அந்த நாய்க்குட்டி எங்கே/இளவரசி வாழ்க

இளவரசி வாழ்க!
1

தேமதுரத் தமிழ் வாழ்த்துகின்ற பொங்குவிரி காவிரியின் வாழ்த்தைப் பெற்றது அல்லவா சோழவள நாடு!

புலிக்கொடி வாகை சூடிக் கொடிகட்டி பறந்த சோழமண்டலத்திற்கு, அன்றைக்கு வழித்தடம் அமைத்துக் கொடுத்த முதல் மரியாதைக்குரியது சிருங்காரபுரி நாடு!..

அந்நாட்டின் பூலோக சொர்க்கமாகத் திகழ்ந்த அரண்மனையின் தலைவாசலில், வண்ணக் கலாபமயில் சின்னம் பொறித்த வெண்பட்டுக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது!

அப்பொழுது –

அத்தாணி மீண்டபம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. மண்டபத்தின் பிரதான வாயிலில் காவலர்கள் இருவர் கடமையின் கண்ணியத்தோடு, கட்டுப்பாடு காத்து நின்றனர். அவர்களுடைய முகங்களிலே பளிச்சிட்ட கேள்விக்குறியில் ஆச்சரியக்குறி மின்னிமின்னி மறைந்தது.

அடுத்த கால்நாழிகைப் பொழுதில், அரண்மனை அறிவிப்பு மணியின் ஒலி திக்கெட்டும் எதிரொலிக்கத் தொடங்கியது.

ஆம், அன்று அங்கே மந்திராலோசனை சபை கூடப்போகிறது! சற்றைக்கெல்லாம், காவலர்கள் மரியாதையுடன் சிரம் தாழ்த்திட, அவர்களது மரியாதையை மனிதாபிமானத்துடன் ஏற்றுக் கொண்ட பெருமிதத்துடனே, பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் மிடுக்குடன் உள்ளே பிரவேசித்தனர்.


அதோ தலைமை அமைச்சர் அழகண்ணல்! அவரைத் தொடர்ந்தார் ஆஸ்தான கவிஞர் தமிழேந்தி!

இருவரும் உற்ற காவலர்களுடனும் உரிய மரியாதைகளுடனும் இடைவழி கடந்தனர். அங்கு குழுமியிருந்தவர்களின் அஞ்சலிகளை ஏற்றனர்.

தலைமை அமைச்சர் அழகண்ணல். மேனியைத் தழுவிக் கிடந்த பட்டு அங்கியின் நுனி கொண்டு நெற்றிப் பொட்டின் விளிம்பினைத் துடைத்துக்கொண்டே அமர்ந்தார். மன்னர்பிரானின் சிம்மாசனத்திற்குச் சற்றுக் கீழே இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்தது அவரது இருக்கை.

கவிஞர் பெருமான் தமிழேந்தியும் அமர்ந்து கொண்டார். முதுமையின் தளர்ச்சியை அவர் மாற்ற முடியாமல் திணறினார்.

மன்னர் வருகை பற்றிய அறிவிப்புச் சொல்லப்பட்டது, அரசாங்கத் தோரணையில்!

சில கணங்கள் கழிந்திருக்கும்.

“மாட்சிமை தங்கிய மாமன்னர் வருகிறார்!..பராக்...பராக்!” என்று ஆரவாரப் பேரொலி கிளம்பியது.

முறையான சடங்குகளின் பிரகாரம் சிருங்காரபுரி தேசத்தின் முழு முதல் காவலர் பூபேந்திர பூபதி வெகு கம்பீரத்துடன் தலைமை மந்திரியின் தகுதிவாய்ந்த ராஜ மரியாதைச் சிறப்புகளை ஏந்தி வந்து தம்முடைய ராஜபீடத்தில் மிடுக்குடன் அமரலானார்.

முதுகுப்புறம் இரு மருங்கிலும் தவழ்ந்த வெண்பட்டுத் ‘துப்பட்டாக்களை’ கைகளில் ஏந்தி நின்றனர் ஏவலாளர் இருவர். வெண்சாமரம் வீசினர் இருவர். மணிமகுடத்தை நாசூக்காக நகர்த்திக் கொண்டு வைரக்கற்களும் நவரத்தினங்களும் கண் சிமிட்டின.

முதல் அமைச்சர் எழுந்து மன்னரின் காதோரம் குனிந்து பவ்யமாக ஏதோ பேசினார். மன்னர் ‘ம்!’ கொட்டினார்.நெற்றியில் சிந்தனைக் கோடுகள் இருந்தன! அரசவைக் கவிஞருக்கு அடையாளம் காட்டப்பட்டது.

தோத்திரப்பா சொன்னர் கவிஞர் தமிழேந்தி :

‘கல்லார்க்குங் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே!

காணார்க்குங் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே’

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே!

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில்நின்ற நடுவே!

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே!

எல்லாருக்கும் பொதுவில்நடமிடுகின்ற சிவமே!

என்னரசே! யான்புகலு மிசையுமணித் தருளே!’

பாட்டு முடிந்தது.

அமைதியின் அடையாளத்திற்கென இராமேசுவரம் சங்கு இதமாய் முழங்கியது.

மந்திராலோசனை மண்டபம் பேரமைதி பூண்டது.

மதிப்புக்குகந்த தலைமை அமைச்சர் அழகண்ணல், வேந்தரை வணங்கிட்டுப் பேசத் தொடங்கினார் :

“மரியாதை மிகுந்த கவிஞர் அவர்களும் ஏனைய என் சகாக்களும் இப்பொழுது மிகவும் அவசரமான செய்தி ஒன்றினை அறியப் போகிறார்கள்.

மாட்சிமை தங்கிய மன்னர்பிரானது அனுமதியின் பேரில் நேற்றிரவு யாம் நடத்திய அந்தரங்கக் கூட்டத்தின் முடிவின்படி இது தருணம் நீங்கள் அறியக் கடமைப்பட்டதாவது: குணதிசைப் பகுதியில் உள்ள நம் மன்னர் அவர்கட்கு உட்பட்ட சிற்றரசன் வேழ நாட்டு அரசன் விஜயேந்திரன் மாமூலாகக் கட்டக் கடமை கொண்ட கப்பத் தொகையைச் செலுத்த மறுத்துள்ளான். ஆகவே, அவனைப் படை கொண்டு தாக்க வேண்டும் என்பதே நம் புவி முதல்வரின் விருப்பம். இச்செய்தியை நாம் அனைவரும் கருத்திற்கொண்டு, அரண்மனையின் ஆட்சிபீடம் அறிவிக்கும் திட்டப்படி செயற் படுவோமாக!”

பேசி முடித்தார் பெரியவர். முத்து வடமாலை பளிச்சிட்டது.

“மாமன்னர் வாழ்க!...எதிரியை வெல்வோம்!” என்று மண்ணதிர, விண்ணதிர ஒலி எழுப்பனான் பிரதமசேனாதிபதி.

பூபேந்திர பூபதி ஆத்திரம் தொனிக்க எழுந்தார். உட்புறம் நோக்கி அவரது பாதணிகள் நடைபயின்றன!

ஆய்வுக் குழு கலைந்தது.

சுற்றுமதிற் கோட்டையின் நெடு வாயிலில் காவல் இருந்த வாயிற்காப்போன் அரண்மனையின் உட்புறம் நோக்கி அடிக்கடி கண்களைப் பாயவிட்டபடி இருந்தான்.

அடுத்த சில கணங்களில், உட்புறமிருந்து வந்த வெண்புரவிச் சிப்பாய் ஒருவன் அங்கிருந்து விரைந்தேகும் தருணத்தில், “மதிப்புக்குரிய மேன்மை மிகுந்த மகாராணி அவர்களுக்குத் திடீரென்று நோவு தொடங்கி விட்டதாம். சிறுபொழுதில் குழந்தை பிறந்து விடுமாம்!...” என்று செய்தி சொன்னான்.

பதட்டம் ஊர்ந்தது.

“ஐயனே மன்னருக்கு ஆண்மகவைக் கொடுத்து அருள்செய். அம்மையப்பனே” என்று நெஞ்சம் நெக்குருகப் பிரார்த்தித்தனர் காவலாளிகள்!

2

சிருங்காரபுரி நகரத்தின் முச்சந்தித் தகவல் அறிவிப்புக் கூடம் அது.

பறை ஒலி வானைப் பிளந்தது.

படைத்தலைவன் ஒருவன் தன்னுடைய நீலத்தலைப்பாகையுடன் கம்பீரமாக அழகிய குதிரையினின்றும் இறங்கினான். கையிலிருந்த ஒலைச்செய்தியைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். ‘டம்...டம்...டமார்’ என்று பலதரப்பட்ட மேள வாத்திய ஒலிகளும் தொடர்ந்தன.

நாட்டு மக்கள் களிபேருவகையுடனும் நனிமிகு ஆர்வத்துடனும் அங்கு கூட ஆரம்பித்தனர். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், அயலவர்கள் என்ற பாரபட்சம் ஏதுமில்லாமல் கூட்டம் நெருக்க ஆரம்பித்தது.

அப்போது, அக் கூட்டத்தில் ஒர் அங்கமாக அழகான புதிய யுவதி ஒருத்தி வந்து இணைந்தாள். வந்தவள் உண்மையிலேயே அந்நாட்டுக்குப் புதியவள் என்பது அவளது விழிப்பிலிருந்தே புரிந்துவிட்டது. உச்சி வெயிலின் வெக்கை அவளுக்குப் பிடிக்க வில்லைபோலும்!

படைத்தலைவன் அக் கூட்டத்தைக் கூர்ந்து நோட்டம் விட்டான். பிறகு, இடுப்பில் செருகியிருந்த ஒரு கருவியைக் கண்களிலே இடுக்கி, அதை ஒலைத்துணி கொண்டு லாகவமாக மறைத்தபடி கும்பலைக் கவனித்தான். அவன் முகம் ஏன் அப்படி வெளிற வேண்டும்?

பிறகு தன் அரசாங்கக் கடமையை நிறைவேற்றலானான். ஒலைச் சேதியைப் பிரகடனப்படுத்தினான் :

“சிருங்காரபுரி நாட்டுப் பிரஜைகளுக்கு பெருமைமிக்க அரண்மையின் ஆட்சிக் குழு மகிழ்ச்சிப் பெருக்குடன் தெரிவிப்பது யாதெனில், நம் மாண்பு கெழுமிய மகாராணியார் அவர்கள் ஒர் ஆண்மகவைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். தாயும் சேயும் நலமாயிருக்கிறார்கள். எல்லாம் நம் மதிப்புக்குரிய மேன்மை பொருந்திய மாமன்னர் கைதொழும் எம்பிரான் கந்தவேளின் கடாட்சமேயாகும். ஆகவே, ஆண்டவனை எண்ணி மன்னர் குடும்பத்தின் வளப்பத்திற்காக ஒரு கிழமை தோத்திரம்செய்து விழாக் கொண்டாடி மகிழுங்கள்!”

அவ்வளவுதான் –

மறுகணம் குடிமக்கள் குதித்துக்கும்மாளமிட்டுக் கையொலி எழுப்பினர்.

கூட்டம் கலையத் தொடங்கிய கட்டத்தில், அந்தப் படைத் தலைவன் விசுக்கென்று விரைந்து கூட்டத்தை ஊடுருவினான்.

அதோ... அந்தப் புதிய யுவதி!...

அவள் தாவணியை இழுத்து மூடியவண்ணம், வண்ணம் காட்டி, வனப்புக் காட்டி கற்றுமுற்றும் எதையோ ஆராய்வது போலவும் யாரையோ தேடுவது போலவும் பார்க்கலானாள். அவளை நலியாமல் நெருங்கி, அவளது பூங்கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டான் படைத்தலைவன். அவள் எதிரி நாட்டின் உளவாளிப் பகுதியை சார்ந்தவளாகவே இருக்க வேண்டுமென்பது அவனுடைய திடமான கருத்து. ஆகவேதான். அப்பெண் முதன் முதலில் கூட்டத்தில் ஒண்டியதிலிருந்தே அவள்பால் ஒரு கண் பதித்து வந்திருக்கிறான் அவன். பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியுமோ?

“நீ யார்?”

“நானா, பெண்!... குமரி!....”

“ஊர்?”

“மணிபல்லவம்?”

“உண்மையாகவா?”

“ஆம்; புத்தர் வழிபாடு எங்களுக்குச் சொந்தம். பொய் பேசோம்!...”

“இங்கே ஏன் வந்தீர்கள்?”

“ஏன், உங்கள் நாட்டிற்கு யாத்ரீகர்கள் யாருமே காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று ஏதாவது தடுப்புச் சட்டம் பிரகடனம் ஆகியுள்ளதா?”

தலைவன் வாயடைத்துப் போனான். “பின், நீ மட்டுந்தானா வந்தாய்?” என்று மீண்டும் வினவினான்.

“ஆம், எனக்கு நான்தான் காவல். வேறு அச்சம் எனக்கு ஏன் இருக்கப் போகிறது?”

“பெரிய பெண்தான் நீ”

“ஊஹம். நான் சின்னப்பெண். குமரிப் பெண்!”

“ம்!”

“ஐயா, ஒரு வேண்டுகோள்!”

“சொல்லலாம்!”

“உங்கள் இளைய ராஜாவை நான் கண்டுகளிக் வேண்டும்!”

“ஏன்?”

“அப்படி ஒர் ஆவல் என்னை உந்தித் தள்ளுகிறது!”

“ஓ!”

அவள் புறப்பட்டாள். மெட்டி இசைத்தது.

“ஆமாம், உன் பெயரைச் சொல்லவில்லையே நீ?”

“நீங்கள் கேட்டால்தானே சொல்வேன்?... பெண் எதையும் வலுவில் திணிப்பது பண்பாடல்ல, எங்கள் நாட்டில்!”

“இங்கு எங்கள் நாட்டிலும் அதுதான் மரபு! ம்... உன் பெயர்?”

“நாதசுரபி!..”

“புதிதாக ஒலிக்கிறது!”

“நானே புதியவள்தான்!”

அவன் சிரிப்புடன் நடந்தான். அவளைத் தொடரச் செய்தான். குளம்புகள் ஓசைப்படுத்தின.

நடந்து வந்த நாதசுரபி அந்த ஆலமரத்தின் அருகில் சற்று நேரம் நின்றாள். அரண்மனையின் குடதிசைக் கோட்டைச் சுவர் கம்பீரமாக மின்னியது. நின்றவள், சற்றும் எதிர்பாராத வகையில் ஏனோ மயங்கிச் சாய்ந்தாள்.

நடத்திச் சென்ற குதிரையை நிறுத்திவிட்டு, தண்ணீருக்காகத் தேடினான். தெரிந்த கிழவியிடம் வேண்டி நீர் பெற்று, அக் கன்னியின் முகத்தில் தெளித்தான்.

அப்போது, மாண்புநிறை மகாராணி அழகிய சீதேவி அம்மையார் சிவபதம் அடைந்த துயரச் செய்தி கிட்டவே, படைத் தலைவன் பராக்கிரமசீலன் விம்மிப் புடைத்தபடி பறக்கலானான்!
3

ண்புசால் பழந்தமிழ் இலக்கியங்களிலே ஓர் உண்மை செப்பப்பட்டிருப்பது மாறாத நடப்பாகவும் மாற்றமுடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளன. அந்த உண்மை இதுவேயாகும்: ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்’ என்றும் பூமகளே இறையவனுக்கு நிகரானவன் என்றும் மன்னன் உயர்த்தப் பட்டிருக்கிறான். மன்னன் வழிப்படியே குடிமக்கள்!

சிருங்காரபுரி நாடு ஆனந்தக் களிப்பைச் சிந்தாக்கிப் பாடித்திளைத்திருக்க வேண்டிய இந்த இனிய நறபொழுதிலே, தெய்வம் எப்படிப்பட்ட தலைச்சுழியை எழுதி வைத்துவிட்டான். நாட்டின் அரசவைப் பாவாணர் தமிழேந்தி குறித்த பிரகாரம், அயன் கையெழுத்தை யார்தாம் அறிய வல்லமை பெற்றிருக்கிறார்கள்?

மன்னர் பூபேந்திரபூபதி, யார் என்ன தேற்றியும் மனம் தேறினார் இல்லை. ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் அவரும் அவரது அரசவையினரும் அவருடைய குடிமக்களும் முகத்தில் ஈயாடாமல், சோம்பிய தோற்றத்துடன் காணப்பட்டார்கள்!

“என் ராணியை இனி என்று காண்பேன்?...அவள் தெய்வம் போல வந்தாள். தெய்வமாக ஆகிவிட்டாள்.”அடிக்கொரு முறை அரசர் பெருமான் சித்தம் பேதலித்தவர் போன்று புலம்பினார். தம் மனைவி தன் நினைவுச்சின்னமாக விட்டுச் சென்றுள்ள ஆண்மகவின் அழுகையும் தவிப்பும் வேறு அவரைப் பாடாய்ப்படுத்தின.

யார் யாரோ தாதிகள் அரண்மனைக் குழவியைப் பராமரிக்க அமர்த்தப்பட்டார்கள். அவர்களிலே யாருடைய அன்புக்கும் அது கட்டுப்படவில்லை. விடிய விடிய விழித்திருந்தும், அதன் ஒலத்தை அடக்க முடியவில்லை, பணிப்பெண்களால்.

“நான் இந்த அவலக் காட்சிகளையெல்லாம் கண்கொண்டு கண்டு சகித்துக்கொண்டு உயிர்தரித்திருக்க மாட்டேன்!”என்று கதறினார் பூபேந்திர பூபதி. துயரம் அவரது உடலை துரும்பாக்கிற்று.

முதல் மந்திரி அழகண்ணல் புழுவாய்த் துடித்தார்.“மன்னர் பெருந்தகைக்குத் தெரியாததல்ல. நம் நாடு இன்று இருக்கக் கூடிய அபாயகரமான கட்டத்திலே, நீங்கள் இப்படி மனம் சோர்ந்து தளர்ந்தால், பிறகு, நாங்களெல்லாம் என்ன செய்வது?... எங்களைத் தேற்றுவார் யார்? எங்கள் அன்னையை இழந்த ஆறாத் துன்பத்தை மறந்து ஆறுதல் புகட்டத்தான் இளையராஜா அவதரித்திருக்கிறார் என்றுதான் நானும் மற்றவர்களும் மனம் தேறி வர முயலுகிறோம். மேலும்... எதிரி நாட்டானுக்குக் கொண்டாட்டமான நேரம் இது. நம் பகைவனுடைய நாட்டு ஒற்றர்கள் வேறு இப்பகுதிகளிலே நடமாடி வருவதாக ஐயப்படுவதாகவும் யாரோ ஒரு பெண்ணை அவ்வாறு சந்தேகித்து இங்கு சந்நிதானத்தில் அவளைக் கொண்டுவர எத்தனித்த போதில், அரசவையின் பேரிடிச் செய்தி அவனைக் கதிகலங்கச் செய்யவே, அவளை மறந்து இங்கு ஓடிவந்து விட்டதாகவும் நம் படைத் தலைவன் வருந்தினான்.

நீங்கள் மனம் தெளியக் கண்டால்தானே எனக்கு அரசாங்கக் காரியங்களில் மனம் செலுத்தி, நாட்டின் பாதுகாப்பு, படைதிரட்டல் போன்ற பணிகளைச் செவ்வனே ஆற்ற முடியும்?வரும் பௌர்ணமியன்று நம் பாதாளக் கோயிலுக்குப்பூஜை நடத்தி அண்டவெளிக் காளியை அருள் பாலிக்கும்படி வேண்டப் போகிறோம்..!”என்று உணர்ச்சிகள் துடிதுடிக்க பேசி முடித்தார்.

வெயில் இறங்கு முகத்தில் இருந்தது.

பொழுதுபோக்கு மாளிகையில் எத்தனையோ வகைகளிலே அழகும் அமைதியும் கொடிகட்டி விளையாடின. இருந்தும், வேந்தருக்கு எல்லாமே வேம்பாகக் கசந்தன. அந்தப்புரத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் காற்றில் மிதந்துவந்ததைக் கேட்டதும் மேலும் விரக்தி பெற்றார். அமைச்சர் தலைவரை நோக்கினார்: “எனக்கென்று இனி இவ்வுலகில் என்ன இருக்கிறது?” என்று நாத் தழுதழுக்கச் சொன்னார். பட்டுத் துகிலில் சுடு நீர்த்திவலைகள் தெறித்து விழுந்தன.

பசுங்கிளி ஒன்று தூரத்திலிருந்து கத்தியது.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் வாரிசு இல்லையா? அப்பால் உங்கள் ..."என்று தலைமை அமைச்சர் முடிக்குமுன்னே, அங்கே தோன்றினான் இளவரசி கன்யாகுமரி! – “தம்பி இருக்கிறான்; நான் இருக்கிறேன்!... உங்கள் குடிஜனங்கள் இருக்கிறார் கள்! இல்லையா அப்பா! மன்னர் எல்லாம் கடந்தவராக இருக்க வேண்டாமா? நான் சொல்வது தவறா அப்பா?”என்று நயமாக அழுத்திச் சொன்னாள் கன்யா குமாரி.

விலைமதிக்க வொண்ணாத இருபெருஞ்செல்வங்களும் நாட்டுமக்களும் அப்போது அவருக்கு ஒன்று சேர்ந்து ஆறுதலாகத் தோன்றினர்.

அருமைத் திருமகளின் அழகிய தத்துவப் பேச்சுகள், தந்தையின் உள்ளுணர்வைத் தூண்டின போலும்!

மெல்லிய இளங்கீற்று, வேந்தரின் உதடுகளில் இழைந்தது. “ஆமாம் என் நாட்டின் கவுரவத்தை முதலில் பாதுகாக்க வேண்டும்!... பவள நாட்டானைப் பல்லுடையச் செய்தவன் நான். கோமளபுரியைக் குடல் தெறிக்க ஓடச் செய்தவன் நான் என்பதை இந்த வேழ நாட்டான் அறியச் செய்ய வேண்டும். நேற்று இவன் அப்பன் கப்பம் கட்டினான். இன்று அவன் பிள்ளை மறுக்கிறான் திறை செலுத்த இளவட்டம் அல்லவா?” சீற்றம் செம்மை காட்டிற்று.

அப்போது, கன்யாகுமரி ‘கலகல’ வென்று நகை புரிந்தாள். தவிர்க்க முடியாத ஏளனம் நகைப்பில் இருந்தது. அதைக் கேட்டதும், மன்னர் பூபேந்திர பூபதிக்கு உள்ளத்தை என்னவோ பண்ணியது. “கன்யா ஏன் இப்படி நகைக்கிறாய் நீ?” என்று கேட்டார்.

“அப்பா!...”

“சொல்... உன் நகைப்பு என்னைப் பற்றிப் படர்ந்ததாகத் தோன்றவில்லை... என் நாட்டைப் பற்றியதாக இருக்க வேண்டு மென்று ஊகம் செய்கிறேன்!” என்று நிறுத்தினார்.

“அப்படியா? உங்கள் நாட்டினைப் பற்றி உங்களுக்கு இருக்கும் கவலை, எனக்கும் என் நாட்டைப் பற்றி இருக்கும். இல்லையா, அரசே?”

“ம்!”

முதலமைச்சர் அழகண்ணல் திணறிக் கொண்டிருந்தார்.

“வேழநாட்டான் திறை செலுத்தாததால் உங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டு விட்டது போன்று சற்றுமுன் பேசினீர்கள். வாஸ்தவம். அதேபோல், உங்கட்குக் கீழ்ப்படிந்து, ஒப்பந்தக் கப்பம் கட்டுவதால், வேழநாட்டு அரசனுக்கு மனம் நோகாதா, தன் கவுரவம் பாழ்பட்டதை எண்ணி?....”

ஆமாம்; பேசியவள் சிருங்காரபுரி நாட்டு இளவரசி கன்யா தான்!

மலைத்து விட்டார் நாடாளும் நல்லவர்.

அதிர்ந்து போனார் அறிவுக்கு விருந்து வைப்பவர்.

புரட்சியின் கனவாக அமைதியான முறுவலை அழகு சிந்த வெளிக் காட்டியபடி அப்படியே நின்றாள் இளவரசி.

“மகளே!”

“அப்பா!”

“அப்படியென்றால், வேழ நாட்டான் மீது படையெடுப்பதை நீ விரும்பவில்லையா?

“அது உங்கள் சொந்த விருப்பு வெறுப்பைப் பொறுத்த ராஜரீக விஷயம்-ராஜீய விஷயம்! அதில் குறுக்கிட நான் யார்?”

“நீ என் அருமைச் செல்வி!”

“இது நம் சொந்தபந்தம்!.”

“ஓஹோ!”

மன்னர் தீர்மானமான ஒரு பார்வையுடன் அமைச்சர் தலைவரின் திசைப் பக்கம் திரும்பினார். “தலைமை அமைச்சர் அவர்களே!. விதி இப்போது என் மகளின் உருவிலே விளையாடப் போகிறது ... ஆகவே, முன் நடந்த மந்திராலோசனையின் திட்டத்தைச் செயற்படுத்துவதில் முழுமூச்சுடன் இறங்குங்கள். என் மன அமைதிக்கும் இது நல்லதொரு திருப்பமாக அமையட்டும்!” என்று வீறுடன் மொழிந்தார்.

மீண்டும் நகைப்பொலி உதிர்த்துவிட்டு, பட்டுத் தாவணியைச் சமன் செய்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் இளவரசி கன்யாகுமரி!
4

ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளி தேவத்திருச் சந்நிதனத்தில் நின்று மெய்யுருகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள், சிருங்காரபுரி நாட்டின் இளவரசி கன்யாகுமரி.

ராஜ குடும்பத்தவர்க்கென்று தனிப்பட்ட முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது அக்கோயில், அரண்மனைக்குள்ளாகவே இருந்தது அது.

கன்யாகுமரி மட்டிலுமே அம்மனைத் தரிசிக்க வந்திருந்தாள். அவள் தன் தந்தைக்கு மட்டும் புதிராகவும்-புதிர் விளங்காத விடுகதையாகவும் தோன்றவில்லை! அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் கூட, அவள் எல்லோருக்குமே ஒரு வினாக் குறிதான்! இப்படிப் பட்டவள் அவளை ஈன்ற மகாராணிக்கு ஓர் ஆச்சரியக் குறியாகவே திகழ்ந்தாள். ‘என் மகள் பரம்பரை வழி வருகிற அசட்டுக் கொள்கைகளிலும் வெறும் சம்பிரதாயங்களிலும் துளியளவும் நம்பிக்கையற்றவள். அவள் பிற்காலத்தே ஒரு புரட்சிப் பெண் ஆவாள். ஏனென்றால், அவள்பால் பண்பட்டுள்ள மனிதாபிமானப் பண்பு அவளை இப்படி ஆக்கியுள்ளது. நாட்டு மக்களுக்கு அவள் பேச்சு என்றால் தேனும் தினைமாவும் சாப்பிட்டது மாதிரிதான்!... என்று புகழ்ந்தார்கள்.

ஆம், கன்யாகுமரி என்றால் நாட்டு மக்களுக்குத் தனித்த ஓர் ஆர்வம் தழைத்தது. “மகாராஜாவுக்குச் சந்ததி இனி எங்கே உண்டாகப் போகிறது?... ஆகவே இளவரசிதான் பட்டம் சூட்டிக் கொள்வார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், நம்நாடு புதிய பாதையில் கண் விழிக்கத் தொடங்கி விடும்!.... அவர்களுக்குத் திருமணமாகி, சகல சௌபாக்கியங்களையும் கடவுள் அருள வேண்டும்!” என்றே அனைவரும் முன்பு வாழ்த்தினார்கள். பெருமை சிறுமை பாராமல் பட்டி தொட்டிகளெல்லாம் அவள் கால் நடையாக நடந்து சென்று எழை எளியவர்களின் இடர்ப்பாடுகளைக் கண்டும் கேட்டும் அறிந்தும் உணர்ந்தும், தந்தையிடம் எடுத்துச் சொல்லி அவர்களுக்கு ஆவன செய்த நிகழ்வுகள் ஒன்றா, இரண்டா?

இப்போது நாட்டின் குடிமக்களுக்கெல்லாம் புதிய ஆனந்தம் கிளைத்தெழுந்தாலும், புதிய குழப்பமும் உண்டாகாமல் இல்லை. பிறந்துள்ள வாரிசான பட்டத்து இளவரசு எப்படி இருக்குமோ என்ற கவலை அப்போதிருந்தே அரிக்கத் தொடங்கியது.

சரி!

இளவரசி கன்யாகுமரி தன் நினைவு பெற்றாள். பலதரப்பட்ட சிந்தனைகளினின்றும் விடுதலை பெற்றாள். பூஜை முடிந்து, பிரசாதங்களுடன் அங்கிருந்து புறப்பட்டாள். ஒருத்தியாகவே வந்து ஒருத்தியாகவே திரும்பினாள். இளங்கதிர்கள் சிவக்கத் தொடங்கின.

அன்று தன் தந்தையிடம் மனத்திலுள்ளதைத் திறந்து சொன்னது, அவளுக்கே வியப்பாகப்பட்டது. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகமில்லை என்பதை அவள் அறிவாள். தமிழ் மறை தந்த பாடல்களிலே அவளுக்கு மிகவும் பிடித்தமானது ‘அன்பின் வழியது உயிர் நிலை’ என்னும் குறள் அடியாகும். அவளுக்குக் கற்பித்த கவிஞர் தமிழேந்தி, பாடலுக்காக எத்தனை எத்தனை விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்!... கோமான் குவலயத் தலைவனான தெய்வத்திற்குச் சமதையென்றால், ஆண்டவன் பாராட்டாத அந்தப் பெருமை – சிறுமை, உயர்வு – மட்டம் போன்ற ஏற்றத் தாழ்வுகளை மன்னன் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்பதே அவளது அந்தரங்கக் கருத்தாகக் கனன்றது.

இன்னொரு விவரமும் இப்போது அவளுக்கு நெஞ்சில் நின்றது. கொன்றைப் பூக்களின் அர்ச்சனையை ஏற்றபடி நின்றாள் அவள். கொண்டைச் சாமந்தி கொள்ளை வாசனையை இறைத்தது. நினைவில் குதித்த சிந்தனையை அவள் மறக்க மாட்டாள். வேழநாட்டரசன் விஜயேந்திரன் தர்ம சிந்தையுள்ளவன் என்றும் பெரிய கொடையாளி என்றும் நல்லறிவு படைத்த இளைஞன் என்றும் அவள் கேள்விப்பட்டாள். தன் தந்தைக்குப் பணிந்து முறையாய்த் திறை செலுத்த ஒப்பாததன் இயல்புதனை அவளால் ஒரளவு அங்கீகரிக்கவும் சம்மதித்தது, அவளது பெண் மனத்தின் உள்ளுணர்வு.

இளவரசியை எதிர் கொண்டழைக்க அவளது அந்தரங்கச் சேடி ஆரவல்லி வந்தாள். பிரசாதத் தட்டை வாங்கிக் கொண்டாள்.

அப்போது, அங்கு மறித்து ஓடிவந்தாள் நாதசுரபி, அவளைப் பின் தொடர்ந்து ஓடிவந்த படைத்தலைவனை ஜாடை காட்டிப் போய்விடப் பணித்தாள் கன்யாகுமரி.

நாதசுரபி “இளவரசி வாழ்க!” என்றாள். குறும்பான பார்வை, கண் நிரம்பிய அழகு ராஜகளை கொண்ட பாவனையில் அவள் விளங்கினாள்.

“ஒஹோ, நீதான் நாதசுரபியோ?” என்று மிகவும் நிதானமாக விசாரித்தாள் இளவரசி.

தன் பெயர், தன்னைப் பார்ப்பதற்கு முன்னதாகவே ராஜகுமாரிக்கு எங்ஙனம் தெரிந்தது என்ற அதிசயத்தில் விரிந்த கயல் விழிகளால் கன்யாவை அளந்தாள்.

“ஆமாம், இளவரசி!”

“சரி. நீ இங்கே வந்த காரணம்.” என்று சுருக்கிக் கொண்டாள் கன்யா. நாதசுரபி பற்றிய ஏனைய விவரங்கள் தனக்கு ஏற்கெனவே தெரியும் என்ற அளவில் இருந்தது அவள் பார்வையின் அழுத்தம்.

“நான் அனாதை. இப்போது அன்னையிழந்திருக்கும் இளையராஜாவை இமை, கண்ணைக் காப்பதுபோல நான் வளர்த்துக் காப்பாற்றுவேன்! நான் என் கன்னித்தன்மையின் மீது ஆணைவைத்துச் சொல்கிற உறுதிமொழி இது!...” என்றாள் தன்மையான தொனியில், நாதசுரபிக்கு இரைத்தது.

“அப்படியா?” என்று ஆர்வம் காட்டிய இளவரசி அவளை உள்ளே அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றாள். தங்கத் தொட்டிலில் சயனித்திருந்த இளவரசு நாதசுரபியின் ஸ்பரிசம்பட்டு விழித்து, அவளைக் கண்டு ஆனந்தக் கடலாடியது. “ஆஹா, எல்லாம் தெய்வசித்தம்” என்று குதூகலம் எய்தினாள் கன்யாகுமரி.

“ஏதோ விட்டகுறை–தொட்டகுறை என்பது போலத் தான் இருக்கிறது. இச்சம்பவம். நம்மையெல்லாம் பார்த்துப் பயந்து வீறிட்ட இச்சிசு – பச்சைமண் இந்தப் புதியவளைக் கண்டதுமே இப்படி அழகாகச் சிரிப்புக் காட்டுகிறதே!..... இவள் ஒருக்கால், சூன்யம் பயின்ற கன்னியோ?” என்று கூட தங்களுக்குள் ஒருவர் காதை மற்றவர் கடித்துக் கொள்ளலாயினர்.

தன் தந்தை தன் மீது கொண்டிருக்கும் சீற்றத்தினையும் மறந்து, பாசத்தின் மேலீட்டினால், அரசரின் ஓய்வுமனையை நாடிச் சென்று, “அப்பா, அப்பா! இளவரசுக்கு நம் குலதெய்வம் நல்ல செவிலித்தாயைக் கொண்டு வந்து காட்டியிருக்கிறது!” என்று செப்பினாள். நவரத்தினமாலை மின்னியது.

மன்னரின் கண்கள் “அப்படியா!” என்று களிப்புக் கண்ணீர் சிந்தின!...
5

சிருங்காபுரி நாட்டின் மன்னரவையும் ஆட்சிபீடமும் மிகவும் கறுசுறுப்புடன் இயங்கின. நாட்டின் ஆளுகைக்கு உயிர்ப்பான சக்திகள் எண்பேராயம், பன்னிரு அமைச்சர் குழு, சீரெழுபடையணி, நீதிமிகு நிதிக்காப்பு, உயிரொத்த நகர்ப் பாதுகாவல் போன்ற பல பிரிவுகளால் இயங்கின; இயக்கப்பட்டன.

“வேழநாட்டான் நம் எதிரி!...வடபுலம் நம் பகைவர்! இக் கருத்தை என் குடிமக்கள் யாரும் மறக்கக்கூடாது! எதிரி எப்போதும் விழிப்புடன்தான் இருப்பான்!...நமக்கு அவன் ஒரு பொருட்டல்ல! ஆனால், நாம் என்றென்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டிய காலம் அணுகிக் கொண்டிருக்கிறது. ஜாக்கிரதையுடன் இருங்கள்!” என்பன போன்ற தூண்டுதல் பிரசங்கங்கள், துண்டோலைகளின் வாயிலாக மன்னரின் வாய்மொழிகளாய் நாட்டில் எங்கெங்கும் பரவின.

மன்னர் பெருமான் இப்போது எந்நேரம் பார்த்தாலும் அந்தப்புரத்தில்தான் காட்சி தந்தார். புதிதாக வந்த நாதசுரபியோடு மிகவும் இறுக்கமாக ஒட்டிக் கொண்டது மன்னரின் குழந்தை. நல்ல செவிலித்தாயாக தன் மகனுக்குக் கிடைத்திருக்கும் நற்பேறு தெய்வப்பிரசாதமேயாகும் என்று அகமகிழ்ந்தார் அரசர்!

அத்துடன் முடிந்ததா கதை? ஊஹூம் அதிலிருந்துதான் கதையே ஆரம்பமானது.

விலகி விலகியிருந்த வேந்தர் நாளாவட்டத்தில் ஒட்டி ஒட்டி வந்துவிட்டார் – பணிப்பெண் நாதகரபியின் பக்கமாக!

இந்த விசித்திரமான மாற்றத்தை முதலில் அனுமானம் செய்து கண்டறிந்தவள், இளவரசி கன்யாகுமரிதான்!

ஒரு நாள், அவள் தந்தையிடம் தனியே பேச விழைவதாகத் தகவல் அனுப்பி இணக்கமும் பெற்றுக்கொண்டாள். அன்றொரு நாள் தான் மனம் விட்டுப் பேசிய யதார்த்தப் பேச்சைத் தவறாக எடுத்துக்கொண்ட தன் தந்தையிடம் முகம் நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வை பார்த்துப் பேச வாய்த்த சந்தர்ப்பம் வெகு சொற்பம்.

இப்போது மீண்டும் அவள் தந்தையிடம் பேசவேண்டும். இன்னும் பகுத்துக் கூறினால், அந்நாட்டின் அரசரிடம் பேச வேண்டும்! அவள் அண்டிவந்தாள். “அப்பா! புதுச் செவிலியைப் பற்றி உங்கள் கருத்தை அறியலாமா?” என்று ஆரம்பித்தாள்.

மகிழ்வின் வெள்ளம் கண்களில் விளிம்பு கட்டி நிற்க, வீற்றிருந்த மன்னர் பஞ்சணை மெத்தையில் திண்டுகளின்மீது ஆரோகணித்துச் சாய்ந்தவாறு “ம்....நாதசுரபியைத்தானே கேட்கிறாய் கன்யா?” என்று எதிர்க் கேள்வி கேட்டார் அரசர்.

“ஆமாம் தந்தையே!” பணிவுடனும் பாசத்துடனும் பதிலிறுத்தாள் அரசிளங்குமரி தொடர்ந்தாள்:

“தங்கமான பெண். ரொம்பவும் அடக்கம். அதிகப்படியான பாசம். குழந்தை அவளுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது! நீங்கள் மட்டும் அவளிடமிருந்து எட்டி இருந்துவிட மறந்துவிடாதீர்கள். என்ன இருந்தாலும், உங்கள் பணிப்பெண் நாதசுரபி! ராஜ அந்தஸ்து, கவுரவம் முதலியவற்றை நீங்கள் இந்தச் செவிலிக்காக ஒதுக்கிவிட முடியுமா? ஒதுக்கிவிடலாகுமா!?....நீங்கள் நாட்டின் காவலர். அவளோ குழந்தைக்கு மட்டுமே காவல் பெண்!...அவள் யாரோ! உங்கள் நாட்டின் கவுரவம் காற்றில் அலைந்துவிடாமல், பாதுகாத்துக் கொள்ளுங்கள்!”

உள் அர்த்தம் தொனிக்கப் பேசி முடித்தாள் கன்யாகுமரி.

அரசருக்குச் சினம் மூண்டது. “நீ தந்தைக்கே உபதேசம் செய்கிறாய். புராணத்தில் என் அப்பன் குமரனுக்கு அந்தப் பெயர் கிடைத்தது! இன்று நீ அப்பெயரைத் தட்டிக்கொள்ளப் போட்டியிடுகிறாய் போலிருக்கிறது!...கன்யா! எனக்கு யாரும் புத்தி புகட்ட வேண்டாம்!... என் கவுரவம் எப்போதுமே என்னிடம் மாசுபடாமல் தங்கிவிடும். நீ போகலாம்!...நாடு என்னுடையது!...” என்று தூக்கலான குரலில் பேசினார்.

“ஆனால், மக்கள் உங்களுடையவர்களாக எப்போதும் இருக்கமாட்டார்கள்! கவனமிருக்கட்டும் தந்தையே!...” என்று பதில் அளித்தபின் அங்கிருந்து விடைபெற்றாள் கன்யாகுமரி.

இவர்களின் பேச்சுகளை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த நாதசுரபி, சடக்கென்று திரை மறைவினின்றும் விலகிக்கொண்டு, அப்போதுதான் உட்புறமிருந்து வெளிக்கிளம்பி வருபவள் மாதிரி வந்தாள். கையில் குழந்தை சிரித்தபடி இருந்தது.

கன்யாகுமரியும் குழந்தைக்காக அனைத்தையும் மறந்தாள். அவன் நிமித்தம், தன் தந்தை புதிய செவிலியின்மீது கொண்டுள்ள மோகத்தையும் மறந்தாள். இந்நிலையைத் தவிர்க்கக் கடப்பாடு கொண்ட நாதசுரபியையும் மன்னித்து மறந்தாள்.

எதிர்ப்பட்டாள் நாதசுரபி.

இளவரசி, குழந்தையை வாங்கி கால்நாழிப் பொழுதுவரை கொஞ்சினாள்; உச்சிமோந்தாள்; முத்தமாரி பொழிந்தாள், இன்பக் கண்ணிர்விட்டாள்.'அம்மா!... அப்பாவின் எதிர்காலம் பயங்கரமாக இருக்கும் போலத் தோன்றுகிறதே!... என்று மனத்திற்குள் வருந்தினாள். தெய்வத்தை வேண்டினாள். அவள் நாதசுரபியை ஆழ்ந்து பார்த்தாள்.

“இளவரசி! தயைசெய்து என்னைத் தவறுபட எண்ணாதீர்கள். நான் விஷம் ஏதும் இல்லாத ஏழைப்பெண். என் நெஞ்சுரம்தான் என் பெண்மைக்கு–கற்பு நிலைக்குக் காப்பு. இதோ, பாருங்கள், இந்தப் பவளமாலையை உங்கள் மதிப்புக்குரிய தந்தை அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். எவ்வளவு மறுத்தும் கேட்கவில்லை...” என்று நயந்த குரலில் விவரித்து மாலையையும் காட்டினாள்.

ஆ!..இது என் அன்னையின் மாலை ஆயிற்றே!... ஐயோ, அம்மா!... என்று உள்மனத்துள் நைந்தாள் ராஜகுமாரி. பிறகு, “நீ போகலாம் குழந்தை ஜாக்கிரதை!...”என்று எச்சரித்தனுப்பினாள்.

நாதசுரபி குழந்தைக்குக் கட்டி முத்தங்கள் ஈந்தபடி உள்ளே அடியெடுத்து வைத்தாள்.

மலைத்து நின்ற கன்யாகுமரி, ‘அப்பாவின் நடத்தையை அமைச்சர் தலைவரிடம் சொல்லி, இந்தப் பெண் நாதசுரபியை வெளியேற்றிவிட வேண்டும்!’ என்று தன்னுள் திட்டம் வகுத்தபடி, ஏதோ ஓர் உறுதியுடன் தன் மாளிகைக்கு வழி நடந்தாள்!

6

ளவரசி கனயாகுமரி, தன்னுடைய ஏகாந்த மாளிகையின் மாடி வெளியில் நின்றாள். எதிர்ப்பார்வையில் பட்டுக் கம்பீரமான லாவண்யத்துடன் காட்சியளித்த நடன மகாலையும் அதனின்றும் தனித்து ஒதுங்கியிருந்த நீதிமண்டபத்தையும் இமை மூடாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள். மகாராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நாட்டுக் கொடிகள் அப்போதுதான் பறக்கத் தொடங்கியிருந்தன.

விடிந்தும் விடியாத நேரம்.

அரசாங்க சாரட்டு வண்டி பிரதம அமைச்சரைச் சுமந்து வந்ததை அவள் அறிந்தாள். இவ்வளவு சீக்கிரமாக–ஐந்து நாழிப் பொழுது கூட ஆகியிராத இந்நேரத்தில் அழகண்ணல் வந்திருந்தது அவளுக்கு விசித்திரமாகத் தெரிந்தது. ‘அந்நிய நாட்டுப் படையெடுப்பின் ரகசியக் குழு கூடவிருக்கலாம். அரசியலுக்கு அப்பாற்பட்ட பெண் பிறவி என்றல்லவா என்னை நினைத்து விட்டார் அப்பா!’ என்று தனக்குத்தானே மனம் நொந்தாள். அழகண்ணலைத் தான் சந்திக்க விழைவது பற்றிச் சேதி கொடுத்தனுப்பி சேடியைப் போய்வரச் சொல்லியிருந்தாள். அவரும் இணக்கம் காட்டியிருந்தார். ஒருவேளை, தன்னைக் காணவே தான் அமைச்சர் வருகிறாரோ என்று கூட பரபரப்பு எழுந்தது. ‘கூத்தரங்கு’க்குத் தோழியுடன் செல்ல வேண்டுமென்ற திட்டம் மாறியது.

ஆம்; அவள் கருத்து மெத்தச் சரியே.

அமைச்சர் தலைவர் அரசகுமாரியைத்தான் காண வந்திருந்தார்.

‘அரண்மனையின் ரகசியங்கள்’ என்ற அபாய அறிவிப்பில் தன் தந்தையின் மதிமயக்கத்தையும் இணைத்துவிட அவள் ஒப்பவில்லை. தனிப்பட்ட மனிதர் அல்லர் மன்னர். அவர் பொதுவானவர். ஆகவே, இதில் யாருக்கும் எப்போதும் சுயநலப் பண்புக்கே இடம் கிடையாது அவளுக்கும் இது பொருந்தும்! அதனால்தானே ரகசியமாக அவளும் பிரத்யேகமாக படைப்பயிற்சி பெற்றாளோ?

முதல் அமைச்சர் அழகண்ணல் வந்தார். இளவரசியைச் சந்தித்தார். பேசினார். அவள் நாதசுரபியைப் பற்றிய விஷயங்களை வெளியிட்டாள். கடந்த சில தினங்களாக அவளுடன் தான் நெருக்கமாகப் பழகியபோது, ஓரளவு யூகிக்க முடிந்த சிற்சில சமாசாரங்கள் குறித்தும் பேசினாள்.

எல்லாவற்றையும் தீரக் கேட்டுக் கொண்டிருந்தார் தலைமை அமைச்சர்.“இளவரசி உங்களுக்கு நாட்டினிடத்திலும் உங்களைப் பெற்றவரிடத்திலும் இயல்பாக ஏற்பட்டுள்ள கவலையும் பாசமும், இருநிலைக் கௌரவமும் காக்கப்பட வேண்டுமென்கிற பெருந்தன்மையும் எனக்கு நிரம்பவும் மகிழ்வையூட்டுவதாக இருக்கின்றன. ஆனால் முதன்முதலில் ஒன்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது எனது கடமையுங்கூட. இளவரசி அன்றொரு நாள் நீங்கள், உங்கள் தந்தையாரை எதிர்த்துப் பேசிய பேச்சு தர்க்க ரீதிக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், அரசியல் மரபுக்கு தினையளவுகூட ஒத்துவரமாட்டாததாகும்!... எதிரியின் கவுரவம் பாழ்படுமே என்பதற்காக, நம் நாட்டுக்கு வம்சவழிப் படி கட்டித் தீரக் கடமை கொண்ட கப்பத்தைக் கட்டவில்லையென்றால், அவனை – அப் பகைவனை முறியடிக்காமல் இருந்து விடலாமா? அம் முடிவுதான் சாத்தியப்படவல்லதா? உங்கள் கருத்தை அனுசரித்து ஒரு மன்னர் இருந்தால், மறுகணமே அவரது அரியாசனம் காற்றில் பறந்து விடாதா? சரித்திரத்தின் கதியைக் காப்பதுதான் அப்புறம் ஏனென்று ஆகிவிடமாட்டாதா?....நன்கு சிந்திக்க வேண்டும்!”

மேலும் தொடரலானார்:

“இளவரசி.... அடுத்த நடப்புக்கு இனி நான் வரவேண்டுமல்லவா?.... மாண்புமிகு மன்னவர்கள் குழந்தையின் வளர்ப்பை மேற்கொண்டுள்ள நாதசுரபியுடன் சற்று நெருக்கமாக இருந்து வருவதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கு முன்னதாகவே நான் அரசரிடம் இதுபற்றி எச்சரித்தேன். குழந்தைமீது கொண்ட அளப்பரிய பாசமே இந்த நிலைக்கு உரிய தக்க காரணம் என்றும், இது அந்தப்புர நட்பு என்றும் சமாதானம் சொல்லிவிட்டார். அடுத்தது, நாதசுரபி என்ற கன்னிப் பெண் வேழநாட்டு உளவாளிப் பெண்ணாக இருக்கவேண்டுமென்பதும் உங்களது ஐயப்படாகும்!... அவளுக்கு அரசர் பெருமான் பிரத்தியேகமாகக் கொடுத்த முத்துமாலையும் முத்திரை மோதிரமும் உங்கள் கட்சிக்குக் காட்சியாகவும் சாட்சியாகவும் அமைகின்றன. ஆனால்...?” அமைச்சர் தலைவரால், மேற்கொண்டு தொடரக் கூடவில்லை. இருமினார். பிறகு பச்சைத் தண்ணீர் ஒரு மிடறு பருகிவிட்டுத் தொடர்ந்தார்: “கன்யா!.. ஆனால். மன்னர் சாமான்யரல்லர் என்பதை நாம் மறந்துவிடுவது சரியல்ல. அவர் அரசியல் சூழ்ச்சியில் மாமேதை. ஒருக்கால், நாதசுரபி எதிரியின் கைப்பாவையாக இருந்து விட்டிருந்தால் என் செய்வது என்ற எச்சரிக்கையுடன் தான், அவரும் அவளைக் கண்காணிக்க ரகசிய ஆட்களை நியமனம் செய்திருக்கிறார். இன்றுவரை அவளைச் சந்தேகப்படுவதற்கான தடயம் ஒன்றுகூட–ஒன்றின் சாயல்கூட எழவில்லை; நிகழவுமில்லை. வருமுன் காவாதான் வாழ்வின் கதியைத் தமிழ்மறை புகலவில்லையா?...”

அவர் இப்பொழுது நல்லமூச்சு விடலானார்.

இளவரசியும் அமைதியுடன் முறுவல் பூத்தாள். “உங்கள் உரை எனக்கு மிகுந்த அமைதியைத் தருகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் பொன்னான காலத்தில் குறுக்கிட்டதற்காகப் பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!” என்று சம்பிரதாயப் பாவனை மிளிரச் சொல்லிவிட்டு, “வேழநாட்டின் மீது எப்போது படையெடுக்க உத்தேசம்?” என்று வினா விடுத்தாள் இளவரசி.

“இளவரசி மன்னிக்க வேண்டும். அது பற்றி நீங்கள் என்னிடம் கேட்டிருக்கக் கூடாது!...” குனிந்த தலையை நிமிர்த்தாமல் கடமைப் பண்புடன் சொன்னார் முதல்மந்திரி.

“ஓஹோ!...சரிதான்! நீங்கள், எங்கள் அரண்மனைக்கு அல்ல, எங்கள் சிருங்காரபுரி நாட்டுக்குத் தலைமை அமைச்சராகக் கிட்டியது எங்கள் நாட்டின் மாபெரும் அதிர்ஷ்டமேயாகும்! உங்களைப் பற்றி அப்பாவுக்கு மிகவும் உயர்ந்த அபிப்பிராயம்!... ஆமாம், உங்கள் புதல்வியின் திருமணம் எப்போது நடக்கப் போகிறது?....”

“போர் முடிந்ததும், இளவரசியாரின் திருமண ஏற்பாடுதான் அடுத்த கட்டம். அதன் பின்தான் என் மகளைப் பற்றி என்னால் கவலை கொள்ள முடியும்!...” இளவரசி நாணம் மீட்டி நின்றாள்.

அது தருணம், நாதசுரபி அங்கு தயங்கியபடி வந்தாள். மன்னர் அவர்களை, முதல்மந்திரி உடன் சந்திக்க வேண்டுமென்ற மன்னரின் ஆணையைப் பணிவுடன் சமர்ப்பித்துவிட்டுச் சென்றாள்!

7


சிருங்காரபுரி நாட்டின் மாமன்னர் பூபேந்திர பூபதி, பட்டுப் பீதாம்பரம் பொலிய, கம்பீரமான தேஜசுடன் வீற்றிருந்தார்.

நளினமிகு ஓய்வு மண்டபம் அது.

அங்கு சிரம் தாழ்த்திக் கரம் குவித்து வந்தார் மந்திரிகளுக்குத் தலைவர், அழகண்ணல். அமர்ந்தார், அரச ஆக்கினைப்படி. இருவரும் ஒருவரையொருவர் பொருள்செறிவுடன் ஓரிரு கணங்கள் வரை பார்த்துக் கொண்டனர்.

“மன்னர் அவர்கள் சிந்தனை வசப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது!...நான் இருக்க, நீங்கள் எதற்காக மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டும்?...இளவரசரைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டியது ஒன்றுதான் உங்களது தலையாய கடமையாகும். வரும்போது இளவரசைப் பார்த்து விட்டுத்தான் வந்தேன்.”

“அப்படியா? மெத்த மகிழ்ச்சி!”

பூபதியின் நன்றியுணர்வு, புன்னகை காட்டியது. மறுபடி தொடரலானார்: “வருகிற விசாக பௌர்ணமியன்று வேழநாட்டின் மீது நாம் படையெடுக்க வேண்டும். ஆகவே இடையுள்ள இந்த ஒரு மண்டலப் பொழுதை துளியும் வீணடிக்காமல் பயன்படுத்தி, நம் படைபலத்தைப் பெருக்குவதற்கான உத்தரவுகளையும் திட்டங்களையும் செயற்படுத்துங்கள். வேழநாட்டானுக்குப் பல பல வெளி வியவகாரங்களாம்! நாம் தாக்கப் போகும் விஷயம் இதுவரை அவனுக்குத் தெரியவே நியாயமில்லை. தெரிந்திருந்தால், எச்சரிக்கையுடன் படைக்கல வீடுகளையும் பாசறைத் திடல்களையும் பற்றி அக்கறை காட்டாமல் இருப்பானா? நம் ஒற்றர்கள் வெகு கண்காணிப்புடன் அந்நாட்டிலே உலவி வருகிறார்கள்! அடுத்து...ஆம்; இளவரசிக்கு மணம் செய்தாக வேண்டும்!...அவள் பேச்சு மட்டுமல்ல, போக்கும் புதிராக இருக்கிறது. சதா கூத்தரங்கில் ஏதோ ஆராய்ச்சி நடத்துகிறாளாம்!....வேழநாட்டரசன் விஜயேந்திரனை ஒருமுறை காண வேண்டுமென்று துடிக்கிறாளாம் நாதசுரபியிடம் சொல்லியிருக்கிறாள்!....நம் கன்யா!”

ஆதங்கமும் ஆதுரமுமாக உரைத்தார் அரசர்.

வியப்பின் அதிர்ச்சியுடன் அப்படியே பேசச் சக்தியற்று சிறுபொழுது இருந்தார் அழகண்ணல். “தாங்கள் கவலைப்படலாகாது. எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்கிறேன். இளவரசியை அவ்வளவு குறைத்து எடைபோட்டுவிடக் கூடாது மன்னர்பிரான்!. அவர்கள் விவேகமானவர்கள்!. படையெடுப்பைப் பற்றிய நாள் விவரங்களை நாம் வெகு அந்தரங்கமாகக் காக்க வேண்டும்!...” என்று கூறித் தயங்கினார்.

“நாதசுரபி என் பணிப்பெண்! தாங்கள் அறிவீர்கள்!...”

“நான் பொதுவாகச் சொன்னேன். மன்னர் பிரான் பொறுத்தருள வேண்டும்!...”

அப்போது, யாரோ கிழவன் ஒருவன் வந்தான். தாடியும் மீசையுமாக பழுத்த பழம்போலவே காணப்பட்டான். “எனக்குக் கங்காபுரி தேசம். வடக்கே... மூன்று நாள் நடக்க வேண்டும்... வித்தை காட்டிப் பிழைப்பவன்!...” என்று சொன்னான், வெளி வாசற்படியில் நின்றபடி. “இவர்களையெல்லாம் யார் உள்ளே அனுமதித்தார்கள்?” என்று சீறினார் வேந்தர்.

புதிதாகச் சேர்க்கப்பட்ட காவலாளிகளின் குறையாக இருக்கும் என்று சமாதானம் சொன்னார், அமைச்சர்.

“புதிய ஆட்களை நீங்கள் இப்போது சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது! அவர்கள் ஒருக்கால்..!”சன்னக் குரலில் எச்சரித்தார், மன்னர்பிரான்.

வித்தையாடிக் கிழவன் இருமினான். அவன் ஒதுங்கி எங்கோ நின்றான்.

“வித்தைகள் சிலவற்றை ராஜ சந்நிதியில் காட்ட இந்த ஏழைக்கு அருள வேண்டும்!”

“வித்தை பார்க்க நேரமல்ல இது!...” என்று சொல்லி தங்க நாணயங்கள் சிலவற்றை எடுத்து வீசினார் அரசர்.

ஆனால் வந்த கிழவன் ஊன்றுகோலைப் பற்றியவாறு வழி நடந்தான். தங்க நாணயங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை!

″இவனைச் சோதித்துப் பார்க்கலாமே!” என்று சொன்னார் . அழகண்ணல் இருக்கையை விட்டு எழுந்தார்.

அந்நேரத்தில், “ஐயையோ!.. இளவரசைக் காண வில்லையே..” என்று பயங்கரமாக ஓலமிட்டபடி ஓடிவந்தாள் நாதசுரபி!...

“ஆ!” என்று அதிர்ந்தார், அரசர் பெருமான்!

8


சிருங்காரபுரி நாட்டின் கோள்கள் வக்கரித்துவிட்டன போலும்! இல்லையென்றால், அடிக்கொரு துன்பமாக அந்நாட்டை அல்லற்படுத்துமா?

‘குழந்தையைக் காணவில்லை!’ என்று நாதசுரபி கூக்குரல் பரப்பிக் கதறியதைக் கேட்ட மாத்திரத்திலே, மாமன்னர் பூபேந்திர பூபதி மயங்கினார்; விழுந்தார், அடிசாய்ந்த ஆலமரமாக. “தெய்வமே!” என்று அவர் இதழ்கள் முணுமுணுத்தன.

கனகமணிக் கட்டிலிலே மன்னரைத் தாங்கிப் பட்டு மெத்தையில் படுக்க வைத்தார் அமைச்சர் திலகம். இளவரசியை அழைத்தார். அவள் வரவில்லை. அவளைத் தேடி அழைத்துவர, சேடி பறந்தாள். பிறகு, நாதசுரபியைக் கூப்பிட்டார். அவளையும் காணவில்லை.

அமைச்சர் பெருமகனுக்கு, ‘நாதசுரபியைக் காணவில்லை’ என்றதும், ஏனோ சந்தேகம் தட்டியது. இனியும் வாளாவிருப்பது தவறு என்று கருதி, குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான வழி வகைகளை செய்வதற்காக அவர் விரைந்து தன்னுடைய அலுவலகத்தை அடைந்தார். குழந்தையைத் தேடித்தான் இளவரசி போயிருக்க வேண்டும் என்ற திடம் அவருள் உதயமானது. வைரமும் நவரத்தினங்களுமாகத் திகழ்ந்த இளவரசரின் நிலையை எண்ணிய போது அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. பெற்ற தந்தையின் நிலைக்குக் கேட்கவா வேண்டும்!

பூபேந்திர பூபதி கண் மலர்ந்தார். உடனே “கண்ணே! என் ராஜா!” என்று சிறு பாலகனாக மாறிக் கதறினார். கண்ணீர் பெருகிற்று. மீனாவதி ஆறு மடை உடைந்துவிட்டதோ, மகளை நினைந்து மனத்தை அலட்டினார். இளவரசியை எங்கு தேடியும் காணவில்லை என்றும், குழவியைத் தேடித்தான் அவள் போயிருக்க வேண்டும் என்றும் கருதி ஓரளவு அமைதியைச் சேகரம் செய்து கொள்ள முனைந்தார். பணிப்பெண்கள் கொணர்ந்த உணவில் ஒரு துளியைக் கூட தொடவில்லை அவர். நாதசுரபியையும் காணவில்லை என்றும் அறிந்தார்.அவருக்கு ஏனோ இதுவரை தோன்றாத சந்தேகம் இப்போது நாதசுரபி மீது ஏற்பட்டது. ஒற்றர்கள் ஊரெங்கும் பறந்த செய்தி கேட்டார். படைகள் பல திசைகளிலும் பிரிந்து சென்ற விவரமும் காதுகளில் விழுந்தது. தொட்டிலில் கண்வளர்ந்த குழந்தை எப்படிக் காணாமல் போனது? யாராவது எதிரிகளின் சூழ்ச்சியாகவும் இருக்குமோ?. ஏதும் புரியவில்லை வேந்தருக்கு “நாதசுரபியை முதலில் எங்கிருந்தாலும் தேடிப் பிடியுங்கள்!” என்று ஆக்கினை பிறப்பித்தார்.

திண்டுகளில் சாய்ந்தபடியே சோக பிம்பமாக இருந்தார் கோமான்.

வெயில் சுட்டெரித்தது.

ஓடோடி வந்தாள் இளவரசி கன்யாகுமரி. அவள் கையில் சாட்டை; இடுப்பில் கூர்வாள்! எதிரே வெண்புரவி!

“மகளே!”

“அப்பா வேழநாட்டரசன் இன்று அந்தி அணையும் பொழுதில் நம் நாட்டின் மீது திடீர்ப் படைஎடுப்புச் செய்யப்போகிறான்!... ஜாக்கிரதை!....நான் இளவரசுக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடிக்காமல் இனி இங்கு வர மாட்டேன்!” என்று சூளுரைத்தாள். பிரிந்தாள். குதிரை காற்றாய்ப் பறந்தது.

மறுகணம், தலைமை அமைச்சர் வரவழைக்கப்பட்டார். மண்டலப் பேரவை அவசரமாகக் கூடியது. படைத் தலைவர்கள் குழுமினர். -

ஆராய்ச்சி மணி அவசரமாக ஒலித்தது.

சிருங்காரபுரி நாடு திமிலோகப்பட்டது!

அரண்மனையின் நாற்புறக் கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள், அம்பாள் கோயில், மீனாவதி ஆறு, பன்னெடு வாசல்கள் இருபெரும் பாசறைகள் எங்கெங்கும் படை வீரர்கள் புத்துணர்ச்சி எய்தி அணிவகுத்து நின்றார்கள்.

இப்படிப்பட்ட எச்சரிக்கையுடன் சிருங்காரபுரி நாடு இருக்குமென்று வேழநாடு எங்ஙனம் எதிர்பார்த்திருக்க முடியும்? எதிர்பாராத வகையில் தாக்கி விடலாமென்று மனப்பால் குடித்த வேழ நாட்டு அரசன் விஜயேந்திரனுக்கு மாலையில் சிருங்காரபுரி நாட்டின் எல்லையிலே ஏமாற்றம்தான் காத்திருந்தது. அங்கங்கே ரகசியமாக ஒளிந்திருந்த வீரர்கள் எதிரிகளை மிகுந்த கண்காணிப்புடன் தாக்கினர். வேழ நாட்டுடன் அண்டை நாடான அழகாபுரியும் ரகசியக் கூட்டுச் சேர்ந்திருந்தது.

இளவரசி கன்யாகுமரி தன் நாட்டின் படைக்குத் தலைமை ஏற்றாள். ரகசியப் பயிற்சி எப்படி ஆபத்துக்கு உதவிவிட்டது!... மன்னருக்குப் பதிலாக மன்னரின் மகள்!

வேழ நாட்டு வேந்தன் விஜயேந்திரனே தன் நாட்டுப் படைக்குத் தலைமை தாங்கினான். இளமைப் பொலிவுடன் அவன் திகழ்ந்தான். இப்படிப்பட்ட இக்கட்டான கட்டத்தில்தான் கன்யாகுமரி – விஜயேந்திரன் சந்திப்பு நிகழ வேண்டுமென்று விதி முடிவு கட்டியதோ?

சிருங்காரபுரி நாட்டின் இளவரசியும் வேழநாட்டின் இளவரசனும் நேருக்கு நேர் போரிட்டனர். இருவருடைய வாட்களும் மின்னல்களாகி மோதின, ஜோடிக் கண்கள், ஒருமித்த வைராக்கியத்துடன் இரு தரப்பிலிருந்தும் கிளைபரப்பிச் சமர் புரிந்தன. இரு பகுதிக் குதிரைகளும் எம்பி எம்பிக் குதித்தன.

மறுகணம்:

“ஆ!”என்றலறினான் விஜயேந்திரன்!

விழுப்புண்களின் நோவையும் மறந்தாள் இளவரசி. திரும்பினாள். “வேழநாட்டு அரசனின் முதுகில் யார் இப்படிக் குத்துவாளை கோழைபோல வீசியது?... ஐயோ, என் நாட்டுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கி விட்டார்களே! யுத்த தர்மத்திற்கே களங்கம் கற்பித்துவிட்டார்களே!”

விஜயேந்திரனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டாள் கன்யாகுமரி!

இரு தரப்புப் படைகளும் இந்த எதிர்பாராத முடிவின் திருப்பத்தில் வாய் அடைத்து நின்றனர்.

“அம்மா!”

கன்யாகுமரி விசை பாய்ச்சித் திரும்பினாள்.

அங்கே –

முதுகில் பாய்ந்த வாளுடன் நாதசுரபி தரையில் சாய்ந்து கிடந்தாள் “இளவரசி என்னைப் பற்றி நீங்கள் தொடக்கத்திலேயே சந்தேகப்பட்டீர்கள். அது சரியே! நான் வேழ நாட்டின் வேவுகாரியாகத்தான் உங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டேன். ஆனால், இளவரசுக் குழந்தை என்னைப் பைத்தியமாக்கியது. நான் அதன் அடிமையானேன். இந்நிலை அறிந்து, வேழ நாட்டரசர்–இந்த விஜயேந்திரன் எனக்கு அவப்பெயர் சூழச் செய்யவே, குழந்தையை ஆள் வைத்து எடுத்துச் செல்லச் செய்து விட்டிருக்கிறார். குழந்தை இல்லாமல் அங்கு வர முடியாதென்று எண்ணி, வேழநாடு சென்றேன். அபகரித்து வந்த குழந்தையை யாரோ வழிமறித்துப் பறித்துச் சென்று விட்டார்களாம்!... என்னால் நம்ப முடியவில்லை!...என் வஞ்சனைக்கு வேழ நாட்டான் யாரோ ஒருவன் பரிசளித்தான். வேழ நாட்டரசனின் வஞ்சனைக்கு, நானும் அவருக்கு பரிசு கொடுக்க வேண்டாமா, கொடுத்து விட்டேன்!. அம்மா! என்னை மன்னியுங்கள்! என் கூத்து முடிந்து விட்டது!...”

நாதசுரபியின் விழிகள் நீருடன் மூடின, எதிர்பாராத வகையில்!

இளவரசி என்னவோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் நாதசுரபியின் வாழ்வு, கதையாக முடிந்துவிட்டதே! வேழநாட்டரசன் விஜயேந்திரன் விம்மினான்:

“இளவரசி!.... இருவகையில் நான்தான் யுத்த தர்மத்தை மீறியிருக்கிறேன். நாதசுரபியை ஏவினேன். அவள் முதுகில் என் நாட்டானே வாள் வீசினான். இப்போது என் நாட்டைச் சார்ந்த நாதசுரபியே என் முதுகில் வாளைப் பாய்ச்சினாள். இரு தப்புக்களும் என் நாட்டினையே சேரும்!...”

மனிதாபிமானம் நெகிழக் கண்களைத் திறந்தாள் இளவரசி கன்யாகுமரிக் கண்ணீர் மாலை மாலையாக வழிந்தது.

“அரசே! இப்போது நாம் பிரிவோம், உங்கள் உடல் நலம் பேணுங்கள். மீண்டும் ஒரு தினம் பகிரங்கமாக நாள் நிர்ணயம் செய்து நாம் இருவருமே மீண்டும் போரிடுவோம்!... எந்த அரசிலும் நிகழாத புதுமையாக இது இருக்கட்டும்!...”

அப்போது அங்கு-யுத்த களத்தில், சிருங்காரபுரி நாட்டின் அரசர் பூபேந்திர பூபதி அமைச்சர் புடைசூழத் தோன்றினார்.

மயங்கிச் சோர்ந்து இருந்த வேழ நாட்டரசன் மெல்லமெல்ல விழி திறந்தான். இளவரசியின் மடியில் தலை சாய்த்துக் கிடப்பதை அப்போதுதான் அறிந்தவனாக, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். “இளவரசி! இப்போது நாம் போரை மீண்டும் தொடங்கலாம்... எனக்கு வீர மரணமே பிடிக்கும்!” என்று வீறு பூண்டு கர்ஜித்தான்.

இளவரசி விம்மினாள்!

கோல நிலவு விளையாடியது.

சிருங்காரபுரி நாட்டின் வேந்தர் பூபேந்திரபூபதி வாய் திறந்தார். “முதலில் விஜயேந்திரனின் புண்ணை ஆற்றுவது அவசியம்,” என்று சொல்லி, தம் நாட்டு அரண்மனை வைத்தியரை வரவழைக்கும் படி ஆணையிட்டார்.

பாசறையின் ஒய்வுமனையில் வேழ நாட்டரசன் விஜயேந்திரன் இடம் பெற்றான். புண் வலி லேசாகக் கட்டுப்பட்டது. நித்திரை வசப்பட்டான்.

“இதோ வருகிறேன்!” என்று விளித்து விட்டுக் குதிரையில் ஏறினாள் இளவரசி கன்யாகுமரி.

அரைநாழிப் பொழுது அமைதிப் புலரியில் கழிந்தது.

அப்போது–

அன்றொரு நாள் சிருங்காரபுரி நாட்டின் அரண்மனையில் வித்தையாடிக் கிழவன் ஒருவன் வந்தானே, அவன் அங்கு சுற்றுமுற்றும் விழித்தபடி நின்றான்!

அதற்குள், “இதோ இவன்தான் மன்னர்பிரானின் குழந்தையை என்னிடமிருந்து ஏமாற்றிப் பறித்தவன்” என்று ஓடிவந்த வேழநாட்டுச் சிப்பாய் அக்கிழவனை உடும்புப் பிடியாகப் பற்றினான்.

மாமன்னர் பூபேந்திர பூபதி எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அவர் கை இடுப்பிலிருந்த குத்துவாளை எடுத்தது.

அதற்குள், வித்தையாடிக் கிழவன் மேலங்கியால் மறைத்து வைத்திருந்த இளவரசனை மன்னர் பெருந்தகையாம் பூபேந்திரபூதியிடம் சமர்ப்பித்தான் “ம்!...இனி என்னைத் தாராளமாக் குத்துங்கள் எதிரியரிடமிருந்து உங்கள் குழவித் தங்கத்தை நான் காப்பாற்றியதற்கு உங்கள் பரிசு இதுவென்றால், அதை ஏற்க நான் கடமைப்பட்டவனில்லையா?....ம்.எடுத்த கத்தியை உறையில் போடக்கூடாது ஊம்!..” என்று விம்மலானான் வித்தையாடிக் கிழவன்.

மாமன்னர் விழியில் நீர் சோர, “என்னை மன்னியுங்கள். ஆத்திரம் என் அறிவைச் சிறுநேரம் மறைத்து விட்டது” என்று கெஞ்சிக் கை கூப்பினார். குழந்தை சிருங்காரபுரியின் இளவரசாக மட்டுமல்லாமல், விளையாட்டுடைய தெய்வமாகவும் சிரித்தது!

அத்தருணம்,"அப்பா.என்னையா நீங்கள் வணங்குவது?” என்றபடி, அங்கு இளவரசி கன்யாகுமரி நின்றாள்!

தாடி - மீசை, உடுப்புகள் தரையில் சிரித்தபடி கிடந்தன.

வேந்தர் பூவேந்திர பூபதி “ஆ!என் மகள்!” என்று அதிசயப்பட்டார். அருமை திருமகளை உச்சி மோந்தார், அன்பு சிலிர்த்தது!

சுய ஞாபகம் மீண்ட வேழநாட்டு அரசன், "நேற்று என் அரண்மனையில் இதே வேடத்தில் வந்ததும் இளவரசிதானா?... என் சூழ்ச்சியை உங்கள் சூழ்ச்சி மிஞ்சி விட்டதே!. படைப்பயிற்சியுடன் கூத்துக் கலையிலும் பலகாலம் பயிற்சியோ?... மகிழ்வுதான்!... சரி! எழுந்திருங்கள். நாம் போர் துவக்கலாம்!. இன்றைய பொழுதே நம் இருநாட்டின் விதியையும் நிர்ணயிக்கட்டும்!” என்று அலறியவாறு, மறுபடியும் சுயகௌரவ வெளியுடன் எழுந்தான். விஜயேந்திரனின் கைகள் இடுப்பு வாளை உருவின!

இளவரசி சிரித்தாள் ; சிரித்துக் கொண்டே இருந்தாள்!

சிருங்காரபுரி மாமன்னர் பூபேந்திர பூபதி அதிர்ந்தார்! அவரது தீட்சண்யப் பார்வை, வேழநாட்டின் மன்னன் விஜயேந்திரனையும், சிருங்காரபுரி நாட்டின் இளவரசி கன்யாகுமரியையும் மாறிமாறி-மாற்றி மாற்றி எடை போட்டிருக்க வேண்டும்!

விஜயேந்திரன், தன் முதுகில் ஏற்பட்டிருந்த ரணத்தின் வலியையும் மறந்து, வாளும் கையுமாகப் போரிட ஆயத்தமாகி தலை நிமிர்த்தி நின்றான்!

இளவரசி கன்யாகுமரியோ, விதியாகச் சிரித்தவாறு நிற்கிறாளே?

ஓர் அரைக்கணம், பேய்க் கணமாக ஊர்ந்தது.

மறு இமைப்பிலே–

உருவிய வாளுடன் கம்பீரமாகக் காட்சியளித்தாள் இளவரசி.

“போரிடத் தொடங்குவோமா, வேழநாட்டின் விஜயேந்திர மன்னரே?” என்று வினவி, மீண்டும் விதியாகச் சிரித்தாள்.

“ஒ!” என்றான் விஜயேந்திரன்.

மறுகணம்–

இரு தரப்பிலிருந்தும் வீறுகொண்டு புறப்பட்ட வாட்கள் இரண்டும் மின்னல் பிழம்புகளாகிச் சமமான வல்லமையுடன் ஒன்றையொன்று முட்டி மோதின!

மாமன்னர் பூபேந்திர பூபதி மேனி சிலிர்த்தார். விழிகளில் கண்ணிர் தளும்பத் தொடங்கியது. “ஆண்டவனே மன்னன் விஜயேந்திரனும் இளவரசி கன்யாகுமரியும் ஒருவருக்கு மற்றவர் துளியும் விட்டுக் கொடுக்க மனமின்றி, தங்கள் தங்கள் நாட்டின் மீது கொண்ட பாசத்தை முன் நிறுத்திச் சரிசமானமான ஆக்ரோஷத்துடனே போரிடத் தொடங்கி விட்டார்களே?... வாட்போர் நடத்தத் தொடங்கிவிட்ட விஜயேந்திரன்–கன்யாகுமரி இருவரில் வெற்றி பெறுவது யாராவது ஒருவராகத்தானே இருக்கமுடியும்? அப்படியென்றால், மற்றவர் தோல்வியைத் தழுவ நேரும் அல்லவா?– வேண்டாம் இந்த வாட்போர்ச் சோதனை!. ஆதிபகவனே! அலகிலா விளையாட்டுடைய ஆண்டவனே!–என்னுடைய பாசக்கனவை மெய்ப்படுத்திப் பலிக்கச் செய், அப்பனே!? நெஞ்சம் நெக்குருகி அஞ்சலி செய்தார். மறு இமைப்பில், மெய் சிலிர்க்க விழிகளைத் திறந்தார்: “போர் வேண்டாம் போரை நிறுத்துங்கள்!” என்று ஆணையிடலானர்!

அந்நேரத்தில்–

"தந்தையே!” என்று வீறிட்டு அலறியவளாக மண்ணிலே மயங்கிச் சாயப்போன இளவரசி கன்யாகுமரியைத் தன்னுடைய பாசமும் நேசமும் கொண்ட இருகைகளாலும் ஆரத்தழுவிப் பற்றிக் கொண்டான், வேழ நாட்டரசன் விஜயேந்திரன்!

"அன்புத் தெய்வமே! மகளே கன்யா!”

மாமன்னர் பூபேந்திர பூபதி விம்மினார்; சுடுநீர்த் துளிகள் முடிசூடிச் சிதறின!

சிந்திச் சிதறிய பாசத்துளிகளின் தேவாமிர்தத்தை உடலும் உள்ளமும் உணர்ந்ததும், கனவு கண்டு விழிப்பவள் போன்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள், சிருங்காரபுரி இளவரசி கன்யாகுமரி. "தந்தையே! என்ன ஆயிற்று எனக்கு ? நான் இவ்வளவு நாழி வேழநாட்டின் மடியிலே ஏன் கிடந்தேன்?. என்னவோ நினைத்தேன்; தலை சுற்றத் தொடங்கியது. அவ்வளவுதான் தெரியும் எனக்கு!” என்று கூறியவளாகத் தந்தையின் மேனியில் சாய்ந்தாள். மறு நொடியில் சிலிர்த்துத் தலையை நிமிர்த்தினாள்: "வேழநாட்டு மன்னவா! எடுங்கள் உங்கள் வாளை!" என்று வீறு கொண்டு முழங்கினாள்; கண்பார்க்க மண்ணிலே புரண்டு கிடந்த தன்னுடைய உடைவாளை விரைந்தோடி எடுத்தாள், கன்யாகுமரி!

“இளவரசி வாழ்க!” என்று பாசமும் நேசமும் வீரமுழக்கமிட, ஏந்திய வாளுடன் தோன்றினான் விஜயேந்திரன்.

“மீண்டும் போரிடத் தொடங்குவோமா?”

“நான் தயார்!"

விஜயேந்திரன், கன்யாகுமரி இருவரின். இரு ஜோடி விழிகளும் ஈரம் சொட்டச் சொட்ட, ஆரத் தழுவிக் கொண்டன!

வேழநாட்டின் அரசன் விஜயேந்திரனின் வீரவாள், தன்னம்பிக்கையோடும் தன்மானத்தோடும் சுழன்றது.

அதே தன்மானத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தன்னுடைய வீர வாளைச் சுழலவிட்டாள் இளவரசி கன்யாகுமரி!

இருதரப்பின் வாள்களும் ஒன்றையொன்று தன்னம்பிக்கையோடும் தன்மானத்தோடும் சந்தித்துக் கொண்ட நேரத்தில்–

“நில்லுங்கள் இருவரும் அப்படியே நில்லுங்கள்!”

ஆமாம்; சிருங்காரபுரியின் மாண்புமிக்க–மேன்மைதங்கிய மாமன்னர் பிரான் பூபேந்திர பூபதி அவர்கள்தாம் ஆணையிட்டார்!– ஆணையைத் தொடர்ந்து, எதிர்ப்புறம் நோக்கிக் கைகளை உயர்த்தி அடையாளம் காட்டினார். வெற்றிமுரசும் விண் அதிரவும் மண் அதிரவும் வீர முழக்கம் செய்தது!

வேழநாட்டரசன் விஜயேந்திரனும் சிருங்காரபுரியின் இளவரசி கன்யாகுமரியும் புது நிலவும் புன்னகையுமாகப் பார்த்துக் கொண்டனர்!

மாமன்னர் பூபேந்திர பூபதி மறுபடி பேசத் தொடங்கினார்:

“விஜயேந்திர மன்னரே!...இளவரசி கன்யாகுமரியே!...நீங்கள் இருவருமே, நடக்காத இந்தப் போரில் வெற்றிபெற்று விட்டீர்கள்!.. ஒருவருக்கு மற்றவர் துளியும் விட்டுக் கொடுக்காமல், சரி சமானமான தன்னம்பிக்கையுடனும் தன்மானத்துடனும் உருவிய உங்கள் வாள்களை விளையாடச் செய்த அந்தத் துணிச்சலே உங்கள் இருவருக்கும் வெற்றிவாகையைச் சூட்டிவிட்டது!... ஒன்று பட்ட உங்கள் இருவரின் உள்ளக்காதலையும் மறந்து, நீங்கள் இருவரும், நாட்டின் தன்மானம் காத்திடவும் தன்னம்பிக்கையுடனே போரிடத் தொடங்கிய அந்த மகத்தான மாண்புதான் உங்கள் இரு வருக்கும் சரிசமமான வெற்றியை வழங்கிவிட்டது!...”

மாமன்னருக்கு மூப்பின் தளர்ச்சியால் மூச்சிரைத்தது. மீண்டும் பேச்சைத் தொடரலானார்:

“விஜயேந்திரமன்னரே! நீங்கள் திறை செலுத்தாததால், என் கவுரவம் பாதிக்கப்பட்டுவிட்டதாக நான் சொன்னேன்!. அதற்கு என் அருமை மகள் இளவரசி கன்யாகுமரி என்ன பதிலிறுத்தாள் தெரியுமா?– ‘உங்களுக்குக் கட்டுப்பட்டுக் கப்பம் கட்டுவதால், வேழநாட்டின் அரசனின் கவுரவம் பாழ்பட்டதாக அவர் பொன்மனம் நோகாதா?' என்று என்னையே எதிர்த்துக் கேட்டாள். அவளுடைய மனித நேயம் மிகுந்த அந்தப் பேச்சு, அவள் உங்கள்மீது கொண்டிருந்த அளப்பரிய பாசத்தையும் நேசத்தையும் சுட்டிக்காட்டி விட்டதே?....என் மனமும் திறந்தது; என் கண்களும் திறந்தன!.. ஆகவேதான், நீங்கள் இருவருமே நடக்காத இந்தப் போரிலே வெற்றி பெற்றுவிட்டதாகத் தீர்ப்புக் கூறினேன்!...”

சிலகணங்கள் மௌனம் காத்தபின், சிருங்காரபுரி மாமன்னர் பூபேந்திர பூபதி மனம் திறந்து திரும்பவும் பேசலானர்:

“அருமைத் திருமகளே, கன்யா!... நான் மண்ணை நேசித்தேன்; நீயோ, மண்ணை நேசித்ததுடன், மனிதர்களையும் நேசித்தாய்! அதைவிடவும், சிறப்பாகப் பகைவனையும் நேசிக்கத் தலைப்பட்டாய்! அந்த ஒப்பற்ற மனிதாபிமானமும் மனிதநேயமும் உனக்கு ஒப்புயர்வற்ற ராஜகிரீடத்தைச் சூட்டிவிட்டனவே!.. நான் புதுப்பிறவி எடுத்துவிட்டேன், இப்போது!... நடக்காத இந்தப் போரிலே, இருவருமே வெற்றி பெற்றுவிட்டீர்கள் அல்லவா? – ஆகவே, விரைவிலேயே உங்கள் இருவருக்கும் சிருங்காரபுரி நாட்டின் இளவரசுக் குழந்தை புடை சூழ்ந்திடத் திருமணம் செய்துவைக்கப் போகிறேன்!... 'ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்னும் அற்புதத் தத்துவம் உயிர் வாழ்ந்திட, என் எஞ்சிய நாட்களையும் கழிப்பேன்!...என் இலட்சியக் கனவு, வருங்காலத்தில் முழு வீச்சுடன் செயற்படுமெனவும் நான் நம்புகிறேன்!...என்னை நம்புவீர்களா, விஜயேந்திர மன்னரே!... அருமைத் திருமகளே, கன்யா!.உன் தந்தையை நம்புவாயா?...”

கண்ணீர்த்துளிகள் விளையாடின.

“மன்னர் பிரானே ! நீங்கள் மகத்தான மாமன்னர்! நான் மட்டுமல்ல, உங்கள் தெய்வத் திருமகளும் பாக்கியம் செய்தவளே!” என்றார், வேழநாட்டு அரசர் விஜயேந்திரன்; ஆனந்தக்கண்ணிர் ஆனந்தமாகச் சிரித்தது! “ஆமாம், தந்தையே!...நான் மிகமிகப் பாக்கியம் செய்தவள்!.. என் மனம் ஆனந்தக் கடலாடுகிறது, தந்தையே!.. எங்கள் காதலுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்ட உங்கள் அன்பும் கருணையும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்! நான் கொடுத்து வைத்தவள்! அகவேதான், என் மனம் கவர்ந்த காதலராம் வேழ நாட்டரசரை நான் எடுத்துக் கொள்ளவும் என்னால் முடிந்தது!..."

அருமைத் தந்தைக்குக் கரங்கூப்பி நன்றி தெரிவித்தாள் இளவரசி கன்யாகுமரி!

அந்திப் பூந்தென்றல் ஆனந்தம் பொங்கிட விளையாடியது.

வெற்றி முரசுகள் வீர முழக்கம் செய்தன!

மக்கள் வெள்ளம் அணைகடந்தது.

“சிருங்காரபுரி நாட்டின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உகந்த மாட்சிமை தங்கிய மாமன்னர் பூபேந்திர பூபதி அவர்கள் வாழ்க பல்லூழி!...”

“சிருங்காரபுரியின் மாண்புநிறை இளவரசி கன்யாகுமரி வாழ்க பல்லாண்டு!”

"வேழிநாட்டு வேந்தர் மேன்மைமிக்க விஜயேந்திரன் வாழிய, வாழியவே!...”

மங்கள நல்வாழ்த்துகள், மங்களகரமாகவே திக்கெட்டும் ஒலித்தன; எதிரொலித்தன!...

அதோ, சிருங்காரபுரி நாட்டின் விலைமதிப்பில்லாச் செல்வம், குழந்தைத் தெய்வமாக – தெய்வக் குழந்தையாகச் சிரித்துக் கொண்டே இருக்கிறது!

(முற்றும்)