அந்தி நிலாச் சதுரங்கம்/பொங்கி வரும் பெருநிலவு


அந்தி நிலாச் சதுரங்கம்

5: பொங்கி வரும் பெருநிலவு!

அன்பின் வழியது உயிர்நிலை!

அதோ, மிஸ்டர் மகேஷ்!...

உயிரின் நிலைத்த-நிலைபெற்ற அன்புடனும், அந்த அன்பில் ரசாயனமாற்றம் பெற்ற பாசத்துடனும், தன்னைத் தானே நினைத்துப் பார்த்தவராகவும், தன்னில்தானே இயங்கியும் இயக்கப்பபடும், அழுந்தியும் அழுத்தப்பட்டும் விதிச்சுழலிலே அகப்பட்டு அவதிப்பட்டவராகவும், ஒரு கணம் அப்படியே நின்று விட்டார் மகேஷ்! வேர்வை மடைமாறவும் மடைமாற்றவும் வழியின்றி. வாய்ப்பின்றி, வசதியுமின்றிக் கன்னங்களில் வழிய, வேர்வையில் இடது கன்னத்து மரு அல்லது வடு அலங்கோலமான அவலட்சணத்தோடு ‘விதி’யாகச் சிரிக்க, அச்சிரிப்பை மனத்தால் படமாக்கிப் பார்த்த தருணத்தில், வேர்வையோடு சுடுநீரும் கூட்டுச் சேரலாயிற்று நெஞ்சக் கூண்டில் கசிந்து உருகிய கண்ணீர் மணிகள் இரண்டிலும் ரஞ்சனியும் பாபுவும் திசை மாறியும் இடம் மாறியும் சுழல ஆல வட்டம் சுழல. அந்தச் சுழற்சியில் இப்போது மகேஷும், கூடவே சேர்ந்து சுழன்றார், சுழல வேண்டியவர் ஆனார்.

காலம் ஒரு செப்பிடு வித்தைக்காரன்!

கண்ணை மூடிக் கண்ணைத் திறக்கின்றார் மகேஷ் பா...பு...!-பாபு!” குறுகுறுத்த உள்ளத்தில் ஏக்கம் பின்னல் கயிறாக இறுகிப் பிணைக்க, ஏமாற்றத்தின் பிசிறுகளில், உள் மூச்சு வெளிவாங்கிக் குமிழ்களைப் பறிக்க, மீண்டும் மீண்டும் நீர்ச்சுழலிலும் சூறைக்காற்றிலும் சிக்கிக் கொண்ட உணர்வுகனள் அவரை அலைபாயச் செய்தன; அலைக்கழிக்கவும் செய்திருக்கலாம்.

‘நந்தினி விலாசம் பங்களாவின் 'ஒமேஹா' குருவி ஒரு முறை கூவியது. அப்போது மணி ஒன்றா இல்லே, ஒன்றரையா?

ஆமாம்; அதுவேதான் மாஸ்டர் பாபுவின் அந்தரங்கத் தனி அறை: .

கதவு. பாதி முடியும் பாதி மூடாமலும் இருக்கிறது.

மகேஷ் கால்கடுக்க நின்றார்.

“பாபுவை எப்படியும், எப்பாடு பட்டாகிலும் இப்போது சந்தித்துப் பேசிவிடவேணும் பாபுவை என்னைப் பரிபூரண மாகப் புரிஞ்சுக்கிடச் செய்வதற்கு, இதைக் காட்டிலும் இனியொரு அருமையான சமயசந்தர்ப்பம் வாய்க்கும்னு நம்பமுடியாது. என் ரதிக்கும் எனக்கும் இந்தத் தை முடிகிறதுக்குள்ளே முடிய வேண்டிய கல்யாணத்துக்கு முந்தியே, பாபு பிரச்னையும் குழப்பமில்லாமல் நல்லபடியாகவும், நல்லதனமாகவும் முடிஞ்சிட்டா, என்னைப் போலே பாக்கியவான் இந்த மண்ணிலே வேறே. யாருமே இருக்க மாட்டான்; இருக்கவும் முடியாது!-ஊம் பாபுவை என்னோடு வச்சுக் கிட்டால்தான, எம் மனசு நிலைக்கு வந்து, அமைதியடையும் போலத் தோணுது ரதியும் என் திடடத்துக்கு ஒ-கே சொல்லி, சம்மதம் . சொல்லிட்டாளே? ஐயப்பா குருவாயூர் அப்பனே!-முகத்தைத் துடைத்து, நெடுமூச்சைப் பிரித்து, அரைக் கணம் அஞ்சி ஒடுங்கி நின்றவர், மறுபடி சுதாசித்து: கொண்டார்.

வேடிக்கையான தியாகராயநகர்!

கார்ச் சத்தம் ஒயாதோ? ஒழியாதோ?

தட்ட வில்லை.

ஆனால், கதவு திறந்தது.

'பாபு!' -உள்ளே மகேஷ் விரைந்தார்: பாய்ந்தார் மகேஷ்.

ஒடக் காண்பது, பூம்புனல் வெள்ளம்.

ஒடுங்கக் காண்டதோ, யோகியர் உள்ளம்.!

திருமூலரா, கொக்கா?" ...

மகேஷ் மனம் ஒடுங்கிக் காணப்பட்டார்!- ஆனல் அவர் யோகி ஆகிவிட மாட்டார்: ஆகிவிடவும் முடியாது!-என்ன குழப்பம்? ‘பாபு உறக்கத்திலே இருக்கானே?-மின் காற்றைச் சட்டை செய்யாமல், அவருடைய “பாலியஸ்டர் சட்டை ஈரமாகிக்கொண்டே இருந்தது. இருதயத்தின் இரு பிடத்தை ஒரு வெறுப்புடன்-விரக்தியுடன் தடவினர். தடவி விட்டார். "பாபு! பாபு!" --சொற்கள் விடுதலை பெற்றன ஆனால், பாபு தூக்கத்தினின்றும் விடுதலை பெற்றால் தானே?-அவருக்கு நெருப்பில் நிற்பது போல் தோன்றியது அவரையும் அறியாமல், அவருடைய தலை குனிந்தது; தாழ்ந்தது; பிறகு, பாபுவின் கட்டிலில் முழங்கைகள் இரண்டையும் பரப்பிக் கொண்டு, தன்னுடைய முகத்தைப் பால் வழியும் பாபுவின் முகத்துக்கு நேராகச் சாய்த்தபடி, பாபுவைப் பார்த்தார்; பார்த்தார்; அப்படிப் பார்த்தார்!- பாதைமாறி உதிர்ந்த ஒரு சுடர் முத்து, சொல்லி வைத்தது. போல, அந்தப் பாலகனின் கள்ளம் கவடு அறியாத நிர்மலமான முகத்தில், இடது கன்னத்தின் கறுப்புப் புள்ளி மருவில் உதிர்ந்ததைக் கண்டதும், திடுக்கிட்டார்: நல்ல காலம், பாபு விழித்துக் கொள்ளவில்லை!-அவர் இப்போது தன்னுடைய இடது கன்னத்தின் அவலமான கரும் புள்ளிப் பரப்பை தடுங்கும் விரல்களால் தடவிக் கொள்ளத் தொடங்கினார்; நெஞ்சு விம்மத் தொடங்கியது.

கடிகாரத்திற்கும் இதயம் உண்டுதான்!

"பா. . பு!"

ஊகூம்!

பாபு உசும்பவே இல்லை!

“என்ன தீவினையோ? வினை தீர்க்கும் ஆறுமுகப் பெருமானே!-வினையை விதைப்பது உண்டா, என்ன? - என்னவோ, வினையை அறுவடை செய்வது போலவே, அவருள் ஏதோ ஒன்று சீறி அவருக்குச் சவுக்கடி கொடுத்துக் கொண்டேயிருக்கிறது!- ஏமாற்றத்தில் அறுப்புச் செய்யப் பட்ட ஏக்கத்தில், அவர் பாபுவின் தனிமையான அறையினின்றும் வெளியேறினார். அங்கே திருவாளர் ரஞ்சித் தவியாய்த் தவித்துக் காத்துக் கொண்டிருப்பாரே...? போய்விடவேண்டும்!

குயில் ஒன்று கூவிக்கொண்டிருக்கின்றது. அழகாகவும் உருக்கமாகவும் கூவிக் கொண்டிருக்கிறது!-அதற்கு என்ன காதல் சிக்கலோ?

நேரெதிர்ப் பங்களாவில் மதிப்புக்குகிய திருமதி டி.ஆர் ராஜகுமாரி அன்போடும் ஆசையோடும் வளர்க்கும் குயில் அழகாகக் கூவுவதில் ஆச்சரியம் இல்லைதான்!-ஆனால். அது ஏன் இப்படிச் சோகக் கீதம் இசைக்க வேண்டும? அன்பு கொழிக்கின்ற இடத்தில், சோகத்திற்கும் இடம் இருக்குமா, என்ன? .

மகேஷ் பிரமித்து நின்றார்!-ஆசைக்கனவு பலிக்காமல் தோல்வியடைந்திட்ட தனது முதற்காதலின் நெஞ்சுருக்கும் சோகக் கதையை அவர் அதே நேரத்தில் நினைவு கூர்ந்திருக்க வேண்டும்:-"ர...!"-பெயரின் முதல் எழுத்தை உச்சரித்து, பெயருக்குடைய அந்தச் சீதேவியை விளித்து ஆறுதலடைய முயற்சி செய்த அவர், பெயருக்கு உரிய முதல் எழுத்தை உச்சரித்ததோடு நின்று விட்டார்; நிறுத்தி விட்டார். கொஞ்சப் பொழுதுக்கு முந்தி, சாதாரணமான டவல் ஒன்று அசாதாரணமான கசப்புச் சூழலை உருவாக்கி வேடிக்கை காட்டிய நேரத்திலே பேசிய ரஞ்சித்தின் சொற்கள் அவர் மனத்தில் இப்பொழுது கூட திரும்பத் திரும்ப ஒலித்தன எதிரொலித்தன. ரஞ்சித் எவ்வளவு உயர்ந்த மனிதர்!- அன்பினாலும், அபிமானத்தினாலும், கருணையினாலும் மனிதத்தன்மையினாலும் உயர்ந்திட்ட அந்த மனிதரா இப்போது துரும்பைக் கூட தூணாகப் பெரிது படுத்திச் சலனம் அடையத் தொடங்கி விட்டார்: சாந்தியை அருளவல்ல தெய்வத்திற்குக் கூடச் சலனம் என்ற ஒன்று ஏற்படமல் தப்பாது போலிருக்கிறது!- இதயப் படுதாவில் நிழலாடிய ரஞ்சனியின் உயிர்ச் சித்திரத்திலே, இப்போது, பாபுவின் உருவமும் ‘மிக்ஸ்' ஆயிற்ற!:- “பா...பு!” போய்விட மனமில்லாமல் நின்றார்: நிற்க மனமில்லாமல், போய் விடத் துடித்தார்.

பாபு எத்தனை அழகுக் குறியீடுகள் குலுங்க, அலுங்காமல் குலுங்காமல், உறங்கிக் கொண்டிருக்கிறான்! பாரதியின் கண்ணபெருமானா இந்தப் பாபு?...

மகேஷ் எதை நினைப்பாராம்?

அவர் எதைத்தான் மறப்பார்?

நினைப்பதற்காகவும் மறப்பதற்காகவும்தான் , ஆண்டவன் மனிதனைப் படைத்து, அவனோடு விளையாடிக் கொண்டிருக்கிறானா?

விதியோடு விளையாடத்தான் மகேஷு-க்குப் பொழுது சரியாகி விடுகிறது.

பின், மகேஷோடு விளையாடுவதற்கு ஆண்டவனால் எப்படி இயலும்?

“தெய்வமே!” என்று அங்கிருந்து நகர்ந்தார் மகேஷ். பின்கட்டில், ரஞ்சனி கோபத்தோடு எடுபிடிக் குட்டியைத் திட்டிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. ரஞ்சனியின் கோபத்தை அவர் அறியாதவரல்லவே! - சுள்-சுள்’ ளென்று கோபம் வந்துவிடும்; “ஜல்-ஜல் லென்று வந்த கோபம போய்விடுவதும் உண்டுதான்!-ஏதோ ஒர் உறுத்தல் மண் புழுவாகக் குடைகிறது: அரிக்கிறது; நச்சரிக்கிறது. ரஞ்சனியை நினைக்க முயன்றார், ஆனால், தோன்றியவளோ ரதி!-ஒ!...ரதி!-என் ரதி ரதிக்கு எல்லாக் கதையுமே தெரியும்!-செய்த பாவம் போதாதா?-ஆகவே, அவர் அவளிடம் எதையும் மறைக்கவும் விரும்பவில்லை; மறைத்து வைக்கவும் துணியவில்லை. மனத்தின் நீதிபதியின் கட்டளை அது. இனிமேலும் இங்கு தாமதிப்பது அநாகரிகம். ரஞ்சித்தைச் சோதித்துவிடுவதென்பது லேசான காரியம் அல்ல. கண்ணாடி, ஜன்னலில் தரிசனம் தந்த வெம்மை நிரம்பின வெளி உலகத்தை ஏறிட்டுப் பார்த்தபோது, அவரது நெஞ்சத்தின் நெஞ்சத்தில், அந்தப் பயங்கரச் சோக நிகழ்ச்சி-ஓர் அந்திமாலையில் நடந்து முடிந்து விட்ட அந்தப் பயங்கரச் சோக நிகழ்ச்சி கருநாகமெனச் சீறிப் படம் எடுத்துப் படம் காட்ட எத்தனம் செய்தது. "ஐயையோ!"-ஓலமிட்டவராக அங்கிருந்து ஒடிப்போய் விட முனைந்தார் மகேஷ்!-ரஞ்சித்-ரஞ்சனி குடும்பத்தின் நண்பரான மகேஷ்: 'ஞான் பாவப்பட்ட ஜென்மம்!...”

அப்போது:

கதவு திறந்த அரவம் கேட்டது.

அரவம் கண்ட பாவனையில், அச்சமடைந்து, திரும்பிப் பார்த்தார் மகேஷ் ‘பாபு...!’ என்று தன்னையும் மறந்து விட்ட நிலையில் மகிழ்வின் பூரிப்புடன் கூவி அழைத்தவாறு, பாபுவிடம் பாய்ந்தார்.

"மகேஷ் ஸாரே!...நான் அவசரமாக பாத்ரூம் போய்க்கிணு இருக்கேனாக்கும்!:”

“திரும்பி வா, பாபு: நான் காத்துக்கிட்டு இருப்பேன்!"

"ஏனாம், ஸாரே?”

"உனக்காக!”

"எனக்காகவா?”

"ம்!....

ஏன்?*

“......”

"என்ன ஸார், பேச்சையும் காணோம்? மூச்சையும் காணலையே? ஐயோ, பாவமே, பரிதாபமே!...போனவனுக்குத் திரும்பத் தெரியாதாக்கும்?...நீங்க வெளியே போங்க எங்கே, வேகமாய்ப் போங்க, பார்க்கலாம்!... ம்...எங்க அப்பா உங்களைக் கூப்பிடுறமாதிரி இருக்கு; ம், ஜல்தி போங்க, ஸாரே!”

பாபு போய்விட்டான்.

மகேஷ் விரைவாகவும் போகவில்லை; மெதுவாகவும் போகவில்லை; அப்படியே, அடித்து வைத்த கல்லாகவே நின்றுவிட்டார். அவர் மனமும் கல்லேதானோ? கல்லுக்கு ஏமாற்றத்தை அனுபவிக்கத் தெரியுமா, என்ன? கண்கள் குளமாயின. பாபு நெருப்பா ? நெருங்கக்கூட முடியவில்லை பழனிமலையில் அன்றாெரு தினத்தில் அவன் தன்னை நெட்டித் தள்ளியதும் இப்போது சந்தடி சாக்கில் படம் காட்டியது. "பா...பு!"-கன்னி மரியாளும குழந்தை ஏசுவும் தீட்டப் பட்ட பாபுவின் அந்தச் சித்திரமும் இப்போது அவரது சிந்தையில் நிழலாடத் தவறவில்லை!

மெளனம் சிரித்தது!

மகேஷ் திரும்பினார்.

அங்கே:

ரஞ்சித் நின்றிருந்தார்.

"ரஞ்.ரஞ்சித், என்னே ஷமிக்கணும்.”

"உம்!" .

"பாபு உறங்கிக்கிட்டு இருந்தான்.”

"உம்!"

பாபுவோடே பேசிடலாம்னு பார்த்தேன்.”

"உம்."

"ஆனா, முடியல்லேங்க.”

"உம்.”

"இப்போ, பாபு யாத்ரூம் போயிருக்கான்.’

"ஊம்.”

காலடி ஓசை கேட்டது.

விதிக்கு நடிக்கத்தான் தெரியும்; நடக்கவும் தெரிந்திருக்கிறது!...

அப்போது:

அங்கே

பாபு மாத்திரம் நிற்கவில்லை.

ரஞ்சனியும் நின்றாள்!...

"அப்பா!" என்றான் பாபு.

ரஞ்சித் மட்டிலும் திரும்பவில்லை.

மகேஷும் திரும்பினார்! ...

ரஞ்சனியின் இதயத்தில் வீழ்ந்த நெருப்பு அவளுடைய காற்பாதங்களில் சுட்டுப் பொசுக்கிவிட்டது போலவே துடித்தாள்; துவண்டாள்; தடுமாறினாள்; தத்தளித்தாள் :

ரஞ்சித்தின் சிவந்திருந்த விழிகள் மேலும் சிவந்தன!

விருந்தாளியாக வீடு தேடி வந்திருந்த மகேஷை சூட்சுமமான ஆத்திரத்தோடு விநயமாக முறைத்து வெறித்துப் பார்த்துக்கொண்டே, "அப்பா!" என்று அன்பின் பாசம் முழக்கம் செய்திட அழைத்து, ரஞ்சித்தின் கைகளைப் பிடித்துக்கொண்டான் சிறுவன் பாபு மணிப்பயல் பாபு!

மகேஷைப் பேய் அடித்ததா?-அவருக்குச் சொந்த பந்தம் பூண்ட மனம் ‘பாபு: 'பாபு!’ என்று வெகு ரகசியமாகக் கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறது!-மனக் குரங்கின் கண்களில் ரத்தம் உருகிக் கசிந்து கரைந்து கொண்டே இருக்கிறது!-பாவம்!

எங்கேயோ பூவரசம்பூ பூத்திருக்கிறது

"மிஸ்டர் மகேஷ்!"

"ஸார்"

"பாபுவோட-எங்க பாபுவோட நீங்க என்னமோ பேசவேணும்னு சொன்னீங்க இல்லீங்களா?’’

‘‘...... உம்!"

"பேசறதுதானே?”

"........"

“என்ன, மெளனம் சாதிக்கிறீங்க, மகேஷ்?’’

"ஸாரே!"

‘பேசுங்க, மகேஷ். பாபுவோடே பேசுங்க!

"...................."

"உம்!"

"வந்து......”

“அதுதான் வந்திட்டீங்களே?”

“ஸார், ரஞ்சித் ஸார்!”

"ரஞ்சித் செத்துப் போயிடல்லே: செத்துப் போயிடவும் மாட்டான்! எங்க பாபுவோடே - நம்ம பாபுவோடே -உங்க பாபுவோடே பேசுறதுக்கு ஏன் இப்படிப் பயந்து சாகறீங்களாம்?-பாபுவோடே பேசுங்க, மகேஷ்!”

ஆடு திருடிய கள்ளனைப்போலே, திருதிருவென்று விழிக்கிறார் மகேஷ் சுடுநீர்ச் சரம் நீள்கிறது; சுடுகிறது.

ரஞ்சனி கால் பாவி, கால் பரப்பி, கால் பதித்து நின்ற உயர்ரகப் பளிங்குக் கல்தரை, அப்போது தூக்குமேடையாக உருவெடுத்து விட்டிருக்க முடியாதுதான்.

பாபு சிரிக்கிறான்; சிரிக்கிறான்; சிரித்துக்கொண்டேயிருக்கிறான்!

பாபுதான் விதியா?.

இல்லை....

விதிதான் பாபுவோ?

மெளனத் தீ கொழுந்துவிட்டெரிந்தது.

மெளனத்தின் பிண்டமென நிலைகுலைந்தும் நிலை கலங்கியும் நின்ற மகேஷின் உள்ளத்தில் ஏக்கமும் ஏமாற்றமும் பிய்த்துப் பிடுங்கித் தீர்த்தன; நரகவேதனை அவரைச் சித்திரவதை செய்தது.

"‘பாபுவோட பேசலீங்களா, மிஸ்டர் மகேஷ்?’ என்றார் பாங்கர்.

"ஊம், பேசவேண்டியதையெல்லாம் பேசிடுங்களேன், மிஸ்டர் மகேஷ்! பாங்கரின் பாங்கியான ரஞ்சனி.

"ஓ, பேசலாமே, ஸாரே!" என்று அனுமதி அளித்த வகை, மகேஷ் நின்ற இடத்தை அண்டினான் பாபு விதியாகவே அண்டினான் பாபு

“ஊஹும், நான் பேசல்லே, பாபுவோடே நான் பேசல்லீங்க விம்மினார் மகேஷ், சட்டைப்பையின் உட் புறத்தில் அஞ்ஞாத வாசம் செய்த அந்தச் சின்னஞ்சிறிய துண்டுக் கடிதத்தை வெளியே எடுத்தவர். மறுபடி அதைச் சட்டையின் பைக்குள்ளாகவே மறைத்துத் திணித்தார்.

ஆ!....

“மிஸ்டர் மகேஷ், உங்களை எனக்குத் தெரியாதா?” சிரித்தார் ரஞ்சித்.

குலை நடுங்கினார் மகேஷ் இடப்புறத்தில் நின்று விடாமல் ஒடிக் கொண்டிருந்த இருதயத்தை அழுத்தித் தேய்த்துக் கொண்டார் “மிஸ்டர் ரஞ்சித்!" விம்மினார்.

ரஞ்சனியின் கண்கள் அவளது காற் பெருவிரல்களையே இன்னமும் பார்த்த வண்ணம் இருக்கின்றன. உள்ளத்தின் உள்ளம் '144' போட்டது; ஊகூம், அழக் கூடாது; இந் நேரத்தில், அழவே கூடாது!-ஆனால், அவளது எழில் விழிகள் அழத் துடித்தன; சதுரங்கம ஆடிய கண்ணீர்த் திரளில், பொல்லாத அந்த அந்திமாலைப் பொழுது இப்போது ஊடும் பாவுமாகப் படம் வேறு காட்டித் தொலைக்கிறது!- தாயே, மாங்காட்டுக் காமாட்சி!... என்னை ஏன் இப்படி நித்த நித்தம் உயிர் செத்துச் செத்து, உயிர் பிழைக்கச் செய்கிறே?... அன்றைக்கே நான் செத்து மடிஞ்சிருக்கப்படாதா?’-மனம் அழுதது; புலம்பியது: “ஆமாங்க, அத்தான். நான் புண்ணியவதிதாங்க; பாவப் பட்ட இந்தப் பெண் ஜென்மத்துக்கு உங்களோட எல்லையில்லாத அன்பின் மூலம், ஈடுஎடுப்பில்லாத உங்களோட கருணையின் மூலம் எனக்குப் பாவவிமோசனம் கிடைக்கிறத்துக்குப் பூர்வ ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருந்த நான், வாஸ்தவத்திலேயே புண்ணியவதியே தானுங்க, அத்தான்!’-பத்து வருஷத்துக்குமுறல் ஓயாதா? ரஞ்சனி, ‘அ. . த்...தான்! “என்று கதறினாள்!

மின்னாமல் முழங்காமல் இடி. விழுந்து விட்டமாதிரி, பதறினார் ரஞ்சித்: "ரஞ்...!" என்று அலறினார்; ஒடினார்.

"அம்மா!... அம்மா!"

பயத்துடன் தாயைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கவலையுடன் செருமினான் பாபு.

குற்றம் பார்க்கில், சுற்றம் இல்லை!

மகேஷ் ஒதுங்கியும் ஒதுக்கமாகவும் நின்றார்.

"பொல்லாத சொப்பனம் கண்டு பயந்திட்டேனுங்க, அத்தான்!” என்று பயத்தோடு அழுதவளாக, அத்தானின் மாண்புமிக்க மார்பில் தலையைச் சாய்த்துக் கொண்டாள் ரஞ்சனி, ஆருயிர் மைந்தனின் அணைப்பில், அவளைச் சுட்டுக் கொண்டேயிருந்த கண்ணீர், இப்போது தான் சிறுகச் சிறுகக் குளிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

அதோ:

ரதி!

மன்மதனின் ரதி அல்லள்!

மகேஷின் ரதி!

உரியவளுக்கு விடுதலை அளிக்கிறார் உடையவர்,

யார் இவன்?...

பாபுவுக்கு எரிச்சல் எரிச்கலாக வந்தது; அதே எரிச்சல், பண்புடன், மகேஷையும் எரிச்சலோடு பார்த்தான்; பார்வையிட்டான்.

ரஞ்சித் பணத்தில் புழங்குபவர்:ஆகவே, வரவு-செலவு. லாப-நஷ்டம் எல்லாம் தெரிந்தவர். ஆனால், அன்புக்குக் காட்டுப் படும்போது, அந்த அன்பெனும் மகுடிக்குக் கட்டுண்ட நல்ல பாம்பாகவே ஆகிவிடும் மகத்தான மனிதத் தன்மை பெற்ற ஓர் ஆபூர்வப் பிறப்பை எடுப்பதும் வழக்கம்- "மகேஷ்!" என்று கூப்பிட்டார். மலர்ச்சியுடன்!

மகேஷ், குற்றவாளிக் கூண்டில் நீதிபதியின் சந்நிதானத்தில் நிறுத்தப்பட்ட கைதியாக நின்றவர், தாழ்ந்து குனிந்திருத்த தலையை மெள்ளமெள்ள நிமிர்த்திப் பார்க்கலானார்.

"மகேஷ், உங்க ரதி நிற்கிற இந்த லோகத்துக்கு நீங்க இப்போது திரும்பியிருப்பீங்கண்ணு நம்புறேன்; கிணற்றுத் தண்ணீரை எந்த வெள்ளமும் எப்போதும் கொண்டு போயிட முடியாதுங்க! பாபுவை நீங்க எப்போது வேணுமானலும் பார்க்கலாம்; பாபுவோடே பேசலாம்!... ஊம்: மனசைச் சமாதானப் படுத்திக்கிட்டு வாங்க, சாப்பிடுவோம்.’’ என்று மகேஷை நோக்கிச் சொல்லிய பெருந்தனக்காரர் ரஞ்சித் இப்போது இல்லத்தரசியின் பக்கம் திரும்பி, "ரஞ், இப்பவே நேரம் ரொம்ப ஆச்சு: சீக்கிரம் விருந்துக்கு ஏற்பாடு பண்ணு; நாம் எல்லாருமே ஒரே பந்தியாய்ச் சாப்பிடப் போறோம்; உள்ளே நடுக் கூடத்திலேயே ரத்தினக் கம்பளத்தை விரிச்சிடு; ஏ. ஸி.யையும் போட்டுடனும் பாவம், நம்ம மகேஷ் பேயடிச்ச மாதிரி இருக்கார்; சூட்டுக்கு ஏ. ஸி. ஒத்தடம் கொடுக்கட்டுமே!” என்றார்,

மகேஷ் சிரிக்க முயல்கிறார்:

பாபுவுக்கு அடியும் புரிய வில்லை: நுனியும் விளங்க வில்லை.

பாபுவைப் பிரியம் கனியப் பார்த்தாள் ரதி.

பாபுவே முகம், சுளிக்கிறான்!

நந்தினிப் பெண் மேலே, அதாவது, மாடியில் குளியல் கழிந்துக் கொண்டிருக்கிறாள் போலும்!

'சூ, மந்திரக்காளி!' போட்டு வரவழைக்கப்பட்ட ‘மென்னகையை வெளிக்காட்டியவாறு, அங்கிருந்து நகர்கிறாள் ரஞ்சனி!

ரஞ்சித் தமக்கே உரித்தான பெருந்தன்மை கனியத் தமக்குத் தாமே சிரித்துக் கொண்டார்!. .

பிற்பகல்:

மணி இரண்டு; நிமிஷம் ஏழு.

நடுக்கூடம்.

இப்போது, அதுவே உணவுக்கடம்.

குளிர்ப்பதனக் காற்று.

நீலப் பாதரச ஒளி,

ஊதுவத்தி வாசனை.

ரத்தினக் கம்பளங்கள்.

பந்தி ஆரம்பம்.

கிழக்கில், ரதி-மகேஷ் ஜோடி.

மேற்கே, ரஞ்சித்-ரஞ்சனி இணை.

தெற்கே, இந்தினி.

வடக்கு: பாபு.

தஞ்சாவூர்த் தலைவாழை இலைகள்.

கொத்துச் சட்டிகன்.

சோற்றுப் பாத்திரம்.

தக்காளி, முருக்கங்காய், பச்சை மிளகாய்-பச்சை கொத்தமல்லி- சாம்பார்:

ஆமாம்; பருப்பு இல்லாமல் சாம்பார் இல்லை.

சோமையாவுக்கும் நன்றி.

அதோ, எடுபிடிக் குட்டி செவகி ரெடி:

புதுப் பாவாடை, சட்டை: பலே ஜோர்தான்!

'ஒமேகா'வுக்கும் இதயம் இருக்கிறது; இதயம் என்று ஒன்று இருக்கும் பட்சத்தில், இதயத் துடிப்பு இருப்பதும் சகஜமே.

ரஞ்சித் எழுந்தார்: பனியனுக்கு வெளியே நரிப்பல் டாலர் மைனர் சங்கிலி டால் அடிக்கிறது: மைனர் செயின் அவருக்குப் படுஎடுப்பு: அவர் நாளும் பொழுதும் மைனர்தானே?-எழுந்தவர். மேலே அ ண் ணா ந் து நோக்கினார்; கண்களில் “ப்ளாக் அண்ட்நை'ட் சிகப்பு மறைத்திருந்தது: “ஷவர் பாத்' அவருக்குப் புதிய தெம்பை ஊட்டியிருக்கலாம்: ‘ஓல்ட் ஸ்பைஸ் புதிய உணர்வைத் தூவிவிட்டிருக்கவேண்டும். அவரது கண்கள் நாற்புறத்திலும் ரங்கராட்டினம் சுற்றும். கரங்கள் குவிகின்றன!

அதோ, மனிதச் சாதி-சமுதாயத்தின் சீர்திருத்த வாதி, அண்ணல்!

பாரதி; 'வாழ்க, நீ எம்மான்!”

அங்கே: அண்ணா அறிஞர்.

விவேகானந்தரும் இருப்பார்.

தாகூர், இதோ.

‘வா, இந்தப் பக்கம்!-வந்தவர். தமிழகக் காந்தி.

ஆம்; அவர்தான் “கல்கி!”

ஒன்றே தேவன், ஒருவனே தெய்வமாக, தெய்வங்கள் பல!-அதோ, அதோ!...

“ஊம், நெய் ஊத்து!’

“ஆகட்டுமுங்க, ஐயாவே!”

“அப்பறம்...?*

“பருப்பு!”

ஊத்துக்குளி மணம் மகா அற்புதம், போங்கள்!

அடடே, போய்விடப் போகிறீர்கள்!

பாரா. உஷார்!

விருத்து ஆரம்பமாகிறது.

“சாப்பிடலாமா?” என்று கேட்டார் குடும்பத்தின் முதல்வர்.

"ஓ!" என்றவர்கள் பாபுவும் நந்தினியாகவுமே இருக்க வேண்டும்.

“சாப்பிடலாமா, மகேஷ்!"-ரஞ்சனி.

"உம்!"

"ரஞ், சாப்பிடலாமில்லே?”

"ஒ!"

சோற்றுக் கவளங்கள் உருள்கின்றன

"ஊம், சாப்பிடுங்க, ரதி!" என்றாள் வீட்டுக்குத் தலைவி

"சரி!"

முதற்பிடிச் சோற்றுக்கே பாங்கரின் கணக்கில் ஏப்பம் ஒன்று ஆதாயம் ஆகிறது. -

சோற்றைப் பிசைந்தவள். நாணத்தின் மென்மையுடன் சற்றே தயங்கியவாறு தன் காதலர் மகேஷ் சாப்பிட்ட பின்னரே சாப்பிடவேண்டுமென்று காத்திருந்தவள்போன்று. அரைப் பரிவோடும் பிரேம பாசத்தோடும் ஏறிட்டு நோக்கி, “ஹாய், மகேஷ்! உண்ணுங்க வயநேரம் நமக்குச் சோலி உண்டில்ல’ என்று தூண்டினாள் ரதி. கழுத்துச் சங்கிலியின் பதக்கத்தில் ஒற்றைக் கல் வெள்ளை மூக்குத்தி முகம் பார்த்தது: அகமும் பார்த்தாருக்கும்; நெளிநெளியாக அலைபாய்ந்த மயிர்க் கற்றையைத் தளரமுடிந்து தலைவாசிப் பின்னியிருந்த சடைப் பூக்கள் தலைக்காட்டிக் கண்காட்டி, முகமும் காட்டின.

ரஞ்சனிக்கு மனத்தில் கடுகத்தனை களிப்புக்கூட கண் சிமிட்டவில்லை சாதத்தை அள்ளி, நெய்யும் பருப்பும் பிரிந்து விடாமல் பிசைந்தவள். தலையை அச்சத்தோடும் அயர்வோடும் நிமிர்த்தினாள் : மகேஷ் இன்னமும் கல்லாய்ச் சமைந்திருந்த கோலம் அவளைக் கம்பளிப் புழுவாக அரிக்கவே, ஒரக்கண்ணால் பார்வை வலையை விரித்தாள். ‘ஏன் இப்படி என்னவோ ஒருமாதிரி உட்கார்ந்திருக்கீங்க? சாப்பிடுங்க, மகேஷ், சாப்பிடுங்க,” என்று தயவாக் வேண்டினாள். - -

ரஞ்சனியின் நினைவூட்டலுக்காகவே காத்திருந்தவர் போல, உதடுகளில் சன்னமான முறுவலைப் பின்னப்படாமல் தூவினார்; முதல் கவளச் சோற்றை நொடியில் உருட்டி, நொடியில் வாய்க்குள்ளே போட்டுக்கொண்டார்.

ரஞ்சித் நயமாக மட்டுமல்ல, விநயமாகவும் சிரித்து வைத்தார்: ‘'என்னோட ரஞ்சனி சொன்னால்தான், எங்களோட மகேஷ் கேட்பது வழக்கம். சரி, சரி: வேகம் ஊணு கழியுங்க, மகேஷ் ஸாரே!” சாந்தியைக்காட்டாமல், சலனத்தைக் காட்டிக்கொண்டிருந்த அப்போதைய மனத்தின் நிலையிலே, அந்த அந்திமாலைப் பொழுதின் பயங்கரமான சோகக்கூத்து, விதியின் ஒருநாடகத்தை முடித்த துயரக்கூத்தாக முடிந்திட்ட ஆறாத் துயரம் அப்போதும் அவரை அரிக்கவும் நச்சரிக்கவும் மறந்துவிடவில்லை; ரத்தக் கண்ணீரின் கசிவில் மகேஷ் தேர் முனையிலும் ரஞ்சனி எதிர்முனையிலும் மாறிமாறிச் சுழன்றன : “ஆண்டவனே.-- மனம் அழகிலா விளையாட்டுடையானைப் பிரார்த்தனை செய்தது; ஆனால், பிரார்த்தனைக்கு இரங்கி, ஆண்டவன் இறங்கிவரவில்லை; 'நினைத்தேன்; வந்தாய்' என்கிற கதையாக, பாபு ஓடோடி வந்தான்; தரிசனம் தந்தான். பாபு. நெஞ்சில் பதம் பிடித்துப் பரதம் ஆடிய பாபு, அதோ, நினைவுக்கு உத்தாரம் தருகின்ற பாவனையில், சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் - பாபு!... எங்க அருமை மகனே!” பொட்டுப் பொழுதில், பொடி பட்ட மாதிரி, விழிகள் தளும்பிவிட்டன.

திகில் அடைந்தாள் ரஞ்சனி, ஆசை அத்தானை ---- தன்னுடைய அருமையான உயிருக்கும் பெருமையான மானத்துக்கும் சரித்திரமேன்மை கொண்ட ஒரு கல்வெட்டுத் தூணாக விளங்கிக் கொண்டிருக்கும் அன்பு அத்தானைப் பதற்றம் மூள, அப்பதற்றம் நெருப்பாகத் தகிக்க உற்றுப் பார்த்தாள்; உறுத்துப் பார்த்தாள் அவள். அவள் ரஞ்சினி ரஞ்சித்தின் ரஞ்சனி, ரஞ்சித்திற்கே உடைமை பூண்ட ஆசை ரஞ்சனி; அருமை ரஞ்சனி! “அத்தான், சாப்பிடுங்க; வந்திருக்கிற விருந்தாளிகளை அழைச்சுக்கிட்டு, சாயரட்சை எங்கெங்கோ போகணும்னு ‘ப்ரொக்ராம்’ போட்டீங்களே? சல்தி பண்ணிச் சாப்பிடுங்க. சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து எழுந்திருச்சதும், காஃபி சாப்பிடலாம்; அப்பறம், வெளியிலே புறப்பட வேணாங்களா? ஊம். சீக்கிரம் சாப்பிடுவீங்களாம்!-நம்ப பாபு மாதிரி நல்ல பிள்ளை ஆச்சே நீங்க! வேணும்னா ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!’ கதை சொல்லட்டுங்களா? ஊம், சரிதான்; சீக்கிரம் சாப்பிடுங்க. அத்தான்; உங்க ஆசைப்படி, நானும் உங்களோடே சரிசமமாய்க் குந்திச் சாப்பிட ஒப்பவீங்களா?...இப்பவும் என் பேச்சுக்கு மதிப்புக்கொடுத்து, மரியாதை கொடுத்துச் சாப்பிடுங்களேன், அத்தான்!” மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது; இருதயம் எப்படி அசுரகதியில்-‘டக்டக்’ சத்தத்தை எழுப்பித் தொலைகிறது: பொங்கி வரும் பெரு நிலவாகவும் புன்னகையின் புது நிலவாகவும் அவள் பரிணமிக்கிறாள். ரஞ்சனியின் பொன்நகைப் புன்னகையில் ஸ்ரீரஞ்சனி புன்னகை புரிகிறது.

ரஞ்சித் உயர்ந்தவர்; ஆகவேதான், அவரால் விழிகளை உயர்த்திட முடிந்தது; நேர்கொண்ட பார்வை நேர்க்கோடென விரிந்தது; ரஞ்சனியை ஊடுருவினார்; எம்பெருமானுக்கு உடைய எம்பிராட்டியின் அன்பு விண்ணப்பமாகவே ரஞ்சனியின் சொற்களை அவர் வாங்கிக்கொண்டார். நிர்மலமான அந்தக் கோலமதர் விழிகளிலேதான் எத்தனை குழந்தைத்தனம், பிழையற்ற பாவம், பரிவு, பாசம், நேசம்:-ஆஹா!...என் ரஞ்சனி ஆன்போடு கேட்ட எதைத்தான் நான் இதுவரை மறுத்திருக்கிறேன்? அவள் கேட்டு ‘இல்லை!’ என்றேனா?---அல்லது, ‘முடியாது!’ என்று தான் சொன்னது உண்டா? அவள்தான் என் உயிர்; எனக்கு உயிர்; அவளது உயிர்தான் எனது உயிர்!-அவள் அன்பு அப்படி; பாசம் அப்படி; தேசம் அப்படி! ஆனதாலே தான், அவள் கேட்டு, நான் அன்று தொட்டு இன்று பரியத்தம் நான் எதையுமே மறுதளித்தது கிடையாது; கிடையவே கிடையாது! என் உள்ளம் தொட்டவள் ஆயிற்றே?---அன்பு ஒருபோதும் கேட்பதில்லையாம்; கொடுக்கத்தான் செய்யுமாம்!--- மகாத்மாவை நான் மறுக்க முடியாதுதான்!--- ஆனாலும், எங்கள் அன்பு, அதாவது, எனக்கும் ரஞ்சனிக்கும் இடையிலான உயிர்களின் பாற்பட்ட அன்பு--- உள்ளங்களின் பாற்பட்ட அன்பு கேட்பதும் உண்டுதான்!--- கேட்கப்படும் கையில், கொடுப்பதும் உண்டு; அன்பு என்னும் மகத்தான அற்புதச் சக்தி கொடுக்கல் - வாங்கல் விவகாரத்திலேதானே உயிர்கொண்டு விளங்க முடிகிறது!. அந்திமாலைச் சோகத்தில் சலனம் அடைந்த நெஞ்சம் அந்திதிலா ஆனந்தத்திலே அமைதி அடைந்திட, சுயப்பிரக்கினை பெற்றார் ரஞ்சித்!--- ஆம்! ரஞ்சனி கோபப்படுவதற்கு முன்னதாக, நல்ல பிள்ளையாக உண்டுமுடித்து, மறுபடியும் ஏப்பம் விட்டுவிடவேண்டும்! -- ‘ரஞ்!...என்னோட அன்புத் தெய்வமே! ரஞ்!’ --திட்ட வட்டமானதொரு புதிதான--- நூதனமான உற்சாகத்தோடு சாப்பிடத் தொடங்கினார்: ரஞ்சனியையும் உண்ணும்படி ஏவினார்: பாபு, நந்தினியையும் மறந்து விடுவாரா, என்ன?--- “மகேஷ்-ரதி! வேகம் பண்ணி உண்டு முடியுங்கோ!” என்று கூறி, சிவாஜி பாணியில் ‘கோ’வில் ஓர் அழுத்தமும் கொடுத்தார்.

தமிழ் முதல்வனுக்குப் பூந்தமிழால் மாலை இடுகிறாள் பக்திப்பெண் ஒருத்தி!

மறுகணம்:

கூடத்தில் புண்ணிய பூமியின் கறைபடாத, கரை காணாத, புனிதமான, பொற்புடைய அமைதி ஆனந்தமாகவும் அற்புதமாகவும் ஆட்சி நடத்தியது.

“இன்று புதிதாய்ப் பிறந்தோம் நாம்!” என்கிற பாணியிலே, அவரவர்கள் குதூகலத்துடன் உணவுகொண்டனர்.

குற்றம் நீங்கின அமைதியும், மன்னிப்பில் கிட்டிய ஆறுதலும், சலனம் கலந்த சாந்தியும், சமாதானத்திடைச் சஞ்சரித்த நம்பிக்கையும் அப்போது அவர்களுக்கு மத்தியில் கண்களுக்குப் புலனாகாத கடவுள் மாதிரியும், அதைவிடவும், கண்ணுக்குள் தெரியாத விதிபோலவும் விளையாடின; விளையாட்டுக் காட்டின!

மகேஷ் பக்கம் ரஞ்சித் பார்வையைச் செலுத்தினார்.

ஒரு சிலிர்ப்பு.

மகேஷ் அதோ, தலைநிமிர்ந்து ரஞ்சித்தை மட்டுமல்லாமல், ரஞ்சித்தின் ரஞ்சனியையும் சுத்தமான தைரியத்தோடு பார்க்கிறார்; பார்வையிடுகிறார்.

ஜோடிச் சிரிப்பு.

ரதிக்கென்ன?--- அவள் ராஜாத்தி!---மலையாளப் பூங்குயில்!--- “சில்ப்பக்காரி”யாக்கும்!--- தம்புராட்டியும் அவளே! சொப்பனங்கள் அவளுடைய பட்டுக் கரு நீல விழிகளிலே சொகுசாக ஆனந்தச் சல்லாபம் செய்தன போலும்! பின்னே, அவள் ஆனந்தமாகச் சாப்பிடக் கேட்கவேண்டிய தில்லை.

மணிப்பயல் பாபு அபூர்வரகம்: இலையைக் காலி பண்ணி விட்டான்; வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டான் !

“பழனி மலை ஆண்டியே! ‘உனக்கு என்ன வேணும்’?” என்று விசாரணை நடத்தினாள் ரஞ்சனித் தாய்!--- ‘பாபுவை அடுதத வருஷம் ஹாஸ்டலுக்கு அனுப்பவே கூடாது; இங்கேயே தான் வச்சுக்க வேணும்: பாபு இங்கே இல்லாட்டி, எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்!’

பாபு: “எனக்கு நீதான் வேணும், அம்மே!” அசல் பழனி ஆண்டியும் அன்னை உமையவளிடம் இப்படித்தான் புராணக்காலத்திலே வசனம் பேசியிருப்பான்!--- “அச்சனும் தான் எனக்கு வேணுமாக்கும்!” நிஜார்ப் பையைச் சாகசமான சாமர்த்தியத்தோடு தடவிப் பார்த்துக் கொள்கிறான் வாண்டுப்பயல்.

ரஞ்சித் வாய்விட்டுச் சிரித்தார். “உன் அப்பாவையும் அம்மாவையுந்தான். நீ பிறந்த அந்த நிமிஷத்திலேயே உனக்கென்று எடுத்துக் கிட்டியேடா, தெய்வமே!” உண்மையான கண்ணீருக்கு இடம் பொருள் எல்லாம் துச்சம், தூசுக்குச் சமம்!

ரஞ்சனி மனம்விட்டுச் சிரிக்கிறாள்:

“ஆமாம்ப்பா! நீ எப்பவுமே எங்க தெய்வமேதான்! உன்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீ எப்பவுமே அருமை பெருமையான பிள்ளையே தாண்டா, பாபு ராஜாவே!” உந்திக் கமலத்தினின்றும் கொப்புளித்த கண்ணீர் கண்களில் நிரம்பி வழிந்தது.

‘ஆ!’--- மகேஷ் திடுதிப்பென்று ஏன் அப்படிக் கதிகலங்குகிறார்? சட்டைப் பையைக் குழப்பத்தோடும் கலவரத்தோடும் தடவித் தடவிப் பார்க்கிறார்: வேர்வை எட்டிப் பார்க்கிறது.

நத்தினி தயிர் ஊற்றிக் கொண்டதும், அவளுக்குப் பிடித்தமான துகையல் கிடைத்தது. வாய்க்கு உறைத்தது; நெஞ்சுக்கு இனித்தது. பிடிச்சோறு அதிகமாகவே சாப்பிட்டாள். “தாங்க் யூ, மம்மி!"

'ஒ.கே' சொல்லி, பாசத்தின் நன்றியை நன்றியுடன் அங்கீகரித்தாள் ரஞ்சனி.

“அம்மா, பாயாசம்!” என்று கேட்டுக் கொண்டு ஓடோடி வந்து, அம்மாவின் மடியில் துள்ளலோடு குந்திக் கொண்டான் பாபு. அம்மாவின் இலையிலேயே பாயசத்தைப் போடச் சொல்லிச் சமர்த்தாகவும் சாப்பிட்டான். அம்மாவின் பங்குக்கு உபரியாகக் கிடைத்த முந்திரிப்பருப்பு: ஐந்து; அப்பா தந்ததோ ஆறு. அவனுக்கென்று கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் இருந்து விட்டுப போகட்டுமே!உபரியாகத்தான இப்போது ஆதாயம்,கிடைத்து விட்டதே? ஐயையோ!-அத்தனே முந்திரிப் பருப்புக்களும் கண் மூடிக் கண் திறப்பதற்குள், வாய்மூடி வாய் திறப்பதற்குள் எங்கோ மாயமாய் மறைந்து விட்டனவே!

ரஞ்சனி மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பறத்தாள்.பத்து வருஷத்துச் சோகம் பத்து நிமிஷத்திலே காற்றாய்ப் பறத்து விட்டது போலவும் ஆறுதல் பெற்றாள்: பாபுன்னாபாபுதான் - பாபு சாப்பிட்ட மிச்சத்தில் மேலும் இரண்டு கரண்டி ஊற்றச் சொல்விச் சுவைத்துச் சாப்பிட்டாள். பாயசம் இன்றைக்கு ஏ, ஒன்!- ஏலக்காய் அமர்க்களமாக கணக்கிறது!

‘இன்னம் கொஞ்சம் பாயசம் வாங்கிக்கிடுங்க, மகேஷ்!” என்று சொல்லி உபசரித்தார், விருந்த படைத்தவர்.

"போதுமுங்க" என்றார் மகேஷ்.

"ரதிக்கு இன்னும் ஒரு கரண்டி பாயசம் ஊத்துடி, சேவகி," என்றாள், விருந்து தயாரித்த ரஞ்சனி.

"ம். . . மதி...மதி!"

"போதுமாம்டி: நிறுத்திக்கடி, தாயே!”

மதி வந்த ஒப்பனையில், பல் எல்லாம் தெரியக் காட்டி அசடு வழிய நகர்ந்தாள் ஏழைச் செவகி. அவள் பாடு இன்றைக்கு வேட்டைதான்!- ‘ஊம், வயிறு வெடிக்கச் சாப்பிட்டாகணும்!” என்று செல்லம் காட்டி, அன்பு காட்டி, வீட்டுத் தலைவியே பரிமாறும் போது, செவகிக் குட்டி பாவம், திக்குமுக்காடித் திணறி விடப்போகிறாள்:

முதன் முதலில், இரண்டாவது ஏப்பத்தையும் அதிகார பூர்வமாகப் பிரகடனம் செய்தார் ரஞ்சித்.

அவரவர்கள் எழுந்தார்கள். இம்முறை, ஜாக்கிரதையாக நீட்டின கைப்பிடித் துண்டை வெகு ஜாக்கிரதையாகவே வாங்கிக் கொண்டார் மகேஷ்.

இப்போதும், ரஞ்சித் புன்னகை செய்கிறார்,

அந்நேரத்திலே

பூஜைவேளையில் கரடி புகுந்தது.

அதாவது, சாப்பாட்டு வேளையில், இந்நாட்டு மன்னர் ஒருவர் பிரசன்னமானார்; அந்த நடுத்தெரு நாராயணனுக்கும் அங்கே விருந்து கிடைத்தது.

பிச்சைக்காரனுக்குக் கொண்டாட்டம்!

ரஞ்சனிக்கும்தான்.

மற்றுமோர் ஆச்சரியக்குறி!

அதோ பாருங்கள்!-கைப்பிடிக் கடிதத்துடன் தன்னாடைய தனி அறையை இலக்கு வைத்து ஓடிக்கொண்டிருக்கிறான் மாஸ்டர் பாபு!...