காட்சி 36.


இடம்: நீதிமன்றம்.

காலம்: காலை

[வக்கீல்கள், ஜூரர்கள் யாவரும் அமர்ந்திருக்கிறார்கள். பாலு கைதிக்கூண்டில் நிற்கிறான். லீலா, ஜம்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜவான்கள் முதலியவரும் இருக்கிறார்கள். உரியகாலத்தில் நீதிபதி வந்து உட்கார்ந்து தீர்ப்பை வாசிக்கிறார். யாவரும் அமைதியாக இருக்கின்றார்கள்.]

நீதிபதி:- மிகவும் சாதாரணமாகக் கருதப்படும் இந்த வழக்கு என் வரையில் மிகவும் சிக்கல் நிறைந்ததென்றே நினைக்கிறேன். கொலை செய்யப்பட்ட திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளையோ பிரபலஸ்தர். குற்றவாளி என்று கருதப்படும் பாலசுந்தரமோ நேர்மையும் நல்லொழுக்கமும் உள்ள இளைஞர். என் அனுபவத்தில் இத் தகைய விசித்திரமான குற்றவாளியை நான் இன்றுதான் பார்க்கிறேன். எதிரி தான் கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு எவ்வித பதிலும் சொல்ல மறுக்கிறார்.

சம்பவம் நடந்த அதே சமயத்தில் அதே இடத்தில் கையில் ரத்தம் தோய்ந்த பிச்சுவாவுடன் எதிரி பிடிபட்டதாகவும் கொலையுண்டவரின் நான்காவது மனைவியாகிய லீலாவுக்கும் பாலசுந்தரத்திற்கும் நட்பு இருந்திருக்க வேண்டுமென்றும் தங்கள் காதலுக்குத் திவான்பகதூர் இடையூறாய் இருப்பதாக நினைத்தே பாலசுந்தரம் கொலை செய்திருக்க வேண்டுமென்றும் சாட்சிகள் நிரூபிப்பதாலும், பெரும்பாலான ஜூரர்களும் பாலசுந்தரம் குற்றவாளி என்றே அபிப்பிராயப் படுவதாலும் சட்டப்படி பாலசுந்தரத்திற்கு மரண தண்டனை விதிக்கிறேன்.

லீலா : ஹா! (மூர்ச்சையாகிறாள்; அருகிலிருப்பவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள்.)

இன்ஸ்பெக்டர் : டேய் 203, இந்தப் பெண்ணை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்துங்கள். (போலீஸார் லீலாவை அப்புறப்படுத்த நெருங்கும் சமயம் இளைத்த தேகமும், நீண்ட தாடியும், எங்கும் கிழிந்து தொங்கும் உடையும், அருவருப்பான தோற்றமும் உள்ள நடராஜன் வீராவேசத்துடன் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு பிரவேசிக்கிறான்; ஆச்சரியத்துடன் யாவரும் அவனைக் கவனிக்கிறார்கள்.)

நட : நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! பாலசுந்தரம் நிரபராதி! அவன் கொலை செய்யவில்லை.......

(கோர்ட்டில் பரபரப்பு உண்டாகிறது.)

இன்ஸ்பெக்டர் : யாரடா இவன் பைத்தியக்காரன்? (ஜவானைப் பார்த்து) டேய்! இவனை வெளியில் தள்ளுங்கள்!

(போலீஸ் தள்ள நெருங்க)

நட : (ஜட்ஜியைப் பார்த்து) யுவர் ஹானர். நான் பைத்தியக்காரன் இல்லை. தயவு செய்து எனக்குக் கொஞ்ச நேரம் பேச அனுமதி கொடுத்தால் இவ் வழக்கைப் பற்றிய எல்லா விஷயங்களையும் விபரமாகச் சொல்லுகிறேன்.

நீதிபதி : ஆல்ரைட். 10 நிமிஷத்திற்குள் இவ்வழக்கைப் பற்றி உமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்.

நட : யுவர் ஹானர். கொலை செய்யப்பட்ட திவான்பகதுர் பொன்னம்பலம் பிள்ளை எனது தாய்மாமன். அந்தப் பெண் அவரது நான்காவது மனைவி. இறந்து போனவர் என் தங்கையை நாலாந்தாரமாகக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினர். நீங்களே யோசித்துப் பாருங்கள். படித்து உலகம் தெரிந்த எந்த வாலிபன்தான் தன் தங்கையை அறுபது வயதுக்கு மேற்பட்ட ஒரு கிழவனுக்குக் கொடுக்கச் சம்மதிப்பான்? ஆகவே நான் அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்துவிட்டேன். நான் இருந்தால் அவர் எண்ணம் நிறைவேறாதென்பதை உணர்ந்த பொன்னம்பலம் பிள்ளை, தன் பணத்தையும் செல்வாக்கையும் கொண்டு பல பேரைப் பிடித்து அநேகம் சூழ்ச்சிகளைச் செய்து என்னை ரங்கூனுக்குப் போகும்படி செய்துவிட்டார். நான் சென்ற ஒரு வாரத்திற்குள் என் தாயாரைத் தன் வசப்படுத்தி என் தங்கையின் இஷ்டமில்லாமலே பலவந்தமாகத் தாலிக் கயிற்றைக் கழுத்தில் ஏற்றிவிட்டால், அவள் தன் மனைவிதானே என்ற மூடத்தனமான மனப் பான்மையுடன் கல்யாணத்தை முடித்துவிட்டார்கள். மணம் முடிந்த பின் என் தங்கை அவர் இஷ்டத்திற்கு இணங்காததினால் அப் பெண்ணை வேறு சில காரணங்களைச் சொல்லி இம்சிக்கத் தொடங்கவே, இம்சை பொறுக்கமுடியாத நிலையில் என் தங்கை எனக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் நான் உண்மையறிந்து இந்தியா வந்து சேர்ந்தேன். இது நிற்க. இக்கொடுமை நடப்பதற்குமுன்னே இப்போது தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பாலசுந்தரத்திற்கும் என் தங்கைக்கும் பரஸ்பரம் காதல் உண்டு என்பது எனக்குத் தெரியும். ஆகையால் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்ட நான், பாலசுந்தரத்திடம் சென்று இப்போதாவது என் தங்கையை மறுமணம் செய்துகொள் என்று வேண்டினேன். அவன் அதையும் மறுத்துவிடவே, என் தங்கையை வேறுவகையில் காப்பாற்றச் சக்தியற்றவனாய் இருந்தேன்.

இரங்கூனிலிருந்து வந்த அன்றே லீலாவைச் சந்திக்கத் திவான்பகதூர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு லீலாவின் சரீரமெல்லாம் ரத்தம் பீரிட்டு ஒழுக ஒழுகத் திவான்பகதூர் சவுக்கினால் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். தடுத்த என்னை, அவர் வேலையாட்களைக் கொண்டு வெளியில் தள்ளச் செய்தார்; பொறுமையை இழந்தேன்.

எப்படியும் அப்பெண்ணை அக்கொடியோனிடமிகுந்து காப்பாற்ற வேண்டுமென என் மனம் துடித்தது. வேறு வழியில்லை. மரணத்தைத் தவிர வேறு வழியில் அவளுக்கு விடுதலை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; அவள் இறந்தால் அதற்குப் பொறுப்பாளி யார்? பொன்னம்பலம் தான். ஆகையால் அவரையும் கொன்று விட்டு நானும் இறந்து விடுவதாகத் தீர்மானித்தேன்.

பிறகு அன்று இரவே திவான்பகதூர் வீட்டுக்குப் போய், பொறுக்கமுடியாத ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும், என் தங்கையையும், இன்னும் எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்களையும் கெடுத்த திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளையைப் பிச்சுவாவினால் குத்தினேன். இதற்குள் என் தங்கையும் விழித்துக்கொள்ள அதே சமயம் எனக்குப் பின்னால் யாரோ ஓடிவரும் சப்தமும் கேட்கவே என்ன செய்வதென்று புரியாத நான் பீதியுடன் பிச்சுவாவை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டேன். பிறகு இங்கு நடந்ததொன்றும் எனக்குத் தெரியாது.

ஓடிய நான் ஊர் ஊராக அலைந்து திரிந்தேன். பசி, தாகம், இன்பம். துன்பம், வெய்யில். மழை எதைப் பற்றியும் கவலையின்றி நடைப் பிணமாய் அலைந்து கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாய் நேற்று மாலை பத்திரிகை மூலம் இவ்வழக்கு சம்பந்தமாய்ப் பாலசுந்தரம் தண்டனையடையப் போகிற விஷயம் அறிந்து நிரபராதியாகிய பாலுவைக் காப்பாற்ற 70 மைல்களை ஓட்டமும், நடையுமாகக் கடந்து எப்படியோ இங்குவந்து சேர்ந்தேன். உண்மை இதுதான். ஆகையால் சமூகத்தில் தீர விசாரித்து உண்மைக் குற்றவாளியாகிய என்னைத் தண்டித்து நிரபராதியாகிய பாலசுந்தரத்தை விடுதலை செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நீதி : மிஸ்டர் நடராஜன் சொல்லுவதெல்லாம் உண்மையாயிருப்பின் நிரபராதி ஒருவனைத் தண்டித்த அபவாதத்திலிருந்து ஆண்டவன் என்னைக் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். வல்லமை மிக்க அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் நியாயாதிபதியாய் அமர்ந்து நான் பாலுவைக் குற்றவாளியெனத் தீர்மானித்துத் தூக்குத் தண்டனையும் அளித்து விட்டேன். தண்டனைக் காலத்தை இன்னும் சில நாள் ஒத்திவைக்க ஏற்பாடு செய்கிறேன். பாலுவின் சார்பில் வழக்கை மேல்கோர்ட்க்கு அப்பீல் செய்தால் அநேகமாக வழக்கு பாலுவுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப் படலாமென நினைக்கிறேன். இந்த வழக்கு சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் நான் எடுத்துக்கொள்ள முடியாதிருப்பதற்காக வருந்துகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/36&oldid=1073530" இலிருந்து மீள்விக்கப்பட்டது