அந்திம காலம்/அந்திம காலம் - 3
ஆனால் ஜானகி நெடு நேரம் வரை வரவில்லை. மகளுடன் பேசியவாறே இருந்தாள். மகளின் காயப்பட்ட மனத்தின் நோவுகளுக்கு வடிகால் தேவைப் படுகின்றது. தாயின் மடியில் அதனைக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். இங்கே சுந்தரத்தின் உண்மையான உடல் நோவுக்கு அன்பு ஒத்தடம் கொடுக்க வேண்டிய மனைவியை மகள் பறித்துக் கொண்டு விட்டாள்.
சுந்தரத்துக்குத் தலைக்குள் மின்னல்கள் வெட்டின. வயிறு குமட்டியது. நெஞ்சுக்குள் ஏறி தொண்டை வரை வந்தது. குளியலறைக்கு ஓடி கழுவு பேசினில் குனிந்து குமட்டினார். ஒன்றும் வரவில்லை. எச்சில் மட்டும் துப்பினார். அந்தக் குமட்டலின் தீவிரத்தில் கண்களில் கண்ணீர் வந்தது. நெஞ்சு எரிந்தது. குழாயைத் திறந்து முகம் கழுவித் துடைத்தவாறு கண்ணாடியில் பார்த்தார்.
முகம் கருத்துத் தொங்கிக் கிடந்தது. கண்களைச் சுற்றிக் கருமை இருந்தது. முகத்தில் வெள்ளை மயிர்கள் துளிர்த்திருந்தன. பார்க்கப் பாவமாக இருந்தது. சென்ற வருடம் வரை எப்படி இருந்தேன்! "நீங்க ரிட்டையராகப் போறிங்களா? அப்படி வயசே தெரியலியே" என்று எத்தனை பேர் சொன்னார்கள்! இந்த இரண்டாண்டுகளுக்குள் இத்தனை மாற்றங்களா?
மெதுவாகப் படுக்கைக்கு வந்து சாய்ந்தார். மெதுவாகச் சுழலும் காற்றாடியிலிருந்து வரும் காற்றின் வருடல் இதமாக இருந்தது. மெத்தையின் தாங்கல் சுகமாக இருந்து. மிருதுவான தலையணையின் அணைப்பு ஆறுதலாக இருந்தது. ஆனால் மனம் ஜானகிக்கு ஏங்கியது. "ஏங்க, என்ன செய்யுதுங்க உங்களுக்கு?" என்ற படபடப்பு மிக்க கேள்விக்கும் அவள் கைகள் நெஞ்சை நீவிவிடும் சுகத்துக்கும் ஆசைப்பட்டது. ஆனால் ஜானகி மகளின் துயரத்துக்கு பாரந்தாங்கியாக அங்கேயே இருந்தாள்.
தொண்டையில் புளிப்புணர்ச்சி இருந்தது. வயிற்றின் பக்க வாட்டில் லேசான மழுங்கிய வலி இருந்தது. கல்லீரலா? சிறுநீரகமா? குடல் வாலா? எந்த உள் உறுப்பு இப்போது புண்ணாகிப் போனது? என்ன குற்றம் செய்து விட்டேன் இந்தத் தண்டனைக்கு? அதுவும் இப்படி அடுக்கடுக்கான தண்டனைகளுக்கு? எந்தத் தெய்வம் இப்படி என்னைத் தருணம் பார்த்துக் கொல்லுகிறது?
சுந்தரம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான். ஆனால் மனிதனால் எக்காலத்திலும் தன் குறுகிய மூளைக்குள் புரிந்து கொள்ள முடியாத பிரம்மாண்டமான சக்தி என்ற அளவில்தான் தெய்வத்தை நம்பினார். காடன் மாடன் கருமாரி என்ற தெய்வங்கள் மேல் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. கோவில்களிலும் அவர் சடங்குகளைச் சமூக இயல்பு கருதி இயந்திரமாகச் செய்வது தவிர நம்பிக்கையுடன் செய்ததில்லை. கோவில்களில் கண்மூடி மனம் குவித்த நேரங்களில் அந்த உருவமில்லாத அறிதற்கு அப்பாற்பட்ட சக்திக்குத்தான் அவர் வணக்கமும் நன்றியும் அர்ப்பணித்திருக்கிறார். கருவறையில் உள்ள உருவத்திற்கு அவர் எந்த நாளும் பயந்ததில்லை.
அதுதான் குற்றமோ? தான் நம்ப மறுத்த தெய்வங்களில் ஒன்று தனக்குப் புத்தி போதிக்க முடிவு செய்து விட்டதோ? தான் மரியாதை செய்ய மறுத்துவிட்ட தேவதை ஒன்று தன்னை நின்று கொல்லுகிறதோ? "உன் மூளையில் தெய்வ பக்தி வராததால் புற்றுப் பிடித்துச் சாவாயாக!" என்று கொடிய தெய்வம் ஒன்று சபித்துவிட்டதோ?
மரண வேளையில் வரும் பயங்கள் மனத்தைப் பிடித்துக் கொண்டன என்று உணர்ந்து கொண்டார். அந்தப் பயத்தை மறுக்க விரும்பவில்லை. மறுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை. சரி! நான் பிடிவாதக்காரனில்லை. தெய்வங்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். எந்தத் தேவதையை நான் அவமதித்தேனோ அந்தத் தேவதை என்னை மன்னிக்குமாக. என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ செய்து விடுகிறேன். தெய்வம் இல்லை என்று சொல்லும் பிடிவாதம் என்னிடம் இல்லை.
இயற்கையாகவே 'நான் இருக்கிறேன்' என்று எந்தத் தெய்வமும் இதுவரை அவரை நம்ப வைத்ததில்லை. நம்பிக்கையாளர்கள் கதை கதையாகச் சொல்வது போல அவர் ஆபத்து வேளைகள் எதிலும் எந்தத் தெய்வமும் அவர் முன் வந்து தோன்றியதில்லை. அவர் கனவில் வந்து "எனக்கு ஆடு வெட்டிப் போடு" என்று சொன்னதில்லை. கோவில்களில் தீப தூபங்களுக்கிடையிலும், நாதஸ்வர மேளத்தின் ஒலிக்கிடையிலும் மந்திரங்களுக்கிடையிலும் எந்தத் தெய்வமும் அவரைப் பார்த்து "பக்தா" என்று சிரித்ததில்லை. சிலைகளின் அழகுணர்ச்சியில் அவர் லயித்திருக்கிறார். ஆனால் சிற்பம் என்ற நிலையிலிருந்து தெய்வம் என்ற நிலைக்கு அவர் நம்பிக்கை திரும்பியதில்லை.
என் மனம் அழுக்குகள் நிறைந்தது போலும்; ஆணவம் நிறைந்தது போலும்; அதனால்தான் தெய்வ நம்பிக்கை என்பது எந்த நாளும் என் உள்ளத்தில் நிலைக்க மாட்டேனென்கிறது என நினைத்துக் கொண்டார். அவரறிய எத்தனை பேர் தீவிர நாத்திகவாதம் பேசியிருந்து மதிய வயதில் மகா பக்தர்களாக மாறியிருக்கிறார்கள்! எத்தனை பேர் வாழ்க்கையைக் குடியென்றும் கூத்தியென்றும் மூர்க்கமான வெறியோடு அனுபவித்து விட்டு பின்னர் ஏதாவது ஒரு சாமியாரிடம் சரணடைந்து எல்லாம் துறந்து கைகட்டிச் சேவகம் செய்து காலம் கழிக்கிறார்கள்!
அவர் அறிவு தெரிந்த நாளிலிருந்து ஒருகாலும் விதண்டாவாதமாக நாத்திகம் பேசியது இல்லை. வாழ்க்கை இன்பங்களை அத்தனை மூர்க்கமான வெறியோடு அணுகியதும் இல்லை. அவர் வாழ்நாள் முழுவதும் மிதமானவராக அமைதியானவராக இணக்கமானவராக இருந்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் அவருடைய மனசுக்குள்ளேயே நடந்த மௌனப் போராட்டங்கள்தாம். ஜானகியிடம் கூட அவர் அதிகம் வாதம் பண்ணியதில்லை. அவள் கோயிலுக்கும் சடங்குகளுக்கும் வலியுறுத்திக் கூப்பிடும் நேரங்களில் முனுமுனுத்துக் கொண்டாவது போய் வந்திருக்கிறார்.
ஆனால் அவர் மனது பொய்களைத் தீவிரமாக மறுத்திருக்கிறது. தன் அறிவு நம்ப மறுத்த எதையும் அவர் மனசு நம்புவதாக நடித்ததில்லை. "தன்னஞ்சறிவது பொய்யற்க" என்று வாழ்ந்திருக்கிறார். அறிவு முதிராத பிள்ளை வயதில் செய்திருக்கும் குற்றங்கள் அல்லாமல் வயது வளர்ந்து அறிவில் தௌிவு வந்த பிறகு அவர் முடிந்த அளவு நேராகத்தான் வாழ்ந்திருக்கிறார். பல வெறிகள் மனத்தில் கொப்புளித்துக் கொப்புளித்து வந்திருந்தாலும் தனது பலவீனமான வேளைகளில் எல்லாம் அவர் சாய்ந்து விடாமல் இருந்திருக்கிறார்.
இளவயதில் ஆத்திசூடி படித்த நாட்களிலிருந்து அறமாக இருக்க வேண்டும் எனவும் சினம் ஆறுதல் வேண்டும் என்றும் இயல்வது ஈயவேண்டும் என்றும் எண்ணெழுத்து போற்ற வேண்டும் என்றும் ஊக்கம் கைவிடக் கூடாது என்றும் மனத்தில் எழுதி வைத்துக் கொண்டார். பின்னர் நன்னூலும் திருக்குறளும் படித்துப் பாடமும் செய்து கொண்டார். முயற்சியை நம்பினார். உறவு சுற்றம் என்பனவற்றுக்கு வரை முறைகள் வைத்துக் கொண்டார்.
பின்னர் திரு வி.க., மு.வ., கி.ஆ.பெ., அப்துற்றஹீம், தமிழ்வாணன் போன்றவர்களும் அவருக்கு வாழ்க்கையைப் பல்வேறு நிலைகளில் உணர்த்திக் குழப்பியும் தௌிவு படுத்தியும் விட்டார்கள். அறிவார்ந்த உரைகள் அவருக்குப் பிடித்தன. ஆனால் தெய்வ பயம் எந்த நாளும் அவருக்கு ஏற்படவில்லை. பக்தி இலக்கியங்களில் உள்ள உருக்க உணர்வும் அன்பும் மொடூயழகும் பிடித்தன. ஆனால் புராணங்கள் வேடிக்கைக் கதைகளாகவே தோன்றின. அவற்றின் மீது நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் பக்தியையும் ஒரு நாளும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அதுதான் பிழையோ? தான் பயந்து மரியாதை செலுத்தியிருக்க வேண்டுமோ? அறிவுக்கு முக்கியத்தும் கொடுத்து இந்த உலகை உண்மையில் ஆட்சி செலுத்தும் சக்தி மிக்க தெய்வங்களை மதிக்காமல் செருக்கினால் அவர்களை அவமதித்து விட்டேனோ? கடவுளர்களின் மேல் அசையாத நம்பிக்கை வைத்து தபசு செய்யும் முனிவர்களுக்கு அருள அவர்கள் தபசைக் கலைக்க வரும் செருக்குமிக்க அரக்கர்களைத் தெய்வம் தண்டிக்குமாமே! "ஹாஹ்ஹா" என்று சிரித்துக் கொண்டு கையில் கதை தூக்கி வரும் அசுரர்களை, தலையைச் சுற்றி ஒளிவளையம் உள்ள சட்டை அணியாமல் நிறைய நகைகள் போட்டுக் கொண்டு இடுப்புக்குக் கீழ் சேலையணிந்த பெண்முகம் கொண்ட கடவுளர்கள் தோன்றித் தண்டிப்பதை சினிமாவில் பார்த்திருக்கிறோமே! அது உண்மைதானோ? என் ஆணவத்தால் நான் அசுரன் ஆகி எந்த முனிவனின் தவத்தையாவது கலைத்திருப்பேனோ? போன பிறப்பில்...?
வலி தணிந்து உடல் சுகப்பட்ட இடைவேளையில் இந்த நினைப்புக்களினால் அவருக்குச் சிரிப்பும் வந்தது. பயத்தில்தான் என்னென்ன எண்ணங்களெல்லாம் வருகின்றன! ஆனால் நம்பக் கூடாது என்பதில் அவர் முரட்டுத் தனம் கொண்டவர் அல்ல. ஏ தெய்வங்களே! நான் உங்களுக்கு எதிரானவன் அல்ல. நான் அசுரன் அல்ல. முனிவர்கள் தவம் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. எந்த முனிவனின் தவத்தையும் நான் கலைக்க மாட்டேன். அப்படி ஒருவரைக் கண்டால் சில கணங்கள் வியப்போடு வேடிக்கை பார்த்துவிட்டு மரியாதையாக ஓசையில்லாமல் ஊறு செய்யாமல் அப்பால் போய்விடுவேன். ஓ தெய்வங்களே! என் மனம் திறந்திருக்கிறது. நீங்கள் வரலாம். என்னை நம்பிக்கைப் படுத்தலாம். ஓ தெய்வங்களே! நீங்கள் ஆட்கொள்ளுவதற்கு ஒரு ஆத்மா தேவையானால் நான் தயாராக இருக்கிறேன்.
தலைக்குள் இன்னொரு எரிமலையின் ஆரம்ப உறுமல் கேட்டது. அதை மனம் நிதானிப்பதற்கள் அது வெடித்தது. தலையில் மட்டுமல்ல, வயிற்றில், முதுகுத் தண்டில் ஒரு அரிவாள் வெட்டு விழுந்தது. இரண்டாகப் பிளந்தது. "அம்மா" என்று அவர் வாய்விட்டுக் கத்தியபடி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டு இரண்டாக மடிந்து விழுந்த அந்த நேரத்தில் தற்செயலாகக் கதவைத் திறந்து உள்ளே வந்த ஜானகி "என்னங்க, என்ன ஆச்சு?" என்று பதறி அவர் தோள்களை அணைத்தாள்.
எரிமலைக் குழம்பு வழிந்து தணிந்தவுடன் அவர் தலைநிமிர்ந்து ஜானகியின் தோள்களில் சாய்ந்தார். முகம் வேர்த்திருந்தது. உடம்புச் சூடு ஏறியிருந்தது. கண்கள் செருகியிருந்தன. "ஏங்க, என்ன செய்யுதுங்க, ஏன் இப்பிடி இருக்கிங்க...?" என்று ஜானகி கலவரத்துடன் அடுக்கடுக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
மூச்சிளைக்கப் பேசினார். "வலி ரொம்ப கடுமையா போச்சி ஜானகி!" என்றார்.
"எங்கிட்ட நீங்க சொல்லவே இல்லைய... அன்னைக்கு டாக்டர் கொடுத்த மருந்து இன்னும் கொஞ்சம் இருக்க... சாப்படிறிங்களா?"
சரி என்றார். ஜானகி அவரைத் தலையணையில் சாய்த்துவிட்டுப் போய் சுடுநீரும் மாத்திரையும் கொண்டு வந்தாள். அவற்றை விழுங்கிச் சுடுநீரை உறிஞ்சியவுடன் வலி தணிந்தது போல் இருந்தது.
"எப்ப இருந்து இப்படி அவதிப் பட்றிங்க? என்ன கூப்பிட்டிருக்கக் கூடாது?" என்று ஜானகி கோபமாகப் பேசினாள்.
இனி இவளிடம் மறைத்து வைக்க முடியாது. இன்றிரவு பட்டென்று உயிர் போய்விட்டால் நான் பொய் பேசி துரோகம் செய்தவனாகி விடுவேன். என்னோடு வாழ்க்கையை முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பகிர்ந்து கொண்டவளிடம் நல்ல முறையில் சொல்லி விடை பெற்றுக்கொள்ளாமல் நான் போய்விட முடியாது.
மகள் துயரம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதை எண்ணி என் துயர் மறைத்து ஜானகியிடம் பொய்க்காரனாகத் தான் போய்ச் சேர்ந்தால் ஆத்மா சாந்தியடையாது. ஆத்மா சாந்தியடைவது என்றால் என்ன என்று சரியாக விளங்கவில்லை. ஆனால் அப்படியென்று ஒரு நிலை இருக்குமானால் அதைத் தவிர்க்க வேண்டும். என் செய்தி எத்தனை அதிர்ச்சியை அவளுக்குக் கொடுத்தாலும் சரி. அதைச் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். அதைத் தெரிந்து கொள்ள அவள் கடமைப் பட்டிருக்கிறாள்.
"ஜானகி. டாக்டர் இன்னும் முடிவு சொல்லலன்னு அப்ப உங்கிட்ட மறைச்சிப் பேசினேன். ஆனா டாக்டர் முடிவு சொல்லிட்டார்!"
ஜானகி திகைத்திருந்தாள். முகம் இன்னும் கலவரம் அடைந்தது. படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்தாள். சுந்தரமும் தலையணையில் சாய்ந்தவாறு படுக்கையில் உட்கார்ந்துதான் இருந்தார். வரப் போவது கெட்ட செய்தி என்பதை ஜானகியால் ஊகிக்க முடிந்தது. அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தவாறு கேட்டாள்: "என்ன சொன்னார் டாக்டர்?"
பெண்ணே! உன் உலகம் சரியப் போகிறது. உன்னைத் தயார் படுத்திக்கொள். இது உன்னை வீழ்த்தும் செய்தி. ஆனால் வீழ்ந்து விடாதே. விழப் போகுபவன் நான். என் பக்கத்தில் இருந்து என்னைத் தாங்கிக்கொள்ள வலுப் பெற்றவளாக இரு.
"லேப் பரிசோதனை முடிவுகள் எல்லாம் வந்திருச்சி ஜானகி! எனக்கு வந்திருக்கிறது மூளைப் புற்று நோய். ரொம்ப முத்திப் போன நிலமை. உடம்பெல்லாம் பரவி இருக்கு. இப்படியே விட்டா மரணம் ரொம்ப சீக்கிரம் வந்திரும்னு சொல்றாரு!"
இதோ. எல்லாம் சொல்லிவிட்டேன். கொட்டிக் கவிழ்த்து விட்டேன். என் மனத்தைத் தற்காலிகமாகத் துடைத்து சுத்தப்படுத்திவிட்டேன். விளைவுகள் உன்னைப் பொறுத்தவை. அழப் போகிறாயா விழப் போகிறாயா, எழப் போகிறாயா, என்று பார்க்கிறேன். நோய்க்கு நான் பலி. நீ வேடிக்கை பார்க்கலாம். ஆனால் இந்தச் செய்திக்கு நீ பலி. நான் வேடிக்கை பார்க்கிறேன்.
ஜானகியின் மருண்ட விழிகளில் இருந்து ஓரிரு துளிகள் உருவாகி வடூந்தன. "நெஜந்தானாங்க நீங்க சொல்றது?"
தனக்கு சாதகமல்லாதவற்றை மனம் நம்பாது. ஒருவேளை தவறாக இருக்கலாமோ என மறு உறுதி தேடும். என் காதுகளில் கேட்டது பிரமையாக இருக்கலாம். மறுமுறை அதே மாதிரி கேட்டால்தான் உறுதி. மறுமுறை வேறு மாதிரி கேட்டு முதல் முறை கேட்டது தவறாகிப் போகலாம் என்ற நப்பாசை மனத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.
"நெஜந்தான் ஜானகி. இவ்வளவு கடுமையான விஷயத்த உறுதிப்படுத்திக்காமயா சொல்லுவேன்?"
"ஒரு வேளை அந்தப் பரிசோதனை தவறா இருந்தா?"
"இல்ல ஜானகி. அதெல்லாம் வீண் சந்தேகங்கள். இப்ப பாத்தியே, அந்த வலியில நான் துடிச்சத, அத விடவா உறுதி வேணும்?"
முகத்தைப் பொத்திக் கொண்டு விம்மினாள். சுந்தரம் அவளை அழவிட்டார். திடீரென்று சுந்தரத்தின் நீட்டியிருந்த கால்களில் ஜானகி முகத்தைப் புதைத்துக் கொண்டாள். விம்மியவாறிருந்தாள். அவர் தலை முடியைக் கோதிவிட்டார். அதைத் தவிர வேறு என்ன செய்வதென்று தோன்றவில்லை.
பல மௌனமான கணங்கள் கடூந்ததும் சுந்தரம் சொன்னார்: "அழுது என்ன பண்றது ஜானகி? தைரியமா இரு! தனியா உன் கால்ல நிக்க பழகிக்க... என்னைக்காவது ஒரு நாள் போகிற உயிர்தானே. போகட்டும். இதுக்காக அழுது, அழுது வாழ்க்கய நரகமாக்கிக்க முடியாது."
திடீரென எழுந்து உட்கார்ந்தாள் ஜானகி. "ஏன் இப்படி சாவு, சாவுன்னு பேசிறிங்க? நோய் வந்தா எல்லாருமே செத்துத்தான் போயிர்ராங்களா? எத்தனையோ சிகிச்சைகள் இல்லையா? டாக்டர் சிகிச்சை பத்தி ஒண்ணும் சொல்லலியா?" என்று கேட்டாள்.
"சொன்னார். மௌன்ட் மிரியம் புற்று நோய் ஆஸபத்திரியில போய் ரேடியோதெராப்பி சிகிச்சை ஆரம்பிக்கச் சொன்னார். ஆனா அந்த சிகிச்சை இந்த நோயைவிடக் கொடுமையானது ஜானகி. எனக்கு அதில ஆசையில்ல. அதோட இந்த நோய் ரொம்ப விரைவாப் பரவி முத்தியிருக்கு. சிகிச்சை பலனளிக்குமா அப்படிங்கிறது நிச்சயமில்ல..."
"என்ன நிச்சயமில்ல? நாம் கண்டிப்பா போகத்தான் வேணும். உங்களுக்கு என்ன அப்படி வயசாகிப் போச்சி இப்படி விட்டுக் குடுத்திட்றதுக்கு? நாளைக் காலையிலேயே போவோம் வாங்க! உடனடியா சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம். நான் இருக்கேன் உங்க பக்கத்தில. உங்களுக்கு வேண்டியது எல்லாம் நான் செய்றேன். உங்களுக்கு எல்லாம் நல்லாயிடும். கவலப் படாதீங்க. இனிமே சாவப் பத்தி பேசாதீங்க. நான் சாவித்திரி மாதிரி. யமன் கிட்ட இருந்து உங்கள மீட்டுக் கொண்டாறேன்! நான் நம்புற தெய்வம் என்னக் கைவிடாது பாருங்க." அவரின் தோள்களைக் குலுக்கிக் குலுக்கிப் பேசினாள். அவர் மனசுக்குள் நம்பிக்கை நீர் சுரந்தது. வயிறு அடங்கிப்போய் சாந்தமாக இருந்தது.
என் அன்பு மனைவியே! எந்தத் தெய்வம் நீ நம்புகிற தெய்வம்? என்னைத் தண்டிக்கிற அதே தெய்வமா? இப்போதுதான் புராணங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் நான் என்பதை மனசுக்குள் நினைத்துப் பார்த்தேன். உடனே புராணக் கதையைச் சொல்லி என் மனத்தில் நம்பிக்கையை விதைத்து விட்டாயே! எனக்கு இது பாடமா? எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்துக் கொள்ளாதே என்ற அறிவுரையா?
நான் மரண பயத்தில் சோர்ந்துவிட்ட நிலையிலும் நீ இத்தனை நம்பிக்கையுடன் இருக்கிறாயே, இதுதான் நம்புகிறவனுக்கும் நம்பாதவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசமா? இதுதான் உண்மையா? அல்லது மரண வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட இருக்கும் என் உயிர் ஏதாவது கையில் கிடைக்கும் ஒரு நம்பிக்கையை பற்றிக்கொண்டு கரை ஏற ஏங்குகிறதா? ஏதாக இருந்தாலும் இது ஆறுதலாக இருந்தது.
"சரி ஜானகி. ரேடியோதெராப்பிக்கு நான் தயார். ஆனா ராதா இருக்கும் போது எப்படி? அவ திரும்ப போகட்டும். ஓரிரண்டு நாள் பாத்திருந்து செய்யலாம்" என்றார்.
"அவ இருந்தா என்ன, இல்லாட்டா என்னங்க! அவ இன்னிக்கி வருவா, நாளக்கிப் போவா! எப்படியாச்சும் தொலையட்டும். அவ வசதியப் பாத்து நாம் காத்திருக்க வேணாம். நாளக்கிக் காலையிலேயே போவோம்!"
எப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டாள்! இத்தனை நேரம் பெண்ணின் கதை கேட்டு உருகி உருகி வழிந்து கணவனைக் கூட மறந்து தாயாக இருந்த நீ, இப்போது மனைவியாக அவதாரம் எடுத்து கணவனுக்காக பெண்ணின் துயரத்தை இப்படி உதறித் தள்ளிவிட்டாயே. ஏ பெண்ணே, நீ ஒரு நாளில், ஒரு மணியில் எத்தனை அவதாரங்கள் எடுப்பாய்?
"அப்படியில்ல ஜானகி. அவ இப்ப இருக்கிற நெலையில இந்த விஷயத்தச் சொல்லி அவள இன்னும் கலவரப் படுத்தாத. அவளுக்கோ மருமகனுக்கோ ஏன் நம் பையனுக்குக் கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம்!"
"ஏங்க?"
"எல்லாரும் என்ன 'ஐயோ பாவம்னு' பரிதாபப்பட்டு பேசிறதையும் பாக்கிறதையும் என்னால சகிச்சிக்க முடியாது. என்னோட நோய் என்னோட இருக்கட்டும். நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கட்டும். மத்தவங்க பரிதாபத்துக்கு என்ன ஆளாக்கிடாத! நோயோட கொடுமய விட மத்தவங்க காட்டிற அனுதாபம் எனக்கு இன்னும் கொடுமையானதா இருக்கும்!"
"சரிங்க. இது நமக்குள்ளேயே இருக்கட்டும்!" என்று ஜானகி ஒத்துக் கொண்டாள்.
நிமிர்ந்து வாழ்ந்து பழகியவர். மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்து வாழ்ந்தவர். ஒரு இடைநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக ஆயிரம் மாணவர்களையும் ஐம்பது அறுபது ஆசிரியர்களையும் கண்டிப்பாக ஆண்டு அவர்களுடைய வியப்பையும் மரியாதையையும் பெற்றவர். பள்ளியின் அணிவகுப்புக்களில் முதல் மரியாதை பெற்றவர். பள்ளியின் காலை மாணவர் ஆசிரியர் அசெம்பிளியில் அவர் குரல் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்போது கூட்டத்தின் மௌனத்தை ஆண்டவர். மாபெரும் சபைகளில் மாலைகள் பெற்றவர். ஆகவே மற்றவர் முன் கூனிக் குறுகி நிற்க முடியாது. இவன் உள்ளே சொத்தையாகப் போய்விட்டான் என்று மற்றவர்கள் ரகசியமாக தன் முதுகுப்பக்கம் பேசுவதை அனுமதிக்க முடியாது. வாழும் வரை நிமிர்ந்திருக்க வேண்டும். உள்ளே கரையான்கள் அரித்துக் கொண்டிருந்தாலும் மேலே உரமான மரமாக இருக்க வேண்டும்.
அவர் யோசித்துக்கொண்டே இருந்தார். ஜானகி அவர் மார்பில் சாய்ந்து கிடந்தாள். அவள் கை அவர் நெஞ்சின் மேல் கிடந்தது. அவருடைய கை அவள் தலையை வருடிக் கொண்டிருந்தது. கணங்கள் மௌனமாக நகர்ந்து கொண்டிருந்தன.
ஆனால் எத்தனை காலங்கள் இந்த ரகசியத்தைக் காப்பாற்ற முடியும்? எத்தனை நாள் இந்த நோயுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்? உடல் இளைக்க ஆரம்பித்த பின் அதை மற்றவர் கண்களிலிருந்து மறைப்பது எப்படி? நெஞ்சுக் கூடு வௌியே தெரிவதையும் முகத் தசைகள் வற்றிப் போவதையும் மறைப்பது எப்படி? ரேடியோதெராப்பி ஆரம்பித்தால் தலை மயிர் உதிர்வதை மறைப்பதெப்படி? தொப்பி போட்டுக் கொள்ளலாமா? அப்புறம் தொப்பி போட்ட காரணத்தை எப்படி விளக்குவது?
ஏன் மறைக்க வேண்டும்? எல்லாம் ஒரு அகந்தைதானோ? மற்றவர்கள் பரிதாபப்படும் நிலையில் ஒருவன் ஆகிவிட்டால் மற்றவனுக்குக் குறைந்தவனாக ஆகிவிடுவானோ? பரிதாபப்படுபவன் உயர்ந்தவன்; பரிதாபத்துக்கு உட்பட்டவன் தாழ்ந்தவன். அப்படி ஆகிவிடுவதை மனம் எண்ணி வெட்கிக்கிறதோ? ஏன் வெட்க வேண்டும்? என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவது ஏன்? இது உயிர் வாழ்வு பற்றிய பிரச்சினை அல்லவா? உயிர் பிழைப்பதுதான் பெரிது. இந்தச் சாவை முடிந்த அளவு வெல்லுவதுதான் பெரிது! அந்தப் போராட்டத்தை மற்றவர்கள் பார்த்துப் பரிதாபப்படுகிறார்களா, இச்சுக் கொட்டுகிறார்களா அல்லது உள்ளுக்குள் நையாண்டி செய்கிறார்களா என்பது பற்றி எனக்கேன் கவலை?
ஆனால் எந்த அளவுக்கு? எவ்வளவு காலம் இந்தப் போராட்டம் நடக்க முடியும்? உடல் தளர்ந்து தோல் வற்றி திரைகள் தோன்றி கால்கள் நடக்கும் சக்தி இழந்து சுவாசகோசம் தன்னிச்சையாக மூச்சிழுக்கும் சக்தியில்லாமல் குழாய்கள் பொருத்தி காற்றும் திரவமும் செலுத்தப்பட்டு, தொண்டைக் குழி வற்றி இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுகின்ற சக்தியும் இல்லாமல் போகும் வரையிலா?
அந்தக் காட்சி அவரைத் துன்பப்படுத்தியது. அந்த நிலை வந்துவிட்டால் அந்தப் படுக்கையில் கிடக்கும் உடல் இந்த சுந்தரமாக இருக்காது. அது ஒரு ஆளுமை இல்லாத, பெயரிட்டிழைக்கத் தகுதியில்லாத காய்ந்த கட்டையாக இருக்கும். அப்படித்தான் ஆகக்கூபாது.
"ஜானகி" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.
"ஏங்க! மறுபடி வலியா?"
"அதில்ல ஜானகி. தலையில இப்ப வலியில்ல! ஆனா நெஞ்சில ஒரு வலி வந்திருக்கு!"
"நெஞ்சிலியுமா?" நெஞ்சை நீவிவிட்டாள்.
"அதில்ல ஜானகி. நெஞ்சில வலியில்ல. நெனப்பில வலியிருக்கு!"
"அப்படின்னா?"
பொறுத்திருந்து தைரியம் கூட்டிச் சொன்னார்: "நீ சொல்ற வைத்தியமெல்லாம் நான் பண்ணிக்கிறேன் ஜானகி. அது எவ்வளவு வேதனையாயிருந்தாலும் பரவால்ல. ஆனா அதெல்லாம் பலிக்காம நான் படுத்துட்டேன்னு வை. அப்போ என்னோட உயிர செயற்கையா பிடிச்சி வைக்க வேணாம் ஜானகி. பலவிதமான குழாய்களப் பொருத்தி என்ன வதைக்க வேணாம். என்ன அமைதியாச் சாகவிட்டிரு..."
கையைத் தூக்கி வாயைப் பொத்தினாள். "ஏன் இப்படி சாவப் பத்தியே பேசிறிங்க? வேணான்னு சொன்னேன்ல..." என்றாள்.
"நான் சாவுக்காக பயந்து இப்படி உளறல ஜானகி. முழு நினைவோட தைரியத்தோடதான் சொல்றேன். இப்ப சொல்லலேன்னா பின்னால பேசக்கூட முடியாத நெலையில எப்படிச் சொல்றது? அதுக்காகத்தான்"
அவள் பதில் சொல்லவில்லை. மெதுவாக விம்மிக் கொண்டிருந்தாள். பிறகு மௌனம்தான் தொடர்ந்தது.
அந்த இருளில் ஒரு விமானம் எங்கோ உயரே பறக்கும் சத்தம் கேட்டது. அவருடைய நாய் குரைத்தது. மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஒலி தூரத்தில் தொடங்கி பெரிதாகி அருகில் வந்து குறைந்து தேய்ந்து மறைந்தது. யாரோ காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிச் சென்றார்கள். மிகப் பக்கத்தில், அடுத்த வீடா..? அவர் விழித்தவாறு இந்த ஓசைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மணி என்ன இருக்கும்? நாலா? நாலரையா?
கண்கள் செருகியது நினைவிருந்தது. ஆனால் தூக்கம் வந்த நேரம் தெரியவில்லை. தூக்கம் வந்து கௌவிக்கொள்ளுகின்ற வேளை யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தால் அது தூக்கமில்லை.
- *** ***
ஐந்தரை மணிக்கு விழித்துக்கொண்டார். அந்தக் குறைந்த நேரமாவது உடல் துன்பப் படுத்தாமல் தூங்க விட்டதே என்று மகிழ்ச்சியடைந்தார்.
ஜானகி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமல் மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கினார். குளியலறை போய் வந்தார். அறைக் கதவைத் திறந்து வௌியே வந்தார்.
வீட்டுக்கு வௌியே சென்று வெள்ளி முளைக்கின்ற விடிகாலை வேளையை அனுபவிக்க வேண்டும் என நினைத்தார். கதவைத் திறந்து இருளில் வௌியே வந்தார்.
ஜிம்மி படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து முன்னங்கால்களை நீட்டிச் சோம்பல் முறித்துவிட்டு அவருடைய காலை முகர்ந்து பார்த்து உரசி நின்றது. அதன் தலையைச் சொறிந்து குலுக்கி விட்டார். அது தலையைச் சிலிர்த்துக் கொண்டு அவர் கையை நக்கியது.
குளிர்ந்த காற்று, பனி தோய்ந்த காலைக்காற்று முகத்திலும் நெஞ்சிலும் வீசியது. மழை இல்லை. ஆனால் காற்றில் குளிர் இருந்தது. இருள் இன்னும் விலகவில்லை. தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாசலுக்கு முன்னால் இருந்த வேப்ப மரத்தின் இலைகள் நேற்றைய மழையின் ஈரத்தில் சிலுசிலுத்துக் கொண்டிருந்தன. அதன் பக்கத்தில் நிறைமாத கர்ப்பிணியாக குலை தள்ளியிருந்த செவ்விளனி மரத்தில் ஓலைகள் சிலிர்த்துக் கொண்டிருந்தன.
காற்றை ஆழப் பருகினார். உடல் இலேசாக இருந்தது. நலமாக இருந்தது. தனக்கு எல்லாம் நன்றாக ஆகிவிடும் என்று தோன்றியது. நேற்றிரவின் பயங்களும் அழுகையும் ஜானகியுடனான உரையாடலும் தேவையில்லாதவை போன்று தோன்றின. அவை பொய் என்றும் இந்தக் கணந்தான் நிஜம் என்றும் தோன்றியது. இந்தக் கணத்தில் உண்மை இருக்கிறது. இந்தக் காற்றில் ஜீவன் இருக்கிறது. மேலே சில நட்சத்திரங்களுடன் தௌிந்த வானம். கீழே உறுதியான பூமி. அதிலே நேராக நிற்கின்ற என் கால்கள். இந்த உண்மைகள் நெஞ்சுக்கு இதமாக இருந்தன. நம்பிக்கை ஊட்டின. தனக்காகக் காத்திருக்கும் சாவை எண்ணிச் சிரித்தார். என்றோ படித்த பாரதியார் பாடல் நினைவுக்கு வந்தது.
"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்"
அப்போதுதான் ராதாவின் கார் நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இல்லை என்பதை கவனித்தார். எங்கே போயிற்று? எப்படி... என்ன... திருடன் யாராவது ராத்திரியில்... இல்லையே, ஜிம்மி விட்டிருக்காதே!
உள்ளே வந்தார். ஹால் மேஜையில் அந்தக் கடிதம் கிடந்தது. ஆங்கிலத்தில் "அப்பாவுக்கும், அம்மாவுக்கும்" என்று அந்த உறையில் எழுதப் பட்டிருந்தது. ராதாவின் கையெழுத்து. நாற்காலியில் உட்கார்ந்து உறைக்குள்ளிருந்து கடிதத்தை எடுத்தார். கார் சாவி ஒன்று உறைக்குள் இருந்து விழுந்தது. கண்ணாடியைப் போட்டுக் கொண்டு படித்தார்.
ஒரு பக்கக் கடிதம்தான். ஆனால் படிக்கப் படிக்கக் கையில் பாறையாகக் கனத்தது. படித்து மெதுவாக மடித்து வைத்தார். அது காற்றில் படபடக்காமல் இருக்கக் கார் சாவியை அதன் மேல் பாரமாக வைத்தார்.
இப்படியா செய்து விட்டாள்? என் மகளா? என் வளர்ப்பில் வளர்ந்த மகளா? எங்கு தவறு செய்தேன்? நான் நட்டு நீர்வார்த்து நேராக்கி வளர்த்த மரம் இப்படி இளவயதிலேயே கோணலாகப் போனதெப்படி?
அவர் நெஞ்சு வலித்தது. தலை வலித்தது. முதுகிலும் வலி ஆரம்பித்திருந்தது. நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடினார்.