2

சுமதியின் கனத்த நெஞ்சகங்கள் மேலெழுந்து விம்மித் தணிந்தன. நான் இவ்வளவு பிரபலமாகும்போது எனக்கு வரும் கடிதங்களைக் கவனித்துப் பதில் போட வேண்டியிருக்கும் என்று தனக்குத் தானே சொல்லி-அப்படிச் செயற்கையாகச் சொல்லிக் கொள்வதில் கிடைக்கும் கற்பனைச் சந்தோஷத்தில் பூரித்தாள் அவள். பத்திரிகையில் வந்திருந்த அந்த நடிகையின் அழகையும் தன் அழகையும் ஒப்பிட்டு, தான் பல மடங்கு மேலானவள் என்று முடிவு செய்துகொண்டாள் அவள். சமீபகாலமாக இப்படி எல்லாம் பைத்தியக்காரத்தனமாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் ஓர் இயல்பு அவளுக்கு வந்திருந்தது. ஹாஸ்டல் விழாவின்போது அவளை வானளாவத் துாக்கி வைத்துப் புகழ்ந்துவிட்டுப் போன அந்தப் பிரபல நடிகர் அவளுள் இந்த இயல்பை வளர்த்துவிட்டுப் போயிருந்தார்.

பல ஏக்கப் பெருமூச்சுகளுக்குப்பின் மேஜை மேலிருந்த அலாரம் டைம்பீஸில் மணி பார்த்தாள் சுமதி. மணி பத்தரை. சில அறைகளில் விளக்கொளி. சில அறைகளில் படிக்கும் முணுமுணுப்பு சப்தம், தவிர ஹாஸ்டல் வராந்தாவும், லவுஞ்சும் ஆளரவமற்று அமைதியாயிருந்தன. மாணவிகளில் ஒவ்வொருத்தியும் ஒரு கேரக்டர். சின்ன வயசிலிருந்து இரைந்து படித்தே பழக்கமுள்ள சிலருக்கு வாய்விட்டுப் படித்தால்தான் படித்தது போலிருக்கும். 'ரெண்டோண்ரெண்டு' என்று வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணிய ஆரம்பப்பள்ளி நாட்களின் பழக்கமே கல்லூரி விடுதிக்கு வந்த நாளிலும் சில பெண்களிடம் நீடித்தது. லவுஞ்சிலுள்ள மேஜையில் தான் மாலைத் தினசரிகளும் பேப்பர்களும் கிடக்கும் என்பது சுமதிக்கு நன்றாகத் தெரியும்.

மாணவிகளில் பலர் 'மாலைப் பேப்பர் வாங்கப் போகிறேன்' என்று விடுதியைவிட்டு வெளியேறியதைத் தடுக்கவும், விடுதி கேட்டில் காவல் காக்கும் வாட்ச்மேன், பியூன் மூலம் காசு கொடுத்துப் பேப்பர் வாங்கச் சொல்லி அதனால் மூளும் தகராறுகளைத் தவிர்க்கவும் வார்டன் அம்மாள் விடுதி லவுஞ்சிலேயே காலை, மாலைப் பேப்பர்களை மாணவிகள் படிப்பதற்கு நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது. பேப்பர்களை யாரும் அறைகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனையும், எல்லா நேரமும் படிப்பை விட்டுவிட்டு அங்கேயே சுற்றக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தன.

அங்கு சிறிது நேரத்திற்குமுன் சக மாணவிகள் கூட்டமாகக் கூடி அந்தப் புதுமுகம் தேவை என்ற விளம்பரத்தைப் படித்தபோது அதில் தனக்கு அக்கறையே இல்லாததுபோல் ஒதுங்கி விலகி உட்கார்ந்திருந்த சுமதி இப்போது பூனைபோல் ஒசைப்படாமல் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். வார்டனின் விதியையும் மீறி அங்கே லவுஞ்சில் கிடந்த அந்தத் தினசரியை மங்கலான வெளிச்சத்திலும் தவறாமல் அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பச் சென்று கதவைத் தாழிட்டாள். தான் வெளியே சென்றது, பேப்பரை லவுஞ்சிலிருந்து எடுத்தது, அறைக்குத் திரும்பியது எதுவும் யாராலும் பார்க்கப்படவில்லை என்று உறுதி செய்துகொண்டு அறையின் விளக்கைப் போட்டாள். பின்பு நிதானமாக அந்தத் தினசரியில் அந்தப் பக்கத்தைத் தேடிப்பிடித்துப் 'புது முகங்கள் தேவை' என்ற விளம்பரத்தைப் படிக்கத் தொடங்கினாள்.              

வெளியே பலருக்குமுன், உண்ணக் கூச்சப்பட்ட மிகவும் பிடித்தமான தின்பண்டம் ஒன்றை இரகசியமாக அறைக்கு வாங்கிவந்து விரும்பிய அளவு விரும்பிய விதத்தில் ருசித்துச் சாப்பிடுவதுபோல் அப்போது அவள் இருந்தாள். அந்த விளம்பரத்தை ஒவ்வொரு வாக்கியமாக ஒருமுறை, இருமுறை, மும்முறை, ஏன்? திரும்பத் திரும்ப அலுப்புத் தட்டும்வரை படித்தாள் அவள்.

“கல்லூரி மாணவிகளாயிருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் விசேஷ சலுகையுடன் கவனிக்கப்படும்” என்ற ஒரு வாக்கியத்தை அப்படியே அடிக்கோடிட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. விளம்பரத்தின் கீழே இருந்த விலாசத்தைப் பார்த்தாள். ஒரு தபால் பெட்டி எண்ணும் ஆற்காடு ரோடு கோடம்பாக்கம்-என்ற விவரமும் மட்டுமே இருந்தன. விளம்பரத்தின் மேற்பகுதியில் டெலிபோன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதைத் தவிரக் கதவு எண் எதுவும் இல்லை.

சுமதி தன்னுடைய விண்ணப்பத்தை எழுதத் தொடங்கும்போது இரவு பதினொரு மணி ஐந்து நிமிஷம் ஆகி இருந்தது. செயலை மிஞ்சிய அதிகமான ஆர்வம் யாருக்கு எப்போது எதில் இருந்தாலும் அதை ஒழுங்காகச் செய்ய முடியாது. ஆர்வம் தணிந்து சமனப் பட்டுச் செயலுக்கான நிதானம் வருகிறவரை எல்லாமே தாறுமாறாகவும்தான் முடியும். சுமதியும் அந்த நிலையில் தான் அப்போது இருந்தாள். அவளால் முதலில் நாலைந்து தாள்களை மாற்றி மாற்றி எழுதிக் கிழித்துப் போடத்தான் முடிந்தது. எதுவுமே சரியாக வரவில்லை. என்பது அதை எழுதிமுடித்த பின்பே தெரிந்தது. விண்ணப்பத்தோடு தன் புகைப்படம் ஒன்றையும் இணைத்தாள் அவள். கடைசியாகப் பன்னிரண்டேகால் மணிக்கு ஒரு விண்ணப்பத்தை முழுமையாக எழுதி முடித்தாள் அவள். தன்னுடைய கல்லூரி ஹாஸ்டல் நாள் விழாவில் தான் சகுந்தலையாக நடித்ததைப் பிரபல நடிகர் பாராட்டியதையும் அவள் அந்த விண்ணப்பத்தில் குறித்திருந்தாள். அதைப் பற்றித் தன் படத்துடன் வாரப் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த துணுக்கின் 'கட்டிங்'கையும் விண்ணப்பத்தோடு இணைத்திருந்தாள். பின்பு ஞாபகமாக வராந்தா லவுஞ்சிலிருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த தினசரிகளை அங்கேயே திருப்பிக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்தாள்.

எழுதிய விண்ணப்பத்தை உறையிலிட்டு விலாசம் எழுதி வைத்த பின்பும் சுமதிக்கு உறக்கம் வரவில்லை. விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்து நெடுநேரம் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தாள். எதிர்காலத்தைப் பற்றி அவளாகத் தனக்குத் தானே கற்பித்துக் கொண்ட சுகங்களும் சந்தோஷங்களும் மனத்தில் புரண்டன. நடிப்புலகின் சக்கரவர்த்தியாக விளங்கும் ஒரு பெரிய நடிகரே தன்னைத் தாராளமாகப் பாராட்டி, அப்படிப் பாராட்டியது பகிரங்கமாகப் பிரபல பத்திரிகையிலும் வெளிவந்து தன் விண்ணப்பத்தில் தான் அதைக் குறிப்பிட்டிருப்பது நிச்சயமாக அந்த விண்ணப்பத்துக்கு ஒரு மதிப்பையும், கனத்தையும் அளிக்கும் என்று அவளுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

எப்போது விடியும்? விடிந்ததும் தன் கைகளாலேயே ஸ்டாம்பு வாங்கி ஒட்டி அதைத் தபாலில் சேர்க்கப் போகிறோம் என்பதே அப்போது அவளுடைய ஒரே நினைவாக இருந்தது. வேறு நினைவுகள் எதுவுமே மனத்தில் தங்கவில்லை.

எவ்வளவு முயன்றும் துக்கம் வராமற்போகவே பெட்டியைத் திறந்து பல்வேறு சமயங்களில் பிடித்த தன் புகைப்படங்கள் அடங்கிய இரண்டு மூன்று ஆல்பங்களை எடுத்து மேசை விளக்கின் சுகமான உள் அடங்கிய வெளிச்சத்தில் திருட்டுத்தனமான மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினாள். தன் அழகையும் கவர்ச்சியையும், எவரையும் நிச்சயமாகத் திரும்பிப் பார்க்க வைக்கும் தன் உடற்செழிப்பையும், தானே இன்னொரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள விரும்பினாற் போல் அவள் அந்தப் படங்களை இரசித்தாள். அந்தரங்கமான தாழ்வு மனப்பான்மை அப்போது அந்த ஊர்ஜிதத்தை விரும்பியது.

கோடை விடுமுறையின்போது கொடைக்கானலில் 'போனிரைட்'-குதிரை சவாரிக்காக அரை டிராயர் பனியனோடு குதிரைமேல் அமர்ந்து எடுத்த படம், டென்னிஸ் கோர்ட்டில் எடுத்த படம், இண்டர் காலேஜியேட் டிபேட்டின்போது வேறு கல்லூரி மாணவர்களோடு அவர்களே விரும்பிக் கேட்டதற்கு இணங்கி எடுத்துக் கொண்ட படம், என்.ஸி.ஸி. உடையில் சிப்பாயைப்போல் எடுத்துக்கொண்ட படம், எல்லாம் ஆல்பத்தில் இருந்தன. நகரின் வேறு கல்லூரி ஒன்றில் முன்பு நடந்த இண்டர் காலேஜியேட் டிபேட்டின் முடிவில்,

"மிஸ் சுமதி ! ப்ளீஸ், உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள எங்கள் மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்?” என்று அந்தக் கல்லூரி மாணவர் யூனியனின் தலைவன் வந்து கெஞ்சியது அவளுக்கு ஞாபகம் வந்தது. வெளியிடங்களுக்குப் போகிறபோது கைக் கடிகாரத்தில் நேரம் கேட்கிற சாக்கில், ஏதாவது விசாரிக்கிற சாக்கில் தன்னோடு எப்படியாவது இரண்டு நிமிஷம் பேசி விடத் தவிக்கும் பலரை அவள் கண்டிருக்கிறாள். அவளுக்கு அப்படி ஒர் எழில் கொஞ்சும் தோற்றம். களைசொட்டும் முகம். கவின் நிறைந்த அங்கங்கள். கையிலிருக்கும் மணிபர்சில் தொகையை எண்ணிப் பார்ப்பதுபோல் தன்னுடைய பிளஸ் பாயிண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துக் கொண்டாள் சுமதி.

எங்கோ கோழி கூவியது. ஹாஸ்டல் மரங்களில் விடிவதற்கு முன்னறிகுறியான பல்வேறு பறவைகளின் ஒலிக்கிளர்ச்சி ஆரம்பமாகியிருந்தது. காற்று, குளிர்ந்து வீசத் தொடங்கியிருந்தது. இருள் மெதுவாகக் கரைந்து போய்க்கொண்டிருந்தது.

எழுந்து பல் விளக்கி மெஸ்ஸில் போய்க் காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பும்போதே மூன்றாவது அறை மோகனாவிடம் தபால்தலைகள் கேட்டு வாங்கி ஒட்டிக் காம்பஸுக்குள் இருந்த தபால் பெட்டியில் அந்தக் கவரைப் போட்டுவிட்டாள் சுமதி. அந்தக் கல்லுரரி விடுதி எல்லையில் இருந்த தபால் பெட்டியில் முதல் கிளியரன்ஸ் காலை 8.35க்கு என்று எழுதியிருந்தது. உள்ளூரில் அந்தக் கடிதம் பிற்பகல் டெலிவரியிலேயே விலாசதாரருக்குக் கிடைத்துவிடும் என்றும் உறுதி செய்து செய்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தாள் சுமதி. நினைவு என்னவோ அதைப் பற்றியே சதாகாலமும் இருந்தது. அங்கிருந்து அவர்கள் தனக்குப் பதில் எழுதித் தன்னை வரச் சொல்லுவது போலவும், ’இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகரே உங்களைப் பாராட்டியிருப்பதை  அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம், நீங்கள் உடனே நமது அலுவலகத்திற்கு வந்து சந்திக்க வேண்டுகிறோம்' என்ற அவர்களிடமிருந்து பதில் வருவதாகவும் தானே எண்ணிப் பார்த்துக் கொண்டாள் அவள். கற்பனை என்பது மனித மனத்துக்கு எந்தச் செலவுமின்றித் தானே கிடைக்கிற போதைப் பொருள். மனத்தைத் தட்டிவிட்டால் எதையும் உள்ளே செலுத்தாமலே கற்பனைப்போதை அங்கே உருவாகிவிடும். அந்த போதை அவளுள்ளும் அன்றைக்கு உருவாகியிருந்தது

கற்பனை என்பது நிஜமில்லை. ஆனால் நிஜங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை அல்ல. இன்றைய கற்பனைகள் நாளைய நிஜங்களாகலாம் ! நாளைய கற்பனைகள் நாளை மறுநாள் நிஜங்களாகலாம். ஆகாமலேயும் போய்விடலாம். ஆனால் அப்படி ஆகாமல் போகுமென்று பயந்தோ தயங்கியோ வாழ்வில் யாரும் எந்தக் கற்பனைகளையும் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. கற்பனைகள் தாராளமாகச் செய்யப்படுகின்றன.

மாணவி சுமதியின் கற்பனைகள் நாட்கணக்கில் நீடித்தன. மறுநாளைக்கு மறுநாள் காலை முதல் தபாலில் அவளுக்கு ஒர் கனமான உறை வந்தது. உறையின்மேல் அனுப்புகிறவர் முகவரி இருக்கவேண்டிய இடத்தில் 'சொப்பன உலகம் நாடகக் குழுவினர்-தபால் பெட்டி எண்... கோடம்பாக்கம் சென்னை-26' என்று அழகாக அச்சிட்டிருந்தது. பெறுகிறவர் முகவரியில் புது டைப்ரைட்டரில் அடித்தாற் போன்று முனை முறியாத தெளிவான எழுத்துக்களில் மிஸ். கே. சுமதி... என்று தொடங்கி அவளுடைய கல்லூரி விடுதி முகவரி டைப் அடிக்கப்பட்டிருந்தது. விளம்பரத்திலிருந்த பாலன் நாடகக் குழு என்ற பெயரும் சொப்பன உலகம் என்ற புதுப்பெயரும் வேறுபட்டன.

ஆவலால் படபடக்கும் மனமும், மகிழ்ச்சியின் மிகுதியான எதிர்பார்த்தலால் நடுங்கும் கைகளுமாகச்  சுமதி அந்த உறையைப் பிரிக்கத் தொடங்கினாள். உறைக்குள் நிறைய அச்சிட்ட தாள்களும், விண்ணப்ப பாரம் போன்ற ஒரு நீளத்தாளும் கடிதமும் இருந்தன. முதலில் அவள் கடிதத்தைத் தனியே எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.

அந்தக் கவர் தன் கைக்குக் கிடைத்த வேளையைக் கொண்டாட வேண்டும் போலிருந்தது சுமதிக்கு. கடிதம் அழகான தமிழ்க் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

‘எங்கள் விளம்பரத்தைக் கண்ணுற்றுத் தாங்கள் ஆர்வத்தோடு எழுதிய கடிதம் கிடைத்தது. தங்களைப் போலவே நாள் தவறாமல் நடிக்க விரும்பும் பல்லாயிரக் கணக்கான இளம் பெண்களின் கடிதங்கள் எங்கள் காரியாலயத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்தப் பல்லாயிரம் பேர்களிலிருந்து எங்களுக்குத் தேவையான சில நல்ல புதுமுகங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதுதான் இப்போது எங்கள் கவலையாயிருக்கிறது. எனினும் தங்கள் இண்டர்வ்யூவுக்கென ஒரு நாளைக் குறித்திருக்கிறோம். குறித்த நாளில் நேரத்தில் இங்கு வந்து சேருங்கள். அதற்கு முன்பே எங்களுக்குக் கிடைக்கும்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய தொகையோடு அனுப்பிவையுங்கள்.'

அந்தக் கடிதத்தின் கீழ் உள்ள கையெழுத்திலிருந்த பெயரைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. கிறுக்கிக் கோடிழுத்திருந்தது. ரொம்பப் பெரிய மனிதர் ஒருவர் செக்கின் கீழே போட்ட கையெழுத்துப் போலவோ, நாள் பட்ட கம்பவுண்டர் எழுதிய ப்ரிஸ்கிரிப்ஷன் போலவோ அந்தக் கையெழுத்துப் புரியாமல் இருந்தது. புரியாமல் இருந்தது என்பதைவிட புரியாமல் இருக்கவேண்டும் என்றே போடப்பட்டது போலத் தோன்றியது.

ஆர்வத்திலும், பதற்றத்திலும் அவளுக்குப் புலப்படாமல் இருந்த ஒரு முரண்பாடு சற்று நிதானம் அடைந்த பின்பே விளங்கியது. மாலைத் தினசரியில்

அ.ம-2  தான் பார்த்த விளம்பரத்திற்கும், இப்போது அனுப்பப் பட்டிருக்கும் விவரத்தாள்களில் உள்ள பெயருக்கும் உள்ள வேறுபாட்டை இப்போது அவள் சிந்தித்தாள். விளம்பரத்தில் 'பாலன் நாடகக் குழு’ என்று அச்சிட்டிருந்தார்கள். இப்போது தபாலில் கிடைத்திருக்கிற தாள்களில் எல்லாம் ’சொப்பன உலகம்’ நாடகக் குழு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் எது உண்மையான பெயர் என்று தெரியவில்லையே எதற்காக இப்படி இரண்டு பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று யோசித்தாள் சுமதி. பிரபல நடிகர் ஒருவர் தன்னைப் புகழ்ந்தது பற்றிய பத்திரிகைக் கட்டிங்கை இணைத்து அனுப்பியிருந்தும், எல்லாருக்கும் எழுதுவது போல் சாதாரணப் பதிலைத் தனக்கும் அவர் எழுதியிருந்ததை அவள் விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பதில் கடிதத்தை அவர்கள் ஒரு சுற்றறிக்கைபோல எல்லாருக்கும் பொதுவாகவே தயாரித்திருந்தார்கள் என்று தோன்றியது. அதில், கூடியவரை தங்களைப் பற்றிய சுய விளம்பரத்தைச் செய்து கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

விண்ணப்பத்தாள் போல் தெரிந்த நீண்ட ஃபாரத்தைப் பிரித்துப் பார்த்தாள். பெயர், உயரம், எடை, இடையளவு, மார்பளவு, வயது, மொழி, பேசத் தெரிந்த பிற மொழிகள், படிப்பு என்பவை பற்றிய கட்டங்கள் பூர்த்தி செய்வதற்கென்று காலியாக விடப்பட்டிருந்தன. மோட்டார் ஓட்டத் தெரியுமா, சைக்கிள் விடுவதற்குப் பழக்கம் உண்டா, நடனம் ஆடத் தெரியுமா, தெரியுமானால் என்னென்ன வகை நடனங்கள் தெரியும் என்றெல்லாம் வேறு கேள்விகள் இருந்தன.

அந்த விண்ணப்பத் தாளின் அடியில் தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்டு அச்சிடப்பட்டிருந்த வாக்கியம் சுமதியின் கவனத்தைக் கவர்ந்தது.

விண்ணப்பத்தாளுடன் ரூபாய் 100 மணியார்டர் செய்துவிட்டு எம்.ஓ. ரசீதை மறக்காமல் இணைத்து 

அனுப்பக் கோருகிறோம் என்று அச்சிட்டிருந்த நிபந்தனை புதிதாக இருந்தது. 'நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை'-என்று மாலைத் தினசரிகளில் அவர்கள் செய்திருந்த விளம்பரத்தில் இப்படி ஒரு நிபந்தனை இல்லை என்பது சுமதிக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. விண்ணப்பங்கள் அனுப்பும் போது திடீரென்று நூறு ரூபாய் நிபந்தனை போடப்பட்டிருந்தது. இப்படிப் பல்லாயிரம் பேர்களிடம் நூறு ரூபாய் வீதம் வசூல் செய்தால் லட்சக்கணக்கில் சேர்ந்துவிடும் என்பதும் தெரிந்தது. உடனே நூறு ரூபாய்க்கு எங்கே போவது என்று சுமதி மலைத்தாள். மாதக் கடைசியில் ரூபாய் நூறு கைமாற்றுத் தர அங்கு யாரும் அகப்பட மாட்டார்கள் என்பதையும் அவள் அறிவாள். மாத ஆரம்பமாயிருந்தால் அந்த ஹாஸ்டல் எல்லைக்குள் யாரிடமாவது நூறு ரூபாய் கடன் வாங்குவது என்பது அவளுக்குப் பெரிய விஷயமாயிராது.

கஞ்சத்தனமானவள், கறாரானவள் என்று பெயர் பெற்ற வார்டன் மாலதி சந்திரசேகரனிடமே அவளால் கடன் வாங்கிவிட முடியும். ஆனால் இப்போது மாதக் கடைசி என்பதால் வார்டனிடமும் கையில் பணம் எதுவும் இராது.

கோடி அறையில் இருக்கும் பானுமதியிடம் கேட்டால் ஒருவேளை கிடைக்கலாம். பானுமதி கோவையைச் சேர்ந்த ஒரு பெரிய மில் அதிபரின் மகள். அவளிடம் மாதத்தில் எந்த வாரத்திலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. சினிமாவுக்கு, காபி ஹவுஸுக்கு, கடற்கரைக்குப் போனாலும் கூடவே நாலு தோழிகளுக்கும் செலவழித்துக் கூப்பிட்டுக் கொண்டுபோகக் கூடியவள் பானுமதி. ஆனால் அவளுக்கும் சுமதிக்கும் போன வாரம் ஒரு சின்ன மனஸ்தாபம். ஒருவருக்கொருவர் பார்த்தால் பேசிக்கொள்ளப் பழகத் தடையில்லாத மனஸ்தாபம் தான் என்றாலும் இப்போது அவளிடம் போயா கடன் கேட்பது? என்று தயக்கமாகத்தான் இருந்தது. 

ஊரில் அம்மாவுக்குக் கடிதம் எழுதலாமா என்று பார்த்தால் பணம் எதற்கென்று சரியான காரணம் தெரிவிக்காமல் எழுதிக் கேட்க முடியாது. மார்வாடி கடையில் கழுத்தில் உள்ள செயினைக் கொண்டுபோய் அடகு வைக்கலாமா என்று நினைத்துப் பார்த்தாள். 'விண்ணப்பத்தை அனுப்புகிற தினத்தன்றே பணத்தை மணியார்டர் செய்யாமல் அப்புறம் நேரே இன்னொரு நாள் வரும்போது கொண்டுவந்து கட்டிவிடுகிறேன் என்று அவர்களுக்கு ஃபோன் பண்ணிப் பார்த்தால் கேட்காமலா போய்விடப் போகிறார்கள்?- என்றும் ஒரு யோசனை தோன்றியது. ஃபோனில் வேண்டுகோள் விடுத்து அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று தோன்றவில்லையானாலும் ஃபோன் செய்து பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தாள் அவள். அந்தக் கடிதத்திலிருந்த டெலிபோன் எண்ணைத் தனியே குறித்து எடுத்துக் கொண்டு, ஃபோனுக்காகக் கீழே படியிறங்கினாள் சுமதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/2&oldid=1146857" இலிருந்து மீள்விக்கப்பட்டது