அந்தமான் கைதி/7
இடம் : வீதி
காலம் : மாலை.
சேர்வை: ஏங்க, இது என்னங்க. ஐயா சொல்றது. எனக்குக் கொஞ்சங்கூடப் புரியலியே. வியாச்சியம் போட்டா செலவு தொகை உள்படல்லே கொடுக்கும்படியா வரும்... முனி : அதுலே விஷயமில்லாமையா ஐயா அப்படிச் சொல்றாரு. அவரு தங்கச்சி குடும்பங் கஷ்டப்படுறதேப் பாக்க அவருக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது ஒதவி செய்யலாமுன்னா அவர் தங்கச்சி மகன் இருக்காரே அந்தப் பிள்ளையாண்டான் இவரைக் கொஞ்சங்கூட மதிக்கிறதே இல்லையாம். அவன் கொட்டத்தை அடக்கணும் இன்னுதான் இப்படியெல்லாம் செய்யுறாரு. அதோடே நானும் உன் பணம் அநியாயமாய்ப் போயிடக்கூடாதேன்னுதான் இந்த யோசனையைச் சொன்னேன். எல்லாம் நம்ம வேலைதான். உனக்கென்ன பணம்தானே?
சேர்வை : அப்படியா சங்கதி? இந்தப் பையனுக்குத்தான் ஏன் இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம். அவுங்கத் தாயோடே பொறந்த மாமந்தானே! அவருக்குப் பிள்ளையா குட்டியா, அவருக்குப் பின்னாலே இந்த சொத்தெல்லாம் அவங்களுக்குத்தான் சேரும். என்னமோ சமயத்துக்குத் தகுந்தாப்புலே, கொழைஞ்சு குடுத்துக்கிட்டுப் போவாமே, குறும்பப் பாருங்க!
முனி : வெறுங் குறும்பா? ஏழைக் குறும்புல்லே, எல்லாம் பட்டாத்தானே தெரியும். அது போகட்டும், இப்பவே வக்கீலையா வீட்டுக்குப் போயி ஆகவேண்டி யதைப் பாரு.
சேர்வை : இன்னமே சொல்லணுங்களா. நேரா அங்கே தான் போரேன். சரி நான் வரட்டுங்களா?......
முனி : சேர்வே, சில்லரை ஏதாவது இருந்தாக் கொஞ்சம்...
சேர்வை : அடடா, நான் கொண்டாரலிங்களே, காப்பி சாப்பிடுறதுக்காக இருபது காசுதான் வச்சிருக்கேன்.
முனி : ...இருபது காசுதான் இருக்கா...சரி அதையாவது குடு (சேர்வை தனியாகப் போய் முடிச்சை அவிழ்க்கிறான்.)
முனி : (தனக்குள்) ஏன், அதைத்தான் விடணும். நாலு சிகரெட்டுக்கு ஆச்சு.
சேர்வை : (பணத்தைக் கொடுத்துவிட்டு) நான் வர்ரேங்க.
முனி : (காசைச் சுண்டி இடையில் சொருகிக்கொண்டே). ஆகா! மகமாயி...
(இருவரும் போகிறார்கள்)