7


தியேட்டர் வாசலில் புறப்பட்ட கார் அங்கிருந்து நேரே 'ஸ்பென்ஸர்' காம்பவுண்டுக்குள் புகுந்து நின்றது. அதுவரை மேரியும் அந்தக் காரைச் செலுத்தி வந்த வர்த்த்கப் பிரமுகரும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார்கள். சுமதியை அவர்கள் பின் ஸீட்டில் தனியே விட்டுவிட்டதனால், அவளைத் தங்கள் உரையாடலுக்கு இழுக்கவும் இல்லை. அவளும், அதில் கவனம் செலுத்தத் தயாராக இல்லை. ஏதோ அருவருப்படைந்த மனநிலையில் அப்போது இருந்தாள் சுமதி. அவர்கள் தன்னோடு பேசாமல் தன்னைப் பின் ஸீட்டில் தனியே விட்டுவிட்டதே அப்போது அவளுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் சுலபமாகவும்கூட இருந்தது.

ஸ்பென்ஸரில் போய்க் கார் நின்றதும், "நீங்க வண்டிலே இருங்க. பெர்மிட்டை எங்கிட்டக் குடுங்க. நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்றாள் மேரி.


"நோ நோ, நீ இங்கேயே இரு. "ஐ வில் கலெக்ட் மை ஸெல்ஃப்" என்று அந்தப் பிரமுகரே இறங்கிப் போனார்.


'பெர்மிட் ஹோல்டர்ஸ் கவுண்ட்டர்' என்ற பகுதியை நோக்கி அவர் நடப்ப்தைக் காரிலிருந்தபடியே சுமதி கவனித்தாள். மேரி காரில் முன்புறம்  அமர்ந்திருந்தும் பின் ஸீட்டிலிருந்த சுமதியிடம் எதுவுமே பேச வில்லை. சுமதியும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். மேரி பேசுவதாகக் காணோம். பொறுமை இழந்த சுமதி. "நயன் ஃபார்ட்டி ஃபை வோட ஹாஸ்டல் எண்ட்ரீ கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க... நீ முதல்ல என்னை 'டிராப்' பண்ணிட்டு அப்புறம் வேற எங்கே வேணும்னாப் போ மேரி! அதான் நான் அப்பவே ஆட்டோவிலே போறேன்னேன்” என்ற சிறிது கடுமையான குரலிலேயே சீறுவதுபோல் பேசினாள்.

"ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ. உன்னைப் பத்திரமாகக் கொண்டு போய் 'டிராப்' பண்ணிடறோம்டீ ஹாஸ்டல் வார்டன் அம்மாளே எத்தினியோ நாள் டாக்சி வரவழைச்சு ராத்திரிப் பதினொரு மணிக்குப் புறப்பட்டு எங்கெங்கோ சுத்திட்டு மூணு மணிக்குத் திரும்பி வரா. நீ என்னடான்னா ஹாஸ்டலைப்பத்தி ஒரேயடியா நடுங்கறே?”

"யார் எப்படியிருந்தா நமக்கென்ன மேரி? நாம நம்மளவிலே ஒழுங்கா இருப்போமே. அதில் என்ன தப்பு?”

"ஆகா, தாராளமா ஒழுங்கா இரு. உன்னை யார் வேண்டாம்னாங்க.”

மேரி அப்போது சுமதியை நோக்கிப் பேசிய குரலும் சூடேறித்தான் இருந்தது. பெர்மிட் ஹோல்டர்ஸ் கவுண்டரைத் தேடிப்போனவர் மேலே அழகாக 'விஸ்கி' என்ற அச்சிட்டிருந்த அட்டைப் பெட்டியுடன் திரும்பி வந்து காரைக் கிளப்பிப் புறப்பட்டார்.

சொன்னபடி மேரி முதலில் சுமதியை ஹாஸ்டல் முகப்பில் டிராப் செய்துவிட்டுத்தான் போனாள். மேரியின் சிநேகிதரும் அவளும் காரிலிருந்தபடியே சுமதிக்கு 'குட்நைட்' சொன்னார்கள். அப்போதிருந்த மனக்குழப்பத்தில் அவர்களிடம் பதிலுக்கு 'குட்நைட்' சொல்லக் கூடத் தோன்றாமல் ஹாஸ்டல் எண்ட்ரீ கேட்டை நோக்கிச் சுமதி ஒட்டமும் நடையுமாக விரைந்தாள்.

அ.ம.-4 

அறைக்குப் போய் முகம் கழுவிக்கொண்டு அவள் போவதற்குள் மெஸ் மூடிவிட்டார்கள். மெஸ்ஸில் சொல்லி விட்டுப் போயிருந்தாலாவது ஏதாவது எடுத்து வைத்திருப்பார்கள். சினிமாவுக்குப் புறப்படுகிற அவசரத்தில் மெஸ்ஸில் சொல்லவும் மறந்து போயிற்று. வெளியிலேயும் எதுவும் சாப்பிடவில்லை. இடைவேளையின் போது தியேட்டரில் கோகோ-கோலா சாப்பிட்டது தான், அதனால் பசி அதிகமாயிருந்தது.

மறுபடி கேட்வரை நடந்துபோய் கூர்க்காவிடம் சொல்லி பிஸ்கட் பொட்டலம், ரொட்டி ஏதாவது வாங்கிவரச் சொல்லலாம் என்ற தோன்றியது. மறுபடி படியிறங்கிக் கீழே போவதை வார்டனாவது வேறு யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அந்த எண்ணத்தையும் அடக்கிக் கொண்டு சுமதி பேசாமலிருந்துவிட்டாள். அன்றிரவு அவள் முழுப் பட்டினி கிடக்க வேண்டியதாகி விட்டது.

மாலையில நடந்த சம்பவங்கள் வேறு அவள் மனத்தை போதுமான அளவு குழப்பம் அடையச் செய்திருந்தன. தற்செயலாகச் செய்வது போல் மேரி எல்லாவற்றையுமே திட்டமிட்டுச் செய்கிறாளோ என்ற சந்தேகம் சுமதியின் மனத்தில் வலுப்பட்டுக் கொண்டிருந்தது காலேஜில் படிக்கிற வயதில் ஒர் இளம் பெண்ணுக்கு இத்தனை பணக்கார வர்த்தகர்களின் சிநேகிதம், கார்ச் சவாரி இதெல்லாம் சகஜமான முறையில் எப்படி சாத்தியம் என்பதைச் சுமதியும் யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு அது நேரடியாகப் புரியவில்லை. அதில் ஏதோ இடறுகிறாற்போல் இருந்தது. அது புரியவும் புரிந்தது. புரியாதது போலவும் இருந்தது. 'லிக்கர் பெர்மிட்' உள்ள நடுத்தர வயது சிநேகிதருக்கு, "நீங்க வண்டிலேயே இருங்க, பெர்மிட்டை எங்கிட்டக் குடுங்க, நான் நிமிஷமா வாங்கியாந்துடறேன்” என்று அவள் பதில் சொல்லிவிட்டுச் சிரித்த காட்சி சுமதிக்குக் கண்களிலிருந்து இன்னும் மறையவில்லை.  மறுநாள் மேரியை வரவழைத்து அவளிடம் நேருக்கு நேர் கண்டித்துப் பேசிவிடவேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டாள் சுமதி. மேரியிடம் எந்தவிதமான ஒளிவு மறைவுமில்லாமல், "அடி மேரீ! உன்னிடம் இன்ன செலவுக்காக நான் இருநூறு ரூபாய் கடன் வாங்கினேன். அதை ஐம்பது ரூபாயாக நாலு மாதத்திலே திருப்பிக் கொடுத்துடுவேன். அவசியமானால் அதுக்கு வட்டிகூட வாங்கிக்கோ” என்று கறாராகச் சொல்லிவிட வேண்டும் என்றுகூட நினைத்தாள். கழுத்து நுனிவரை அன்றைய அனுபவங்கள் கசப்பாயிருந்தது அவளுக்கு. மேரியின் ஆண்பிள்ளைச் சிநேகிதர்கள் என்று அவள் தியேட்டரில் அறிமுகப்படுத்திய ஆட்கள் எல்லாமே தத்தாரிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் தனக்கு, 'கோகோ கோலா' வேண்டாம் என்கிறபோது, "ஐ ஆல்வேஸ் ஹேட் ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ்” என்ற சொல்லி விட்டுச் சுமதியின் பக்கமாகப் பார்த்துக் கண்ணடித்தான். உடனே இன்னொருத்தன், “வயிறு சரியில்லேன்னா ஸோடா வேணும்னா சாப்பிடேன்” என்றான். அதைக் கேட்டு மறுபடியும் அந்த ஆள் சுமதியைப் பார்த்து முன்பு போலவே கண்ணடித்தபடி "ஐ நெவர் டேக் ப்ளெயின் ஸோடா” என்றான். இப்படி ஒரு கும்பலுக்கு 'கோ--பிட்வின்' ஆக மேரி பயன்படுகிறாள் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. அந்தக் கும்பலில் ஒருத்தன் தியேட்டர் இருட்டில் இடைவேளைக்குப் பின்பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் "டேய்! இந்த வாட்டி மேரி அறிமுகப்படுத்தின புதுமுகத்துக்கு நூற்றுக்கு நூறு மார்க் போடலாம்டா! சரியான வாளிப்புத்தான்" என்று சுமதிக்கும் காதில் விழும்படியாகவே சொல்லிக் கொண்டிருந்தான். சுமதி மெல்ல மெல்ல உஷாராகிவிட்டாள். ஒரு சபலத்தினால் மேரியிடம் கைநீட்டிப் பணம் வாங்கிவிட்டாலும் இப்போது சுமதியின் மனதில் தற்காப்பு உணர்ச்சியே மேலெழுந்து நின்றது. மேரியைப் பற்றிப் பயமாகவும் இருந்தது. மறுநாள் காலை வகுப்புக்கள் தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மேரி கல்லூரிக்கு வந்துவிட்டாள். அவளே சுமதியின் அறைக்குத் தேடி வந்தாள். முதல் நாள் சுமதிக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டதாகச் சொல்லித் தானாகவே வலிந்து முதலில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள். சுமதி சிறிது நேரம் தயங்கியபின் ஒரு சிறிதும் ஒளிவு மறைவின்றி எல்லா விவரங்களையும் மேரியிடம் சொல்லி அவள் கடனாகத் தந்த பணத்தை நாலு தவணையில் ஐம்பது ரூபாயாகத் தந்து விடுவதாய்த் தெரிவித்தபோது மேரி "வாட் எஃ பூலிஷ் கேர்ள் யூ ஆர்?.பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்தா நூறு ரூபாய் எம்.ஒ. பண்ணினே?” என்று பதிலுக்கு வினவினாள்.

"அதிலே என்ன தப்பு?நடிப்பிலே முன்னுக்கு வந்து பேரும் புகழும் சம்பாதிக்கணும்னு எனக்கு ஆசை. பணத்தைக் கட்டி அப்ளை பண்ணியிருக்கேன்.”

இதைக் கேட்டு மேரி பதில் சொல்லாமல் சிரித்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து, இதெல்லாம் பணம் கட்டி 'அப்ளைப் பண்ணி சான்ஸ் வர்ர விஷயமில்லே; உண்மையிலேயே நீ ஸ்டாராகணும்னு இண்ட்ரெஸ்ட் இருந்தால் என்னோட புறப்பட்டு வா. எங்க வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்கு தினம் சாயங்காலம் நாலஞ்சு பெரிய புரொடியூஸர்ஸ் வர்ராங்க ரெண்டு மூணு புகழ்பெற்ற டைரக்டர்ஸ்கூட வர்ராங்க. நான் அவங்ககிட்ட உன்னை இன்ட்ரொடியூஸ் பண்ணி சான்ஸ் வாங்கித் தரேன். அது ஒண்ணும் கஷ்டமில்லே; என்னாலே சுலபமா முடியும். அதைச் செய் சுமதி".

சுமதி ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்கு வருகிற தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு மேரியிடம் கேட்டாள். மேரி சிறிதும் தயங்காமல் உடனே பெயர்களை அடுக்கி விவரித்தாள். எல்லாமே புகழ் பெற்ற பெரிய பெயர்களாகவே இருந்தன. 

சந்தேகமே இல்லை. அவர்களில் ஒருவர் மனம் வைத்தால் கூடத் தான் நிச்சயமாக ஸ்டாராகிவிட முடியும் என்று சுமதிக்குத் தோன்றியது. சுமதியின் மனத்தைப் பற்றி மறுபடியும் சபலம் வலை விரித்தது. எதிலிருந்து தப்புவதற்காக அவள் மேரியிடம் சொல்லி விவரித்து மாதம் ஐம்பது ரூபாய் வீதம் நாலு மாதத்தில் அவள் கடனைத் தீர்த்துவிடுவதாகச் சொல்லியிருந்தாளோ அதிலேயே மீண்டும் வகையாகச் சிக்கினாள் அவள். அன்று மாலையே மேரியோடு பரங்கிமலைக்கு வர இணங்கினாள் சுமதி.

"ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மேரீ! உன்னோட சேர்ந்து போனால் வார்டன் கோபித்துக் கொள்கிறாள். நீ முதலிலேயே போயி ஜெமினி சர்க்கிள் கிட்ட இரு. நான் பின்னாடி வந்து உன்னோட சேர்ந்துக்கிறேன். போயிட்டு வந்துடலாம். எட்டரை மணிக்குள்ளே நான் ஹாஸ்டலுக்குத் திரும்பிடணும். சினிமாவிலேயிருந்து திரும்பி மெஸ்ஸிலே சாப்பாடு கிடைக்காமே நேற்று ராத்திரியே நான் பட்டினி கிடக்கும்படி ஆச்சு.இன்னிக்கும் அப்படி ஆயிடக்கூடாது.”

“எட்டரை மணி எதுக்குடி? நீ ஏழு மணிக்கே அங்கேயிருந்து திரும்பிடலாம். அதற்கு நான் பொறுப்பு சுமதி?”

அன்று மாலை மறுபடி வார்டனிடம் தியாகராய நகரில் உறவுக்காரப் பாட்டி ஒருத்தி சாகக் கிடப்பதாகவும், அவளை உடனே பார்த்தாக வேண்டும் என்பதாகவும் பொய் சொல்லி இரண்டுமணி நேரம் வெளியே போய்வர அனுமதி பெற்றாள் சுமதி. சொல்லிவைத்த படியே ஜெமினி சர்க்கிளில் மேரி டாக்ஸியோடு காத்திருந்தாள்.

இருபது நிமிஷத்தில் பரங்கிமலைப் பகுதியில் விசாலமான தோட்டத்தோடு கூடிய ஓர் ஒட்டடுக்கு வீட்டுக்குள் டாக்சி போய் நின்றது. அந்தத் தோட்டத்திலேயே ஒரு பகுதியில் கீற்றுக் கொட்டகை போல் ஒரு பெரிய 'ஷெட்' இருந்தது. அந்த ஷெட்டின் முகப்பில்

'ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்' என்று போர்டு தொங்கியது. வெளியே ஐந்தாறு பெரிய கார்கள் நின்றன. சுமதியை இரண்டு நிமிஷம் வெளியே நிற்கச் சொல்லி வேண்டிக் கொண்டபின் முதலில் தான் மட்டும் உள்ளே சென்றாள் மேரி. ஐந்து நிமிஷம் கழித்து மறுபடி வெளியே வந்து, "வா சுமதி!' என்று அவளையும் உள்ளே அழைத்துச் சென்றாள். மேரியுடன் சுமதி படபடக்கும் நெஞ்சுடன் சிரமப்பட்டுத் தடுமாறாமல் நடந்து உள்ளே சென்றாள். வெளிப் பார்வைக்கு 'ஷெட்' போலத் தெரிந்தாலும் உட்புறம் நன்கு டெகரேட் செய்யப்பட்டிருந்தது அந்த இடம்.

உள்ளே மதுக் கோப்பைகளும், பாட்டில்களும், சோடாக்களும் நிறைந்த டேபிளைச் சுற்றி நாலைந்து பேர் அலங்கோலமாக அமர்ந்திருந்தனர். சிலர் கால்களை மேஜை மேல் கூடத் துரக்கிப்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். .

"இவர்தான் குபேரா பிக்சர்ஸ் குப்புசாமி, அவர் அன்புமணி சினிடோன், அந்த பக்கம் இருக்கிறது ஆராவமுதன் கம்பெனி" என்ற அந்த நிலையிலேயே அவர்களைச் சுமதிக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினாள் மேரி. அவர்களில் ஒருத்தர் மட்டும் தலைநிமிர்ந்து "இது தான் நீ சொன்ன அந்தப் புதுப் பொண்ணா?" என்று மேரியை நோக்கிக் கொச்சையாக நாக்குழற வினவினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/7&oldid=1146880" இலிருந்து மீள்விக்கப்பட்டது