25

தோ ஒர் ஆசையில் என்றோ, எப்படியோ, திசை தவறிய தன் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே திருத்திக் கொள்ள முடியாத அகல பாதாளத்தில் வீழ்ந்திருப்பதை இன்று இந்தத் தனிமையில் சுமதி உணர்ந்தாள். தன்னையறியாமலேயே தான் வந்து சேர்ந்துவிட்ட சேற்றுக்குட்டையை- சாக்கடையை நினைத்தபோது 

அவள் உடம்பு பதறியது. அந்தத் தனிமை அவளைக் கொன்றது. மேரி ஊரில் இல்லை. யோகாம்பாள் அத்தை வீட்டிலோ உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். கன்னையாவோ ஆஸ்பத்திரியில் படுக்கையை விட்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசைய முடியாமல் கிடந்தார். ஒரு நிலையில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போய் அம்மா காலடியில் விழுந்து விடலாமா என்றுகூட அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதுவும் முடியவில்லை.

எல்லா டாக்டர்களும் கைவிட்ட தினத்தன்று, "நான் ஆச்சுடி! யாரிட்டவாவது அழச்சுக்கிட்டுப் போய்க்காட்டி எப்படியாவது சரிப்படுத்திடறேன்” என்று வாக்குக் கொடுத்திருந்த மேரி சொல்லாமல் கொள்ளாமல் வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள். கன்னையாவின் குடும்பத்தினர் வந்து தங்கியபின் ஊரிலிருந்தே வேலைக்காரியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்ததால் சுமதிக்கு ஆதரவாயிருந்த 'ஆயாவை' அவளிடம் கேட்காமலே வேலையைவிட்டு நிறுத்திவிட்டி ருந்தார்கள். வேலைக்காரப் பையன்கூட முக்கால்வாசி நேரம் ஆஸ்பத்திரி, மருந்துக்கடை என்று அவர்கள் வேலையாக அலையத் தொடங்கியதால் சுமதிக்கு ஏனென்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது. காபி போட்டுக் கொள்வதிலிருந்து சமையல் செய்வது, பாத்திரம் கழுவிக் கவிழ்ப்பது வரை எல்லா வேலைகளும் சுமதியே செய்துகொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலைமையும், கையில் பண வறட்சியும் சேர்ந்து பரம ஏழையாகத் தன்னைப் பற்றித் தானே நினைக்கச் செய்ததால் சுமதிக்கு ஒருவகைத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. தான் ஏமாந்துவிட்டோம் என்பதை அவள் முழுமையாக உணரத் தலைப்பட்டாள். கன்னையாவைப் பார்த்து அவர் தன்னிடம் கடனாக வாங்கியிருந்த பணத் தைத் திருப்பிக் கேட்கவேண்டும் என்று நினைத்தாள் சுமதி. கையில் பணம் இருந்தாலாவது பணத்தைச் செல வழித்து எந்த டாக்டரிடமாவது முயன்று வயிற்றி

லிருப்பது வளர்ந்துவிடாமல் கரைத்து விடலாம். பணமும் இல்லாமற் போகவே அவளுக்குத் தவிப்பாக இருந்தது. மறுநாள் காலை ஆஸ்பத்திரியில் போய்க் கன்னையாவைப் பார்த்துப் பணம் கேட்கத் திட்டமிட்டுக் கொண்டுதான் அன்றிரவு படுக்கைக்குச் சென்றாள் அவள். படுக்கச் செல்லும்போது இரவு மணி ஒன்பதரை. வீடு 'ஹோ' என்று தனிமையில் வெறிச்சோடிக் கிடந்தது. கன்னையாவின் குடும் பத்தினர் வேலைக்காரப் பையனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு இரவு இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போயிருந்தார்கள். சுமதி மட்டும்தான் வீட்டில் தனியாக இருந்தாள். பயமாகக்கூட இருந்தது அவளுக்கு. வாசலில் கூர்க்கா காவலுக்கு இருந்தான்.

வெளியே காம்பவுண்டு கேட்டை உட்பக்கமாகப் பூட்டிக்கொண்டு பங்களாவின் பிரதான வாசலையும் தாழிட்டுக்கொண்டு சாவிக்கொத்தில் உள்ள பத்திருபது சாவிகளில் கன்னையாவின் அந்தரங்க அறைச் சாவியைத் தேடிக் கண்டுபிடித்து அந்த அறையைத் திறந்தாள் அவள். எதற்காகச் சந்தேகப்பட்டு அந்த அறையை அவள் திறந்தாளோ அந்தச் சந்தேகங்கள் மெய்தானென்று தெரிந்தன. அந்த அறையில் சிறிய புரொஜெக்டர் ஒன்றும், சுவரில் தொங்கவிடக்கூடிய ஸ்கிரீன் ஒன்றும், பிலிம் சுருள்கள் அடங்கிய டப்பாக்களும் இருந்தன. எல்லாம் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. இரவு அகால நேரங்களில் விநியோகஸ்தர்களையும், பல பெரிய மனிதர்களையும் கன்னையா இரகசியமாக அந்த அறைக்குள் அழைத்துச் சென்று ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் கழித்து மறுபடி வெளியே வருவதைச் சுமதியே சில நாட்கள் கவனித்திருக்கிறாள். - -

புரொஜெக்டரில் தயாராக இருந்த பிலிம் சுருளை விளக்கை அணைத்துவிட்டு ஒட்டிப்பார்த்தாள் அவள்.

அ.க.-12 

படப்பிடிப்பு என்ற பெயரில் தன்னை ஏமாற்றி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களும், பிற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 'ப்ளூ' பிலிம்களும் அதில் இருந்தது. லிஸ்ட் செய்யப்படாத நம்பரையுடைய அந்த டெலிபோனில் திடீரென்று மணி அடிக்கவே அதைத் தான் அப்போது எடுத்துப் பேசுவதா விட்டுவிடுவதா என்று சுமதி தயங்கினாள். யார் எதற்காக அப்போது அங்கே ஃபோன் பண்ணுகிறார்கள் என்று அறிய ஆவலாகவும் இருந்தது. சிறிது நேரத்து மனப் போராட்டத்தின் பின் ஆவல்தான் வென்றது.

டெலிஃபோனை எடுத்தாள். "நான்தான் கோயம்புத்தூர் மில் ஒனர் ஆர்.எம்.ஜி. பேசறேன். உடனே அங்கே வரட்டுமா ?”

சுமதி முதலில் பதில் சொல்லத் தயங்கினாள். அப்புறம் துணிந்து பதில் சொன்னாள்.

"கன்னையா இல்லீங்க... நான் சுமதி பேசறேன்."

“எனக்குக் கன்னையா ஒண்ணும் வேணாம். நீதான்ம்மா வேணும். நீதானே அன்னிக்குத் தரணி ஸ்டுடியோவிலே 'காபரே' ஆடினே? உனக்காகத்தான் நான் கன்னையாவுக்கே ஃபோன் பண்ணினேன்? நீயே பேசிட்டே. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி. இதோ நான் இப்பவே வர்ரேன். என்னோட கார்லே 'மியூசிகல் ஹார்ன்' பொருத்தியிருக்கேன். உங்க வீட்டு வாசல்லே வந்து ஹார்ன் கொடுத்ததுமே நீ தெரிஞ்சிக்கலாம்.”

சுமதி அவருக்குப் பதில் சொல்வதற்கு முன் அவர் ஃபோனை வைத்துவிட்டார். கன்னையாவின் ரகசிய அறையும் ப்ளூ பிலிம்களும் லிஸ்ட் செய்யப்படாத ஃபோன் நம்பரும் எதற்கு என்று இப்போது சுமதிக்கு மெல்ல மெல்லப் புரிந்தன. உண்மைகள் பட்டவர்த் தனமாகத் தெரிந்தன.

அவசர அவசரமாக அந்த அறையைப் பூட்டிவிட்டுப் பங்களா முகப்புக்கு வந்தாள் அவள். பத்து நிமிஷத்தில் கேட் அருகே மியூசிகல் ஹார்ன் ஒலித்தது. 'கூர்க்கா' கேட்டைத் திறந்துவிட்டான். பெரிய படகுக் கார் சர்ரென்று சீறிக் கொண்டு உள்ளே நுழைந்தது. சுமதி பங்களா முகப்பிலிருந்து படியிறங்கி வந்து அவரை எதிர் கொண்டாள். "வா போகலாம்! உடனே என் கூடப் புறப்படு. ஹோட்டல்லியே எல்லாம் சொல்லி வச்சிருக்கேன். சரின்னுட்டாங்க” என்றார் அவர்.

"இங்கே வீட்டிலே யாரும் இல்லியே!”

"தெரியும் ! கன்னையாவைக் காலம்பர ஆஸ்பத்திரி லேயே போய்ப் பார்த்தேன். நீ கிடைப்பேன்னு அவன் தான் சொன்னான். இங்கே கன்னையா குடும்பத்து ஆளுங்களெல்லாம் தங்கியிருப்பாங்களே. அதனாலே இங்கே வேணாம். ஹோட்டலுக்கே போயிடுவோமே?”

"இப்ப யாரும் இங்கே இல்லே, கன்னையா வீட்டு ஆளுங்களெல்லாம் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போயிருக்காங்க, வர்ரதுக்கு ரெண்டு மணி ஆகும்...”

"வேணாம், நாம ரெண்டுபேரும் நேரம் போறது தெரியாம ஏ.ஸி. ரூமிலே இருந்துடுவோம். திடீர்னு சினிமாவுக்குப் போனவங்க அவங்க பாட்டுக்கு வந்து கதவைத் தட்டுவாங்க. நல்லா இருக்காது. ஹோட்டல் னாக் கேள்வி முறை இல்லே... நைட் வாட்ச்மேன் முதல் ரூம்பாய்ஸ் வரை அங்கே எல்லாருக்குமாப் பணத்தை வாரி இறைச்சிருக்கேன்.”

"நான் வெளியிடத்துக்கு ரொம்பப் போறதில்லே.”

"எனக்காக வாயேன்... நான் மணி விஷயத்தில் 'தாராளமாக நடந்துக்குவேன். எனக்குக் கணக்குப் பார்த்துக் கொடுக்கத் தெரியாது.” 

சுமதி உடை மாற்றி அலங்கரித்துக்கொண்டு சாவிக் கொத்தைக் கூர்க்காவிடம் கொடுத்தபின் அவரோடு காரில் புறப்பட்டாள். காரை அவரே ஒட்டிக்கொண்டு வந்திருந்தார். "நான் எப்பவுமே இது மாதிரி வர்ரப்ப டிரைவரை கூட்டிக்கிட்டு வர்ரதில்லே. அஞ்சு ரூபாய்க் காசை விட்டெறிஞ்சு 'சினிமாவுக்குப் போடா'ன்னு அனுப்பிச்சுடுவேன்' என்றார் அவர். சுமதி முன் சீட்டில் அவர் அருகே அமர்ந்திருந்தாள். நடுநடுவே இடது கையால் இடுப்பிலும் தோள்பட்டையிலும் சேட்டைகள் செய்தார் அவர். அவள் அதைத் தடுக்கவில்லை. அவரும் கிள்ளல் தடவல்களை நிறுத்தவில்லை.

ஹோட்டலிலும் அவருக்குத் தடை எதுவும் இருக்க வில்லை. எல்லாரும் சலாம் வைத்து உள்ளே போகவிட்டு விட்டார்கள்.

நடு இரவு ஒரு மணிக்கு அவர் அயர்ந்து தூங்கிவிட் டார். அவள் அரை குறைத் தூக்கத்தில் இருந்தாள். ஒட்டல் அறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டினார்கள். திறப்பதா வேண்டாமா என்று அவள் தயங்கினாள். மீண்டும் மீண்டும் மிகவும் பலமாகத் கதவு தட்டப்படவே அவளுக்குப் பயமாக இருந்தது. அதே சமயம் அறைக் குள்ளே ஃபோன் மணியும் அடித்தது. அவள் ஃபோனை எடுத்தாள். ரிஸப்ஷனிலிருந்து யாரோ மணி என்பவன் பேசினான். சுமதிக்குக் கை கால்கள் பதறின. "சார் மன்னிக்கணும்! திடீர்னு எதிர்பாராத விதமாப் போலீஸ் ரெயிட்னு வந்துட்டாங்க. அங்கே உங்க அறைப் பக்கமாகத்தான் வராங்க” என்று அவன் கூறுகிறவரை, அவள் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளவில்லை. நடுவே "ஐயையோ, இப்போ என்ன செய்யிறது?" என்று அவள் குரல் கொடுக்கவே எதிர்ப்புறம் பேசியவன் சுதாரித்துக்கொண்டு, "உடனே அவரை எழுப்பி ஃபோனைக் குடும்மா. அவசரம்” என்று விரட்டினான். அவள் அவரை எழுப்பி ஃபோனைக் கொடுத்தாள். ஃபோனில் பேசிய

அவர் உடனே உட்புறமிருந்தே பக்கத்து அறைக்குப் போத முடிந்தது போலிருந்த ஒரு கதவை திறக்கலானார். இன்னும் வெளியே கதவு தட்டப்படுவது நிற்கவில்லை. அவள் கேட்டாள்: "என்ன செய்யப் போறீங்க? நானும் உங்ககூட வந்துடட்டுமா?"

"வேண்டாம்! நான் இந்த வழியா வெளியே போய் அவங்களைச் சரிப்படுத்தி அனுப்பிச்சிட்டு வந்துடறேன். நீ பேசாம இங்கே உள்ளேயே இரு" என்றார் அவர்.

அடுத்த அறைக்குள் சென்ற அவர் அங்கேயிருந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுவிட்டார். சுமதி இருந்த அறையைத் தட்டியவர்கள் பொறுமை இழந்து கதவையே உடைத்து விடுவதுபோலத் தட்டுதலை மிகுதி யாக்கி இருந்தார்கள். வேறு வழியின்றிச் சுமதி கதவைத் திறந்தாள். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டபிள்களும் இருந்தனர். என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. பயந்து போய்ப் பரக்கப் பரக்க விழித்தாள் அவள் கையும் காலும் ஓடவில்லை. மில் முதலாளியைப் பற்றி அவள் சொல்லியதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவள் மட்டுமே வகையாக மாட்டிக் கொண்டாள். விபசாரக் குற்றம் சாட்டப்பட்டாள். கண்ணிர் சிந்தினாள். கதறி அழுதாள்.

அவளை ஜீப்பில் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். போகிறபோதே அந்த எஸ்.ஐ. அவளிடம் ஜீப்புக்குள் இருட்டில் சேட்டைகள் செய்யத் தொடங் கினான். திமிறியவளை மிரட்டினான். சேட்டைகளைத் தொடர்ந்தான்.

ஸ்டேஷனில் ஒர் அறையில் அவளை அடைத்தார்கள். நள்ளிரவு இரண்டரை மணிக்கு இன்னும் யாரோ இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் முதலில் அவளை அரெஸ்ட் செய்த இன்ஸ்பெக்டர் லாக்-அப் 

அறைக்கு வந்தார். மூவரும் நன்றாகக் குடித்திருப்பது தெரிந்தது. திடீரென்று லாக்-அப் அறை விளக்கு அணைக்கப்பட்டது. மூவரும் அவள்மேல் பாய்ந்தனர். அவளுடைய புடவை பல இடங்களில் கிழிந்தது. ஜாக் கெட் அறுபட்டது. கதறலும் அழுகையுமாக வெடித்த அவளது கூப்பாடுகள் எடுபடவில்லை. கர்சீப்பை வாயில் திணித்தார்கள். மூன்று வேட்டை நாய்கள் விழுந்து கடித்தபின் ஒரு மெல்லிய முயல்குட்டி எப்படி இருக்குமோ அப்படி இப்போது இருந்தாள் அவள், மலையி லிருந்து கீழே உருட்டி விட்டாற்போல் அவள் உடம்பு வலித்தது. சில இடங்களில் கடிப்பட்ட காயம் இரத்தக் கசிவு! கால் கைகள் கோடாரியால் பிளந்த மாதிரி வலித்தன. மூன்று முரடர்களுடைய வெறிக்கு அடுத்தடுத்துப் பலியான அவள் ஏறக்குறையப் பாதி செத்துப் போயிருந்தாள். முழுவதும் செத்துவிட்டால் பழி தங்கள் மேல் வந்து விழுந்து விடுமோ என்ற பயத்தில் வழக்கு எதுவுமே பதிவு செய்யாமலே அவளை ஜீப்பில் தூக்கிப் போட்டு எடுத்துக்கொண்டு போய் ராயப்பேட்டை நெடுஞ்சாலையும், எட்வர்ட் எலியர்ட்ஸ் ரோடும் சந்திக்கிற முனையில் ஓர் ஒரமாகப் போட்டுவிட்டார்கள். கிழிந்த ஜாக்கெட், நிலைகுலைந்து தாறுமாறான புடவைதலைவிரி கோலத்துடன் தன் நினைவின்றி அவள் அங்கே அனாதையாகக் கிடந்தாள். எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தோம் என்று அவளுக்கே சுய நினைவில்லை.

விடியுமுன் அதிகாலை நாலு நாலரை மணிக்கு குளிர்ந்த காற்று மேலே பட்டுப் பிரக்ஞை வந்து அவள் எழுந்து தட்டுத் தடுமாறி நின்றபோதுதான் தான் நாற் சந்தியில் இருப்பது புரிந்தது. உண்மையிலேயே இன்று தான் சந்தியில் நிற்பதை அவள் உணர்ந்தாள்.

சுமதிக்கு எங்கே போவதென்றும் தெரியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. உலகத்தின்

எல்லா வாயிற் கதவுகளும் தனக்கு அடைக்கப்பட்டு விட்டதுபோல அவளுக்குத் தோன்றியது.

மேற்குப் பக்கமாகப் போனால் அவளுக்குப் பழக்க மான அந்தக் கல்லூரியும், அதன் விடுதியும் இருந்தன. கிழக்குப் பக்கமாகப் போனால் எல்லையற்ற கடல் இருந்தது. தெற்கே போனால் மயிலாப்பூர்க் குளமும் கோயிலும் இருந்தன. வடக்கே போனால் மவுண்ட் ரோடும், மதுரைக்குப் போக எழும்பூர் ரயில் நிலையமும் நகரின் இதயமான பகுதிகளும் இருந்தன. சாலையின் நடுவேயிருந்த 'சிக்னலில்' இயக்கம் இல்லை. அதை இரவுக்காக ஆஃப் செய்திருந்ததால் எந்தப் பக்கத்தில் போகலாம் எந்தப் பக்கத்தில் போகக் கூடாது என்று அது வழிகள் எதையும் சுட்டிக் காண்பிக்கவில்லை.

"மலர்வதற்கு முன்பே வெம்பி வாடிவிடும் மலர் களுக்கு அப்புறம் மலர்ச்சி என்பதே இல்லை. பெண் அனிச்ச மலரைப் போன்றவள். அவள் சிறிது வாடினாலும் கருகி அழிந்துவிடுவாள்” என்று அம்மா முன்பு தனக்கு எழுதி யிருந்த பழைய எச்சரிக்கை கடிதத்தின் நிஜமான அர்த்தம் இப்போது அநாதையாய் இப்படி நடுத்தெருவில் நிற்கும் போதுதான் சுமதிக்குப் பட்டவர்த்தனமாகப் புரிந்தது. ஆனால் திருத்த முடியாத எல்லைக்கு, மலர முடியாத எல்லைக்கு இன்று அவள் வாடிப் போயிருந்தாள். அது அவளுக்கு விளங்கியது. இந்த அவலக் கதாநாயகி சுமதி இனி எங்கே போவது? என்ன செய்வது? அது அவளுக்கும் தெரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை. இப்போது அவள் எதிரே இருந்த 'சிக்னலில்' வழியும் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஓர் இராப்பிச்சைக்காரி போல் தனியாக நாற்சந்தியில் அலங்கோலமாக இன்றைக்கு இந்த வேளையில் நிற்கிறாள் அவள். இனி அவளுக்குச் சாகவும் துணிவில்லை. வாழவும் துணிவில்லை. அவளுடைய கதை மேற்கொண்டு தொடரவும் வழி இல்லை. முடியவும் வழியில்லை என்றுதான் இப்படிக் கதைகள் முடிந்திருக்கின்றன? இம்மாதிரிக் கதைகள் ஒருபோதும் முடிவதும் இல்லை. முற்றுவதும் இல்லை.

விடிவதற்கு இன்னும் சில மணி நேரம் தான் இருக்கலாம். ஆனால் இனி விடிவு என்று ஒன்று வரும் என்ற பிரக்ஞையே அவளுக்கு இல்லை.

இருள் போக இன்னும் சில நாழிகைகள் இருக்கலாம். ஆனால் ஒளி வரும் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லை. மீண்டும் மலர முடியாதபடி கருகிவிட்ட ஒரு மெல்லிய பூவுக்கு விடிந்தால் என்ன விடியாமலே இருந்தால்தான் என்ன? இரண்டுமே ஒன்றுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/25&oldid=1147406" இலிருந்து மீள்விக்கப்பட்டது