அந்தமான் கைதி/28
இடம் : திவான்பகதூர் மாளிகை.
காலம் : மாலை.
- பாத்திரங்கள் : திவான்பகதூர், முனியாண்டி, ஜம்பு
- [பொன்னம்பலம் வருத்தமாக உட்கார்ந்திருக்கிறார். முனியாண்டி வருகிறான்.]
முனி: நமஸ்காரமுங்க! என்ன இப்படி ஒரு மாதிரியா இருக்குறீங்க?
பொன் : (வெறுப்போடு முறைத்துவிட்டு மறுபுறம் திரும்பிக்கொள்ளுகிறார்.)
முனி : ஏங்க? என்னைப் பார்க்கப் புடிக்கிலிங்களா? ஆமாமா ஒங்க காரியந்தான் முடிஞ்சுபோச்சே இன்னெமே இவனைப் பார்த்து என்ன பிரயோசனம்? உம், நீங்க என்னைப் பாக்காட்டிப் பரவாயில்லே, பேசினபடி பணத்தைக் கொடுத்திடுங்க!
பொன் : (கோபமாக) பணமாவது பிணமாவது, ஏதுடா பணம்! அயோக்கியப் பயலே!
முனி : என்னங்க இப்படிச் சொல்றீங்க! எப்படியாவது கல்யாணத்தே முடிச்சுப்புட்டா ரூவா ஐநூறு தாரென்னு நீங்கதானே சொன்னீங்க!
பொன்: போதும், போதும்; நான் கல்யாணம் முடித்ததும் கட்டையிலே போனதும்; இதுவரை உன் பேச்சைக் கேட்டு அழுததெல்லாம் போதாதென்று இன்னும் உனக்கு வேறு அழவேண்டுமா? எரிகிற வீட்டில் கிடைத்தது ஆதாயமென்றா பார்க்கிறாய்? இனிமேல் ஒரு பைசாகூடக் கொடுக்கமாட்டேன். மரியாதையாய்ப் போய்விடு. தெரியுமா?
முனி : இங்கே பாருங்க, என்னாது? காரியம் முடிஞ்சு போச்சின்னா இப்படிப் பேசுறீங்க? இதெல்லாம் நல்லால்லேங்க!
பொன் : டேய் யாரடா அங்கே? (ஜம்புவும் மற்றொரு வேலையாளும் வருகிறார்கள்; அவர்களிடம்) இந்த அயோக்கியப் பயலைப் பிடித்து வெளியில் தள்ளுங்கள்.
- (என்று சொல்லிவிட்டு திவான்பகதூர் உள்ளே போய் விடுகிறார்.)
ஜம்பு: ஏய் முனியாண்டி! என்ன கலாட்டா இது?
முனி : ஏய்யா! நீங்க இருக்கும் போதுதானே சொன்னாரு. காரியம் முடிஞ்சதும் ரூவா ஐநூறு தாரேன்னு. இப்பக் கேட்டா, போடா வாடாப் பொட்டக் கண்ணான்னு ஓட்டுனா அதுக்கு நானா மசிவேன்!
ஜம்பு : காரியம் முடிய நீ என்ன சாதித்து விட்டாய்? இவர் இல்லாவிட்டால் காரியம் முடிந்திருக்குமோ?
முனி : யாரு இல்லேன்னா அது வேறே நமக்குள்ளே ஒத்துப்போற விஷயமுல்லே அது. இப்ப அவரு பணங் குடுத்தா நான் தான் என்ன, மறந்துடுவேனா? அது வழக்கப்படி உள்ள கமிஷன் உங்களுக்குக் குடுத்திடுவேன். இப்படி அடியோட ஒண்னுமில்லேன்னா? அது நாயமாங்குறேன்?
- (ஜம்பு முனியாண்டி காதில் ரகசியமாக ஏதோ சொல்கிறான்)
முனி: சரி சரி அப்படியா சமாச்சாரம், ஊம். நகத்துங்க. ஓகோ அதானே நானும் என்னடா சோழியங் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தேன். அப்ப சரிங்க, மறந்திடாதிங்க நான் வர்ரேங்க, சில்லரை...
ஜம்பு: ஆகட்டும் காரியம் முடியட்டும்.
முனி : மகமாயி!
(போகிறான்).