அனந்தாயி கதை

ஸ்ரீவைகுண்டத்தில் அறுபது பிராமணர்கள் ஒரு தெருவில் வாழ்ந்து வந்தார்கள். அந்தப் பிராமணர்களின் தலைவனைப்போல விளங்கிய அரிகிருஷ்ணன் என்பவன். அவன் அனந்தாயி என்பவளை மணந்து இன்பமுடன் வாழ்ந்து வந்தான். பல நாட்கள் அவனுக்கு குழந்தையில்லாமல் இருந்தது. அதனால் நொந்த அனந்தாயி மகாதேவனிடம் இரங்கி முறையிட்டாள். கோவிலில் தவம் இருந்தாள். இரங்கி வேண்டினாள். இறைவன் அனந்தாயிக்கு இரங்கினான். அவள் கர்ப்பமுற்றாள். மருத்துவச்சியை அழைத்து வாருங்கள் எனக் கணவனிடம சொன்னாள்.


தோழிகள் வள்ளியூரில் மணிமாலை பிள்ளை என்பவள் இருக்கிறாள். அவள் எல்லா மருத்துவமும் கற்றவள். அவளை அழைத்து வாருங்கள் என்றனர்.


அரிகிருஷ்ணன் மருத்துவச்சியை அழைக்க அழகப்பன் என்ற ஒட்டனை அனுப்பினான். ஒட்டன் வள்ளியூருக்குச் சென்று மருத்துவச்சியை அழைத்து வந்தான். மருத்துவச்சி அனந்தாயியைக் கண்டதும் நான் வரும்போது நல்ல சகுனங்களைக் கண்டேன். நீ அஞ்சாதே , உனக்கு நல்லது நடக்கும் என்றாள்.


மருத்துவச்சி சாத்திரத்தில் படித்த வைத்தியத்தைச் செய்தாள். அனந்தாயியின் உடம்பில் எண்ணெய் தேய்த்தாள். அனந்தாயி 'அடிவயிறு நோகுது ' என ஓங்காரமிட்டாள். சில நொடிகளில் பெண்மகவொன்றையும் பெற்றாள். அரிகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் எல்லோருக்கும் சர்க்கரை வழங்கினான். மருத்துவத்துக்குப் பரிசுகள் பல கொடுத்தான்.


உறவுப் பெண்களும் பிறரும் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டினார்கள். குழந்தைக்குக் கிருஷ்ணத்தம்மை எனப் பெயரிட்டான். குழந்தைக்கு சாதகம் கணித்த சோதிடன் குழந்தைக்கு சர்ப்பதோஷம் இருக்கிறது. இது லேசில் விடாது. இதைப் போக்க உபாயம் உண்டு. இந்தப்பிள்ளை வளரும் வீட்டில் ஒரு கீரிப்பிள்ளை வளர்த்தால் போதும் என்றான். அரிகிருஷ்ணனும் சோதிடன் கேட்டதைக் கொடுத்தான். கீரியைப் பிடிக்க நண்பர்களுடன் மலைக்குச் சென்றான்.


அனந்தாயி கணவன் பிடித்து வந்த கீரியைக் கவனமுடன் வளர்த்தாள். கீரி அவள் வீட்டில் ஒரு குழந்தையாகவே வளர்ந்தது. ஒருநாள் அனந்தாயி கீரிக்குக் கீரை பறிக்கக் காட்டுக்குச் சென்றாள். அந்த நேரத்தில் வீட்டில் கிருஷ்ணத்தம்மை மட்டும் தனியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நீண்ட சர்ப்பம் வீட்டினுள் நுழைந்தது. கீரி அதைப் பார்த்தது. பாம்பைக் கடித்தது. கண்டதுண்டமாக்கியது. கீரியின் முகமெல்லாம் ரத்தம். பாம்பைக் கொன்ற செய்தியைச் சொல்ல தோட்டத்துக்கு வந்தது கீரி.


கீரி அனந்தாயியைக் கண்டு வாட்டத்துடன் நின்றது. அதன் வாயில் வழியும் குருதியைக் கண்ட அனந்தாயி தன் புதல்வியைக் கீரி கொன்றுவிட்டது என்று எண்ணி கோபம் கொண்டு கீரியைத் தன் கையிலிருந்த கத்தியால் வெட்டினாள். வெறியுடன் காலால் மிதித்தாள். கண்டதுண்டம் ஆக்கினாள். பின் வீட்டிற்கு வந்தாள்.


அனந்தாயி வீட்டிற்கு வந்தபோது கண்ட காட்சி வேறு. அவளது குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. அருகில் பாம்பு ஒன்று வெட்டுப்பட்டுக் கிடந்தது. அனந்தாயிக்கு நடந்தது புரிந்தது. பாவி நான் என்ன செய்துவிட்டேன் ! " எனப் புலம்பினாள். அலைக்கழிந்தாள். மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள். தன் தவறைக் கணவனிடம் சொன்னாள்.


அனந்தாயி அன்பரே நான் பெரும்பாவம் செய்துவிட்டேன். என் பாவம் தீர நான் தீர்த்தயாத்திரை செல்லவேண்டும் என்றாள். அதைக்கேட்ட அரிகிருஷ்ணப் பார்ப்பான் பெண்ணே நீ யாத்திரை செல்லவேண்டாம் ' கணவன் உயிருடன் இருக்கும்போது மனைவி யாத்திரை செல்வது வழக்கமில்லையே. உனக்காக நானே யாத்திரை போகிறேன என்றான்.


அரிகிருஷ்ணப் பார்ப்பான் மனைவியிடம் கூறியபடி தீர்த்த யாத்திரைக்குச் சென்றான். அவனும் அவனது தோழர்கள் ஏழு பேரும் சென்றனர். நடந்தனர். நவரத்தினவிளை கடந்து மாமுனிவர்கள் வாழும் அருவிக்கரையை அடைந்தனர். பாவனாசத் தீர்த்தக்கரை வந்தனர். பரமனைத் தொழுதனர். பாவங்கள் தீரத் தீர்த்தமாடினர்.


தெரியாமல் செய்த குற்றத்தைத் தெய்வமே பொறுப்பீர். தேறியே தீர்த்தம் டுகிறோம் என்று சொல்லி தீர்த்தம் ஆடினர். பின் மனம் தெளிந்து கரை ஏறினர். காட்டுவழி வீட்டிற்கு நடந்தனர். நேரமோ இருட்டிவிட்டது. அந்தணர்களைப் பார்த்து இனி எப்படி வழி நடப்பது? நடுக்காட்டில் இரவைக் கழித்துவிடுவோம் என்றான் அரிகிருஷ்ணன். அவர்கள் அதற்கு இசைந்தனர்.


பார்ப்பனர்கள் அந்த மடத்தில் மகிழ்வாய் உறங்கும்போது காலன் கரும்பாம்பாய் பறந்து வந்தான். பாழ்மடத்தில் படுத்துக் கிடந்தவர்களின் அருகே வந்தான். கரும்பாம்பு அரிகிருஷ்ணனைத் தீண்டியது. அவன் இறந்தான்.


மறுநாள் உதயநேரத்தில் நண்பர்கள காலைக்கடன்களை முடிக்க எழுந்தபோது அரிகிருஷ்ணன் அசையாமல் கிடந்தான். அவன் நல்லாவே உறங்குகிறான் என அவர்கள் சென்றனர். திரும்பி வந்தபோதும் அவன் எழுந்திருக்காமல் இருப்பதைக்கண்ட நண்பர்களுக்குச் சந்தேகம் வந்தது. அவனைத் தட்டினர். அவன் அசையவில்லை.


அரிகிருஷ்ணன் இறந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தனர். கலங்கினர். கதறினர். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அனந்தாயிக்கு இச்செய்தியை எப்படிச் சொல்வது என மனம் மருகினர். அந்த நடுக்காட்டிலிருந்து அவனை ஊருக்குக் கொண்டு செல்லவும் முடியாது. வேறு வழியில்லாமல் அந்த இடத்திலேயே அவன் உடலை எரித்தனர்.


நண்பர்கள் அங்கிருந்து வேகமாக ஸ்ரீவைகுண்டம் சென்றனர். அனந்தாயியைக் கண்டு நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். அவள் அதுகேட்டு உயிர் நடுங்கியவள்போல தரையில் விழுந்தாள். கல்லிலே முட்டினாள். மகளது முகத்தைப் பார்த்துக் கதறினாள். அரிகிருஷ்ணன் இறந்த செய்தியைக் கேட்டு அவளது உறவினர் ஒருவன் வந்தான். அரிகிருஷ்ணன் இறந்தபிறகு நீ இங்கே இருக்காதே. அவனது சொத்து சுகங்களில் உனக்கோ உன் மகளுக்கோ உரிமை கிடையாது. மாடு வயல் காடு எதுவும் உனக்குக் கிடையாது. நீ இந்த வீட்டைவிட்டுப் போய்விடு என்று அவளிடம் கூறினான்.


அதைக்கேட்ட அனந்தாயி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள மணியக்காரன் முத்தையனிடம் முறையிட்டாள். அந்த மணியக்காரன் அவளது வழக்கைக் கேட்டான். எனக்கு ஈஸ்வரன் பெண்மதலை கொடுத்திருக்கிறான். நான் பொய்யான நீதி சொல்லமாட்டேன். கள்ள வழக்கு உரைக்கமாட்டேன். வயல் கரையும் வலிய வீடும் மாடும் டும் அம்பலமும் ஆள் அடிமையும் பரிகரியும் உனக்கே சொந்தமாகவேண்டும் என வழக்கைத் தீர்த்து வைத்தான்.


அன்று இரவு அனந்தாயியின் சொந்தக்காரன் மணியக்காரனின் வீட்டிற்குச் சென்றான். ஆயிரம் பணம் லஞ்சம் கொடுத்தான். எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குங்கள் என்றான். மணியக்காரனின் மனம் மாறியது. அடுத்தநாள் காலையில் அனந்தாயியை அழைத்தான். அவளும் அவனது வீட்டிற்குச் சென்றாள். மணியக்காரன் அவளிடம் பெண்ணே நான் உன்னிடம் சொன்ன வழக்கு சரியானது அல்ல. உனக்குச் சொத்தில் உரிமை இல்லை. நீ வீட்டைவிட்டு வெளியே போகவேண்டும் என்றான்.


மணியக்காரன் முத்தையன் திடீரென வழக்கை மாற்றி அவளுக்குப் பாதகமாகச் சொன்னதும் அனந்தாயி பரிதவித்தாள். நெடுக அழுதாள். பாவி சண்டாளா கண்ணவிந்து போவாய் எனச் சாபம் இட்டாள். மணியக்காரனே உன மகள் மணிமாலை என்னைப்போல் பரிதவிக்கவேண்டும். சுனை வெள்ளம் ஆறாகப் பாய்ந்து உன் வீட்டை அழிக்கவேணும். உன சீமையில் வெள்ளை எருக்கு முளைக்கவேண்டும். சிறுநெருஞ்சிப் படரவேண்டும் எனச் சாபமிட்டாள்.


அனந்தாயி மனம் உடைந்தாள் இனி இந்த ஊரில் கூலிவேலை செய்து பிழைப்பதைவிட சாவதுமேல் எனத் தீர்மானித்தாள். காட்டுவழி நடந்தாள். ஈஸ்வரனே எனக்கு விடுதலை தா என வேண்டிக்கொண்டாள். ஒரு சுனை அருகே வந்து நின்றாள். கணவனை நினைந்து அழுதாள். இந்த நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் மணியக்காரன் முத்தையனின் மகளுக்குத் திருமணம் நடந்துகொண்டிருந்தது. அனந்தாயியின் ஏக்கம் கருமை கொண்டு மேலே எழுந்து கருமுகிலாகிப் பெருமழையாகிக் காட்டையே நனைத்தது. சுனையில் நீர் பெருகியது. உடனே அவள் மகாதேவா என்னை அழைத்துக்கொள் ! என்று கூறி இடுப்பிலிருந்த பிள்ளையைச் சுனையில் விட்டெறிந்தாள். அவளும் சுனையில் சாடினாள்.


இருவரை பலிகொண்ட அந்தச் சுனை பொங்கிப் பெருக்கெடுத்து பெருவெள்ளமாகி ஓடியது. வெள்ளம் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்தது. மணியக்காரன் முத்தையனின் வீட்டில் நுழைந்தது. அவன் மகள் மணிமாலையையும் மாப்பிள்ளையையும் இழுத்துக்கொண்டு ஓடியது. கலியாணப் பந்தலின் காலைப் பிடுங்கி எறிந்தது. ஊர்க்காரர்களையும் அலைக்கழித்தது. அந்த வெள்ளத்துடன் அனந்தாயியும் அவள் மகளும் மிதந்து வந்தனர். இருவரின் பிணமும் முத்தையன் வீட்டில் ஒதுங்கியது.


இறந்துபோன அனந்தாயிமுன் சிவன் தோன்றினார். அனந்தாயி நீ வெள்ளத்தில் வந்ததால் வெள்ளமாரி அம்மன்' எனப் பெயர் பெற்றாய். என்றார். அவளுக்கு அருள் புரியவும் தண்டிக்கவும் வரங்களும் தந்தார். அவள் பூவுலகில் தெய்வமாக நிலைபெற்றாள். அவளை ஸ்ரீவில்லிப்புதூர்க்காரர்கள் தெய்வமாக்கி படையலிட்டு வணங்கினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனந்தாயி_கதை&oldid=1392510" இலிருந்து மீள்விக்கப்பட்டது