அனிச்ச மலர்/முன்னுரை

முன்னுரை

ந்த நாவல் நான் எழுதியிருக்கும் பிறநாவல்களிலிருந்து பலவிதங்களில் தனியானது. அளவில், முறையில், அணுகுதலில், பாத்திர அமைப்பில் எல்லாவற்றிலும்தான். இது ‘அலை ஒசையில்’ தொடராக வெளிவந்து கொண்டிருக்கும்போது ‘எங்கோ நிஜமாக நடந்த கதை போலிருக்கிறதே’ என்று சிலர் அடிக்கடி சொன்னார்கள். ‘எங்கேனும் நடந்ததோ அல்லது நடக்கிறதோ?’-என்ற எண்ணத்தை உண்டாக்கும் தன்மையே ஒரு கதையின் யதார்த்த நிலைக்குச் சரியான நற்சான்றி தழாகும். ஒரு தினசரியில் வெளிவந்தும், இந்த நாவலை நிறையபேர் படித்திருக்கிறார்கள். எனக்கு வந்த கடிதங்களிலிருந்தும் என்னிடம் விசாரித்தவர்களின் காரசாரமான விமர்சன விவாதங்களிலிருந்தும் இதை நான் தெரிந்து கொண்டேன்.

சில நண்பர்கள், ‘குறிஞ்சி மலரை’ எழுதின நீங்கள் ‘அனிச்ச மலரை’ எழுதலாமா? பூரணியைக் கதாபாத்திரமாகப் படைத்த நீங்கள் சுமதியையும் கதாபாத்திரமாகப் படைக்கலாமா?-என்றெல்லாம் கேட்டது உண்டு. அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இந்த முன்னுரையில் நான் பதில் சொல்ல வேண்டியது அவசியமும் முக்கியமும் ஒரு விதத்தில் அவசரமும் கூட ஆகிறது.

குறிஞ்சி மலரும், பூரணியும் முன் உதாரணமாகக் கொள்ள வேண்டிய கதையும், கதாபாத்திரமும் ஆகமுடியும் என்றால் அனிச்ச மலரும் சுமதியும் முன் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டிய கதையாகவும், கதாபாத்திரமாகவும் ஆவதற்கு ஏன் முடியாது? உடன்பாடான சமூகப் படிப்பினைகளை ஏற்கத் தயாராயிருக்கும் நம்மவர்கள் எதிர்மறையான சமூகப்படிப்பினைகளை ஏனோ ஏற்கத் தயங்குகிறர்ர்கள்.

இன்னும் சிலர், “சினிமா உலகின் சீரழிவுகளையும், சினிமா உலகின் ஊழல்களையுமே சமீபத்தில் ஒவ்வொரு கதையிலும் அழுத்திச் சொல்லுகிறீர்களே, வேறு எவையும் வேறு யாரும் உங்கள் கண்களில் படவே இல்லையா சார்?” என்று கோபமாகக் கேட்கிறார்கள்.

நான் சினிமாவை வெறுப்பவனில்லை, ஆனால் அது இன்றுள்ள நிலையில் அப்படியே அதை ஏற்றுக்கொண்டுவிட விரும்புகிறவனு மில்லை. அதில் பல விஷயங்கள் மாற வேண்டும். திருந்த வேண்டும். பணமும் தேவைக்கதிகமான டாம்பீகப் புகழும் இருப்பதன் காரணமாகவே சினிமா உலகைச் சேர்ந்தவர்களைக் 'காலில் அழுக்குப்படாத தேவாதி தேவர்கள்'-என்று நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை. சமூகத்துக்கு மிக மிக அவசியமான ஒரு புரொபஸர். ஒரு டாக்டர், ஒரு என்ஜீனியர், ஆகியோரைவிடச் சினிமாவில் நடிப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு ஒரு புதிய சோம்பேறி வர்க்கத்தை உருவாக்குவதை எந்த அறிவாளியும் கவலைப்படாமல் எதிர்கொள்ள முடியாது. 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'- என்று பாடிய பாரதி 'வீிணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்'-என்றும் சேர்த்தே பாடினான். உழைப்பையும், தொழிலையும் போற்றுவதுடன் சோம்பலைத் தூற்றுவதும் புதிய தலைமுறைக்கு அவசியமாகிறது.

இந்த நாவலில் வருகிற 'கன்னையா' மாதிரிச் சோம்பேறியான பலர் சினிமா உலகம் என்ற போர்வையில் சமூகக் குற்றங்களை வளர்த்து வருகிறார்கள். உண்மையான கலைஞர்களையும், உழைக்கும் வர்க்கத்தையும், டெக்னீஷியன்களையும் வந்தனை செய்வதோடு போலிக் கலைஞர்களை, சோம்பல் வர்க்கத்தை, அரை வேக்காடுகளை நிந்தனை செய்யவும் வேண்டியது இன்று அவசியமாகிறது. அந்த வகை நிந்தனை ஓரளவு சமூக நன்மைக்கும் பயன்படவே செய்யும் என்பது என் கருத்து.

அதனால்தான் பழம் புலவர்களைப் போல் வணங்குவதை வணங்கி விட்டு ஒதுங்கும் மரபைப் பாரதி பின்பற்றாமல், வந்தனை செய்வதோடு-நிந்தனை செய்ய வேண்டிய வர்க்கமும் ஒன்றிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினான்.

இந்நாவலில் வருகிற சுமதி நிந்தனை செய்யப்பட வேண்டிய ஒரு வர்க்கத்திற்குப் பலியாகி விடுகிறாள். அந்த வர்க்கத்தை எதிர்த்துப் போரிட வேண்டிய தெம்பு அவளிடமில்லை. காரணம், அவளே அந்த வர்க்கத்தினரில் ஒருத்தி ஆக ஆசைப்பட்டுத்தான் சீரழிகிறாள். ஆகவே அவளிடமிருந்து எதிர்மறைப் படிப்பினைகளைத்தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். அனிச்சப் பூவைப்போல் அவள் மிகச் சுலபமாக மிக விரைவில் வாடிக் கருகி விடுகிறாள்; அவளிடமிருந்து எச்சரிக்கை அடையலாம். அனுதாபப் படலாம். வேறு என்ன செய்ய முடியும்?

இதை வேண்டி வெளியிட்ட அலை ஒசைக்கும் இப்போது நூலாக வெளியிடும் தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும் விசுவாசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபம்

அன்பன்,

நா.பார்த்தசாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/முன்னுரை&oldid=1146834" இலிருந்து மீள்விக்கப்பட்டது