அந்தமான் கைதி/30
இடம்: திவான்பகதூர் மாளிகை
காலம்: மாலை.
- பாத்திரங்கள்: லீலா, திவான்பகதூர், நடராஜன்.
- [லீலா, பாலுவின் படம் ஒன்றைக் கையில் வைத்துத் தனக்குள் அழுதுகொண்டிருக்கிறாள்.]
லீலா: என் அன்பே! என் மனமார உங்களைத்தானே நம்பி இருந்தேன். கனவிலும் நான் தங்களை மறந்ததில்லையே! என்மேல் தங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? நான் இரண்டு மூன்று முறை கூப்பிட்டனுப்பியும் என்னைப் பார்க்காமலும், எழுதி யனுப்பிய கடிதங்களுக்கும் பதில் அனுப்பாமலும், இருப்பதை நினைத்தால் நீங்கள் என்னை உண்மையில் கைவிட்டு விட்டீர்களா? அல்லது என்னையே தவறாக நினைத்து விட்டீர்களா? எனக்கொன்றும் புரியவில்லையே! (பொன்னம்பலம் பிரவேசித்து மறைவாக நின்று கவனிக்கிறார்) அன்பரே! நான் வேறொருவனுக்கு மனேவியாக்கப் பட்டிருப்பது என் குற்றமா? ஐயோ! இந்தப்பாவி இந்தக் கிழவனிடத்திலிருந்து என் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தினமும் மானத்தை விட்டுப் பேயாடுவதைத் தாங்கள் எப்படி அறியமுடியும்? ஐயோ என் உண்மை நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்களா? அறிந்தால், என்னை இத்துன்பத்திலிருந்து காப்பாற்றாமல் இருப்பீர்களா? நாதா! எனக்கு ஒன்றும் புரிய வில்லையே! ஒருக்கால் வேறொருவனுக்கு மனைவியாக்கப்பட்டவளை நாம் விரும்பினால் ஊர் உலகம் நகைக்குமே என்று பயப் படுகிறீர்களா? அப்படியானால் எனக்காக அநியாயமான முடிவடைந்த தங்கள் உண்மைக் காதலிக்காக என் மறைவுக்குப் பின்னாவது நீங்கள் வருந்தியே தீரவேண்டும். என் அண்ணா என்றைக்கு வந்து சேருவாரோ? இந்தப் பாவியின் இருண்ட வாழ்வு என்று முடிவுறுமோ? அதன் பிறகாவது தாங்களே தங்கள் தவறை உணர்ந்து அதற்காக வருந்தித்தான் தீரவேண்டும். (நீண்ட பெருமூச்சோடு) ஹும் இதுதான் தாங்கள் என் மீது கொண்ட உண்மைக் காதலின் பயன்...
- மாமதியும் எழிலாய்
- வான் மீதெழுந்ததுவே முழு
(மா)
- தாமரை குளிர் தென்றலும்
- எனை தகிப்பதேனறியேன்
- இனி சகிக்கும் வகைதெரியேன்
(மா)
- நாதமில்லா வீணைபோல்
- நான் இன்றானேன்
- காதலன் வாராரோ வருவாரோ தோணேன்
- கெதியிலா அபலையாய் :சோதனை செய்யலாகுமா
- இது தூய தன்மையதோ
- என்ன மாயமோ சூதோ
(மா)
(பொன்னம்பலம்பிள்ளை ஆத்திரத்தோடு வெளியில் வந்து மெள்ளக் கனைக்கிறார், லீலா திடுக்கிட்டுப் படத்தை மறைக்கிறாள்.)
பொன் : ஏய்! அது என்ன? எங்கே இப்படிக் கொடு பார்ப்போம். லீலா : ஒன்றுமில்லை, உம்..... வெறும் காகிதம்....
பொன் : காகிதமா! ஏதோ படத்தைப் போலல்லவா..... தெரிகிறது.
லீலா : ஆமாம், அது எங்கண்ணாவுடைய படம்.
பொன் : என்ன, உன் அண்ணாவுடைய படமா? எங்கே, இப்படிக் கொடு பார்ப்போம்.
லீலா : ஊஹும்? உங்களிடத்தில் கொடுத்தால் நீங்கள் கிழித்து விடுவீர்கள்.
பொன் : அதெல்லாம் அப்படி ஒன்றுங் கிழித்துவிட மாட்டேன்; சும்மா கொடு.
லீலா : இல்லை, என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்; நான் கொடுக்கவே மாட்டேன்.
பொன் : என்ன! நான் கேட்கிறேன்; கொடுக்கவே முடியாதா ! எனக்கு எல்லாம் தெரியும். நீ உன் அண்ணனையே காதலிப்பவளென்று மரியாதையாய்க் கொடு.
லீலா : போதும் நிறுத்தும். வித்தியாசமாய் ஒன்றும் பேச வேண்டாம்.
பொன் : என்ன டீ! போனால் போகிறதென்று பார்த்தால் அளவுக்கு மீறுகிறாய். இப்பொழுது கொடுக்க முடியுமா? முடியாதா?
லீலா : முடியாது.
பொன் : முடியாது, ஊம்.சரி. கொடுக்கவேண்டாம்; அந்தக் கள்ளப் புருஷன் யாரென்றாவது சொல்.
லீலா : அதுவும் முடியாது. பொன் : (கோபச் சிரிப்பு) தேவடியாச் சிரிக்கி! இப்பொழுது தெரிகிறதடி நீ பேயாடிய நாடகமெல்லாம், ஹும் கொடு இப்படி. (படத்தைப் பிடுங்க எத்தனிக்கிறார் முடியாமல் தள்ளாடிக் கீழே விழுகிறார்; கோபம் அதிகரிக்கிறது.) அவ்வளவு திமிரா உனக்கு? மயிலே மயிலே என்றால் இறகு போடுமா, இருக்கட்டும் (பக்கத்தில் மாட்டியிருந்த சவுக்கை யெடுத்து அடிக்கிறார், லீலா-அண்ணா! அண்ணா! என்று கத்துகிறாள். தொடர்ந்து அடிக்கிறார்; அடி தாங்காமல் சோர்ந்து, ஐயோ! 'ஐயோ! அண்ணா! அண்ணா' என்று அடியற்ற மரம்போல் சாய்கிறாள்.)
பொன் : (ஒரு கையில் மீசையை முறுக்கிக்கொண்டே). அண்ணா! அண்ணா! எங்கேயடி அண்ணன்? அண்ணன் நீ கூப்பிட்ட உடனே கடலைத் தாண்டி அப்படியே வந்து குதித்து விடுவானே? ஏண்டி! (மறுபடியும் சவுக்கை ஓங்கி அடிக்கப்போகிறார். அப்போது அங்கு வந்த நடராசன் தாவி திவான் பகதூரின் கையிலிருக்கும் சவுக்கைப் பிடுங்கிக் கொண்டு, திவான் பகதூரை ஆத்திரம் தீர அடிக்கிறான். திவான் பகதூர், ஐயோ! ஐயோ! அடே அடிக்காதேடா என்று கத்துகிறார்.)
லீலா : ஆ! அண்ணா (என்று ஓடி அண்ணனைக் கட்டிக் கொள்ளுகிறாள்.)
பொன் : (அடியைத் துடைத்துக்கொண்டே எழுந்து) அடே அயோக்கியப் பயலே! என் பெண்டாட்டியை நான் அடித்தால் நீ யாரடாவன் கேட்பதற்கு? இங்கே யாரைக் கேட்டுடா உள்ளே வந்தாய்?
நட : உன் பெண்டாட்டி! உன் பெண்டாட்டியா? புருஷன் அழகைப்பார்! கிழட்டு அயோக்கியப் பயலே!
(மறுபடியும் ஒரு போடு போடுகிறான், கிழவன் கீழே விழுந்தபடியே)
பொன்: அடே யாரடா அங்கே? முனியா! ராமா! ஜம்பு! எல்லோரும் வாங்கடா இங்கே! (ஆட்கள் ஓடிவருகிறார்கள்) இவனைப் பிடித்து வெளியில் தள்ளுங்கள். (வேலைக்காரர்கள் நடராஜனைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறார்கள், லீலா, அண்ணா! அண்ணா! என்று கத்திக்கொண்டு தொடருகிறாள். திவான் பகதூர் அவள் தலைமுடியைப்பற்றி இழுத்துக் கீழே தள்ளி)
யாரங்கே? (வேலைக்காரி லக்ஷிமி வருகிறாள்) இவளே இழுத்துக் கொண்டு போ! (அழைத்துப் போகிறாள்) அயோக்கியப் பயல், என்னிடமா இந்த ஜம்பமெல்லாம் செல்லும்? இருக்கட்டும்; பூண்டோடு தொலைத்து விடுகிறேன்.