காட்சி 34.


இடம் : வீதி

[வீதியில் பலர் பேசிக்கொள்ளுதல்]

ஆள் 1 : பாவம் என்ன இருந்தாலும் ஒரு மனுஷனை இந்த மாதிரிக் கொலை செய்யக்கூடாது. ஆள் 2 : அடபோங்க சார், பச்சைப் பசலைகளுடைய வாழ்க்கையைப் பாழ்படுத்துகிற இப்பேர்ப்பட்ட கிழட்டுப் பயல்கள் இருந்தா என்ன, செத்தா என்ன சார்?

ஆள் 3 : ஆமாமா. பாலசுந்தரத்தைப் போல நாலு பேரு இப்படித் துணிஞ்சாத்தான் இந்த மாதிரி அநியாயங்க ஒழியும்.

ஆள் 1 : ஆமா நடராஜன்தான் ரொம்ப சீர்திருத்தவாதியாச்சே, ஏன் இந்தக் காரியத்தை முன்னாடியே தடுத்திருக்கக் கூடாது?

ஆள் 2 : அவன் தான் ரெங்கோனுக்குப் போயிட்டானே, இருந்தா சம்மதிப்பானா? தங்கச்சின்னா உயிரையே விடுறவனாச்சே!

ஆள் 4 : நடராஜனுக்குத் தகவலே எட்டியிருக்காதோ?

ஆள் 3 : கலியாணத்துக்கு அப்புறம் இங்கே வந்திருந்தானாமே, நான் பாக்கலே! கொலைக்கு அப்புறம் நடராஜனையே காணோமாம்.

ஆள் 1 : ஆமா, பாலுவுக்கும் லீலாவுக்கும் முன்னாடியே தொடர்பு உண்டோ?

ஆள் 4 : பள்ளிக்கூடத்துப் பழக்கமாம். அந்தப் பொண்ணு பாலுவையேதான் கட்டிக்கிருவேன்னு ஒத்தக்கால்லே நின்னுச்சாம்

ஆள் 1 : அடே, பின்னே அப்படியே பண்ணித் தொலைச்சிருக்கலாமே.

ஆள் 2 : அட அவன் ஒரு கோழைப்பயல் சார். வீட்டுக்குப் பயந்தவன்.

ஆள் 3 : இப்பக் கொலை செய்யத் துணிஞ்சவனுக்குக் கல்யாணத்துத்கு முன்னேயே புத்தியிருந்தா?...

ஆள் 4 : உம்-உலகமே இப்படித்தான். நம்மளவங்களுக்கெல்லாம் காரியம் முடிஞ்சதுக்கப்புறம்தானே மூளை தொறக்கும்.  ஆள் 1: ஏன் சார், ஜம்புவைப் பார்த்தீங்களா? யாரு கூடவும் பேசுறதில்லே, என்னமோ ஒரு மாதிரி ஆளே மாறிட்டானே.

ஆள் 2 : கேசைக்கூட அவன்தான் தீவிரமாய் நடத்துறான்.

ஆள் 3 : உம் என்ன நடத்தி என்ன? தூக்குத் தண்டனை நிச்சயம்.

ஆள் 2 : சே, நினைச்சாக் கண்ராவியா இருக்கு.

ஆள் 4 : எல்லாம் அடுத்த விசாரணையிலே தெரியும்.

ஆள் 2 : கொலை பண்றது சர்க்கார் சட்டப்படி தப்புதான். ஆனா, வாழ்க்கையைக் கொலை செய்யிற இப்பேர்ப்பட்டவர்களை சர்க்காரே கொலை செய்திடனும். தர்ம ஞாயம் பார்த்தாத் தப்பேயில்லே.

ஆள் 1 : சரி சரி, பேச்சு ரொம்பதூரம் போகுது. பகல்லே பக்கம் பார்த்துப் பேசுங்க, பெரிய எடத்து விவகாரம் நமக்கெதுக்கு? உம், வாங்க.

(போகிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/34&oldid=1073528" இலிருந்து மீள்விக்கப்பட்டது