அந்திம காலம்/அந்திம காலம் - 1
மழைத் தாரைகள் காரின் முன் கண்ணாடியில் வீசி அடித்துக் கொண்டிருந்தன. காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. இடை விடாத பொழிவு. அகலமான கண்ணாடியெங்கும் மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடை விடாது அழித்துக் கொண்டிருந்தது.
டடக்...டடக்...டடக்... டடக்.
அழிக்க அழிக்கப் புதிது புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் கொஞ்சமும் இல்லாத வைப்பர்.
டடக்... டடக்.. .டடக். அழி... அழி... அழி. வரை... வரை... வரை. டடக்... அழி.. டடக்... வரை... டடக்... அழி... டடக்... வரை.
எது முதல்? எது தொடர்? வரைதல் முதலா, அழிதல் முதலா?
சுந்தரத்தின் கார் அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்தது. அந்தக் கடுமையான மழையில் அவர் காரை ஓட்ட விரும்பவில்லை. பார்வை தெளிவாக இல்லை. இரண்டடிக்கு முன்னால் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மருத்துவ மனைக்குப் போய்விட்டு வீடு திரும்புகிற வழியில் இப்படித் திடும் என மழை பிடித்துக்கொண்டது.
வேணுமானால் முன் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நிதானமாக ஓட்டலாம். கண்ணாடி உள்ளே பனி படரும் போது துடைத்து விட்டுக் கொள்ளலாம். இந்த மழைக்குப் பயந்து வேறு யாரும் காரை நிறுத்தி விட்டதாகத் தெரியவில்லை. கார்கள் வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு காரும் அவர் காரைக் கடக்கும் போது சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை சர்ரென்று கிழித்து அவர் காரின் மீது பாதியை ஊற்றிக் குளிப்பாட்டி விட்டுத்தான் செல்லுகிறது.
ஆனால் அவருக்கு அப்படி அவசரம் ஒன்றும் இல்லை. வீடு பக்கத்தில்தான். பத்து நிமிடம் நின்று மழை தணிந்ததும் போகலாம். மற்றவர்களுக்கு அவசரம் இருக்கிறது. அவருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ஆயிரம் வேலைகள். அவருக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஓய்வு பெற்று விட்ட மனிதனுக்கு ஏன் அவசரம்? அவசரமாக வேலை செய்து காலத்தை விரைவாக ஓட்டி... அப்புறம் என்ன செய்வது? ஓய்வெடுப்பதைக் கூட வெறுப்பாக்கிவிட்ட வேலை ஓய்வுக் காலத்தில் அவசரம் ஒன்றும் இல்லை.
இங்கே இப்படி இந்தக் காருக்குள் உட்கார்ந்திருப்பது நிம்மதியாகக் கூட இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இந்த மழை இத்தனை கொடூரமாகப் பெய்தும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. பட்டாம் பூச்சியாகவிருக்கும் பியூப்பாவை இறுக்கிக் காப்பாற்றும் கூடு போல அவரை இந்தக் கார் பத்திரமாகப் பாதுகாக்கிறது. சுற்றிலும் தண்ணீர் வழிந்து வெள்ளமாகிவிட அவர்மட்டும் நனையாமல் காய்ந்திருக்கிறார். தலைக்கு ஆறு அங்குலத்திற்கு மேலே தண்ணீர். தோளுக்கு இரண்டு அங்குலம் பக்கத்தில் தண்ணீர். காலுக்கு ஓரடி கீழே வெள்ளம். ஆனால் அவர் மேல் ஒரு துளியும் தண்ணீர் இல்லை.
என்ஜின் ஓடிக்கொண்டிருக்கிறது. குளிர் சாதனக் கருவி கீழ் சுருதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடியில் ஆவி பரவாமல் இருக்க அது வேண்டியிருந்தது. அதனால் பரவும் குளிருக்கு அவருடைய வெப்பமான மூச்சே மாற்றாக இருக்கிறது. மழையின் "சோ" என்ற ராகமும் கூரையில் அது போடும் தட தட தாளமும் ரசிக்கும்படியாகக்கூட இருந்தன. இது பாதுகாப்பான இடம். இது நிம்மதியான சூழ்நிலை.
அதோ தண்ணீரைக் கிழித்துக்கொண்டு போகும் லாரியில் அந்த லாரி உதவியாளன் பாதி நனைந்தவாறு போகிறான். லாரியின் தார்ப்பாலின் துணி கிழிந்து கிடக்கிறது. அவனுக்குப் பாதுகாப்பில்லை. மோட்டார் சைக்கிளில் மழைக்கோட்டு அணிந்தவாறு போகிறவனுக்கும் முகம் நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் பின்னால் உள்ள பெண் மழைக் கோட்டும் இல்லாமல் முதுகில் மழை வழிய பிளவ்ஸ் உடம்போடு ஒட்டிக்கொள்ள வெட்கப்படக் கூட வசதியில்லாமல் கணவனை -- ஒருவேளை அண்ணனாகக் கூட இருக்கலாம் -- கட்டிக் கொண்டு போகிறாள். இங்கே ஒருவன் சைக்கிளை பஸ் பிரயாணிகள் நிற்கும் நிழல் கூடத்தில் வைத்து விட்டு மழைக்குக் காப்புத் தேடியிருக்கிறான். ஆனால் மழை அவன் காலடியில் வெள்ளமாக ஏறி அவனை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அவர் பாதுகாப்பாக, நனையாமல், குளிரில்லாமல், சூடாக, நிம்மதியாக, காரின் உள்ளே கர்ப்பப்பைக்குள் குழந்தை போல இருக்கிறார். நான் கடலின் மத்தியில் தீவாக இருக்கிறேன். நான் பாலைவனத்தின் மத்தியில் சோலையாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். அர்ஜுனா! மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம்.
டடக்...டடக்...வரை... டடக்...டடக்...அழி.. .டடக்...வரை...டடக்...அழி...
எது பாதுகாப்பு? எது நிம்மதி? யார் இந்த உலகில் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கிறார்கள்? அதோ மழையில் அவதிப்பட்டு நிற்கும் அந்த சைக்கிள்காரன் இன்னும் பத்து நிமிடங்களில் மழை விட்டதும் உடம்பை வழித்து விட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறி வீடு போய்ச் சேருவான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் உடல் காய்ந்து விடும். திடகாத்திரமாக இருக்கிறான். இன்னும் ஐம்பது வருடங்கள் உயிரோடு இருப்பான்.
நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அடுத்த பத்து நிமிடங்களில் மழை விட்டதும் ஜோராக காரோட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். ஆனால் என் உடல் அழுக ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் முற்றாகச் செத்துப் போய்விடுவேன்.
யாருக்கு இருக்கிறது பாதுகாப்பு? என்னுடைய தற்காலிகச் சுகத்துக்கும், அவனுடைய தற்காலிகத் துன்பத்துக்கும் என்ன பொருள்? ஏ சைக்கிளோட்டியே! இங்கே வா! இந்தக் காரையும் சுகத்தையும் எடுத்துக் கொள். உன் இடத்தில் இருந்து நான் நனைகிறேன். வெள்ளம் என் கணுக்கால்களை நனைத்து முழங்கால் வரைக்கும் வந்தாலும் பரவாயில்லை. உன் மீதியிருக்கும் ஐம்பது வருடங்களை எனக்குக் கொடுப்பாயா? மாற்றிக் கொள்வோமா?
கண்களில் கண்ணீர் படர்ந்தது. ஸ்டியரிங் சக்கரத்தைக் கைகள் அழுத்திப் பிசைந்தன. நெற்றியை மெதுவாக அந்த சக்கரத்தில் சாய்த்து மௌனமாக அழுதார். அவர் அழுகைகூட பாதுகாப்பாக இருந்து. பிறர் பார்வை பட்டு அவமானப்படுத்தாத சுகம்.
ஒரு யுகம் போல் மனசுக்குத் தோன்றினாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்காது. மின்னல் தெறிப்புக்களாக அவை மனசுக்குள் ஓடின. வாழ்ந்த வாழ்க்கை, வளர்ப்பு, படிப்பு, தொழில், கல்யாணம், மனைவி, குழந்தைகள், எல்லாம் துண்டு துண்டாக, குழந்தை மனம்போன போக்கில் வெட்டி ஒட்டின ஒட்டுப்படம் போல....
மழையின் படபடப்பு தணிந்திருந்தது. "சோ" என்ற சத்தம் இல்லை. தலை நிமிர்ந்து பார்த்தார். வானம் தெளிந்திருந்தது. தூவானம். சூரிய வெளிச்சமும் வானவில்லும் கூடத் தோன்றியிருந்தன. சைக்கிள்காரன் இருக்கையைத் தட்டித் துடைத்துவிட்டு சைக்கிள் மேல் உட்கார்ந்து ஜிவ்வென்று போனான்.
இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துச் சூடாக்கிக் கண்களையும் கன்னத்தையும் முகத்தையும் துடைத்துச் சுத்தமாக்கினார். பின்பார்வைக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, பின்னால் கார் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, கியரைப் போட்டு, கை பிரேக்கை விடுவித்து, மெதுவாக, பத்திரமாகக் காரை வீட்டை நோக்கிச் செலுத்தினார்.
- *** ***
அவருடைய காரை கேட்டின் முன் கண்டதும் ஜிம்மி ஓடிவந்தது. கேட்டின் பின்னாலிருந்து துள்ளிக் குதித்தது. பின்னங்கால்களில் நின்று முன்னங்கால்களைக் கோர்த்துக் கொண்டு முகமன் சொல்லிற்று. நாக்குத் தொங்க வாய் விரிந்து சிரித்தது. ஒரு இரண்டு மூன்று மணி நேரம் வெளியே போய் வந்தாலும் ஏதோ பத்து நாட்கள் பார்த்திராத நண்பனைக் கண்ட கொண்டாட்டம். என் அன்பு நாயே! உன்னைப் போல் என்னை என் மனைவியும் குழந்தைகளும் கூட வரவேற்பதில்லை. உனக்கு இது எப்படி வாய்த்தது? நான் போடும் சில எலும்புத் துண்டுகளுக்காகவா இத்தனை உற்சாகமான நன்றி செலுத்துகிறாய்? அதற்காகவா இந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற இங்கு வரும் அத்தனை பேரையும் பார்த்துக் குலைத்து இந்த உலகத்தையே விரோதித்துக் கொள்ளுகிறாய்?
காரிலிருந்து இறங்கி கேட்டைக் கொஞ்சமாகத் திறந்து ஜிம்மியைக் கூப்பிட்டுச் சங்கிலியில் கட்டினார். சரணடைந்து தலை கொடுத்துக் கட்டுப்பட அது வழக்கம் போல சம்மதித்தது. கட்டாவிட்டால் கேட்டைத் திறந்ததும் வெளியே ஓடி விடும். பிற நாய்களிடம் சண்டை போட்டுக் கடிபட்டு வரும். சாலையில் போகும் மோட்டார் சைக்கிளோட்டிகளைத் துரத்தும்.
காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்தினார். கேட்டைச் சாத்தினார். ஜானகி எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை. அவளிடம் விஷயத்தைத் தருணம் பார்த்துச் சொல்ல வேண்டும். அதிர்ச்சியைக் குறைக்கும் வகையில்... "இதெல்லாம் சாதாரண விஷயம்தான்" என்ற தோரணையில்... "எந்த மானுடன் சாகாவரம் வாங்கி வந்திருக்கிறான் இந்த உலகத்தில்..." என்ற தத்துவ முன்னுரையோடு...
ஜானகி சமயலறையிலிருந்து பரபரப்பாக வெளியே வந்தாள். "ஏங்க இவ்வளவு நேரம்?" பதில் சொல்ல வாயெடுத்த போது...
"ராதா போன் பண்ணுனாங்க... இப்பதான்.."
அவசரமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழக்கமாகத் தொலைபேசியில் அழைத்துப் பேசும் மகளின் செய்தி இத்தனை மூச்சுத் திணறும் அவசரத்தில் வெளிப்படக் காரணமில்லை. வேறு முக்கிய விஷயம் தன் அவசர நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று முதல் நிகழ்ச்சியைத் தள்ளிப் போட்டதில் ஒரு வக்கிரமான நிம்மதி இருந்தது.
"என்ன விஷயம் ஜானகி..?"
"மறுபடி பிரச்சினையாம்..."
"பிரச்சினைன்னா?"
"அந்தப் பாவி மறுபடி போட்டு அடிச்சிருக்காங்க..." அவள் கண்களில் நீர் கட்டியது.
"ஏனாம்?"
"என்னமோ மறுபடியும் பணம் கேட்டானாம்" கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசினாள்.. "முடியாதின்னு சொன்னாளாம். வார்த்தை முத்திப் போய் அடிக்கிற அளவுக்கு வந்திருக்கு!"
மனத்தில் திகீரென்றது. எத்தனை அன்பாக இந்த மகளை வளர்த்தோம் இருவரும். கொஞ்சி குளிப்பாட்டி, படிக்க வைத்து, அவள் படிக்க விழித்திருக்கிற நாட்களில் தாங்களும் விழித்திருந்து... பட்டதாரியாக்கி, அவள் விரும்பியவனைத் தாங்கள் விரும்பாத போதும், அவள் விருப்பத்தை ஏற்று, அவனையே அவளுக்கு மணாளனாக்கி... வீடு பிடித்துக் கொடுத்து... குழந்தைப் பேறு பார்த்து... இப்படி அடிபடவா? எப்படி இவர்கள் வாழ்க்கை கசந்து போனது? ஏன் இவர்கள் காதல் வாழ்க்கை வன்முறைக்குள் வீழ்ந்தது? மனசுக்குள் கேட்டுக் கொண்டார். வாய்விட்டு யாரிடம் கேட்பது?
"நம்ப என்ன செய்றது ஜானகி?"
"அவ இன்னைக்கே புறப்பட்டு வர்ராளாம் இங்க! போனைக் கீழே வச்சதும் பேக்க எடுத்துக்கிட்டு வந்திடுவேன்னு சொன்னா..."
"பஸ்ஸிலியா...?"
"இல்லைங்க. அவ கார்ல... பையனையும் கூட்டிட்டுத் தானா ஓட்டி வரப் போறாளாம்..."
"ஒண்டியாவா? என்ன ஜானகி நீ? இதுவரைக்கும் அவ ஒண்டியா காரை ஓட்டி வந்ததில்லையே! ஏன் சரின்னு சொன்ன?"
"நான் என்ன சொல்றது? நான் புறப்பட்டுட்டம்மான்னு சொல்லிட்டு போன வச்சிட்டா. நான் என்ன பண்ண முடியும்?"
இப்போது மணி ஏழாகி விட்டது. கோலாலம்பூரிலிருந்த இப்போது புறப்பட்டாலும் இந்தப் பினாங்கு வந்து சேர நான்கு மணி நேரம் ஆகும். இரவுப் பிரயாணம். இதற்கு முன் இப்படித் தனியாக வந்ததில்லை. மூன்று வயதுக் குழந்தையையும் கூட்டிக்கொண்டு, இரவில், மழைக்காலத்தில், மனத்தில் வெறுப்பையும் எரிச்சலையும் கோபத்தையும் சுமந்து கொண்டு, இடைவிடாத 110 கிலோமீட்டர் வேகத்தில், மனசை வசியப்படுத்தி மூளையை மரத்துப் போகச் செய்யும் நெடுஞ்சாலையில்... நினைக்க பயமாக இருந்தது. விபத்துக் காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன.
"சே! நீ அவளத் தடுத்திருக்கணும் ஜானகி!" என்று சொல்லி அசந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
"எப்படிங்க தடுக்கிறது? இன்னும் அங்க இருந்து அவனோட சண்டை போட்டு உதை வாங்கவா? இங்கவாவது வந்து ரெண்டு நாள் நிம்மதியா இருக்கட்டும்னு வரச் சொல்லிட்டேன்"
உண்மைதான். ராதா தன் கணவனிடம் அடிபடுவது இது முதன் முறையல்ல. இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது அதிகமாகிவிட்டது. அவர்கள் குடும்ப வாழ்க்கையில் பலவித விஷங்கள் கலந்து விட்டன. மருமகன் சிவமணி அதற்கு முக்கிய காரணம். அவனுக்குக் குறுக்கு வழியில் முன்னேறவேண்டும் என்ற பேராசைகள் அதிகம்.
எல்லாம் அவனுடைய குற்றம் என்றும் சொல்லிவிட முடியாது. பெற்றோர்கள் என்ற கோணத்தில் இருந்து பார்க்கும்போது ராதாவின் மேல் பரிதாபம் தோன்றினாலும், அவளுக்கும் விட்டுக் கொடுத்துப் போகமுடியாத பண்பு உண்டு. கோபம் வந்தால் மூர்க்கமாக மாறிவிடுவாள். பிடிவாதம் உண்டு.
"எனக்குக் கொஞ்சம் டீ கலக்கிக் கொண்டா ஜானகி!" என்றார். ஜானகி மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.
ராதாவின் குறைகளை ஜானகி ஒருநாளும் ஏற்றுக் கொண்டதில்லை. எல்லாக் குறைகளும் மணியிடம்தான் என்பது அவள் கருத்து. ராதாவும் சிவமணியும் காதல் கொண்ட காலத்திலிருந்தே மணியை அவளுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் சிவமணியிடம் அப்போது ஒன்றும் கெட்ட பழக்கங்கள் இல்லை. ஆனால் தன் அன்பு மகளின் மனத்தை வெளியில் இருந்து வந்து ஆக்கிரமித்துக் கொண்டவன் என்ற பொறாமை ஆரம்பத்திலிருந்து உண்டு. தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்த வரை அதை அடக்கி உள்ளே போட்டிருந்தாள். அந்த உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியதும் அவள் முழுக் கோபமும் உக்கிரமாகத் தலையெடுத்துவிட்டது.
ஆனால் அந்த விரிசல் பிளவாகி அவன் அவளை அடிக்கத் தொடங்கிவிட்டான் என்று கேள்விப் பட்டபோது அவரும் அவனை ஒரு மிருகமாகத்தான் நினைத்தார். இந்த நாகரிகக் காலத்தில், இந்த நாகரிகக் குடும்பத்தில் இப்படி நடப்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ராதாவின் வாழ்க்கைத் துன்பங்கள் ஏற்கனவே அவருடைய மனத்தின் ஒரு மூலையில் பாரமாக உட்கார்ந்திருந்தன. இன்றைக்கு நடந்தவற்றைக் கேள்விப்பட்ட பிறகு அந்த பாரம் உட்கார்ந்திருந்த இடம் ரணமாகிவிட்டது. அதிலும் இன்றைக்கு டாக்டரிடம் சென்று மரண ஓலை பெற்றுக் கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில், இன்னும் ஒரு ஈட்டியா இப்படிப் பாய வேண்டும்?
எவ்வளவு துன்பங்களுக்கு இந்தச் சின்ன மனத்துக்குள் இடம் இருக்கும்? எவ்வளவு பாரம்தான் இந்தப் பைக்குள் போட்டு வைக்க முடியும்? இது எவ்வளவு போட்டாலும் தளர்ந்து விரிந்து கொடுத்து ஏற்றுக் கொள்ளுகின்ற பையா? அல்லது இதற்கும் எல்லை உண்டா? உடையும் கன அளவு உண்டா? அல்லது விரும்பினால் கருங்கல்லாகவும் விரும்பினால் ரப்பர் பையாகவும் மனிதன் இதனை மாற்றிக் கொள்ள முடியுமா?
ஜானகி ஆவி பறக்கும் டீயோடு வந்தாள். அவர் முன் மேசையில் வைத்தவாறு கேட்டாள்: "இப்படி இங்க மழை பேஞ்சுக்கிட்டு இருக்கே, அவ வர்ர வழியெல்லாம் மழை பேயுமோ என்னமோ தெரியிலியே!"
பெய்யும் என்று ஒரு வாரமாகமே வானிலை அறிக்கையில் சொல்லி வருகிறார்கள். மேற்கு மலேசியாவில் கரையோரப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை, மேகமூட்டம், தாழ் நிலங்களில் வெள்ளம் என்றுதான் தொலைக்காட்சிச் செய்தியில் சொல்லுகிறார்கள். இந்த நிலையில் ஜானகிக்கு என்ன ஆறுதல் கூறமுடியும் அவரால்?
"மழை இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? மெதுவா ஓட்டி வந்தா ஹைவேயில ஒண்ணும் ஆபத்தில்ல. கவலப் படாத! எல்லாம் பத்திரமா வந்து சேந்திருவாங்க ரெண்டு பேரும்!" ஜானகிக்குச் சொன்னாரா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாரோ தெரியவில்லை.
ஜானகி மீண்டும் மழைத் தாரைகள் விழ ஆரம்பித்திருந்த வீட்டுக் காம்பவுண்டை திறந்திருந்த கதவுகள் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராதாவின் நினைவும் அவளுடைய அந்த நேரத்துத் துன்பமும் அவள் மனத்தை முற்றாக ஆக்கிரமித்திருந்தன. என் அன்பு மனைவியே, புதிய துயரம் வந்ததும் காத்திருந்த இன்னொரு துயரத்தை மறந்து விட்டாயே! அப்படித்தானா வாழ்க்கை! "இப்போது" என்பதுதான் முக்கியம். இப்போது நிகழ்வதுதான் நெஞ்சில் நிறைகிறது. இப்போதுதான் உண்மை.
நான் ஒருமாதமாக தலை கடுமையாக வலிக்கிறது என்று சொன்னதும் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னதும் டாக்டர் பரிசோதனைக்குப் பலமுறை சென்று வந்ததும் இன்று பரிசோதனை முடிவு தெரிந்து கொள்ள மத்தியான வேளையில் நான் டாக்டரிடம் சென்றதும் உன் மனத்தின் கொல்லைப் புறத்தில் புதையுண்டு போய்விட்டன. மகளின் துயரம் மரமாக உன் வாசற்புறத்தில் வளர்ந்து விட்டது. அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். அவள் அடிபட்டதை, அவள் காரில் ஏறிக் கோபமாக ஓட்டி வரும் காட்சியை, உன் பேரன் அந்தக் காரின் ஓரத்தில் தொத்திக் கொண்டு வருவதை, மழை பொழிந்து வெள்ளக்காடாகிவிட்ட நெடுஞ்சாலையில் உன் மகளின் கார் இருளைக் கிழித்துக் கொண்டு வரும் அபாயகரமான காட்சிகளை கற்பனை செய்தவாறு இருக்கிறாய்.
என் அன்பு மனைவியே! மனசை இப்படி நைந்து போக விட்டு விடாதே. நான் சொல்லுகின்ற செய்தியைத் தாங்கிக்கொள்ள உனக்கு இன்னும் உரம் வேண்டும். இது பெரிது. உன் மகளின் செய்திகள் உன் மனதுக்குத் துப்பாக்கி ரவைகள் என்றால் என் செய்தி ஆயிரம் டன் டிஎன்டி. தயாராக இரு. பக்கத்தில் எதையாவது உறுதியாகப் பிடித்துக் கொள். மயக்கம் வரும். ஆண்டவனை வேண்டிக்கொள்.
ஜானகி திடீரென்று தலை நிமிர்ந்து அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். "சரி, டாக்டர் என்ன சொன்னாரு? அதக் கேக்காம ராதா கதயே பேசிக்கிட்டு இருந்திட்டேனே!"
டீ கோப்பையைக் கீழே வைத்தார். ஜானகி முகத்தைப் பார்த்தார். இதை உன்னால் தாங்க முடியுமா? நீ உன் மகள் நினைவில் குலைந்திருக்கும் இந்தத் தருணத்தில் இந்தக் கல்லை உன் தலையில் போடட்டுமா? நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னை வதைப்பதற்குத் தயாராக இல்லை. மனிதன் வதை படுவதில் துன்பம் இருந்தாலும் கண்ணியம் உண்டு. ஆனால் மற்றவர்களை வதைப்பதில் கண்ணியமில்லை. என் அன்பு மனைவியே! இந்தச் செய்தி காத்திருக்கலாம். நான் உன்னை விதவையாக்கப் போவது நிச்சயம். ஆனால் அது நாளைக்கே நடக்கப் போவதில்லை. அது இன்னும் சொஞ்ச நாள் காத்திருக்கலாம். உனக்கு இந்த ஓரிரவுக்குப் போதிய துன்பங்கள் மனத்தில் இருக்கின்றன. இன்றிரவு உன் மகளைப் பார்த்துக் கதைகளைக் கேட்டறிந்து நாம் இருவரும் நம் புண்களில் செருகிக் கொள்ள பல வேல்கள் காத்திருக்கின்றன. இப்போது இது வேண்டாம்.
"இன்னும் லேப்ல இருந்து பரிசோதனை முடிவு வரலியாம் ஜானகி. ரெண்டொரு நாள்ல தெரியும்னு டாக்டர் சொல்றார்"
"இன்னைக்குக் கண்டிப்பா வந்திரும்னு சொன்னாங்களே..."
"சொன்னாங்க. இப்ப இல்லைங்கிறாங்க. என்ன பண்றது?"
"உங்களுக்கு வலி எப்படி இருக்கு?"
"பரவால்ல. சாப்பாட்டில கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கச் சொன்னார்."
கொஞ்சம் கால அவகாசம் வாங்கிக் கொண்டார். ஜானகி முகம் மீண்டும் மழைத் தாரைகளை நோக்கித் திரும்பியது. மழைத்தாரைகள் என்ற வெள்ளித்திரையில் ராதா - மணி இவர்களின் வாழ்க்கைப் படம் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டார். காதல், பிரிவு, வீரம் கொஞ்சமும் கலக்காத அடிதடி, சில புண்கள், ஏராளமான கண்ணீர்... இப்படி அவல ரசங்கள் நிறைந்த திரைக்கதை. இதன் முடிவை இப்போதைக்கு இந்த வெள்ளித்திரையில் காண முடியாது. அதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
இந்தக் கதையின் முடிவில் பழங்காலப் பாணியில் "சுபம் சுபம்" என்று போடமாட்டார்கள். புதிய பாணியில் டைரக்டரின் முடிவுரையாகத் தமிழ்ப் பண்பாட்டை போலித்தனமாக மிகைப் படுத்தும் குரலும் கேட்காது. விளக்குகள் மீண்டும் பளிச் பளிச்சென்று எரிந்து கற்பனை உலகிலிருந்து நம்மை நிஜ உலகுக்கு கொண்டு வராது. இது முடிந்தது என்று எழுந்து காரில் ஏறி வீடு போய்ச் சேர முடியாது. ஏனென்றால் இது வாழ்க்கை. நிஜ உலகுக் கதை.
இல்லை. இதுவும் நிஜ உலகு இல்லை. இதுவும் மாயைதான். இதற்கு அப்பால் இருக்கிறது ஒன்று. ஜானகி! அதை நான் விரைவில் தெரிந்து கொள்ளும் காலம் வந்து விட்டது.
"நான் போய் குளிச்சிட்டு வந்திட்றேன் ஜானகி!" என்றார்.
ஜானகி தன் நினைப்பில் இருந்தாள். பதில் சொல்லவில்லை. எழுந்து குளிக்கப் போனார்.
- *** ***
ஷவர் சுகமாக இருந்தது. வெந்நீர் உடம்பில் வழிந்தோடுவது தோலுக்கு இதமாக இருந்தது. உள் உடல் வேதனை இப்போது தெரியவில்லை. மேல் உடல் சுகம் மட்டுமே தெரிந்தது. ஆனால் தோலைத் தேய்க்கும் போது ஆங்காங்கே கருமை கட்டியிருந்த இடங்களில் கொஞ்சம் வலி தெரிந்தது.
ஜெனரல் ஆஸ்பத்திரியின் புற்று நோய்ப் பிரிவில் அந்த இரண்டு டாக்டர்களும் துன்பமோ மகிழ்ச்சியோ இல்லாத இயந்திரத் தனமான குரலில் அவருடைய மருத்துவ அறிக்கையை வாசித்து விளக்கிக் காட்டியது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.
"திரு சுந்தரம். உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் டாக்டர் ஷகாபுதீன்.
"அப்படித்தான் இருக்கிறது டாக்டர். தலை வலி சில நேரங்களில் தாங்க முடியவில்லை. வயிற்றில் எப்போதும் ஒரு குமட்டல் உணர்ச்சி. சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டால் உடனே வயிற்றுப் போக்கு வந்துவிடுகிறது. இரவில் சில நேரங்களில் உடல் நடுங்குகிறது" என்றார் சுந்தரம்.
டாக்டர் டான் கேட்டார்: "உங்கள் அன்றாட காரியங்களைக் கவனிக்க போதிய பலம் இருக்கிறதா?"
"கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். ஆனால் கொஞ்சம் ஏதாகிலும் வேலை பார்த்தவுடன் உடல் அசந்து விடுகிறது"
டாக்டர் டான் கையிலிருந்த கோப்பிலிருந்து தாள்களைப் புரட்டியவாறு சொன்னார்.
"உங்கள் நோய் அடையாளங்களைப் பார்த்து நாங்கள் சந்தேகப்பட்டது சரியாகப் போய்விட்டது. உங்கள் கபாலம் முதுகுத் தண்டு ஆகியவற்றின் "ஸ்கேனிங்" முடிவுகள் வந்திருக்கின்றன. உங்கள் ரத்தப் பரிசோதனையும் எலும்பு "மேரோ" பரிசோதனை முடிவுகளும் வந்துவிட்டன. கல்லீரல் "பயோப்சி" முடிவும் வந்திருக்கிறது."
சுந்தரம் அவர்கள் முகத்தை ஆவலுடன் பார்த்தார்.
ஷகாபுதீன் சொன்னார்: "உங்கள் மூளையில் ஒரு கட்டி இருக்கிறது. ஆபத்தான புற்று நோய்க்கட்டி. இரத்தப் பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் மிக அதிகமாக இருக்கின்றன. கல்லீரலில் புண் இருக்கிறது. இவை நிச்சயமாக உங்களுக்குப் புற்று நோய் இருப்பதற்கான ஆதாரங்கள்."
இதயத்தில் பாறை தாக்கிற்று. ஆனால் அதன் முழு வலியும் இன்னும் தெரியவில்லை.
"அப்படியா? உண்மையாகவா டாக்டர்?"
"ஆமாம். எல்லாப் பரிசோதனைகளும் செய்து விட்டோம். சந்தேகம் ஒன்றும் இல்லை!"
"ஆரம்பக் கட்டமா, முற்றி விட்டதா எப்படி...?"
"மூளையில் இருந்து உடம்பின் மற்ற உறுப்புக்களுக்கும் பரவ ஆரம்பித்து விட்டது. மிக விரைவாகப் பரவுகிறது. முற்றுவது மிக விரைவாக நடை பெறும்"
சுந்தரத்துக்கு நாக்கு வறண்டிருந்தது. "என்ன ஆகும் டாக்டர்?"
"இப்போது ஆகிக் கொண்டிருப்பது போலத்தான். தலைவலியும் மயக்கமும் இன்னும் அதிகமாகும். கல்லீரல் வீங்கி விடும். சாப்பாட்டில் ருசி போய்விடும். சாப்பாடு தங்காது. தோலில் ரணங்கள் உண்டாகும். அந்த ரணங்கள் சுலபத்தில் ஆறாது. உள் உறுப்புக்களில் புண் ஏற்பட்டால் ஆறாது. போகப்போக எந்த உறுப்பு புண்ணாகும் என்று சொல்ல முடியாது!"
இப்போதே வயிற்றில் அமிலங்கள் ஊறிப் புண்ணாய்ப் போவது போல உணர்ந்தார். கபாலத்துக்குள் மூளை மடிப்புக்களில் புழுக்கள் நௌிவது போன்ற ஒரு கண நேரக் கற்பனை. தலைகுனிந்து மௌனித்திருந்து கேட்டார்.
"மருந்துகள், சிகிட்சை...?"
"இங்கு நாங்கள் செய்வதற்கு அதிகம் இல்லை. அறுவை சிகிட்சை முடியாது என்று முடிவு செய்து விட்டோம். கட்டி உண்டாகியிருக்கும் இடம் மிக அபாயமானது. மௌன்ட் மிரியம் புற்று நோய் மருத்துவ மனையில் அட்மிட் பண்ணிக் கொள்ளுங்கள். ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியும் ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் விரிவான ரிப்போர்ட் தருகிறோம்!"
"எப்போது போக வேண்டும்?"
"எங்களைக் கேட்டால் இப்போதே அம்புலன்ஸ் வரச்சொல்லி அனுப்பி விடுவோம். அவ்வளவுக்கு முற்றியிருக்கிறது. ஒரு நாளும் கடத்தக் கூடாது. ஆனால் முடிவு உங்களுடையது"
"குணமாகிவிடுமா டாக்டர்?" கேள்வியில் குழந்தைத்தனம் இருந்தது. பயம் இருந்தது.
"அதை நாங்கள் சொல்ல முடியாது திரு. சுந்தரம். புற்று நோய் மருத்துவ மனையில் நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சோதித்துச் சொல்லுவார்கள். அதுவும் ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியும் ஆரம்பித்த பிறகுதான் உத்தேசமாகச் சொல்ல முடியும். நீங்கள் விரைவாகப் போவது நல்லது. இதில் கடிதம் இணைத்திருக்கிறோம்! ரிப்போர்ட்டும் இருக்கிறது!" ஒரு பெரிய உறையைத் தந்தார்கள்.
ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்த பிறகு மனம் அந்த முடிவுகளை மறுதலித்தது. அந்த டாக்டர்களின் அறிக்கையின் மேல் சந்தேகம் வந்தது. ஏதோ இரண்டு நாட்கள் பரிசோதித்துவிட்டு இத்தனை நிச்சயமாகச் சொல்லுகிறார்களே! எப்படி இவர்களுக்குத் தெரியும்? கொஞ்சம் தலை வலி வந்துவிட்டால் புற்று நோய் என்ற அர்த்தமாகிவிடுமா? இந்த 57 வயதில் கொஞ்சம் அசதி, கொஞ்சம் அஜீரணம், கொஞ்சம் வயிற்றுப் போக்கு, கொஞ்சம் தலைவலி இயற்கைதானே! வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்த்துக் கேட்க வேண்டும். உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அரசாங்க ஆஸ்பத்திரி என்றால் இப்படித்தான். ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குச் சென்று வேறு நல்ல டாக்டர்களைப் பார்க்க வேண்டும்.
காரில் வந்து உட்கார்ந்த போது சாவியைத் திருப்ப முடியாமல் கை நடுங்கிற்று. டாக்டர்களின் அறிக்கையின் மேல் பட்ட சந்தேகம் திடுமெனக் கரைந்து விட்டது. இவர்கள் நிபுணர்கள், என்னைப் போல் ஆயிரம் கேஸ் பார்த்தவர்கள். இவர்கள் சொல்லுக்கு அட்டியில்லை என்ற உண்மை தாக்கிற்று.
காரை எடுத்து வெளியாகி, ஜாலான் ஹோஸ்பிட்டல் சாலையிலிருந்து மெதுவாக நிதானமாக ஓட்டி வந்தார். ஜாலான் சுல்தான் அஹமட் ஷாவில் நுழைந்து தன் வீட்டுக்குப் போகும் வழியில் தஞ்சோங் தொக்கோங் சுற்றுவட்டத்துக்கு வந்த போது இந்த விஷயத்தை ஜானகியிடம் எப்படிச் சொல்லுவது என்ற கேள்வி எழுந்தது. காரின் வேகம் குறைந்தது. தஞ்சோங் பூங்காவில் உள்ள தன் வீட்டுக்குப் போகும் பாதையில் திரும்புவதற்கு பதிலாக கர்னி டிரைவுக்குத் திரும்பினார். ஓரமாக நிறுத்திவிட்டு கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சடசடவென மழை பிடித்தது. அங்குதான் காரைப் போட்டுவிட்டுக் காத்திருந்தார். தன் நோயின் கனத்தை அசை போட்டுப் பார்த்து அழுது தெளிந்தது அப்போதுதான்.
வெதவெதவென்றிருந்த சுடு நீர் வழிந்தவாறிருந்தது. உடம்பை வருடிக்கொண்டிருந்தது. இந்த சுகங்களை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். இவை நெடுநாட்களுக்கு நிலைப்பவை அல்ல. எத்தனை நாட்களுக்கு இப்படித் தானாக எழுந்து வந்து ஷவரைத் திறந்து சோப் தேய்த்துக்கொண்டு துண்டால் உடம்பைத் துவட்டிக்கொள்ள இயலுமோ தெரியவில்லை. டாக்டர் சொல்வதைப் பார்த்தால் யமதூதர்கள் வாசலில் காத்திருப்பதாகத்தான் தோணுகிறது.
ஏன் இப்படி 57 வயதில் எனக்கு அழைப்பு? என்ன குற்றம் செய்தேன்? எனக்குத் தெரிய 90 வயது வரை வாழ்ந்தவர்கள் இருக்கிறார்களே! பிரபல இடைநிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பதவியை கௌரவமாக வகித்து எல்லாரிடமும் நல்லவர் என்று பெயரெடுத்து, கோலாகலமாக ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆசிரியர்களின் அன்புக் கண்ணீர் மல்கும் பிரியா விடையைப் பெற்று இன்னும் ஈராண்டுகள் ஆவதற்குள்...
ஒருவேளை இது இறைவன் என்னைத் தண்டிக்கின்ற வேளை போலும். மகள் ராதாவின் வாழ்க்கை போன இரண்டாண்டுகளாகவே சரிந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டுக்குப் படிக்கப் போன மகன் வசந்தன் இரண்டாண்டுகளாகப் பரிட்சையில் தோல்வி கண்டு திரும்பி வராமல் பணத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறான். ஓய்வு பெற்றதில் வருமானம் நின்று போய் பென்ஷன் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த நோய்.
புற்றுநோய் மருத்துவ மனைக்குப் போவதா இல்லையா? ரேடியோதெராப்பிக்கும் கெமோதெராப்பிக்கும் சம்மதிப்பதா இல்லையா? முடிவுகள் எடுக்க வேண்டும். சிரமமான முடிவுகள். கெமோதெராப்பி பற்றி அவருக்குக் கொஞ்சம் தெரியும். கதிரியக்கம் பாய்ச்சுவார்கள். வயிறு குமட்டிக் கொண்டு வரும், தலைமயிர் உதிர்ந்து மொட்டையாகும். இரவில் தூக்கம் வராது. தலை சுற்றியவாறிருக்கும்.
அவர் மனதுக்குள் பீதி படர்ந்தது. கால்கள் தளர்ந்தன. குளியலறைச் சுவரில் சாய்ந்தார்.
"எவ்வளவு நேரமா குளிக்கிறிங்க? சீக்கிரம் வாங்க! நான் சாப்பாடு எடுத்து வச்சிட்டு ராதாவுக்கும் பையனுக்கும் தங்கிறதுக்கு ரூம் தயார் பண்ணனும்!"
ஜானகி வெளியிலிருந்து சத்தம் போட்டார்.
சுந்தரம் ஷவரைத் திருகி அடைத்தார். தண்ணீர் நின்றது. தோல் ரணங்கள் நோகாமல் டவலை ஒத்தி ஒத்தி எடுத்தார்.
மகளுக்கு அறை மட்டும் தயார் பண்ணுவதோடு உன் கடமை முடிந்துவிடாது ஜானகி. கையோடு இந்தக் கணவனுக்கும் ஒரு கல்லறை தயார் பண்ணி விடு.