அமர வாழ்வு/கர்னல் குமரப்பா
கதாநாயகனுடைய பெயர் டாக்டர் ராகவன். செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய தகப்பனார் ஒரு பிரபல டாக்டர். தமது புதல்வனும் தம்மைப் போல் வைத்தியத் தொழிலில் பிரபலமாக வேண்டுமென்று அவர் விரும்பினார். தந்தையின் விருப்பத்தைப் புதல்வன் வெகு நன்றாக நிறைவேற்றி வைப்பான் என்று தோன்றியது. வைத்தியக் கல்லூரியில் படித்து மிகச் சிறப்பாகத் தேறினான். பிறகு அவன் தமக்கு உதவியாகப் 'பிராக்டிஸ்' செய்ய வேண்டுமென்று தந்தை விரும்பினார். ஆனால் பையனுக்கு வைத்திய சாஸ்திரத்தில் ஏற்பட்டிருந்த அபார மோகமானது அதற்கு குறுக்கே நின்றது. "நமது மெடிகல் காலேஜில் இப்போது சொல்லிக் கொடுப்பதெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாலிருந்த வைத்திய சாஸ்திரம். சென்ற பத்து வருஷத்தில் எத்தனையோ அதிசயங்களை மேனாட்டு வைத்திய நிபுணர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நான் அமெரிக்காவுக்குப் போய் அவற்றைக் கற்றுக் கொண்டு வருகிறேன்" என்றான். பிள்ளையின் பிடிவாதமான கோரிக்கைக்குத் தகப்பனாரும் சம்மதிக்க வேண்டியிருந்தது.
ராகவன் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகும் அவன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கக் கூடவில்லை; பெரிய கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சம்பளமில்லாத உதவி ஸர்ஜனாகச் சேர்ந்தான். அவ்விதம் ஆஸ்பத்திரியில் வேலை செய்தால் தான் தன்னுடைய வைத்திய சாஸ்திர அறிவு விசாலித்துப் பரிபூரணம் அடையும் என்று சொன்னான்.
மகனுடைய நோக்கத்தை அறிந்து தகப்பனார் பெருமையடைந்தார். இவன் வெறுமே பணம் சம்பாதிப்பதற்காக வைத்தியம் செய்யப் பிறந்தவன் அல்ல. வைத்திய சாஸ்திரத்தையே விரிவுபடுத்தி மனித வர்க்கத்துக்கு நன்மை செய்யப் பிறந்தவன் என்று தீர்மானித்து அப்படியே செய்ய அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்துச் சில காலத்துக்கெல்லாம் அவர் வைத்தியம் என்பதே தேவையில்லாத மேல் உலகத்துக்குச் சென்றார்.
தந்தையினுடைய சரமக்கிரியைகளைச் சரிவரச் செய்வதற்குக் கூட டாக்டர் ராகவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அவ்வளவுதூரம் அவன் வைத்தியக்கலை அறிவின் வளர்ச்சியில் முழுகிப் போயிருந்தான். அவன் வேலை செய்த பெரிய ஆஸ்பத்திரியில் அவனுடைய இலாகாவுக்குத் தலைவராயிருந்தவர் கர்னல் குமரப்பா என்பவர். அவர் ஐ.எம்.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்தவர். சென்ற யுத்தத்தின் போது, போர்க்களத்துக்குப் போய் வந்தவர். பிற்பாடு ஐரோப்பாவுக்குச் சென்று வியன்னா நகரிலும் பெர்லின் நகரிலும் இருந்த பிரபலமான வைத்திய சாலைகளில் கொஞ்ச காலம் இருந்து தமது வைத்தியக் கலை ஞானத்தை வளர்த்துக் கொண்டு திரும்பியிருந்தார். எனவே வைத்திய உலகத்தில் அவருக்கு மிகவும் பிரசித்தமான பெயர் ஏற்பட்டிருந்தது. "யமதர்ம ராஜனுக்கு ஏதாவது ஆப்ரேஷன் பண்ணிக் கொள்ள நேர்ந்தால் அவன் கூடக் கர்னல் குமரப்பாவிடம் வந்துதான் ஆக வேண்டும்" என்று சொல்வார்கள். அத்தகையவர்களின் கீழே வேலை செய்வதால் தன்னுடைய வைத்திய ஞானத்தையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ளலாம் என்று டாக்டர் ராகவன் எண்ணியிருந்தான். ஆனால் இது விஷயத்திலும் சீக்கிரத்திலே ஏமாற்றம் அடைந்தான். கர்னல் குமரப்பா இரண சிகிச்சையில் பெரிய நிபுணராயிருக்கலாம்; ஆனால் அவருக்கு வைத்தியக் கலையில் அவ்வளவு சிரத்தையில்லை என்று தோன்றியது. பல முக்கியமான ரண சிகிச்சை கேஸுகளை அவர் தமக்கு உதவியாக அமர்ந்த டாக்டர்களிடம் விட்டு வந்தார். ஏதாவது சந்தேகம் கேட்டால் சரியாகப் பதில் சொல்வதில்லை. கேள்வியை மனதில் சரியாக வாங்கிக் கொள்ளாமலே எதையோ கேட்பதற்கு எதையோ பதில் சொல்வது வழக்கமாயிருந்தது.
கரனல் குமரப்பா இப்படி மெய்ம்மறந்து எதிலும் சிரத்தையில்லாமல் ஏனோதானோ என்றிருப்பதற்கு ஒரு கெடுதலான காரணத்தைச் சிலர் கற்பித்துச் சமிக்ஞையாகப் பேசினார்கள். முதலில் அதை டாக்டர் ராகவன் கொஞ்சங் கூட நம்பாததோடு அப்படிப் பேசினவர்களைக் கடுமையாகக் கண்டித்தான்.
அந்த விஷயம் பின்வருமாறு: மெடிகல் காலேஜில் படித்துத் தேறியிருந்த டாக்டர் ரேவதி என்ற பெண் சென்ற வருஷத்தில் அந்த ஆஸ்பத்திரியில் ஒரு வருஷப் பயிற்சி பெரும் பொருட்டு, 'ஹவுஸ் ஸர்ஜனாக' வந்திருந்தாள். அவள் தேசத் தொண்டில் பிரசித்தி பெற்றிருந்த காலமான ஒரு தேச பக்தரின் மகள். கர்னல் குமரப்பா அந்தப் பெண்ணிடம் அளவுக்கு அதிகமான அபிமானம் காட்டுகிறார் என்று பொறாமைக்காரர்கள் சிலர் புகார் செய்தார்கள். இதைக் குறித்து ஆஸ்பத்திரிக்குள்ளேயும் வெளியேயும் சிலர் ஜாடைமாடையாகப் பேசினார்கள். இந்த மாதிரிப் பேச்சு காதில் விழுந்தபோதெல்லாம் டாக்டர் ராகவன் பளிச்சென்று, "இந்த தேசத்தில் மனதில் அசுத்தம் உள்ளவர்கள் யாரைப் பற்றியாவது ஏதேனும் அவதூறு சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். தங்களுடைய மனதிலுள்ள அசிங்கத்தைப் பிறர் மேல் ஏற்றி வைத்துப் பேசுவார்கள்" என்று வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடுவான்.