காட்சி 20


இடம்: திவான்பகதூர் மாளிகை

காலம் : காலை

பாத்திரங்கள் : திவான்பகதூர், முனியாண்டி, வேலையாள். (பொன்னம்பலம் பிள்ளை உடை உடுத்திச் சிங்காரித்துக் கொண்டிருக்கிறார்; ஏவலாளர்கள் அணிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முனியாண்டி அங்கு வருகிறான்.)

முனி : மகமாயி!...

பொன் : என்ன முனியாண்டி! எல்லா ஏற்பாடுகளும் ஆகி விட்டதா? இதோ பார்! மாப்பிள்ளைக் கோலத்தில் நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. நீ தான் கவனித்துக் கொள்ளவேண்டும். ஐயர் வந்துவிட்டாரா? ஏன் அதற்குள் மேளத்தை நிறுத்திவிட்டான்? வாசித்துக் களைத்துவிட்டானோ? வாசித்துச் சொல்லப்பா.

முனி : (உள்பக்கம் பார்த்து அதிகாரமாக) அட எளவே... மேளத்தை வாசிங்கய்யா.

ஒரு ஆள் : மேளம் பொண்ணழைக்கப் போயிருக்குங்க.

பொன் : ஏப்பா முனியாண்டி! மேளம் ஒரு செட்டுக்குத்தான் சொன்னியா?

முனி : இல்லையே அடுத்த மேளம் இப்ப வந்துடும். ஐயர் வந்து தயாரா இருக்கிறாரு. பொண்ணழைக்க அப்பவே கார் அனுப்பியாச்சு பொண்ணு வந்ததும் திருப்பூட்ட வேண்டியதுதான். நீங்க ஒண்னுங் கவலெப்படாதிங்க, இந்தக் கலியாணம் ஒங்க கலியாணமே இல்லே. எங்கல்யாணம்.

பொன்: ஊம் சீக்கிரம் போl முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது. நீ போனால்தான் இதெல்லாம் சீக்கிரம் நடக்கும்.

முனி : ஆஹா இதோ ஒரு கொடியிலே வர்ரேன்.

(புறப்படத் திரும்புகிறான்.)

பொன் : முனியாண்டி! அங்கே கல்யாணக் கூடத்தில் யார் யார் இருக்கிறார்கள், பார்த்தாயா? பெரிய மனிதர்கள் எல்லாம் வருவார்கள், எல்லோரையும் மரியாதையாய் வரவேற்று சந்தனம் தாம்பூலம் கொடுக்க நல்ல ஆட்களாக......

முனி : அதெல்லாம் கவனிச்சிக்க கணக்கப்புள்ளே அங்கேயிருக்கிறாருங்க! ஒங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம். நீங்க சுருக்கா அலங்காரத்தை முடிச்சிக்கிட்டு வாங்க; அதுக்குள்ளே நான் போயிப் பொண்ணெக் கூட்டியாரேன்.

(முனியாண்டி போகிறான்)

பொன் : (வேலையாள் ஒருவன் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். பொன்னம்பலம் தன்னைக் கண்ணாடியில் பார்த்து மீசையை முறுக்கிக்கொண்டு விரைப்பாக நிமிர்ந்து வேலையாளைப் பார்த்துக் கேட்கிறார்) என்னடா! எப்படி இருக்கிறது? எல்லாம் சரியாய் இருக்கிறதா?  வேலை ஆள் : சாக்ஷாத் இருபது வயது வாலிபன் மாதிரி இருக்குங்க!

பொன் : மடையன்! என்னைப் பார்த்துக் கிழவனென்று சொன்னான்.

வேலையாள் : என்ன, ஒங்களெப்பாத்தா அப்படிச் சொன்னான்? அவன் யாருங்க பயித்தியக்காரன்?

பொன் : அவன் தாண்டா. அந்தக் காலிப்பயல் நடராஜன் (தனிமொழி) அடே நடராஜா! நான் யார் என்பது இன்னும் கொஞ்ச நாழியில் தெரியும். இன்று உன் தங்கை திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளையின் மனைவி ஆகப்போகிறாள். இப்போது உன் சபதம் என்ன ஆயிற்று? அயோக்ய நாயே! (அங்கவஸ்திரத்தை அலட்சியமாய் தாக்கிப் போட்டபடி ராஜநடை நடந்து செல்லுகிறார்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/20&oldid=1073507" இலிருந்து மீள்விக்கப்பட்டது