17

ந்த அதிகாலையில் வீட்டு வராந்தாவில் சுமதியைப் பெட்டி சாமான்களோடு பார்த்தபோது தயாரிப்பாளர் கன்னையா ஒன்றும் ஆச்சரியப்பட்டதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.

"வாம்மா! காபி சாப்பிடறியா?” என்ற சுபாவமாக வரவேற்றார். அவர் கேட்காமல் அவளாகவே கல்லூரி விடுதியில் நடந்ததை எல்லாம் அவரிடம் சுருக்கமாகச் சொல்லத் தொடங்கினாள்.

"நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்மா! நான் இருக்கறப்ப உனக்கென்ன கவலை? பெட்டி சாமன்களை உள்ளாரக் கொண்டு போய் வை. மேரியும் இப்ப வந்துடுவா” என்று இதமாகவும் ஆறுதலாகவும் மறுமொழி கூறினார் கன்னையா. காபி வரவழைத்து அவரே ஆற்றிக் கொடுத்துப் பருகச் செய்தார். -

"இனிமே உனக்கெதுக்கும்மா காலேஜுப்படிப்பு? நீ ஸ்டாராகி ஜொலிக்கிறதுக்குன்னே பிறந்தவ. உனக்கிருக்கிற முகவெட்டு இங்கே எந்த சீனியர் ஹீரோயினுக்கு இருக்குது?”-

இப்படி ஏதாவது யாராவது இதமாகச் சொல்ல மாட்டார்களா என்றுதான் சுமதியின் மனமும் அன்று ஏங்கிக் கொண்டிருந்தது. வார்டனின் கடுமையான வார்த்தைகளுக்கும் உதாசீனத்திற்கும் பிறகு இங்கிதமாக வருடிக் கொடுப்பது போன்ற கன்னையாவின் சொற்கள் அவளைக் கவர்ந்தன. அவளுக்கு மன ஆறுதலை அளித்தன.

அதே வீட்டில் தம்முடைய ஏ.சி. அறைக்குப் பின்னால் பக்கவாட்டில் வாசல் உள்ள ஓர் அறையைச் சுமதியின் உபயோகத்துக்காகத் திறந்து விட்டார் கன்னையா. சிறிது நேரத்திற்கெல்லாம் மேரியும் வந்து சேர்ந்து விட்டாள். அவள் நடந்த விவரங்களைச் சுமதியிடம் கேட்டுக் கொண்டு வார்டனைக் கன்னா பின்னாவென்று ஏசினாள்.

"இந்த மாலதி சந்திரசேகரன் பெரிய பத்தினியோ? எனக்குத் தெரியும் அவ கதை எல்லாம், சொன்னால் ஊர் நாறும்’-என்றாள் மேரி. "நீ அங்கே போகவே வேண்டாம்! அடுத்த வாரத்திலேருந்து புதுப்பட வேலைகள் ஆரம்பமாயிடும். இங்கே இருந்து டான்ஸ் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் கத்துக்கப் பாரு.”

"அதுவரை இங்கேயே தங்கிக்கட்டுமா? அல்லது உன்கூட 'செயிண்ட் தாமஸ்' மவுண்டுக்கு வந்துடட்டுமா ?”

"ஏன் இங்கேயே இரேன்! அதெல்லாம் கன்னையா ராஜ போகமாகக் கவனிச்சிப்பாரு. கவலைப்படாதே"_என்று சொல்லிக் கண்களைச் சிமிட்டினாள் மேரி.

சுமதி அந்தத் தயாரிப்பு அலுவலக வீட்டிலேயே தங்கினாள். அவளுடைய உதவிக்காக ஒர் ஆயாக் கிழவியை வேலைக்கு அமர்த்தினார் தயாரிப்பாளர் கன்னையா.

டான்ஸ் கற்றுக் கொள்வது துரிதப்படுத்தப்பட்டது. அவள் அந்த வீட்டிற்குக் குடிவந்த மறுநாள் தரணி ஸ்டுடியோ சென்று சில 'ஸ்டில்ஸ்’ பத்திரிகை விளம்பரத்திற்காக எடுத்தார்கள்.

அந்த வார இறுதியில் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்து விட்டு அங்கே வார்டன் தன்னிடமிருந்த பத்திரி கைக் கட்டிங்ஸில் இருந்து விலாசமும் சொல்லியதால் தேடிக் கண்டு பிடித்தோ என்னவோ சுமதியின் தாய் நேரே கன்னையாவின் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். அவள் தேடி வந்தபோது மாடியில் டான்ஸ் மாஸ்டரிடம் நாட்டியம் கற்றக் கொண்டிருந்தாள் அவள். கால்களில் சதங்கை கட்டிப் பரத நாட்டியத்துக் கேற்ற வகையில் உடையணிந்து மாஸ்டர் சொல்லியபடி ஆடிக் கொண்டிருந்தவள், திடீரென்று வாசல் முகப்பில் அம்மா வந்து நின்றதைப் பார்த்ததும் ஒன்றுமே தோன்றாமல் திகைத்துப் போய் விட்டாள்.

"ஏன் நிறுத்திப்புட்டே? யாரு வந்திருக்காங்க?"--என்று வினவியபடி மாஸ்டர் திரும்பிப் பார்த்தான்.

"ஏன்தான் இப்படிச் சீரழியறத்துக்குத் தலையெடுத்தியோ தெரியவில்லையே? மானம், வெட்கம், ரோஷம் எல்லாத்தையும் உதிர்த்து விட்டுப் புறப்பட்டிருக்கியாடீ?” சரமாரியாக வசைமாரியோடு உள்ளே பிரவேசித்தாள் சுமதியின் அம்மா.

"மாஸ்டர்! நீங்க கொஞ்சம் இருங்க. அது எங்கம்மா, ஊரிலிருந்து தேடி வந்திருக்கு. சமாதானமா சொல்லிப் பேசி என் அறையிலே உட்காரவச்சிட்டு வந்திடறேன்”--என்று வெளியேறினாள் சுமதி. கூட இருந்த கன்னையா நைசாக நழுவி மாடி வராந்தாப் பக்கம் போய்விட்டார்.

"நீ ஏனம்மா இங்கே வந்தே? டெலிஃபோன் நம்பரைக் கண்டுபிடிச்சு ஃபோன் பண்ணியிருந்தா நானே உன்னைத் தேடி வந்திருப்பேனே?”

“ஏண்டி? நான் இங்கே வந்து பார்த்தால் உன் வண்டவாளம்லாம் தெரிஞ்சு போகுமேன்னு பயப்படிறியா? ஏற்கெனவே வார்டனும் உன் ரூம் மேட் விமலாவும் எல்லாம் சொல்லிட்டாங்க. ஹாஸ்டல்லே உன் அறையிலிருந்த சாமான்களை ஒழிச்சுக் கொண்டு போய்ச் சொந்தக்காரங்க வீட்டிலே போட்டாச்சு. பிரின்ஸ்பாலோ, வார்டன் அம்மாளோ உன்னை மன்னிக்கவோ அந்தக் காலேஜிலே மறுபடி சேர்த்துக்கவோ தயாரில்லே. அவங்களைப் பொறுத்தவரை உன்னைக் கைகழுவி விட்டாங்க...”

"ஏனம்மா கத்தறே? கொஞ்சம் கூட நாகரிகமில்லாமே...”

"ஆமாண்டி! நீ கத்துக் குடுத்து இனிமேல்தான் நாகரிகத்தை எல்லாம் நான் தெரிஞ்சுக்கணும். சொல்லுவேடி சொல்லுவே! நீ ஏன் சொல்லமாட்டே? இதுவும் சொல்லுவே, இன்னமும் சொல்லுவே? 'உங்க பொண் உங்களுக்கு உடம்பு செளகரியமில்லேன்னு பத்து நாள்

லீவு எடுத்துக் கிட்டுப் போனாள். அது பற்றி எனக்குச் சந்தேகமா இருக்கு. அங்கே வந்திருக்காளா, இல்லியா?ன்னு வார்டன் மதுரைக்கு ஃபோன் பண்ணிக் கேட்டப்பவே எனக்குப் பகீர்ன்னுது. உன்னைப் பெத்த வயித்துலே பெரண்டையை வச்சுத்தான் கட்டிக்கணும்." -அருகே வந்து அம்மாவை மேலே பேச விடாமல் வாயைப் பொத்தினாள் சுமதி. தர தரவென்று அம்மா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கன்னையா தனக்கு ஒழித்துவிட்டிருந்த தனி அறையை உட்புறம் தாழிட்டுக் கொண்டாள். அப்புறம் நிதானமாக ஒரு சிறிதும் பதறாமல் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எதிரே நின்ற அம்மாவைப் பார்த்து,

"எதுக்கும்மா இப்படி கத்தித் தொலைக்கறே? இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு?” என்று கேட்டாள் சுமதி. அம்மாவோ உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளிம்பில் இருந்தாள்.

“என்ன குடிமுழுகிப் போச்சுன்னாடீ கேட்கிறே? குடிமுழுகறதுக்கு இன்னும் என்னடீ மீதமிருக்கு? நீ கேக்கறதைப் பார்த்து எனக்கு வயிறு பத்தி எரியறதேடீ? கூத்தாடிச்சியாப் போறதுக்குத் தலையெடுத்துப் படிப்பை உதறிப்பிட்டு வந்தயேடீ பாவி! உங்கப்பா மட்டும் இப்ப உசிரோட இருந்தார்னா உன் கழுத்தைத் திருகிக் கொன்னுடுவார்...”

"ஏன்? முடிஞ்சா நீயே இப்ப அதைச் செய்யேன் அம்மா? யாராவது கொன்னுட்டாத்தான் எனக்கும் நிம்மதி"--இதைச் சொல்லும்போது சுமதியின் கண்களில் நீர் மல்கியது . சுமதி அழுவதைப் பார்த்துத் தாயின் மனம் சிறிது இளகியது. அதனால் தாயின் குரலில் வெறுப் பின் கடுமை மாறிச் சிறிது பாசமும் கனிவும் வந்தன.

“எப்பிடிடீ இதுக்கெல்லாம் துணிஞ்சே; மான அவமானமும்கூட உறைக்கலியாடி உனக்கு? உன்னைப் படிக்கிறதுக்கு மெட்ராஸ் அனுப்பினேனா, இல்லே இப்படிக் கண்ட தடிப்பசங்களோட சினிமா 'டான்ஸ்னு' ஊர் சுத்தறதுக்கு அனுப்பினேனாடீ? முன்னே பின்னே தெரியாத

மனுஷங்களோட பத்துநாள் காஷ்மீர் போறது, பதினைஞ்சு நாள் கன்னியாகுமரி போறதுன்னு புறப்படறத்துக்கு முன்னாடி உடம்பு கூசலியாடீ உனக்கு.”

பதில் சொல்லாமல் சுமதி மேலும் பெரிதாக விசும்பி அழுதாள். உடம்பு கூசாமல் அப்படிப் புறப்பட்டுப் போனதால் தான் எதை இழந்தாளோ அதை அம்மாவிடம் சொல்வதற்கும் வாய் வரவில்லை அவளுக்கு. ஆனால் அம்மா கேட்ட கேள்வியில் காஷ்மீரில் நடந்தது நினைவு வந்து கோவென்று கதறி அழுதபடி தாயின் நெஞ்சில் சாய்ந்தாள் அவள். பெண்ணின் அழுகையைத் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டாள். தான் கேட்டதெல்லாம் உறைத்துப் பெண் மனம் மாறி அழுகிறாள் என்று எண்ணிக் கொண்டு, “என்னவோ உன் கெட்ட வேளை இதுவரை பண்ணின தப்பெல்லாம் பண்ணியாச்சு. இனி மேலாவது நீ மனசு திருந்தணும்டீ. நீ படிச்சுக்கூட எனக்கு ஒண்ணும் ஆகவேண்டியதில்லே. குடும்பப் பேரைக் கெடுத்துச் சீரழிஞ்சுபோய் நடுத் தெருவிலே நிற்கும்படி ஆயிடப்படாது. பேசாமல் என்னோட புறப்பட்டு மதுரைக்கு வந்துடு. வீட்டிலே இருந்து படிக்க முடிஞ்சது போறும். உனக்குப் பிரியம்னா அடுத்த வருஷம் மதுரையிலேயே எந்த லேடீஸ் காலேஜிலியாவது சேரலாம். இல்லேன்னா அதுகூட வேண்டாம்"-- என்று ஒரளவு சகஜமான குரலில் ஆரம்பித்தாள் சுமதியின் அம்மா. சுமதி இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. எந்தக் களங்கம் வந்துவிடக் கூடாது என்றும், வரவில்லை என்றும் நம்பி அம்மா தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாளோ அந்தக் களங்கத்தையே தான் சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. பெண்ணின் அழுகை அதிகமாக அதிகமாகத் தாயின் கனிவும் அதிகமாகியது. தன்னைத் தழுவினாற் போல நெஞ்சில் சாய்ந்திருந்த மகளின் தலையை ஆதரவாக வருடியபடி அறிவுரைகளைக் கூறலானாள் தாய். 

'இது யார் வீடு? எனக்கு இந்த இடமே பார்க்க சகிக்கலையேடீ? ஹாஸ்டலை விட்டுப் படிப்பைவிட்டு மானத்தை விட்டு எப்படிடீ இங்கே எல்லாம் வரத் துணிஞ்சே!'

“எப்படியோ வந்தாச்சும்மா! இனிமே மீளவும் முடியாது போலேருக்கு" - என்று அழுகைக்கிடையே சுமதி சொன்னாள். “ஏண்டீ முடியாது? நான் கையோட உன்னைக் கூட்டிண்டு போகலாம்னுதான் வந்திருக்கேன். எவனாவது குறுக்கே நின்னா வக்கீலை வச்சுக்கூடப் பார்த்துடறேன் ஒரு கை" என்று சீறினாள் சுமதியின் தாய்.

அப்போது தாழிட்டிருந்த அந்த அறையின் கதவை வெளிப்புறம் யாரோ பலமாகத் தட்டினார்கள். "நீ இருடீ நான் திறக்கிறேன்” என்று கதவைத் திறக்க முன்னேறிய தன் தாயைச் சுமதியே தடுத்தாள். தானே கண்களைத் துடைத்துக்கொண்டு அழுதது தெரியாதபடி முகத்தைச் சகஜமாக மாற்றிக் கொள்ள முயன்றபடி சுமதியே கத வைத் திறக்கச் சென்றாள். கதவைத் திறக்குமுன் சுமதியின் மனத்தில் பல உணர்வுகள் குழம்பின. தான் வேறு எதற்கோ அழுததைத் தவறாகப் புரிந்துகொண்டு அம்மா தன்னை ஊருக்கு இழுத்துக்கொண்டு போக முயலுவதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று தீவிரமாக அப்போது அவள் உள்மனம் யோசிக்கத் தொடங்கியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/17&oldid=1146930" இலிருந்து மீள்விக்கப்பட்டது