அமைதி

ழெட்டுக் கூரை வீடுகள் ! புல்லடர்ந்த தரையில் சில தேய்ந்த வழிகள்! இடையிடையே மரங்கள் செடிகள், கொடிகள்! கூரைகளைச் சுற்றி வளைந்தோடும் வாய்க்கால்! அங்கும் இங்கும் திரியும் ஆடுகள், கோழிகள், நாய்கள் !

ஒரு கூரைவீட்டின் எதிரில் பிணப்பாடை கட்டுகிறார்கள். ஒருவன் துன்ப முகத்துடன் உள்ளே போவதும் வெளியில் வருவதுமாக இருக்கிறன். வீட்டின் வெளிப்புறம் பத்துப்பேர் குந்தியிருக்கிறார்கள்.

இறந்த கிழவியை வீட்டினுள்ளிருந்து சிலர் தூக்கி வருகிறார்கள். சில பெண்டிர்கள் உடன் வருகிறார்கள். பிணம் தூக்கப்படுகிறது. அந்தத் துன்ப முகத்தினன் தன் இடையில் செருகி வைத்திருந்த சாவியை எடுக்கிறான். வீட்டிலிருந்த பெண்டிர்கள் வெளிச் செல்கிறார்கள். வீட்டை இழுத்துப் பூட்டிவிட்டுப் பிணத்தோடு நட்ட நலியினனாய் நீர் ஒழுகும் கண்ணினனாய் நடந்து செல்லுகிறான். அவன் பெயர் மண்ணாங்கட்டி.

இரண்டு

பிணத்தோடு சென்றவர்கள், மண்ணாங்கட்டியுள்ள வீடு நோக்கி வருகிறார்கள், மண்ணாங்கட்டி தன் வீட்டுக் குறட்டில் நின்று கைகூப்ப, பிணத்தோடுசென்று மீண்ட அனைவரும் கைகூப்பிச் செல்லுகிறார்கள்.

மண்ணாங்கட்டி, வீட்டைத் திறக்கிறான். வீட்டின் உட்புறம் பல பொருள்களையும் பார்க்கிறான். கண்ணீர் சொரிகிறான். ஒருபுறமிருந்த பெட்டியைத் திறக்கிறான். அதிலிருந்து காசுகள் அனைத்தையும் தன் மடியில் வைத்துக்கொள்கிறான். ஓர் எழுதுகோல் சிறிது தாள் எடுக்கிறான். ஒருபுறம் உட்கார்ந்து சிறு தாள் கிழித்து அதில் ஏதோ எழுதுகிறான். எழுதுகோலையும் மற்றும் சிறிது தாளையும் மடியில் வைத்துக்கொள்ளுகிறான்.

அவன் கண்ணெதிரில் கொடியில், ஒரு பழம் புடைவையும், ஒரு வேட்டி ஒரு துண்டும் காட்சியளிக்கின்றன. அவற்றை மடித்துக் கைப்புறம் வைத்து வெளி வருகிறன். வீட்டைப் பூட்டிக் கொள்ளுகிறான். தலையில் முக்காடிட்டு நடக்கிறான்.

மூன்று

ழுெட்டுக் குடிசைகளில், கடைசியில் உள்ள ஒரு பொத்தற் குடிசையின் பின்புறமாக மண்ணாங்கட்டி நின்று, பொத்தற் குடிசையின் உள்ளே பார்க்கிறான். இரக்கம் கொள்ளுகிறன், தன் வீட்டுச் சாவியையும் தான் எழுதிய தாளையும் குடிசையின் உள்ளே போட்டுச் சிறிது தொலைவில் சென்று ஓர் மரத்தடியில் நிற்கிறான், பொத்தற் குடிசையைப் பார்த்தபடி!

பொத்தற் குடிசையின் உள்ளே இருந்து ஒருவன், தன் கையில் சாவியுடனும், மண்ணாங்கட்டி எறிந்த ஏட்டுடனும் வெளி வருகிறான். அவன் மற்றும் ஒரு முறை ஏட்டைப் படிக்கிறான். அவன் கண்கள் வியப்பில் ஆழ்கின்றன. அவன் மகிழ்ச்சியால் விரைவாக மண்ணாங்கட்டியின் வீட்டைத் திறக்கிறான், சுற்றிலும் பார்க்கிறான். மீண்டும் கதவைப் பூட்டிக்கொண்டு தன் பொத்தற் குடிசையை அடைகிறன். உடனே அவனும் மற்றொருத்தியும் பொத்தற் குடிசையிலிருந்த தட்டு முட்டுக்களுடன் மண்ணாங்கட்டியின் வீட்டை அடைகிறார்கள். இவற்றை மண்ணாங்கட்டி கண்டு உள்ளம் பூரித்துச் செல்லுகிறான் ஊரின் புறத்தே.

நான்கு

டுத்த சிற்றூரில் நுழைகிறான். பகலவன் மேற்றிசையில் விழுகிறான், பறவைகள் தழை கிளைகளில் அடங்குகின்றன. குடிசைகளில் விளக்கேற்றப்படுகின்றது. பனி புகைகின்றது. ஊரின் பொதுச் சாவடியில் ஒரு கிழவி மேலாடையின்றித் தன் கையால் மெய்போர்த்துக் குளிரால் நடுங்கியபடி மூலையில் ஒண்டியிருக்கிருள். மண்ணாங்கட்டி காணுகிறான். அவன் முகம் துன்பத்தை யளாவுகின்றது.

கிழவியின் எதிரில் ஒரு பழம்புடைவை வந்து வீழ்கிறது. அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள்.. புடைவையை மகிழ்ச்சியுடன் எடுத்து விரித்துப் போர்த்துக் கொள்ளுகிறாள். அவளின் இருண்ட விழிகளை ஒளி தழுவுகின்றது. புடவை போர்த்த தன் அழகைத் தானே பலமுறை குனிந்துகுனிந்து பார்த்து மகிழ்கின்றான். பற்கள் இல்லாவிடினும் உதடுகளால் சிரிக்கிறாள்.

மண்ணாங்கட்டிக்கு இஃதோர் இன்பக் காட்சி! சிரித்த முகத்தோடு அவன் மேலும் நடக்கிறான்.

ஐந்து

ள்ளிருளில் ஒரு குடிசையில் ஒற்றை விளக்கு எரிகிறது. தரையிற் குந்தித் தலையிற் கை வைத்துக் கண்ணீர் சிந்துகின்றான் ஒருவன். அறையிலிருந்து ஒருத்தி ஒரு சின்னஞ்சிறு மூட்டையுடன் வெளிவந்து கொல்லைப்புறக் கதவு திறந்து வெளிச் செல்லுகிறாள். அவள் சிறிது தொலைவில் தனியே சென்று ஒரு வேலிப்புறத்தில் தன் கையிலிருந்த மூட்டையை மெதுவாகத் தரையில் வைத்துப் போகிறாள். மண்ணாங்கட்டி அம் மூட்டையைச் சென்று எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான். அழகிய குழந்தை யென்று அறிகிறான். அவள் மேனி நடுங்குகிறது. குழந்தையைத் தன் மேலுடையால் மறைத்து எடுத்துப்போகிறான்.

சற்றுத் தொலைவில் ஒரு குளத்தைக் காணுகிறான். அதில் குழந்தையின் செந்தீர் தோய்ந்த மேனியைக் கழுவுகிறான். கொப்பூழ்க் கொடியைக் களைகிறான், உடையால் ஒற்றி வேறு உடை போர்த்துக் கைப்புறத்தில் அணைத்தபடி செல்லுகிறான்.

அங்கொரு தொழுவம் காணுகிறான். அதில் உள்ள ஒரு பசுவைக் காணுகிறான், குழந்தையை ஒரு புறம் படுக்கவைத்து விட்டுப் பசுப்பாலைத் துணி நனையக் கறந்து குழந்தையின் வாயிற் பிழிந்து உண்பிக்கிறான். சற்றுத்தொலைவில் குழந்தையுடன் செல்லுகிறான். ஊர்ப் பொதுச் சாவடி ஒன்று காணுகிறான். 

ஊர்ப் பொதுச் சாவடியில் சிலர் மூட்டை முடிச்சுகளுடன் துயிலுகிறார்கள். ஆயினும், அவர்களில் ஒரு கணவனும் மனைவியும் துயில் நீங்கி எழுந்து மற்றவர்கள் துயில்வதையும் அவர்களின் அண்டையில் மூட்டை முடிச்சுகள் கேட்பாரற்றுக் கிடப்பதையும் பார்க்கிறார்கள். அந்த மூட்டைகளிற் சிலவற்றைத் திருடிச்சென்று சிறிது தொலைவிலுள்ள ஆலமரத்தின் வேரில் மறைத்து மீண்டும் துயில்வாரோடு தாமும் வந்து துயில்கிறார்கள்.

கிழக்கு வெளுக்கிறது. ஆலமரத்தை நோக்கி ஒரு கணவனும் அவன் மனைவியும் சுற்று முற்றும் பார்த்தபடி வருகிறார்கள். அவர்கள் திருடிப் பதுக்கிய மூட்டைகளைக் காணுகிறார்கள். அம் மூட்டைகளின் அண்டையில் வண்டு விழிகாட்டி மலர்முகம் காட்டிச் சிறிய மலர்க் கைகளும் கால்களும் அசைத்துக் கிடக்கும் ஒரு குழந்தையையும், குழந்தையின் அண்டையில், சில தங்க நகைகளும் பணமும் கிடப்பதையும், காணுகிறார்கள். மனைவி குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறாள், கணவன் முகம் மகிழ்ச்சி கொள்ளுகிறது. ஆலமரத்தின்மேல் ஒரு நெஞ்சம் பூரித்துப் போகிறது.

பிள்ளையையும், பணம், நகை மூட்டைகளையும் எடுத்துக்கொண்டு கணவனும் மனைவியும் போகிறார்கள். ஆலமரத்தை விட்டு இறங்கிய மண்ணாங்கட்டி வேறு புறம் செல்லுகிறான். 

ஆறு

ண்ணாங்கட்டி ஒரு சிற்றூரை அடைகிறான். இளங்கதிர் கடலை விட்டு எழுகிறது. அவன் நடக்கிறான். அவன் கண்கள் நாற்புற நிகழ்ச்சிகளையும் துழாவுகின்றன.

அங்கோர் வண்டிக்காரன் ஏறுகால்மேல் உட்கார்த்து மாடுகளை ஓட்டுகிறான். வண்டியில் ஏற்றிய பூச்சுணைக்காய் பின்புறத்தில் நழுகுகின்றது. ஆயினும், அது விழுமுன் ஏந்தி முன்னிருந்த இடத்தில் வைக்கின்றன மண்ணாங்கட்டியின் கைகள்.

தெருத்திண்ணைமேல் தூணிற் கட்டப்பட்ட கன்றுக்குட்டி கால்தவறிக் கீழே விழுகிறது. அதன் உடல் பதைக்கிறது. கழுத்திற் கட்டிய கயிறு நெஞ்சை இறுக்குகிறது. அது தூக்கு மாட்டிக் கொண்ட உடல்போல் தொங்கித் துடிக்கிறது! இந்நிலை அதற்கு ஒரு நொடி. மறு நொடியில் மண்ணாங்கட்டி மீட்சியளித்து அதற்கு முத்தமும் தந்து மகிழ்ந்தபடி நடக்கிறான்.

மண்ணாங்கட்டிக்கு உச்சியினின்று கதிரவன் நெருப்புக் குடை பிடிக்கும் நேரம்! ஒரு குளக்கரையில் இருவர் இலைவிரித்து நிறையச் சோறிட்டு உண்டிருக்கிறார்கள். அக்காட்சியை மண்ணாங்கட்டி பார்க்கிறான். திகைக்கிறான். தன் கையால் அடிவயிற்றைத் தடவுகிறான், அவன் முகம் சுருங்குகிறது.

அப்போது அவன் எதிரில் ஒரு வைக்கோல் வண்டி போகிறது. எத்தனை பெரிய வண்டி! அவ்வண்டிமேல் எவ்வளவு வைக்கோல்! இளைத்த இரண்டெருதுகள், மண்டியிட்டு இழுத்துச் செல்கின்றன. அவற்றின் கண்கள் பீளை கக்குகின்றன. கடைவாய் நுரையூற்று!

மண்ணாங்கட்டி பாய்கிறான். வண்டியின் பின்புறம் தன் தலையைப் பொருத்தி உரங் கொண்டமட்டும் தள்ளிச் செல்கிறான். எருதுகள் துயர் நீங்கி மாப்பிள்ளைபோல் நடக்கின்றன. மண்ணாங்கட்டியின் சுருக்க முகம் மலர்கின்றது. வண்டி தன் இடத்தையடைகின்றது. மண்ணாங்கட்டி வேறு வழி நோக்கி நடக்கிறான்.



ஏழு

ள்ளிருளில் தனித்திருக்கும் ஒரு வீட்டின் தெருப்புறத்து அறைச்சன்னலின் கம்பிகளை இருவர் விலக்குகிறார்கள். வீட்டின் தெருக்கதவு பூட்டப்பட்டிருக்கிறது. மண்ணாங்கட்டி எதிரிலுள்ள மரத்தில் மறைந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். அறையின் உள்ளே ஒருவன் புகுகின்றான். பிறகு வெளிவருகிறான். இருவரும் தெருப்புறத்திலுள்ள மற்றோர் அறையின் சன்னற் கம்பிகளை விலக்குகிறார்கள். ஒருவன் உள்ளே புகுந்து தவலை ஒன்றை எடுத்து வெளியிலிருந்தவனிடம் நீட்ட அவன் அதை வாங்கிவைக்கிறான். மற்றும் உள்ளே சென்றவன் வேறு பொருளை எடுக்குமுன் மண்ணாங்கட்டி, வெளியிலிருப்பவன் காணும்படி சற்றுத் தொலைவில் உலவுகிறான். வெளியிலிருப்பவன் மெல்ல நழுகுகிறான். சிறிது தொலைவில் நழுகியபின், அவனை நோக்கி மண்ணாங்கட்டி, ஒரு கல்லை எறிகிறான். அவன் ஓடிமறைந்து விடுகிறான். மண்ணாங்கட்டி, சன்னலண்டை வந்து நின்று கொள்ளுகிறான். அறையின் உள்ளே சென்றவன் பெரியதும், சிறியது மாகிய பல பொருள்களை வெளியே நீட்டுகிறான். நீட்டுந்தோறும் மண்ணாங்கட்டி அவற்றை வாங்கி வாங்கி அடுத்த சன்னல் வழியாக அறைக்குள் செலுத்திவிடுகிறான். சோறு நிறைந்த ஓர் குண்டானையும், குழம்பு நிறைந்த குவளையையும் கடைசியில் உள்ளேயிருத்தவன் கொடுக்கிறான். மண்ணாங்கட்டி அவ்விரண்டையும் சன்னலின் எதிரிலேயே வைத்து விடுகிறான். அவன் அறையைவிட்டு வெளிவருகிறான். மண்ணாங்கட்டி நழுகி எதிரில் மரத்தில் மறைந்து கொள்ளுகிறான். வந்தவன், சோற்றுக்குண்டானையும், குழம்புக் குவளையையும் தூக்கிக்கொண்டு தன் துணைவனைத் தேடிச் சிறிது நகருகிறான். அவன் இல்லாததால் இன்னும் சிறிது நகருகிறான். உடனே அவனை நோக்கி ஒரு கல் சீறி வந்து எதிரில் விழுகிறது. மற்றொன்று, இன்னொன்று. குண்டானோடும் குவளையோடும் அவன் கம்பி நீட்டுகிறான். மண்ணாங்கட்டி வேறு புறமாகச் செல்லுகிறான்.

எட்டு

வெயிலில் தங்கம் போர்த்ததுபோல் ஒரு மலை தோற்றம் அளிக்கிறது. அதன் சரிவில் ஒரு பெருமாள் கோவில் தோன்றுகிறது. கோவில் சூழ ஆயிரக்கணக்கான மக்களின் நடமாட்டம்.

அங்குள்ள ஒரு தோப்பில் ஒரு புறமாக உட்காருகிறான் மண்ணாங்கட்டி.

தோப்பில் பல புறங்களிலும், வெயர்வை ஒழுகும் மேனியும் கண் குழிவுபட்ட முகமுமாகப் பலர் காணப்படுகிறார்கள். சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள் சோர்ந்து! சிலர் படுத்துப் புறள்கிறார்கள் வயிற்றைப் பிசைந்தபடி! அவர்கள் முகங்கள் ஒவ்வொன்றும் பசித் துன்பத்தால் கருகியிருக்கின்றன.

ஒரு மூலையில் வேறொரு காட்சியை மண்ணாங்கட்டி காணுகிறான்.

புன்னை மரத்தின் நன்னிழலில் பொன்னிழை கலந்து நெய்த துகில் விரித்து அதன்மேல் மணியிழை மின்னும் ஒருத்தியும், தங்கத் துகில் சரிந்து வீழ வெயில் வீசும் மார்பணி துலங்க, அருகமர்ந்த ஒருவனும் மகிழ்ந்திருக்கின்றனர். அவள் பாலில் துவைத்த ஒப்பிட்டை அவன் வாயில் அப்பிக்கொண்டிருக்கிறாள். அவர்கள் எறிந்த நெய்யொழுகும் பண்ணியமும், அப்பமும் எதிரில் நாய்கள் தின்று தெவிட்டுதல் அடைகின்றன.

மிகுபலர் துன்பமுறுகின்றனர். மிகச் சிலர் இன்பமுறுகின்றனர். மண்ணாங்கட்டி காணுகின்றான். புன்னைமரத்தடியைவிட்டு மண்ணாங்கட்டியின் உள்ளம் இப்பெரு வையத்தை நோக்குகின்றது:

அங்கு மிகுபலர் துன்புறுகின்றனர். மிகச் சிலர் இன்புறுகின்றனர், சிறிது நேரம் சென்றது. மண்ணாங்கட்டி மரத்து நிழலில் தூங்குகிறான்.

ஒன்பது


ருள்! பெருமாள் கோவில் மடப்பள்ளியின் தெருப்பக்கத்துச் சன்னல் திறக்கப்படுகிறது! உட்புற மிருந்து ஒரு பெருந்தட்டு வெளிப்புறம் நீட்டப்படுகிறது! அந்தச் சன்னலில் கருத்தின்றி ஒரு பெண் சற்றுத் தொலைவில் மற்றொருவனின் தோளில் கைவைத்தபடி நிற்கிறாள். மண்ணாங்கட்டி வெளிப்புறமிகுந்து தட்டை வாங்கிப் போகிறாள்!

பெண்ணை விட்டுக் காளை பிரிகிறான். பெண்ணாள் கண்பூத்துப்போக நெடு நேரம் சன்னலை நோக்கி நிற்கிறாள். அவள் கைகளை முறித்துக்கொண்டு செல்கிறள்.

மண்ணாங்கட்டி, தட்டிலிருந்த பொங்கலில் வேண்டுமட்டும் அருந்துகிறன். மீந்ததை ஒருபுறம் உட்கார்த்து தூங்கி விழும் நொண்டியின் எதிர்வைத்து நடக்கின்றான். நொண்டி விழித்துப் பொங்கலை மகிழ்ந்துண்ணுகிறான்.



பத்து

ண்ணாங்கட்டியின் எதிரில் ஒரு பெரிய ஊர் தோன்றுகிறது. வானைத் தொடுகின்ற இரண்டு மாடி வீடுகள் தோன்றுகின்றன. இவ்விரண்டு மாடி வீடுகளும் தம்மில் நெருங்கியிருக்கவில்லை. இரண்டுக்கும் நடுவில் ஒரு கல் தொலைவு இடை வெளியிருக்கலாம். மண்ணாங்கட்டி ஊரில் நுழைகிறான். ஊர்ப்புறத்தில் புல்லற்ற வெளியில் சில மாடுகள் மேய்கின்றன. அவை எலும்பும் தோலுமாய்த் தோன்றுகின்றன. தெருக்களைக் காணுகின்றான். நிறையப் பொத்தற் குடிசைகள்; தெருக்களில் தீனியின்றி மண்ணைக் கொத்தித் தின்னும் இளைத்த கோழிகள் மேய்கின்றன. ஆடையின்றி விலாவெடுத்த சிறு குழந்தைகள் மண்ணிற் கிடக்கின்றனர். குலைக்கவும் வலியின்றி நாய்கள் மண்ணாங்கட்டியைக் கண்ணாற் பார்த்துப் பழையபடி புறங்கால் இடுக்கில் தலைவைத்துச் சுருண்டு படுக்கின்றன.

பேச்சுக் குரலற்ற குடிசைகளைக் காணுகின்றான். சில குடிசைகளை அவன் எட்டிப்பார்க்கின்றான். பூனை தூங்கும் அடுப்புக்கள், ஈரமற்ற முற்றங்கள், ஒட்டடை நிறைந்த அடுக்குப் பானைகள் காட்சியளிக்கின்றன, அவன் விழிகளில் இரக்கமும் வியப்பும் மாறி மாறித் தோன்றுகின்றன.

ஒரு மாந்தோப்புத் தோன்றுகின்றது. மரங்களில், காயில்லை, வடுக்களும், பூவும் இருக்கின்றன. ஏழை மக்கள் சிலர் மாவடு, பூ, தளிர் இவைகளைக் கையால் தாவிப் பறித்து உண்கிறார்கள். அவர்களின் கண்கள் எவனுக்கோ அஞ்சுகின்றன.

ஒருவன் கையில் தடியுடன் வருகிறான். மக்கள் ஓடி ஒளிகிறார்கள். வேறு புறம் மண்ணாங்கட்டி செல்லுகிறான்.

பழுக்காத பனங்காயைப் பலர் பல்லாற் கடித்துக் கிடக்கின்றனர், மற்றும் சிலர் பச்சோலையைத் தின்கின்றனர். மண்ணாங்கட்டி மெய் நடுங்குகிறான். அவன் மறுபுறம் நடக்கின்றான்.

பெரியதோர் மாடிவீடு, அதையடுத்துப் பல "பொருட்காப்பு விடுதி" கள், தோன்றுகின்றன. மாடி வீட்டின் வாயிலில் நிறைய மக்கள் கெஞ்சிய முகத்தோடும், துணி விரித்து ஏந்திய கையோடும் மொய்த்திருக்கின்றார்கள். சிலர் கூழ் ஏந்தும் சிறு பானையுடன் ஏங்கியிருக்கின்றனர். வேறு புகல் இல்லையென்னும் நிலையில் பலர் வாயிலின் நேரில் உட்கார்ந்திருக்கின்றனர். மற்றும் பலர் உட்கார்ந்திருக்க வலியின்றிப் படுத்திருக்கின்றனர். மண்ணாங்கட்டி நின்று பார்க்கிறான். அவன் முகம் கருமையடைகின்றது. சிறிது நேரம் செல்ல மாடிவீட்டினின்று ஒருவன் கையிற் கோலுடன் ஏழை மக்களை நோக்கிச் சினத்துடன் வருகின்றான். மக்கள் அஞ்சிப் பறக்கின்றார்கள், அவன் உள்ளே போகின்றான். மீண்டும் ஏழை மக்கள் மாடிவீட்டை மொய்க்கின்றார்கள். மண்ணாங்கட்டி மேலும் நடக்கின்றான் விரைவாக!

ஒரு கல் தொலைவு செல்லுகின்றான். மற்றொரு வீட்டைக் காண்கின்றான். அங்கும் காணுகின்றான், கையேந்தி நிற்கும் ஏழைமக்களை மண்ணாங்கட்டி ஆவலுடன் எதையோ பார்க்கிறான். நடக்கிறான் மேலும்! ஊரின் மேற்குப் புறத்தில் ஏரிக்கரையை அடைகிறான்: ஏரியைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கின்றன அவன் விழிகள். அவன் முகத்தில் சிறிது மகிழ்ச்சியரும்புகின்றது. ஏரி நிறைய நீர் இருக்கிறது. ஏரியின் மறுமுனையைப் பார்க்கிறான். ஊர் தோன்றுகிறது. அவ்வூருக்கும் இந்த ஏரிக்கும் இடையில் தடைச் சுவர் ஒன்று மட்டமாய்க் கட்டப்பட்டிருப்பதை அறிகிறான். மற்றும் ஏரியின் அருகில் குறவர் குடிசைகள் தோன்றுகின்றன. உற்றுப் பார்க்கிறான் மண்ணாங்கட்டி. ஒரு குறவன் மூட்டம்போட்டு அதில் உயிருடன் நாய் ஒன்றை வதக்கிக் கொண்டிருக்கிறான். அதன் தசையை எதிர் பார்த்துப் பல குறவர் ஏங்கி நிற்கிறார்கள். மண்ணாங்கட்டி விரைந்து சென்று குடிசையொன்றில் நுழைகிறான். சிறிது நேரத்தில் அக் குடிசையினின்று ஒரு குறவன் வெளிச் செல்லுகிறான். அவன் உடனே பல குறவர்களுடன் தன் குடிசைக்குள் நுழைகிறான். பகலவன் மேற்றிசையில் வீழ்கிறான். கையெழுத்து மறைகிறது. பல குறவர்கள் மண்ணாங்கட்டியுடன் செல்லுகிறார்கள் கையில் கடப்பாரைகளுடன்.

ஏரியின் அக்கரையில் கட்டப்பட்டிருக்கும் தடைச்சுவர் இடிபடுகின்றது. மண்ணாங்கட்டியின் தோள் விரைவாக அவ்வேலையில் ஈடுபடுகின்றது. குறவர்கள் தம் தலைவருடன் போட்டியிடுகின்றார்கள். மண்ணாங்கட்டி ஏரியைப் பார்க்கிறான். அவன் மகிழ்ச்சி கொண்ட முகத்தை மற்றும் குறவர்கள் காணுகிறார்கள். குறவர்களும் மண்ணாங்கட்டியும் குறவரின் குடிசைகளை நோக்கிச் செல்கிறார்கள்.

சிறிது நேரத்தில், ஒருவன் சுளுந்தக்கழி கொளுத்தியபடி இடிக்கப்பட்டிருக்கும் தடைச் சுவரைப் பார்க்கிறான். ஏரியின் மறுமுனையில் தோன்றும் ஊரை நோக்கி விரைந்து செல்லுகிறான்! உடனே சுளுத்தக்கழி கொளுத்திப் பிடித்தவனும் ஊர்ப் பெரியவர்களும் தடைச் சுவரை ஆராய்கிறார்கள். அவர்கள் கண்ணில் தீப்பொறி பறக்கிறது. அவர்கள் தம் எதிரில் தோன்றும் இரண்டுமாடிகள் உள்ள ஊரை நோக்குகிறார்கள். அவர்கள் தலைகள் சூள்கொண்டு அசைகின்றன. சினத்தோடு செல்கின்றார்கள்.

மீண்டும் குறவர்களுடன் மண்ணாங்கட்டி செல்கிறான். ஏரிக்கரை இடிபடுகின்றது. தண்ணீர், உடைந்த தடைச்சுவரைத் தாண்டி அவ்வூரில் நுழைகிறது. இடையில் பரந்த வயல் அனைத்தும் வெள்ளம். அவ்வூரிற் சென்ற அளவு இவ்வூரிலும் வெள்ளம் புகுகின்றது. மண்ணாங்கட்டி குறவர்களுடன் செல்லுகிறான்!

பதினொன்று

மாடி வீட்டின் பெருங் கதவு திறக்கப்படுகின்றது. பெரிய பண்ணையார் முறுக்கிய மீசையுடன் விரைவாக வெளிவருகிறார். அவர் மனைவி அணிகளையும் தன் அழகையும் சுமந்து வெளிவருகின்றாள் இருவரும் தெரு நடுவில் நின்று கையில் மண்வெட்டியையும் சிவப்புத் துணியையும் தூக்கி அசைத்துக் காட்டுகிறார்கள். ஊர் மக்கள் மண்வெட்டி, தட்டு, பாரை தூக்கி ஏரி நோக்கி ஓடுகிறார்கள்.

மற்றொரு மாடி வீட்டினின்று சின்ன பண்ணையார் அவருடைய அழகற்ற மனைவியும் அவ்வாறே அடையாளங் காட்ட அங்குள்ள மக்களும் ஏரியை நோக்கி ஓடுகிறார்கள் கருவிகளுடன்.

இரு பண்ணையார்களின் நூற்றுக்கணக்கான ஆட்கள், பெருமிடாக்களில் அரிசியைக் கழுவிப் போட்டுச் சோறாக்குகிறார்கள். ஏரியில் வேலைசெய்யும் ஊர் மக்கட்கு வாழையிலை திருத்தப்படுகிறது, சோறு இட. கறிகள் அரிகிறார்கள் குழம்பு வைக்க. நூற்றுக்கணக்கான அடுப்புக்கள் எரிகின்றன. தாளிப்பு மணம் கமகம என்று எழுகின்றது நாற்புறத்தும்.

அனைத்தும் ஊர் மக்கட்கு! மகிழ்ச்சியுடன் திரிகிறான் மண்ணாங்கட்டி. அவன் ஏரிக்கரை செல்கிறான். ஊர் மக்கள் ஏரிக்கரை செப்பனிடுவதைப் பார்க்கிறான். மீண்டும் ஊருக்குள் வருகிறான். சோறு கறிகள் இலையில் வரிசை வரிசையாக வட்டிக்கப்படுவது காணுகிறான். பசிகொண்ட நாய்கள் தாமே சோற்றண்டையில் சூழ்ந்தன. பசிகொண்ட மக்களோ பண்ணையார்கள் கையசைக்க வந்து சேர்ந்தனர்.

அனைவரும் உணவருந்துகிறார்கள், மண்ணாங்கட்டி அள்ளூறிப் போகிறான். மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உண்ணும் மக்களைச் சுற்றிச் சுற்றி வருகிறான். விலாப்புடைக்க உண்டு எழுகிறார்கள் ஊர் மக்கள். அவர்கள் வாய் நிறைய வெற்றிலைப் பாக்கிட்டு மெல்லுகிறார்கள். அவர்கள் முகங்கள் பொலிவுறுகின்றன. முதுகெலும்பை ஒட்டிய வயிறு முற்புறம் பெருத்திருப்பதை மண்ணாங்கட்டி கடைக்கண்ணால் பார்த்துப் பார்த்துக் கடையுதட்டால் சிரிப்பை ஒழுக விடுகிறான். அனைவரும் ஏரி நோக்கிச் செல்லுகிறார்கள். வேலை தொடங்குகிறார்கள். மாலை வேளைச் சோறு சமைக்கத தொடங்குகிறார்கள் பண்ணையாட்கள. மண்ணாங்கட்டி தான் சாப்பிட மறந்துபோனதைத் தன் வயிற்றைத் தடவிய அவன் கைகள் காட்டுகின்றன.

மாலைப்போதில் மீண்டும் ஊர் விருந்து மண்ணாங்கட்டிக்கு உட்பட நடக்கிறது.

பன்னிரண்டு

மாலையில், மண்ணாங்கட்டி ஏரிக்கரையின் இடையில் நின்று வேலை நடப்பதைப் பார்க்கிறான். நாளை வேலை தீர்ந்துவிடும் நிலையில் இருப்பது, அவனுக்குத் தெரிகிறது. ஊர் மக்கள் ஏரிக்கரையைக் கட்டுவதில் சுறுசுறுப்பாக வேலைசெய்வதைப் பார்க்கிறான். அவன் விழிகள் நினைப்பில் தோய்கின்றன. பகலவனும் மேற்கில் மறைகிறான். ஊரில் நுழைகிறான்.

பெரிய பண்ணையார் வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருக்கும் மணிப்பொறியின் முட்கள் இரவு 9 என்று காட்டுகின்றன. மண்ணாங்கட்டி அப்பெரு வீட்டை ஒரு சுற்றுச் சுற்றிவருகிறான். மேலும் அவன் அவ்வீட்டின் பக்கவாட்டில் நின்று வீட்டின் உயரத்தைக் கண்ணால் அளக்கிறான்.

அப்பெரு வீட்டின் மாடியில், ஒரு கூடம். அங்குச் சாப்பாட்டு மேசை, நாற்காலிகள். அலமாரி, ஒருபுறம் இரண்டு கட்டில்கள், விளக்கொளியில் காட்சியளிக்கின்றன. பெரிய பண்ணையார் அங்கு வந்து மேசையின் எதிரில் உட்காருகிறார். ஆட்கள், சாப்பாட்டுக்குரிய கறிகள் முதலியவைகள் கொண்டுவந்து வைத்துப் போகிறார்கள். பெரிய பண்ணையாரின் அழகு மனைவி வருகிறாள். அவள் இரண்டு பேருக்கு உணவு படைக்கிறாள். அலமாரியைத் திறக்கிறாள். சாராயச் சீசாவை எடுத்துக் கணவன் எதிரில் உள்ள ஏனத்தில் ஊற்றுகிறாள். அவன் குடிக்கிறான். மேலும் மேலும் ஊற்றுகிறாள். அவளும் அவனும் சோறு உண்ணத் தலைப்படுகிறார்கள். இடையிடையே இடது கையால் தன் கணவனுக்குச் சாராயம் ஊற்றிக்கொடுக்க அவன் குடித்துத் தலைசாய்கிறான். அழகி தன் கணவனைத் தூக்கி, அடுத்துள்ள ஒரு கட்டிலில் போடுகிறாள். அவன் உயிரற்றவன்போல் ஆகிறான். மனைவி, உண்டு கைகழுவி, அணிமாற்றி அணிந்தும் உடைமாற்றி உடுத்தும், கண்ணாடி பார்த்துத் தலைசீவியும், முகந் திருத்தியும் ஒரு கருநிறமுள்ள மெல்லிய பட்டு உடையால் முக்காடிட்டு மாடியைவிட்டு இறங்குகிறாள். இதையெல்லாம் மாடியின் சன்னலில் ஒன்றிப் பார்த்திருந்த மண்ணாங்கட்டியும் அவள் இறங்குமுன், கீழிறங்கி வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருபுறம் ஒளிந்து நிற்கிறான். பெரிய பண்ணையாரின் வீட்டுக் கொல்லைப்புறக் கதவு திறக்கப்படுகிறது. பெரிய பண்ணையிள் மனைவி வெளியே வருகிறாள். அங்கு வந்து நிற்கும் ஒரு வண்டியில் ஏற வண்டி சின்ன பண்ணையை நோக்கிப் போகிறது. மண்ணாங்கட்டியும் தொடர்கிறான்.

சின்ன பண்ணையாரின் வீட்டைத் தாண்டிச் சிறிது தொலைவில் கட்டப்பட்டிருக்கும் ஒரு கோடை விடுதியின் எதிரில் வண்டி நிற்கிறது. அங்கு காத்திருந்த சின்ன பண்ணையாரால் அவ்வழகிய மங்கை அள்ளிக்கொண்டு, போகப்படுகிறாள் விடுதிக்குள்.

பதிமூன்று

றுநாள் ஏரியில் மக்கள் வேலைசெய்வதையும், வேலை செய்வோருக்குச் சோறு ஆக்கப்படுவதையும், பார்த்துக் கொண்டு, அன்றிரவு பின்புறமாக மடியில் ஒரு பூனைக்குட்டியுடன் வீட்டின் மாடியில் ஏறுகிறான்.

பெரியபண்ணையார் சாப்பாட்டு மேசையின் எதிரில் வந்து உட்காருகிறார். அவர் எதிரில் ஒரு பூனைக்குட்டி, உலவுகிறது! அதன் கழுத்தில் ஒரு கடிதம் தொங்குகிறது. பூனைக்குட்டியைப் பிடித்து அந்தக் கடிதத்தைப் படிக்கிறார். அவர் முகம் எரிகிறது. என்னமோ நினைக்கிறார். கடிதத்தை மேசைமேல் வைத்துவிட்டு, அலமாரியைத் திறந்து சாராயச் சீசாவை எடுத்து, அதைத் திறந்து சாராயத்தையெல்லாம் நீர் விழும் தூம்பில் ஊற்றிவிட்டு அதில் நிறையத் தண்ணீர் ஊற்றி எதிரில் வைத்துக் கொள்ளுகிறார். கறிகள், சோறு வருகின்றன. மனைவி வருகிறாள். சாராயம் என்று எண்ணி, தண்ணீரை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள் கணவனுக்கு! அவன் உண்டு, மயங்கியவன்போல் மேலுக்குக் காட்டுகிறான். மனைவி கணவனைத் தூக்கிக் கட்டிலில் போட்டு உடை உடுத்து முகம் திருத்தி, கரும் பட்டால் முக்காடிட்டு மாடி விட்டு இறங்குகிறாள். இறங்குகையில் மேசையின் கீழே விழுந்து கிடக்கும் கடிதத்தையும் எடுத்துக் கொண்டு போகிறாள். அவள் வண்டியில் ஏறுகிறாள். வண்டி போகிறது. பெரிய பண்ணையார் ஒரு கறுப்புக் குதிரையில் ஏறி வண்டியின் பின்னோடு செல்லுகிறார்.

அவள் சின்ன பண்ணையாரின் கோடை விடுதியை அடைகிறாள். சின்ன பண்ணை எதிர் கொண்டழைத்துப் போகிறார். இதைப் பெரிய பண்ணையார் தொலைவிலிருந்து பார்த்துத் திரும்புகிறார். ஒளிந்து தின்று பார்த்திருக்கும் மண்ணாங்கட்டியும் மகிழ்ச்சியுடன் திரும்புகிறான்.

ஏரியின் மேற்கிலிருந்து ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. அப்படை சின்ன பண்ணையார் வீட்டை அடைகிறது. குதிரைகள் ஒருபுறம் கட்டப்படுகின்றன. பலர் இறங்குகிறார்கள்! மண்ணெண்ணெய் சின்ன பண்ணை வீட்டின் மேல் மழையாய்ப் பொழிகிறது! வீடு சிறிது நேரத்தில் தழலின் இடையே காட்சியளிக்கிறது. வந்த அயலூரார் குதிரை ஏறிப் பறந்து செல்லுகிறார்கள். செல்லுபவர் ஒருவரின் சுழல் துப்பாக்கி கீழே விழுகிறது, மண்ணாங்கட்டி அதை எடுத்துக் கொண்டு ஒருபுறம் மகிழ்ந்தோடி, ஏழை மக்கள் வீடுதோறும் புகுந்து புகுந்து வெளிவருகிறான்.

பொழுது விடிகிறது. சின்ன பண்ணையை அடுத்துள்ள ஏழை மக்கள் அனைவர்க்கும் வேலை கிடைக்கிறது. நெல், கேழ்வரகு முதலிய மணிகளை அவர்கள் வேறிடங்கட்கு மாற்றுகிறார்கள். எரிவதைச் சிலர் அவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறைக் கொள்ளிகளை ஒருபுறம் சேர்க்கிறார்கள். அழகிய தட்டுமுட்டுக்களை அணுவாக்குகிறார்கள்.

சிலர் முறையாக நெல் முதலியவற்றை, ஏழை மக்களின் வீடுதோறும் நிரப்புகிறார்கள் கேட்பாரின்மையால்.

சின்ன பண்ணையாரும், அவர் மனைவியாரும் நேற்றிரவு சின்ன பண்ணையிடம் வந்த அழகு மங்கையும் [பெரிய பண்ணையார் மனைவி] ஒரே வண்டியில் ஏறிக்கொண்டு நகர் நோக்கிப் பயணப்படுகிறார்கள். மூவரும் ஏறிய வண்டியானது பெரிய பண்ணையார் வீட்டுத்தெருவில் போகிறது. பெரிய பண்ணையார் அவர்களைப் பார்த்து வயிற்றைப் பிசைகிறார். அவர் கண்கள் தீயைக் கக்குகின்றன. மண்ணாங்கட்டி மகிழ்ச்சியுடன் மறுபுறம் செல்லுகிறான்.

எரிந்துபோன பகுதிபோக எரியாதன அனைத்திலும் உள்ள பல பொருள்கள் ஏழை மக்கட்குக் கிடைக்கின்றன. அவர்கட்கு நிறையச் சோறு சமைக்கப்படுகிறது. காய்கறிகள் ஆக்கப்படுகின்றன. மண்ணாங்கட்டி அங்கு ஒருபுற மிருந்த நெய்க் குடத்தை, அடுப்பில் இருந்த இருப்புச்சட்டியில் தலைகீழ் ஊற்றி அதில் உளுத்த வடை தட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறான்.

பதினான்கு

மாலை இரண்டு மணிக்கு ஏரிக்கரை நண்பர்களை நோக்கி மண்ணாங்கட்டி செல்லுகிறான். அந்தக் குறவர் குடிசைகள் அதிரும்படி இரண்டு குறவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மண்ணாங்கட்டி நடுங்குகிறான். அவர்களை நோக்கி விரைந்து செல்லுகிறான். ஆயினும் மண்டையுடை பட்ட குறவன் பெரிய பண்ணையாரை நோக்கி ஓடுவதை மண்ணாங்கட்டி பார்க்கிறான். அவன் உள்ளமும் கைகால்களும் நடுங்குகின்றன. மண்டையுடைந்தோடும் அந்தக் குறவனைப் பின் பற்றி மண்ணாங்கட்டி ஓட முயல்கிறான். ஆயினும் குறவன் மறைந்துவிடுகின்றான். மண்ணாங்கட்டி ஏரிக்கரையிலிருந்த ஓர் ஆலமரத்தின்மேல் ஏறி நடப்பதைப் பார்க்கும் கருத்தால் காத்திருக்கிறான். சிறிது நேரத்தில் பெரிய பண்ணையும், அவர் ஆட்கள் சிலரும் குறவர் குடிசையை நோக்கி வருகிறார்கள். குறவர்கள் பலர் பிள்ளைகுட்டிகளுடன் வீட்டைவிட்டு வெளிநோக்கி ஓடி மறைகிறார்கள். மண்டையை உடைத்த குறவன் தலையைத் துணியால் மறைத்துக்கொண்டு அச்சத்துடன் ஓடி மறைகிறான்.

பெரிய பண்ணையாரும் ஆட்களும் மண்டையுடைந்த குறவனும் குடிசைகளை அடைகிறார்கள். பல மண்வெட்டிகள், இருப்புப் பாரைகள், தோண்டி எடுக்கப்படுகின்றன. குடிசைகளிலும் மண்வெட்டிகள் எடுத்து ஒருபுறமாக வைக்கப் படுகின்றன. ஆட்கள் சிலர், குறவர் ஓடிய வழிநோக்கி விரைவாகச் செல்லுகிறார்கள். பெரியபண்ணையார் வீடு நோக்கிச் செல்லுகிறார்.

பதினைந்து

ரவு பத்து மணியாகிறது பெரிய பண்ணையார் வீட்டு மணிப்பொறியில்! நகரத்தினின்று 100 குதிரைகள் பெரிய பண்ணையாரின் வீட்டை நோக்கி வருகின்றன. குதிரைகளினின்று இறங்கிய அரசினர் பெரிய பண்ணையாரைச் சூழ்ந்துகொள்ளுகிறார்கள். அவர் இருகாவலர்பால் ஒப்படைக்கப்படுகிறார். மற்றும் காவலர் பலரும், ஏழை மக்களின் வீட்டுக்கிருவர் விழுக்காடு சூழ்ந்து கொள்ளுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் தந்தை தாய் பிள்ளைகளும் ஒன்று சேர்த்துச் சங்கிலியால் பிணிக்கப்படுகிறார்கள். ஏழை மக்களின் குடும்பங்கள் அனைத்தும் பிணிக்கப்படுகின்றன. மண்ணாங்கட்டி கண்ணீர் விடுகிறான். ஒருபுறமாக ஓடுகிறான். வேறுபுறமாக ஓடி வருகிறான்.

இதே நேரத்தில், மண்டையுடைத்த குறவனை இருவர், அவன் கைகளைக் கட்டியபடி பிடித்து வருகிறார்கள். ஊரில் காவலர் நிறைந்திருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். ஆயினும் அவர்கள் அக்குறவனை ஊரின் அருகிலிருந்த மாந்தோப்பில் ஒருமரத்தில் கட்டி விட்டுச் சிறிது தொலைவில் உட்காருகிறார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உறங்கத் தொடங்குகிறார்கள். இதைக் கண்ட மண்ணாங்கட்டியின் முகம் துன்பக் கடலில் மூழ்குகிறது. அவன் தன் இடையில் இருந்த இறகு தாள் எடுத்து ஏதோ எழுதுகிறான், எழுதிய தாளோடு தான் எடுத்த சுழல் துப்பாக்கியையும் சேர்த்துக் கட்டுகிறான். பெரிய பண்ணையாரைச் சூழ்ந்திருந்த காவல் தலைவரின் எதிரில் விழும்படி அதைக் தொலைவிலிருந்து விட்டெறிகிறான்.

காவல் தலைவர் அதை ஆவலாய் எடுத்துப் பிரித்துப் பார்க்கிறார். சிறிது நேரத்தில் தலைவரும் ஏறக்குறைய இருபது காவலரும் குதிரை ஏறி ஏரிக்கரைக்கு அப்புறமுள்ள சிற்றூர் நோக்கிப் புறப்படுகிறார்கள்.

பதினாறு

ள்ளிருளில் மண்ணாங்கட்டி, தோப்பில் கட்டப் பட்டிருக்கும் குறவனைச் சுற்றிச் சுற்றி வருகிறான். குறவனைச் கட்டியவர்கள் உறங்குமிடத்தை நெருங்குகிறான். அவர்கள் நிலையை உற்றுப் பார்க்கிறான். விரைந்து வந்து கட்டப்பட்டிருக்கும் குறவனை அவிழ்க்கிறான். குறவன் விரைவாக ஓடி மறைகிறான். உறங்கியவர்கள் திடுக்கிட்டு விழிக்கிறார்கள். மாமரத்தை விரைவில் அடைகிறார்கள். மண்ணாங்கட்டியைப் பிடிக்கிறார்கள், கட்டி விடுகிறார்கள். மண்ணாங்கட்டி தாக்கப்படுகிறான்.

இரண்டு தடிகள் மாறிமாறி மண்ணாங்கட்டி மேல் பாய்கின்றன. அடிகள் நின்றபோதெல்லாம் அவன் விழிகள் ஏழைமக்களின் வீட்டை நோக்குகின்றன. அடிபடும் போதெல்லாம் அவனால் தலைதூக்க முடியா விடினும் அவன் நெஞ்சம் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஏழைமக்களின் நிலை என்ன என்று பார்க்கிறது. அடித்தவர்கள் சற்றுத் தொலைவில் சென்று உட்காருகிறார்கள். இருள் நிறம் கட்டுக் குலைகிறது. கருநிற வானில் வெண்ணிறம் மிதக்கத் தொடங்குகிறது. சங்கிலியால் பிணிக்கப்பட்டுத் தத்தம் குடிசைக்கு நேரில் நிற்கும் ஏழைமக்களின் விழிகள் கோழியை மூடி வைத்துள்ள கூடையைப் பார்க்கின்றன. மீண்டும் அவ்விழிகள் தம் கைகள் விலங்கிடப் பட்டிருப்பதைப் பார்த்து நீர் சொரிகின்றன.

கிழக்கில் இளங்கதிர் தலை நீட்டுகின்றது. மண்ணாங்கட்டிக்குக் காவல் இருப்போர் கிழக்கே பார்க்கிறார்கள். அதே நேரத்தில் ஏரிக்குப் புறத்திலுள்ள சிற்றூருக்குச் சென்ற காவல் தலைவன், ஊரில் நுழைகிறான்.

மண்ணாங்கட்டியை நோக்கி விரைவாகக் கையில் தடியுடன் வருகிறார்கள் முன்னே அடித்தவர்கள்; மற்றும் வேலையைத் தொடங்குகிறார்கள். மண்ணாங்கட்டி, விலங்கிடப்பட்ட மக்கள்பால் செலுத்திய ஆவல் முகம் திடுக்கென அதிர்கிறது. மண்ணாங்கட்டியின் உடலில் ஓங்கியடிக்கும் தடிகள், உடலிலேயே பதிகின்றன. அவன் தலையில் செந்நீர் அருவி இழிகின்றது. மண்ணாங்கட்டி ஆவலோடு ஏழைமக்களின் நிலையைப் பார்க்கிறான். அவன் கழுத்து, தலையைச் சுமக்க மறுத்துவிடுகிறது. தொங்குகின்ற தலையிலிருக்கும் விழிகள் ஏழைமக்களின் வீட்டை நோக்குகின்றன. மற்றோர் அடி மண்ணாங்கட்டியின் தலையில் விழுகிறது.

வீடுதோறும் சங்கிலியாற் பிணித்து நிறுத்தப் பட்டிருந்த ஏழை மக்கட்கு மீட்சி கிடைக்கின்றது. காவலர்கள் அவர்களின் விலங்குகளை அகற்று கின்றார்கள். விடுபட்ட ஏழைமக்கள் ஒன்று கூடுகின்றார்கள். அவர்கள் கண்கள் யாரையோ தேடுகின்றன. கூட்டம் அங்குமிங்கும் போகின்றது. தோப்பை நோக்கி ஆவலாக அவர்கள் ஓடிவருகிறார்கள். காலைக் கதிர் வெளிச்சம் காட்டுகின்றது.

தோள்மேல் விழுந்து கிடந்து, செங்குருதி ஒழுக விழிகள், விடுபட்ட மக்களை நோக்குகின்றன. மண்ணாங்கட்டியின் இதழ் விலகுகிறது. முத்துப் பற்கள் திகழ்கின்றன. வாய்க்கடையிற் சிரிப்பு மின்னுகிறது. கண்ணில் பெருமகிழ்ச்சி மலர்கிறது. அவன் தலை நிமிர்ந்தது! ஆயினும் பழையபடி வீழ்ந்தது. மக்கள் ஓடி மொய்த்துக் கட்டவிழ்த்தார்கள். அடித்தவர்கள் கண்களில் அச்சமும், வியப்பும் தோன்றுகின்றன. அவர்கள் கையுதறுகிறர்கள், மண்ணாங்கட்டியின் தலை மற்றொரு முறை திமிருமா! இல்லை! அவள் நீண்ட அமைதியில் நிலைத்துவிட்டான்,

ஏழை மக்கள் அள்ளி யணைத்த மண்ணாங்கட்டி பத்தரைமாற்றுப் பொன்னாங்கட்டி!



"https://ta.wikisource.org/w/index.php?title=அமைதி/%22அமைதி%22&oldid=1644672" இலிருந்து மீள்விக்கப்பட்டது