அமுதவல்லி/மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்


மாண்பு நிறைந்த மனிதப் பிறவியின் சோதனை மிகுந்த மனித வாழ்க்கையிலே, நித்த நித்தம் எத்தனை, எத்தனையோ கதைகள் நடக்கின்றன!— நடந்து காட்டுகின்றன அல்லவா?— எனவே தான், வாழ்க்கை ஒரு கதையாக ஆகிறது; ஆக்கப்படுகின்றது! - அதுபோலவே, கதையும் ஒரு வாழ்க்கையாக ஆகிறது: ஆக்கப்படுகிறது! இந்நிலையிலே தான், வாழ்க்கை எனும் கதையும், கதை ஆகிய வாழ்க்கையும் படைப்பின் தத்துவமாக மட்டுமல்லாமல், படைப்பின் விதியாகவும் அமைந்துவிடுகிறது!

இப்படிப்பட்ட சித்திர விசித்திரமான படைப்பின் தத்துவத்தையும் படைப்பின் விதியையும் உணர்ந்து, அறிந்து தெரிந்து கொள்கின்ற எழுத்துக் கலைஞர்கள் இரண்டாவது பிரம்மாக்களாகவே மதிக்கப்படுகின்றார்கள்!

எழுத்தாளர்கள் பாக்கியவான்கள் !

உண்மைதான்! - நான் பாக்கியவான்! — இரண்டாவது பிரம்மாவாக ஆவதென்பது சாமானியப்பட்ட காரியமா என்ன? - ராஜயோகமான அடி நாட்களிலே, பொங்குவிரி காவிரியின் தாய் மடியிலே தவழ்ந்து கொண்டிருக்கின்ற திருச்சிராப்பள்ளியிலே, நான் பி. ஏ.,— இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தபோதுதான், என்னுடைய முதல் கதை வெளியானது; வெளிப்படுத்தப்பட்டது!— பாருக்குள்ளே நல்ல நாடான அருமைப் பாரதம் ஆனந்தச் சுதந்திரம் அடைந்த அப்புனித நன்னாளிலே, எழுத்தாளர் ஆன நான் உண்மையிலேயே பாக்கியவான் தான் !

இப்போது, நடப்பு உண்மை ஒன்றினையும் சொல்லிவிட வேண்டும்! நாடு விடுதலை பெற்ற நேரத்திலே, நான் அடிமை ஆனேன் !— நான் என்னுடைய எழுத்துக்கு அடிமையானேன்!

எண்ணிப் பார்க்கின்றேன்! — நான் ஏன் எழுத்தாளன் ஆனேன்?—எனக்குத் தெரிந்தவிடை விதியின் பிழை என்பதுதான்! — ஒ சிருஷ்டியின் பரம ரகசியத்தைச் சூட்சுமமாகத் தெரிந்து கொண்ட நான் உண்மையாகவே பாக்கியவான்தானே?

அந்நாளிலே, நான் எழுதிய ‘கரகம்’ என்னும் முதற் கதையைச் சுதேசமித்திரன் ஞாயிறு மலரில் வெளியிட்டவர் சிரஞ்சீவிப் புகழ் கொண்ட நாவலாசிரியர் அமரர் சாண்டில்யன் !— இங்கே ஒர் உண்மையையும் சொல்ல வேண்டும்!—நான் எழுதிய முதல் கதையே அச்சுவடிவம் பெற்று விட்டது!

என் தாய்வீடு: ‘பொன்னி’!—அங்கே தான், என் முதல் நூலாகக் ‘கடல் முத்து’ வெளியானது; அந்தக் ‘கடல் முத்து’ அண்மையில், சரியாக நாற்பதாண்டுகள் கழித்து, மீண்டும் வெளிப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருள் திரு டாக்டர் தயானந்தன் ஃபிரான்—சிஸ் அவர்களது அன்பு பெரிது.

‘கடல்முத்து’ வைத் தொடர்ந்தும், தொடர் சேர்த்தும் இப்பொழுது, முத்து முத்தான சிறு கதைகள் அடங்கிய ‘அமுதவல்லி’ என்கிற என்னுடைய அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் துரை. இராமு பதிப்பக வெளியீடாக வருகிறது. இது, என் சிறுகதை நூல் வரிசையில் இருபத்தி ஐந்தாவது ஆகும்!

தமிழ்ப் படைப்பு இலக்கியத்தில் சிறுகதையின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அருந்தொண்டு— பெருந்தொண்டு ஆற்றின ‘உமா’வை இலக்கிய ஆர்வலர்கள் மறக்க மாட்டார்கள்; ‘உமா’ வை எண்ணுபவர்கள் இந்தப் பூவையையும் எண்ணியதும், எண்ணுவதும் சகஜம்!

‘சுதேசமித் திரன்’, ‘தினமணி கதிர்’, ‘ஆனந்த விகடன்’, ‘அலிபாபா’, ‘கல்கி’, ‘உமா’, ‘கலைமகள்’, ‘அமுதசுரபி’, ‘புதுமை’, ‘பொன்னி’, ‘காவேரி’, ‘நவயுவன்’ போன்ற ஏடுகளில் வெளியான நல்ல கதைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போது திரும்பவும் வெளிப்படுத்தப்படுகின்றன.

தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்ந்தெழுதிய நல்லறிஞர்கள் சிறுகதைகள் குறித்துப் பேசும் போது, பூவையை மறந்து விடாமல் குறிப்பிட்டிருக்கின்றனர்.

1966 ஆம் ஆண்டில் என்னுடைய பூவையின் கதைகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் முதற் பரிசினை வென்றது. பின்னர், 1982-ம் ஆண்டிலே, தமிழக முதல்வர் டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் தமிழக அரசின் சார்பிலே எனக்கு இரண்டு இலக்கிய முதற் பரிசுகளை வழங்கினார். இரண்டு முதற் பரிசுகளை வென்ற நூல்களில் ஒன்று தான், ‘தெய்வம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது!’ என்னும் சிறு கதைத் தொகுப்பு ஆகும்.

இதனை அடுத்து எனது நிதர்சனங்கள் என்ற சிறு கதைத் தொகுப்பு ஒன்றையும் அதனைத் தொடர்ந்து, தற்போது தங்கள் கைகளில் தவழும் ‘அமுதவல்லி’ என்ற இந்தச் சிறு கதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டு உதவிய துரை. இராமு பதிப்பகத்தின் உடைமையாளர் திருமிகு துரை. இராமு அவர்கள் எனக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல் ஆவார். அன்னாருக்குத் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.

அன்புடன்

பூவை எஸ். ஆறுமுகம்