காட்சி 26.

இடம் : திவான்பகதூர் மாளிகை

காலம் : காலை

பாத்திரங்கள் : திவான்பகதூர், முனியாண்டி.
[முனியாண்டி மெழுகிக் கோலமிடப்பட்ட ஒரு இடத்தில் வாழை இலைகளைப்பரப்பி பூசைக்குரிய சாமான்களை முறைப்படி வைத்துக்கொண்டிருக்கிறான். பக்கத்தில் திவான்பகதூர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இவைகளை யெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்.]

பொன் : ஏம்பா முனியாண்டி! இந்த ஒரு முறையோடு இந்தப் பிசாசு தலைகாட்டாமல் ஓடிவிடுமல்லவா?

முனி : இது கெடக்குதுங்க; இதுதானா ஒரு பிரமாதம். ஏம்மேலே அந்த வேப்பமரக் கருப்பு வந்து, இந்தப் பெரம்பைக் கையிலே எடுத்தா ஆடாத பிசாசெல்லாம் வந்து ஆடும். எந்த ஏவலா இருந்தாலும் சரி, பில்லி சூனியமா இருந்தாலும் சரி பஞ்சாப் பறந்திடும். இப்பப் பாருங்களேன். கொஞ்ச நேரத்திலே வேடிக்கையை.

பொன் : ஆமாப்பா இதனால் எவ்வளவு செலவு வந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலையே இல்லை; எப்படி யாவது அந்தப் பிசாசு ஒழிந்தால் போதும்.

முனி : அதெல்லாம் நான் பார்த்துக்கிறேங்க. நீங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லுங்க!

 பொன் : சரி! இதோ கூட்டிவரச் சொல்லுகிறேன். அடே யாரடா அங்கே? சீக்கிரம்போய் வேலைக்காரி லெகஷ்மியிடம் சொல்லி லீலாவை சீக்கிரம் ஜாக்கிரதையாக அழைத்துவரச் சொல்.

(வேலையாள் போகிறான்.)

முனி : இதெப் பத்தி நீங்க கொஞ்சங்கூட யோசிக்கவே வேண்டாம். அதெ இப்ப ஒரு நிமிசத்திலே தொலைச்சுப்புடுவேன். ஆனா எஜமான், இந்த வருசம் கருப்பையா பூசைக்கு வேண்டிய செலவெல்லாம்.........

பொன் : அது எவ்வளவானாலும் நானே கொடுக்கிறேன்; எப்படியும் இந்த...... (லீலாவை அழைத்துக்கொண்டு லக்ஷ்மி வருகிறாள்)

முனி : வாங்க வாங்க, இப்படி உட்கார வையுங்க. (உட்காரவைக்கிறாள். முனியாண்டி தேங்காயை உடைத்துக் கற்பூரம் காட்டி சாம்பிராணிப் புகையைக் கிளப்பிக் கையில் உடுக்கை யெடுத்து அடித்து சாமி அழைக்கிறான். முனியாண்டிமீது சாமி வந்து சீது கிறது. லீலாவும் பேயாட ஆரம்பிக்கிறாள்.) நீ யாரம்மா? எங்கே வந்தே? ஒனக்கு என்ன வேணும்? வேண்டியதைக் கேட்டு வாங்கிக்கிட்டுப் போயிடு; இல்லேன்னா நான் என்ன பண்ணுவேன் தெரியுமில்லே? (லீலா பதிலே பேசாமல் ஆடிக்கொண்டே இருக்கிறாள்) சரி சரி நீ ஒழுங்காப் போமாட்டே! ஊம். குடுக்கவேண்டியதைக் குடுத்தாத்தான் போவே. (பிரம்பை எடுத்து உருவி வளைத்து) ஊம் என்ன சொல்றே! நீ யாருன்னு சொல்றியா இல்லேன்னா (என்று பிரம்பை ஓங்குகிறான். லீலா பேரிரைச்சல் போட்டு) டேய்! நீதானா என்னை விரட்ட வந்தவன்? உம் என்னை விரட்ட உன்னால் முடியுமாடா? உம் என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய்! டேய்....... (பிரம்பை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு பூசாரி முதல் பொன்னம்பலம் வரை எல்லோரையும் பலமாக விரட்டி அடிக்கிறாள். பூசாரி. உயிர் பிழைத்தால் போதுமென்று ஒடுகிறான்.. மற்றவர்களும் ஓடுகிறார்கள்.)


"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/26&oldid=1073517" இலிருந்து மீள்விக்கப்பட்டது