவருக்கு ஏதாவது கொஞ்சம் மூளைக் கோளாறு எதுவும்...... இருக்குமா?

லீலா : பத்து நாளைக்கு முன் ஒரு நாள் எதிர்பாராத முறையில் காரைப் போட்டுக்கொண்டு ஏக ஆடம்பரமாய் எங்கள் வீட்டுக்கு வந்தார்.  பாலு : என்ன! திவான் பகதூரா! உங்கள் வீட்டுக்கா! பிறகு?

லீலா : அண்ணனைக் கண்டதும் அம்மாவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேனென்று என்னென்னமோ பீடிகை போட்டுக் கடைசியில் சுற்றி வளைத்து சம்பந்தப் பேச்சுக்கு வந்துவிட்டார். இதைக் கேட்டதும் நான் நடுங்கியே போய்விட்டேன்.

பாலு : அப்புறம் முடிவு என்ன ஆயிற்று? லீலா அதைத்தானே சொல்லுகிறேன்; அதற்குள் பொறுக்கவில்லையா?

பாலு : வீணாகக் கதையை வளர்க்கவேண்டாம்; முடிவு என்ன?

லீலா : முடிவு என்ன, இந்தப் பேச்சு நடந்துகொண்டிருக்கும்போது அண்ணா வந்தார்...

(சிரிக்கிறாள்)

பாலு : என்னதான் நடந்தது சொல்லேன்; நானும் சேர்ந்து சிரிக்கிறேன்.

லீலா : கொஞ்ச நேரம் அண்ணா சம்மதிப்பவர்போல் விளையாட்டாகப் பேசிக்கொண்டே போனார். நான்கூட ஏமாந்துவிட்டேன். அப்புறம் திடீரென்று ஆல்ரைட் திவான்பகதூர்! கிளம்பலாம் என்று......... அப்பா... அப்பொழுது அண்ணாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! என்ன நடந்து விடுமோ என்று எனக்குப் பயமாகவே இருந்தது.

பாலு : அப்புறம்;

லீலா : கடைசியில் மாமாவந்து நான் திவான்பகதூர் என்பது உண்மையானால் உன்னை என்ன செய் கிறேன் பார் என்று சபதம் செய்துவிட்டு (சிரித்துக் கொண்டே) டிரைவர் காரையெடு என்றார்............ அந்த டிரைவர் வந்து, எஜமான்! நாலு ஆள் வேணும் கொறைச்சி தள்ளனும், என்றான்.

(சிரிக்கிறாள்)

பாலு : (சிரித்து) ஆகா, அந்த ரசமான காட்சியை நான் பார்க்காமல் போய்விட்டேனே! திவான் பகதூர் உங்களுக்குத் தீங்கு செய்வாரென்றே நினைக்கிறேன்.

லீலா : சேர்வை, பிராது போடுவதாக நோட்டீஸ் அனுப்பியதற்குக் கூட திவான்பகதூர்தான் காரணமாயிருக்க வேண்டுமென்று அண்ணாவுக்கு சந்தேகம்.

பாலு : அப்படியானால், எல்லாமே திவான் பகதூரின் தூண்டுதலில்தான் நடந்திருக்கும் போல் தெரிகிறது. எல்லாம் தெரிந்திருந்தும் இந்தச் சமயத்தில் ஏன் உன் அண்ணா ரெங்கோன் போகச் சம்மதித்தார்.

லீலா : வேறென்ன செய்வது? இந்தச் சமயத்தில் அதையும் விட்டுவிட்டால் குடியிருக்கும் வீடும் போய் விடும் மேலும்......... அம்மா......

பாலு : ஊம், அம்மாதான் இருக்கிறார்களே அம்மா உன் அம்மாவை நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும். நடந்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்தால் உன் அம்மாவே உன்னைத் திவான் பகதூருக்குக் கல்யாணம் செய்து கொடுக்கத் தயார் போலிருக்கிறது.

லீலா : யார் எதைச் செய்தாலும் சரி. இந்த உடலில் உணர்ச்சியோ, உயிரோ இருக்கும் வரை அது நடைபெறாது. ஆனால் நாம் எதற்கும் கொஞ்சம் ஜாக்ரதை யாகத்தான் இருக்கவேண்டும்.

பாலு : ஆமாமாம்; அவர் திவான்பகதூர்; பண பலம் அதிகமாக உள்ள அவர் நினைத்தால் எதையும் செய்யலாம். அவர் விஷயத்தில் ஜாக்ரதைக் குறைவாய் இருக்கலாமா?

லீலா : அவர் பணமும், பட்டமும், பதவியும் நம்மை என்ன செய்துவிட முடியும்? நாம் மட்டும் ஒரே உறுதியாக இருந்தால் நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது. சரி, நாழியாகிவிட்டது; இந்நேரம் அம்மா வந்திருந்தாலும் வந்திருப்பார்கள். நீங்கள் நாளை மாலை வருகிறீர்களா!

பாலு : ஆமாம், இப்போது உன் தாயார் எங்கே போயிருக்கிறார்கள்?

லீலா : மாமா வீட்டுக்குத்தான். அதுதான் முன்பே சொன்னேனே!

பாலு : ஆமாம் மறந்து விட்டேன்...... நாளை நான் ஒரு முக்கியமான வேலையாக வெளியூர் போகிறேன். வர இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அநேகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திக்கிறேன்.

லீலா : ஞாயிற்றுக்கிழமையா? வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு அம்மாடி! நான்கு நாட்களா ஆகும்? அது வரை நான் எப்படி உங்களைப் பார்க்காமல் இருக்க முடியும்? அப்படி என்ன முக்கியமான வேலை அது?

பாலு : கால் பந்து விளையாட்டுப் போட்டிக்காக எங்கள் காலேஜ் மாணவர் குரூப் ஒன்று வெளியூர் புறப்படுகிறது! அத்துடன் நானும் போக வேண்டும். கண்டிப்பாய் எப்படியும் ஞாயிற்றுக்கிழமை மாலை உன்னை இதே இடத்தில் சந்திக்கிறேன். நான் வரட்டுமா?

லீலா : ஞாயிற்றுக்கிழமை மாலை மறந்துவிடமாட்டீர்களே!  பாலு : இல்லை! நிச்சயமாய் மறக்கமாட்டேன். வருகிறேன்.

(புன்முறுவலோடு விடைகொடுக்கிறாள்; போகிறான், பெருமூச்சிடுகிறாள்.)

லீலா : (தனக்குள்) என் இன்பக்கனவு நனவாகும் நாள் என்றோ?


காட்சி 15.

இடம் : வீதி

பாத்திரங்கள் : ஜம்பு, சுப்பையா.

[ஜம்புவும், சுப்பையனும் வருகிறார்கள்]

ஜம்பு : டேய் சுப்பையா!

பையன் : வாங்க கணக்கப்பிள்ளை ஐயா, எஜமான் ஒங்களைக் கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க, ஒங்க வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டிருந்தேன்.

ஜம்பு : எதுக்குடா?

பையன் : எஜமான் தங்கச்சியில்லிங்க, அவங்க வந்திருக்காங்க.

ஜம்பு : அப்படியா! என்ன விஷயம்?

பையன் : எல்லாம் முடுஞ்சு போச்சு. எஜமானுக்கு நாள் பார்க்க வேண்டியது ஒன்னுதான் பாக்கி.

ஜம்பு : எஜமானுக்கு நாள் பாக்கனுமா?

பையன் : ஆமாங்க, எல்லா ஏற்பாடும் முடுஞ்சு போச்சு. ஐயரையுங் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/14&oldid=1073501" இலிருந்து மீள்விக்கப்பட்டது