அந்திம காலம்/அந்திம காலம் - 10

அன்று பகல் முழுவதும் பயங்கரமானதாக இருந்தது. தலை சுற்றல் கொஞ்சமும் ஓயவில்லை. தலையணையில் தலைசாய்ந்திருந்த போதும் ஏதோ பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்வே இருந்தது. தலையில் விண் விண்ணென்ற வலி இருந்தது. வயிறு குமட்டியவாறே இருந்தது. சாப்பாட்டை நினைக்கவே முடியவில்லை. ஜானகி ஏதோ சூப் செய்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். இரண்டு கரண்டி சாப்பிட்டு 'குவேக்' என்று குமட்டினார். அப்புறம் அதைத் தொட முடியவில்லை. மாலை மடிந்து இருள் படரத் தொடங்கிய அந்த வேளையில் சோபாவுக்குள் வயிற்றைப் பிசைந்து கொண்டு சுருண்டு படுத்துவிட்டார்.

முன்னிரவில், இன்னமும் கொஞ்சம் மிச்சமாய் இருக்கும் பின்மாலை வௌிச்சத்தில், பிரகாசிக்க முடியாமல் மஞ்சளாய் மங்கியிருக்கும் மின்சாரக் குமிழிகளின் வௌிச்சத்தில், வீடு வெள்ளையும் மஞ்சளும் கலந்த ஒளியில் இருந்தது. ஒரு வாழும் வீட்டுக்குரிய அமைதியான ஒலிகள் அவர் காதுகளை வந்தடைந்தன. அடுப்பில் ஏதோ தாளிக்கும் ஒலி; பைப்பைத் திறந்து தண்ணீர் வடூய விட்டுப் பாத்திரங்களை அலசி எடுக்கும் ஒலி; பீங்கான் தட்டுகளை மேசையில் வைக்கும் ஒலி; இவற்றுக்கெல்லாம் பின்னணியாக அடுப்பங்கரையில் எந்நாளும் பாடியவாறிருக்கும் வானொலி ஆறிலிருந்து ஏதோ ஒரு சினிமாப் பாட்டு; "அடுப்பக் கொஞ்சம் கொறச்சி வைங்க அத்தை" என்ற ஜானகியின் பணிவான குரல்; ஜானகியும் அன்னமும் தணிந்த குரலில் பேசிக் கொள்ளும் வார்த்தைகள் புரியாத ஒலி; எண்ணெய் மணம்; தலைக்கு மேல் சுருதி பிசகாமல் விர் விர்ரென்று சுழன்று கொண்டிருக்கும் விசிறி.

குடும்பத்தின் ஒலிகள், மணங்கள், வௌிச்சங்கள். இவையெல்லாம் சேர்ந்ததுதான் வீடு. இது நல்ல வீடு என்று நினைத்துக் கொண்டார்.

மனமும் உடலும் சோர்ந்திருக்கும் போதுதான் இந்த ஒலிகள் தௌிவாகக் கேட்கின்றன. உற்சாகமாக இந்தக் குடும்பச் சூழ்நிலையில் ஒருவனாக ஆடியோடிக் கொண்டிருந்த நாட்களில் இந்த ஒலிகள் மீது கவனம் இருந்ததில்லை. இந்த ஒலிகள் பின்னணியில் இருந்தன. இன்று ஆட்டம் ஓட்டம் ஓய்ந்து விட்ட போது இந்த ஒலிகள் முன்னணியில் இருக்கின்றன. இவற்றின் சுகம், குடும்பச் சூழ்நிலையில் இவை வகிக்கின்ற இடம் இப்போதுதான் தெரிகிறது. இது விகாரங்கள் இல்லாத சராசரிக் குடும்பம் என்று நினைத்துக் கொண்டார். துன்பங்களும் இன்பங்களும் கலந்து இருக்கின்ற மிதமான குடும்பம்.

ஆனால் இப்போது துன்பம் ஓங்கியிருக்கும் காலம். பென்டுலம் துன்பத்தின் பக்கமாக ஓங்கியிருக்கிறது. இது இறங்குமா? இன்பம் ஓங்குமா? ஓங்கும். பென்டுலம் திரும்பும். ஆனால் அதற்கு முன் தன்னை விழுங்கிவிட்டு இந்த வீட்டில் ஓர் இழவு நடந்து ஒப்பாரிகள் முடிந்த பின்னர் மெதுவாக அமைதி மீண்டு இன்பம் ஓங்கும். அதற்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கலாம்.

இன்றைக்கு என்ன கிழமை? செவ்வாயா? இரண்டு வார சிகிச்சை முடிந்து மூன்றாவது வாரத்தில் மீண்டும் இரண்டு நாட்கள் சிகிச்சையில் ஓடிவிட்டன. டாக்டர் கொடுத்த மருந்துகளை ஜானகி நேரம் தவறாமல் அளந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மருந்தின் பக்க விளைவுகள் கடுமையாக இருந்தன. குரல் ரணமாகிவிட்டது. தண்ணீர் குடித்தாலும் வலித்தது. பசி என்பது என்ன என்று மறந்து விட்டது. தலை புண்ணாக இருந்தது. கதிரியக்கம் பாய்ச்சப்படும் அந்த இடம் கருத்துத் தீய்ந்து விட்டது. வலித்தது. அந்தப் பக்கம் திரும்பிப் படுக்க முடியாமல் ஒரு பக்கமாகவே ஒருக்களித்துப் படுக்க வேண்டியிருந்தது. உடல் முழுதும் தோல் ரணம் அதிகமாகிவிட்டது. குளிக்க, துவட்ட முடியவில்லை. டவலைத் தண்ணீரில் நனைத்து ஒத்தி ஒத்தி எடுக்க வேண்டியிருந்தது. தூக்கம் வரவேண்டிய வேளைகளில் அதற்குப் பதிலாக மயக்கம்தான் வந்தது. தலை முடி கொட்டத் தொடங்கியிருந்தது.


      • *** ***


நேற்று மௌன்ட் மிரியம் போயிருந்த போது, எக்ஸ்ரேக்களைப் பரிசோதித்து விட்டு டாக்டர் லிம் பெருமூச்சு விட்டுப் பேசினார். "சுந்தரம், இரண்டு வாரம் முழுக்கக் கொடுத்த சிகிச்சை அவ்வளவாகப் பலன் தரவில்லை."

"அப்படியென்றால்...?" சுந்தரம் கவலையோடு கேட்டார்.

"புற்று நோய் செல்களின் வளர்ச்சி தடைப்படவில்லை. கொஞ்சம் செல்கள் தீய்ந்துள்ளன. ஆனால் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை.

அமைதியாக இருந்தார்கள். டாக்டர் லிம் எக்ஸ்ரே படத்தைப் பெரிதாக்கிக் காட்டும் மானிட்டர் திரையில் பல கோணத்தில் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

"இன்னும் ரெண்டு மூன்று நாள் ரேடியோதெராப்பியையும் கெமோதெராப்பியையும் தொடருவோம். பலன் இல்லையானால் இதை நிறுத்தி விடுவோம்."

"நிறுத்தி விட்டு..?"

டாக்டர் யோசித்தார். "இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு புதிய புற்று நோய் ஆராய்ச்சியாளர் நம் மருத்துவ மனைக்கு வருகிறார். மலேசியர்தான். அமெரிக்காவில் ஆராய்ச்சியை முடித்து சில புதிய உத்திகளோடும் மருந்துகளோடும் திரும்ப வருகிறார். இங்கு தங்கியிருந்து மேலும் சில ஆராய்ச்சிகளைச் செய்யப் போகிறார். என்னோடு இணைந்து பணியாற்றப் போகிறார். அவரிடம் உங்களைக் காட்டப் போகிறேன்" என்றார்.

வாழ்க்கை எனக்கு எதிராக இருக்கிறது. தெய்வங்கள் என்னைக் கைவிட்டு விட்டன. ஒரு புதிய டாக்டர் வந்து இந்த விதியை மாற்றி எழுதிவிட முடியாது எனத் தோன்றியது. எனக்கு மரணம் என்பதை எழுதி உறுதிப் படுத்தியாகி விட்டது. ஆனால் அது சாதாரண மரணமாக அமையக் கூடாது என மேலே முடிவு செய்யப்பட்டு தீர்ப்பு எழுதப் பட்டிருக்கிறது. 'இந்த சுந்தரம் என்ற குற்றவாளி ஆறு மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு, இவனது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக அழுகிய பின் இறுதியாக மூச்சுத் திணறலுடன் சாக வேண்டும் என்பது இந்த தேவலோக நீதி மன்றத்தின் முடிவு. முதலாவதாக மூளையின் சில பாகங்கள் அழுக வைக்கப் படும். அதன் பின்னர்...'

"சுந்தரம். கவலைப் படாதீர்கள். இந்த நோய் உங்களுக்கு எப்படி ஒரு சவாலோ அப்படியே எனக்கும் ஒரு சவால்தான். இதைக் கட்டுப் படுத்த என்னால் ஆன அனைத்தையும் செய்வேன். இதற்கிடையில் டாக்டர் ராம்லி வந்ததும் நாம் நடத்தும் போரில் அவரும் பக்க பலமாக இருப்பார்" என்றார் டாக்டர் லிம்.

"வேறு பலன் இல்லா விட்டாலும் உங்கள் ஆராய்ச்சிகளுக்கு என் நோய் பயன் படுவதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்றார் சுந்தரம்.

டாக்டர் லிம் சிரித்தார். "நல்லது, நல்லது. அந்த மனப் போக்குதான் வேண்டும்" என்றார்.


      • *** ***

சென்ற வாரத்து நினைவுகளுக்கு ஊடே கொஞ்சமாகத் தூக்கம் வந்தது போல் இருந்து அது கலைந்த நேரத்தில் பலவீனமாகக் கண்ணைத் திறந்து பார்த்தார். பரமா கொஞ்சம் தூர நின்றவாறு அவரைக் கவனித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையசைத்துக் கூப்பிட்டார். மெதுவாக பக்கத்தில் வந்து நின்றான். அவனைப் பார்த்து சோர்ந்து புன்னகைத்தார்.

"தாத்தா, ஆர் யூ சிக்?" என்று கேட்டான்.

"ஆமாம்!" என்று தலையாட்டினார்.

அருகில் வந்து அவர் மடியில் கை வைத்து முகத்தையே கூர்ந்து பார்த்தான்.

"வை ஆர் யு சிக்?" என்று கேட்டான்.

'அது தெரிந்தால் வாழ்க்கையின் ரகசியம் புரிந்துவிடும் என் அன்பு பேரப்பிள்ளையே!' என்று எண்ணிக்கொண்டு அவனை அணைத்துக் கொண்டார்.

"சீக்கு எல்லாருக்கும் வரும் பரமா! வந்து வந்து போகும். என்ன செய்றது? உடம்புன்னு இருந்தா சீக்கு வரத்தான் செய்யும்!" என்றார்.

அவர் பக்கத்தில் நெருக்கமாக வசதியாக உட்கார்ந்து கொண்டான்.

"ஐ ஏம் அல்சோ சிக்! சீ!" இருமிக் காட்டினான். அவன் நெஞ்சில் சளி கட்டியிருப்பது தெரிந்தது.

அவனுடைய இருமலும் சளியும் அவருக்கும் கவலையாகத்தான் இருந்தது. எப்போதும் சோர்ந்து இருந்தான். அவனுடைய எடையும் குறைந்து கொண்டே வந்தது. ஜானகி அவனை இரண்டு மூன்று முறை கிளினிக்குக் கொண்டு சென்று வந்தாள். அங்கிருந்து தனியார் குழந்தை நோய் நிபுணரிடமும் கொண்டு சென்றிருந்தாள். இருந்தும் அவன் இருமலும் சோர்வும் அவனை விட்டுப் போனதாகத் தெரியவில்லை.

ஜானகியும் அன்னமும் அடுப்படியில் வேலை முடித்து அந்தப் பக்கமாக வந்தார்கள். ஜானகி பரமாவை அவரிடமிருந்து பிரித்து அழைத்துக் கொண்டாள். "பரமா! தாத்தா படுத்திருக்கும் போது தொந்திரவு பண்ணாதேன்னு சொன்னேனா இல்லியா?" என்று அவனை அதட்டினாள். அவன் சிணுங்கினான்.

சுந்தரம் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். இந்த இரண்டு பெண்களும் பார்க்கின்ற வேளையில் துவண்டு கிடந்து தனது இயலாமையைக் காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

"ஏதாகிலும் குடிக்கக் கொண்டு வரட்டுமாங்க?" என்று கேட்பாள் ஜானகி.

வேண்டாம் என்று தலையாட்டினார். "அதிருக்கட்டும் ஜானகி. பரமா இப்படி இருமிக்கிட்டே இருக்கானே, டாக்டர் என்னதான் சொல்றாரு?"

"அதாங்க கிளினிக்கில குடுத்த மருந்தில ஒண்ணும் மாற்றத்தக் காணும். குழந்தை டாக்டர் நாதன்கிட்ட காட்டியிருக்கு. அவர் ரெண்டு தடவ ரத்த சாம்பிள் எடுத்து சோதனைக்கு அனுபியிருக்கிறாரு. நாளன்னைக்குத்தான் முடிவு வருமாம். போய்ப் பார்த்தாத்தான் தெரியும்" என்றாள் ஜானகி.

அன்னம் பேசினாள்: "பிள்ளைக்கு அப்பா அம்மாவ இப்படித் திடீர்னு பிரிஞ்சிருக்கிறதே பெரிய பாதிப்பா இருக்கும் தம்பி. சின்னப் பிள்ளதானே! ஏக்கத்திலேயே சோர்ந்து போய் சீக்கும் வந்திரும்."

"வென் இஸ் மை மம்மி கமிங் பேக்?" என்று கேட்டான் பரமா.

"ஆமா! பாத்துக்கிட்டே உக்காந்திரு. ஒங்க அம்மா ஒன்னத் தேடி வரப்போறா" என்று வெடுக்கென்று பேசினாள் ஜானகி.

"ஜானகி, கொழந்த கிட்ட அப்படிப் பேசாதேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்!. ஏற்கனவே நொந்து போன கொழந்த! நாமில்லையா அவன்கிட்ட அன்பா இருக்கணும்!" என்று கோபப்பட்டார் சுந்தரம். கோபப்பட உடம்பில் தெம்பிருப்பது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஜானகி பரமாவின் தலைமுடியைக் கோதி விட்டவாறே பேசினாள். "கொழந்த மேல எனக்கு என்னங்க கோவம்? இந்தப் பாவி இப்படி நம்பள விட்டுட்டுப் போயிட்டாளேன்னுதான்..."

பரமா பாட்டியின் மடியில் பாசமாகச் சாய்ந்தான்.

அன்னம் திடீரெனப் பேசினாள். "தம்பி! சனிக்கிழம, ஞாயித்துக் கிழம ஒனக்கு சிகிச்சை கெடையாதுதான?" என்று கேட்டாள்.

"ஆமா கிடையாது! ஏன் கேக்கிற அக்கா?" என்று கேட்டார்.

"இல்ல, இந்த வாரம் வெள்ளிக் கிழம எல்லாருமா என்னோட தைப்பிங் வந்திடுங்க! ரெண்டு நாள் அங்க வந்து ஓய்வா இருங்க. தைப்பிங் லேக் கார்டன்ல போய் உக்காந்தா உன் நோயில பாதி குறைஞ்சிடும்! என்ன சொல்ற?" என்று கேட்டாள்.

நல்ல திட்டம்தான். தைப்பிங் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஏரிக் கரையும் ரொம்பப் பிடிக்கும். அந்த நினைப்பிலேயே ஒரு குளுகுளுப்பு இருந்தது. ஆனால்...

"நல்ல திட்டந்தாக்கா. ஆனா அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணனுமே!" என்றார்.

"பிரயாணம் என்ன பெரிய பிரயாணம்? என்னோட கார்லியே உன்ன அழச்சிக்கிட்டுப் போறேன். ஏறி ஒக்காந்தா ஒரு மணி நேரத்தில தைப்பிங்! அப்படியே களைப்பா இருந்தா இடையில இளைப்பாற எத்தனையோ இடம் இருக்கு!"

ஜானகியின் முகத்தைப் பார்த்தார். "என்ன சொல்ற ஜானகி?" என்றார்.

"போறது நல்லதுதாங்க. நீங்களும் வீட்டுக்குள்ளயே கெடக்கிறிங்க. இந்த மாற்றம் நல்லதுதான்!" என்றாள்.

உண்மைதான். இந்த உடம்பின் உபாதைகளுக்கு இடம் கொடுத்து இருந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்க முடியாது. நோய் இன்னும் இடம் எடுத்துக் கொள்ளும். இன்னும் உற்சாகமாக வளரும். அதை உதாசீனம் செய்ய வேண்டும். உடம்பு சோரும் நேரங்களில் உள்ளத்துக்கு உற்சாகம் ஏற்படுத்த வேண்டும். இந்த நோயைப் புறந்தள்ள வேண்டும். புதிய காற்றும் காட்சிகளும் உள்ளத்துக்குக் கள்ளூட்டினால் உடம்பின் உபாதைகள் தாமாக மறையும்.

அவர் எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல பரமா உற்சாகமாகச் சொன்னான் "ஓக்கே தாத்தா, லெட் அஸ் ஆல் கோ டு தைப்பிங்!" ஜானகி சிரித்துக் கொண்டே அவனை உச்சி மோந்தாள்.

வார இறுதியில் தைப்பிங் போவதென முடிவாயிற்று. அந்த எண்ணமே எல்லார் மனத்திலும் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த வாரம் முடிவதற்குள் வாழ்க்கையில் இன்னொரு இடி விழவிருக்கிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.


      • *** ***

வியாழனன்று சிகிச்சைக்குப் போனபோது டாக்டர் லிம்மோடு மதர் மேகியும் இன்னொரு இளம் மலாய் டாக்டரும் இருந்தார்கள். டாக்டர் லிம் சுந்தரத்திற்கு அந்தப் புதியவரை அறிமுகப் படுத்தி வைத்தார். "மிஸ்டர் சுந்தரம், இவர் டாக்டர் ராம்லி. அன்றைக்குச் சொன்னேனல்லவா, இவர்தான்!"

டாக்டர் ராம்லி உட்கார்ந்திருந்த வாக்கில் கை குலுக்கினார். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்தார். சிரிப்பற்ற கடுமையான முகம். மிகவும் சீரியசான ஆராய்ச்சியாளராக இருப்பார் போலும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

மதர் மேகி என்றும் போல் மாறாத சிரிப்புடன் இருந்தார். "ஹலோ சுந்தரம்! உங்கள் வியாதியால் எங்கள் மருந்துகளையெல்லாம் நீங்கள் முறியடிப்பதாக டாக்டர் லிம் சொல்கிறாரே, உண்மைதானா?" என்று கேட்டுச் சிரித்தார்.

சுந்தரத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. "சாகப் போகிறவனை ஒரு வீரனாக்கப் பார்க்கிறீர்கள்" என்றார்.

டாக்டர் லிம் பேசினார். "சுந்தரம், டாக்டர் ராம்லி உங்கள் மருத்துவ வரலாற்றை எல்லாம் பார்த்து விட்டார். மேலும் சில சோதனைகள் மேற்கொள்ளவிருக்கிறார். ரத்த சோதனையும் பயோப்சியும் செய்வார். உங்கள் மருந்துகளை ரத்துச் செய்து விட்டேன். அடுத்த திங்கள் கிழமை நீங்கள் வரும் போது டாக்டர் ராம்லி பரிசோதனைகள் முடித்து புதிய சிகிச்சை ஆரம்பிப்பார்."

டாக்டர் ராம்லி முதன் முறையாகப் பேசினார். "சில புதிய மருந்துகள் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் இப்போதுதான் இவற்றைப் பயன் படுத்த அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மலேசியாவில் சோதனை முறையில் இவற்றைப் பயன் படுத்த நான் தனி அனுமதி வாங்கியிருக்கிறேன். அந்த உண்மையை உங்களிடம் நான் தெரிவிக்க வேண்டியது கடமை" என்றார். ஏக அமெரிக்க வாடையுடன் ஆங்கிலம் பேசினார். அவர் குரல் கொஞ்சம் முரட்டுத் தனமாகவும் இருந்தது.

மதர் மேகி குறுக்கிட்டார். "உண்மையில் மலேசியாவில் இந்த மருந்தைப் பெறப் போகும் முதல் புற்று நோய் நோயாளி நீங்கள்தான். ஆகவே நீங்கள் குணமடைவது அல்லது குணமடையாமல் இருப்பது என்பது இந்த மருந்தின் வெற்றி தோல்விக்கு ஒரு சோதனையாக அமையும். அதனால்தான் உங்கள் முன்னேற்றத்தை அணுக்கமாகக் கவனித்து மற்ற நோயாளிகளுக்கு இதை அறிவிக்கும் பணியை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த டாக்டர்களுடன் நானும் இங்கிருக்கிறேன்!" என்றார்.

சுந்தரத்திற்கு என்ன சொல்வது என்று தோன்றவில்லை. அன்னையே, நான் முழுகிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கரையேற்ற நீங்கள் வீசும் கயிறு கந்தலாய் இருந்தால் என்ன, பொன்னிழையால் செய்திருந்தால் என்ன? எனக்கு அவற்றின் வித்தியாசம் தெரியாது. எதுவாக இருந்தாலும் நான் பிடித்துக் கொள்ளுவேன்.

"மதர் மேகி. நான் தயார். இந்த நோய் என்னை உருக்குகின்றது. அதிலிருந்து என்னை மீட்க நீங்கள் முடிவு செய்யும் எந்த மருந்துக்கும் எந்த சோதனைக்கும் நான் தயார். நான் பிழைத்தால் ஹீரோ. பிழைக்காவிட்டால் தியாகி. இரண்டு வேஷங்களும் எனக்குச் சம்மதம்தான்" என்றார்.

"பலே, பலே! சரியாகச் சொன்னீர்கள்" என்றார் மதர் மேகி.

டாக்டர் ராம்லி சுந்தரத்தின் ஃபைலைப் பார்த்தவாறு பல கேள்விகள் கேட்டுக் குறித்துக் கொண்டார். பெரும்பாலும் இப்போது சாப்பிடும் மருந்தின் பக்க விளைவுகளைப் பற்றியே அவை இருந்தன.

பின்னர் படுக்கையில் படுக்க வைத்து உடம்பின் பல பாகங்களையும் அழுத்திப் பார்த்தார். வலிகளைக் குறித்துக் கொண்டார். வாயைத் திறந்து கண்களைப் பிதுக்கி வயிற்றைத் தட்டிப் பல குறிப்புகளை எழுதினார். டாக்டர் லிம்மும் அவரும் மருத்துவ மொழியில் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அதன் பின் எக்ஸ்ரே அறைக்கு அழைத்துச் சென்று டெக்னீஷியனிடம் சொல்லிப் பல எக்ஸ்ரேக்களை எடுக்க வைத்தார் டாக்டர் ராம்லி.

முடிந்தவுடன் ஓர் ஊசியுடன் அறைக்குள் வந்தார். தோள்பட்டையில் கிருமிநாசினி தடவி மென்மையாகக் குத்தி மருந்தை மெதுவாகப் பாய்ச்சிய பின் ஊசியை உருவித் துடைத்து விட்டார்.

"இது என்ன மருந்து?" சுந்தரம் சந்தேகத்துடன் கேட்டார்.

"புதிய மருந்து. முன்பு சாப்பிட்ட மருந்துகளால் உங்களுக்கு ஏற்படும் குமட்டலையும் வயிற்றுப் பிரட்டலையும் தலை மயக்கத்தையும் இது குறைக்கும் சக்தியுள்ளது. நீங்கள் வீடு திரும்பலாம். இனி திங்கள் கிழமை வாருங்கள். வீட்டில் மீதியுள்ள எந்த மருந்தையும் இனி சாப்பிட வேண்டாம். திங்கள் கிழமை புதிய சிகிச்சை பற்றி உங்களுக்கு விளக்குகிறேன்" என்றார். அந்தக் குரலில் இருந்த கண்டிப்பு அவர் பேச்சைக் கட்டளையாக்கிற்று.

கதவு வரை போய் அதைத் திறக்கப் போன டாக்டர் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்தார். "உங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்" என்றார்.

"நீங்கள் ஞாபகப் படுத்த வேண்டியதில்லை. திங்கள் கிழமை தவறாமல் வந்து விடுவேன். அதைத் தவிர இந்த உலகத்தில் எனக்கு இப்போது வேறு முக்கியமான வேலைகள் ஏதுமில்லை" என்றார் சுந்தரம். இந்த டாக்டரிடம் கொஞ்சம் வேடிக்கை பேசி அவரது இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும் என்று நினைத்தார்.

"நான் சொல்லியது அதுவல்ல. நான் யார் என்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டும். அது என் கடமை"

"நீங்கள் டாக்டர் ராம்லி..."

"ஆமாம். டாக்டர் ராம்லி பின் டத்தோ யூசுப். உங்கள் முன்னாள் மாணவன். நினைத்துப் பாருங்கள்"

கதவை மூடிப் போய்விட்டார்.

ராம்லியா? தான் கட்டொழுங்கு ஆசிரியராக இருந்த போது தன்னை இக்கட்டில் மாட்டிவிட்ட ராம்லியா? கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் உருப்பட மாட்டான் என்றும், எதிர்காலத்தில் கயவனாகப் போவான் என்றும் தான் கணித்து வைத்திருந்த அந்த விஷமி ராம்லியா?

என்ன நினைப்பதென்று தெரியவில்லை. அதனால்தான் தன்னிடம் இப்படிக் கடுமையாக நடந்து கொள்கிறாரா? நெஞ்சில் இன்னும் வஞ்சம் வைத்துக் கொண்டிருக்கிறாரா? அவரிடம் இப்போது வசமாக மாட்டிக் கொண்டேனா?

ஊசி போட்ட இடத்தைப் பார்த்தார் சுந்தரம். இலேசான எரிச்சல் ஆரம்பித்திருந்தது.


      • *** ***

"புதுசா ஒரு டாக்டர் வந்திருக்காரு ராமா!" ராமாவுடன் காரில் திரும்பும் போது சுந்தரம் சொன்னார்.

"அப்படியா! வௌிநாட்டுக்காரரா? புற்று நோய் நிபுணரா?" என்று கேட்டார் ராமா.

"மலேசியர்தான். மலாய்க்காரர். ஆராய்ச்சியாளர். அமெரிக்காவில ஆராய்ச்சிகள் முடிச்சி வந்திருக்காராம். புதுசா மருந்துகள் கொண்டாந்திருக்கிறாராம்"

"அடடே! அப்ப உன் வியாதி சீக்கிரம் குணமாயிருமா?"

யோசித்தார். "தெரியில. அடுத்த வாரம் வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கணும். ஆனா, டாக்டரப் பார்த்தா பயமாயிருக்கு ராமா!"

"பயமா இருக்கா? ஏன்?"

"டாக்டர் யாருன்னு தெரிஞ்சா நீ கூட பயப்படுவ"

ராமா வியப்பாகப் பார்த்தார். "என்ன சொல்ற சுந்தரம்?"

"டாக்டர் வேற யாருமில்ல. ராம்லி. டத்தோ யூசுப்போட மகன். ஃப்ரீ ஸ்கூல் பழைய மாணவர்"

"ராம்லியா? ஒரு பொண்ண கெடுக்கப் பாத்து உன்ன ஆபத்தில மாட்டி வச்சான, அந்த ராம்லியா?"

"அவனேதான்"

ராமா மௌனமானார். கொஞ்ச நேரம் இருந்து பேசினார். "அதுதான் பயமாயிருக்குன்னு சொல்றியா? பழசயெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருப்பார்னு சொல்றியா?"

"அப்படித்தான் தெரியிது ராமா! என்னோட ஃபைலைப் பார்த்து நான் யார்னு தெரிஞ்சிக்கிட்டும் எங்கிட்ட சுமுகமா பேசல. தன்ன கடைசி நேரம் வரைக்கும் அடையாளம் காட்டிக்கில. மொகத்தை இறுக்கமா வச்சிக்கிட்டு மொரட்டுத் தனமா பேசிறாரு. கடைசியா எல்லாம் முடிஞ்சப்பறம்தான் "நான் யாருன்னு தெரியுதா"ன்னு ஒரு மிடுக்கா கேட்டுட்டுப் போறாரு."

ராமா யோசித்தார். "சேச்சே, நீ நினைக்கிறது சரியில்ல சுந்தரம். இளவயதில எப்படி இருந்தாலும் இத்தனை தூரம் படிச்சி முன்னேறி ஒரு டாக்டராகி ஆராய்ச்சியாளராகி அறிவாளியா இருக்கிற ஒருத்தரோட மனசில பழைய அர்த்தமில்லாத வெறுப்புகள் இருக்க முடியாது. ஒரு டாக்டரோட பயிற்சி அதுக்கு இடங்கொடுக்காது."

"எத்தனை டாக்டர்கள் அயோக்கியர்களா இருக்காங்கன்னு தெரியுமா ராமா? மனித உணர்ச்சிகளை வெல்றதுக்கு டாக்டர்கள் ஒண்ணும் துறவிகள் இல்லியே!"

"இல்ல சுந்தரம். அப்படி நெனைக்காதே! அப்படியே ராம்லி உன்னப் பழி தீர்க்கணும்னு நெனைச்சாலும் நீ அவர்கிட்ட பேஷன்டா இருக்கிற நேரத்தில உன் பலவீனத்தப் பயன் படுத்தி அப்படிச் செய்யமாட்டார். மருத்துவ நெறி அதுக்கு இடங்கொடுக்காது!"

"அப்படின்னா என்ன பூரணமா சுகப் படுத்தி அப்புறமாதான் கொல்வாருன்னு சொல்றியா?"

ராமா பெரு மூச்சு விட்டார். "ஏன் இப்படி வக்கிரமா யோசிக்கிறியோ தெரியில. உனக்கு நம்பிக்கையூட்ட என்னால முடியாது" என்றார்.

ஊசி போட்ட இடத்தில் இன்னமும் எரிச்சல் இருந்தது. என்ன விஷத்தை என் உடலுள் ஏற்றினான்? மதர் மேகியிடமும் டாக்டர் லிம்மிடமும் பேசி இந்தப் புதிய டாக்டரும் புதிய சிகிச்சையும் எனக்கு சம்மதமில்லை என்று சொல்லி டாக்டர் ராம்லியிடமிருந்து விடுபட வேண்டும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

ஆனால் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் நெஞ்சுக் குமட்டலும் வயிற்றுப் புரட்டலும் முற்றாக நின்றிருந்தன. மூளை தௌிவாகி தலை கனமற்றிருந்தது. முதன் முறையாக வயிறு பசிக்கக் கூடச் செய்தது. வீட்டுக்குப் போனதும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பல வாரங்களுக்குப் பிறகு உண்மையிலேயே பசியெடுத்து ஆகாரத்தின் மீது வெறுப்பு வராமல் ஆசை வந்திருப்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வீடு சேர்ந்ததும் தலையை மீண்டும் சுற்ற வைக்கும் செய்தி காத்திருந்தது.

      • *** ***

பகவான் ஸரீ இராமகிருஷ்ணர் உபதேசம்; பக்கம் 266; பகவான் நோய்வாய்ப்பட்டுள்ள தமது நண்பர் கெஷாப் சந்திர சென்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்:

"காலைப் பனி நீரை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தோட்டக்காரன் ரோஜாச் செடியைச் சுற்றி வேர் வரை மண்ணைத் தோண்டி எடுத்து விடுகிறான். அந்தப் பனி ஈரத்தை வாங்கிக் கொண்டு அந்தச் செடி இன்னும் நன்றாகத் தழைக்கிறது. அதனால்தான் உன்னையும் கடவுள் வேர் வரை பிடித்து உலுக்குகிறார் போலும். நீ குணமானதும் பிரம்மாண்டமான காரியங்களைச் சாதிக்கப் போகிறாய் போலும்.

"நீ நோய் வாய்பட்டிருக்கிறாய் என்று கேள்விப் படும் போதெல்லாம் என் மனநிலை தடுமாறுகிறது. உன் நோயைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அன்னையிடம் சென்று விடியற்காலை வேளைகளில் அழுதிருக்கிறேன். "அன்னையே! கெஷாப்பிற்கு ஏதாவது நடந்து விட்டால் நான் கல்கத்தாவில் யாருடன் பேசுவேன்?" என்று கேட்டிருக்கிறேன். கல்கத்தா வந்தடைந்ததும் அன்னைக்கு பழங்களும் பலகாரங்களும் படைத்து உன் நலத்துக்காக வேண்டியிருக்கிறேன்!"

அந்தத் தடிப்பான ஆங்கில புத்தகத்தை மெதுவாகக் கீழே வைத்தார் சுந்தரம். போனவாரம்தான் ராமா இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். The Gospel of Ramakrishna. "இராம கிருஷ்ணா ஆசிரமத்திற்குப் போயிருந்த போது இதைப் பார்த்தேன். உனக்காகத்தான் வாங்கினேன். உனக்குத்தான் இப்போ உக்காந்து படிக்க நிறைய நேரம் இருக்கே! படிச்சுப்பார்!" என்றார்.

பரமா வரவேற்பறையில் சோபாவிலேயே உறங்கிக் கொண்டிருந்தான். அவன் மூச்சு மெதுவாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. டாக்டர் அவனுக்கு வலி நிவாரணி கொடுத்திருந்தார். அது அவனை மயக்கிப் போட்டிருந்தது.

அவனைப் பற்றி செய்தி கேள்விப்பட்டுத் தான் வாயடைத்துப் போனபிறகு, மனத்தில் சூறாவளி அடித்துத் தணிந்த பிறகு, ஏனோ இந்தப் புத்தகத்தில் அமைதி தேடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

மத்தியானம் மௌன்ட் மிரியத்திலிருந்து திரும்பியதும் ராமாவுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுக் கொஞ்சம் உற்சாகமாகவே நடந்து வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம். ஜானகியும் அன்னமும் ஹாலிலேயே அவருக்காகக் காத்திருந்தது போல் இருந்தார்கள்.

"ஜானகி! ஒரு புது டாக்டர் அருமையான மருந்து கொடுத்தார். தலை சுத்தெல்லாம் டக்குன்னு நின்னு போய் வயிறே பசிக்க ஆரம்பிச்சாச்சி. சாப்பிட ஏதாவது இருக்கா?" என்று கேட்டார்.

ஜானகி சரேலென்று எழுந்து உள்ளே போய் அவருக்குச் சாப்பாடு எடுத்து வைத்தாள். சாம்பார் ரசத்துடன் சாப்பிட்டார். கொஞ்சமாகத்தான் சாப்பிட முடிந்தது என்றாலும் ருசித்துச் சாப்பிட்டார். சாப்பிடும்போதே இந்த டாக்டர் ராம்லியின் கதையையும் சொல்ல மறக்கவில்லை. ஜானகி பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். "ஊம்" கூடப் போடவில்லை.

"என்ன நான் நல்ல நல்ல கதை சொல்லிக்கிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு கவனிக்காம இருக்க?" என்று கேட்டார்.

"கவனிச்சிக்கிட்டுத்தாங்க இருக்கேன். இப்படி அதிசயமா நல்லா சாப்பிட்றிங்களே, அதுவே சந்தோஷந்தான்!" என்றாள் உற்சாகமில்லாமல்.

"பரமா எங்க?"

"தூங்கிறான்"

திடீரென்று நினைத்துக் கொண்டு கேட்டார். "ஆமா ஆஸ்பத்திரிக்குப் போனியே, பரமாவப் பத்தி டாக்டர் என்ன சொன்னார்?"

ஜானகி எழுந்து நின்றாள். "சாப்பிட்டு வாங்க, சொல்றேன்."

சரேலென்று ஹாலுக்குப் போய்விட்டாள். அவருக்கு அப்புறம் சாப்பாடு இறங்கவில்லை. கைகழுவி வௌியே வந்தார்.

"என்ன ஜானகி பதில் சொல்லாம வௌிய வந்துட்ட?"

ஜானகி அன்னத்தை ஒட்டிக்கொண்டு சூம்பிப் போய் உட்கார்ந்திருந்தாள். அன்னத்தின் முகமும் கருத்திருந்தது.

"சொல்லு ஜானகி!"

ஜானகி விசும்பினாள். அன்னத்தின் தோளில் தலை சாய்த்தாள். தேம்பி அழுதாள்.

"என்ன அக்கா, என்ன விஷயம்? ரெண்டு பேரும் இப்படி இருக்கிங்க?" வயிறும் நெஞ்சும் மீண்டும் கலவரமடைந்தன. கால் பலவீனமானது. உட்கார்ந்து கொண்டார்.

அன்னம் பேசினாள். "பரமாவோட ரத்தப் பரிசோதனை முடிவு வந்திருக்கு தம்பி. இன்னும் சில பரிசோதனைகள் பண்ணனுங்கிறாரு டாக்டர். ஆனா..."

"ஆனா...?"

"80, 90 சதவிகிதம் தௌிவாகத் தெரியுதுன்னு சொன்னார்."

"என்ன தௌிவாத் தெரியுது...?"

"பரமாவுக்கு லியுகேமியா தம்பி! இரத்தப் புற்று நோய்!"

நாற்காலியில் சாய்ந்தார். வயிறு புரண்டு அடங்கிற்று. செறிக்காத சோறும் ரசமும் சாம்பாரும் புளித்த குழம்பாகத் தொண்டைக் குழாய் வடூயே பீய்த்துக் கொண்டு ஏறி இறங்கி நெஞ்சை எரித்தன.

"நெஜமாவா அக்கா? நிச்சயமாவா?"

அன்னம் "ஆம்" என்று தலையாட்டினாள்.

'உண்மைதானா? சரியாகத் தெரிந்து கொண்டீர்களா? டாக்டர் தப்பு செய்து விட்டாரோ? இரத்தப் பரிசோதனையில் தவறு நடந்திருக்குமா?' இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்க நினைத்து கேட்காமல் சோர்ந்து போனார். இவை அலுக்க வைக்கும் கேள்விகள். மனத்தின் அலைச்சலை அதிகப் படுத்தும் கேள்விகள்.

இன்னொரு சோக நாடகம், இரண்டாம் காட்சியாக இன்றிரவு நடக்கிறது. பல தீய தெய்வங்கள் ஒன்று கூடி இந்த நாடகத்தை நடத்தி அனுபவிக்கின்றன. "ஒன்ஸ்மோர்" என்று கேட்டு மீண்டும் பார்த்து கைகொட்டி அனுபவிக்கின்றன. "ஐயோ பாவம்" என்று இச்சுக்கொட்டி ரசிக்கின்றன.

என்ன சொல்ல முடியும் ஜானகிக்கும் அக்காவுக்கும்? ஆறுதல் கூறத்தான் வேண்டும். எந்த வார்த்தைகளில் கூறுவது?

"பரவால்ல விட்டுத் தள்ளு ஜானகி! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு"

"அழாதே அக்கா! அழாதே ஜானகி! நான் இருக்கேன்!"

"தெய்வம் விட்டபடி நடக்கட்டும்"

"நான் முதல்ல போயிட்றேன் ஜானகி! இதையெல்லாம் பார்த்து சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது!"

"ஐயோ தெய்வமே! உனக்குக் கண்ணில்லையா?"

மனத்தில் நினைத்து நினைத்துப் பார்த்தார். எந்த வார்த்தைகள் இந்த சந்தர்ப்பத்திற்குச் சரியாக இருக்கும்? நெடு நேரம் யோசித்திருந்தார்.

பகல் நேரம் அப்படியே சோகத்தின் இறுக்கம் தளராமல் நகர்ந்தது. மாலை வந்தது. அப்போதுதான் இந்த இராமகிருஷ்ண போதனையைக் கையில் எடுத்தார்.

பக்கம் 267: பகவான் கூறுகிறார்:

"கடவுள் இரண்டு சந்தர்ப்பங்களில் சிரிக்கிறார். இரண்டு சகோதரர்கள் நிலத்தைப் பிரித்துக் கொள்ளும்போது, ஒரு கயிற்றைக் குறுக்கே போட்டுவிட்டு "இந்தப் பக்கம் என்னது, அந்தப் பக்கம் உன்னது" என்று சொல்லும்போது 'இந்த அண்டமே என்னுடையது. இதில் என்ன அந்தப் பக்கம் இந்தப் பக்கம்?' என்று சிரிக்கிறார்.

"கடவுள் மீண்டும் சிரிப்பது எப்போது என்றால் அழுது அரற்றும் ஒரு தாயைப் பார்த்து ஒரு மருத்துவர் "பயப்படாதே அம்மா! இந்தப் பிள்ளையை நான் குணப்படுத்துகிறேன்" என்று சொல்லும் போது. கடவுள் ஒரு பிள்ளையின் காலம் முடிந்து விட்டது என்று தீர்மானித்து விட்டாரானால் யாரும் அந்தப் பிள்ளையை மீட்க முடியாது என்று அந்த மருத்துவருக்குத் தெரியாதா?"