அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/003-383
சிறப்புரை
அயோத்திதாசர்: ஒரு கண்ணோட்டம்
பகலவனை அடையாளங்காட்ட அகல் விளக்கு ஒன்று ஆசைப்பட்டதைப் போல, தமிழரும் தமிழைக் கற்றவருமான பகுத்தறிவாள மாமனிதர் ஒருவர் தொண்டின் சிறப்பினைக் கூற நான் முன்வந்தது; வாய்ப்பு தந்தவரின் பெருந்தன்மையாலும் என் கொள்கை மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையாலும் என்றே கருதுகிறேன், எனது பாட்டனாரும் தந்தையாரும் அருந்தமிழ்ச்செல்வர் அயோத்திதாசர் அவர்களின் பற்றாளர்களாவார்கள். கடல் கடந்து சென்று வாழ்ந்த காலத்திலும் அவர்கள் அவரை மறக்கவில்லை. நானும் அவர்கள் வழி நின்றவன். எனவே இவ்வாய்ப்பை எனக்குக் கிடைத்த பெறும் பேறாகக் கருதுகிறேன்.
1930இலிருந்து என் இளமைப் பருவம் முதல் பண்டிதர் அயோத்திதாசரால் நடத்தப்பட்ட தமிழன்பத்திரிகையை, தன் இயலாமையிலும் படிக்குமாறு கேட்டு மகிழ்ந்த என் பாட்டனாரின் அன்புள்ளம் அந்த அறநெறியாள அந்தணர் மீது என்னை பக்தி கொள்ளச் செய்தது. இந்தப்பற்றைத்தொடர்ந்து என்னுள் வளர்த்த, என் தந்தையார் பாதுகாத்து வைத்திருந்த தமிழன் பத்திரிகை, மறுபிறப்பாக எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழ்ச் சமுதாயங்களின் திருக்கரங்களில் தொகுப்பாகத் தவழ வருவதைக் கண்டு பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த சீரிய பணியில் மிகத் தீவிரம்காட்டி ஆண்டுகள் பல அலைந்து வெற்றி கண்டிருக்கும் நண்பர் ஞான. அலாய்சியஸ் அவர்களுக்குத் தமிழ்ச் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
அலாய்சியஸ் என்னை முதல் முறையாகச் சந்தித்தபோது தமிழக இனக்குழுக்களைப் பற்றிப் பேசினோம். அடுத்து உரையாடநேர்ந்த போதெல்லாம் தமிழினத் தலைவர்களைப் பற்றியும் அவர்களது பணிகளைப் பற்றியும் கருத்து பரிமாறிக் கொண்டோம். ஒரு முறை தமிழ்ச் சிந்தனையாளர்களைப் பற்றிப் பேச நேர்ந்தது. அச்சமயம் பண்டிதர் அயோத்திதாசர் அவர்களைப் பற்றிய கருத்து எங்கள் உரையாடலில் மய்யம் கொண்டது. சிந்தனையாளர்களில் பண்டிதருக்கு ஒரு தனியிடம் உண்டு; ஆனால் அவர் ஏன் மறைக்கப்பட்டவராக, மறக்கப்படுபவராக இருக்க வேண்டும் என்ற கேள்வியை அலாய்சியஸ் எழுப்பினார். இதற்கு மனம் இருப்போர்க்குப் பணமில்லை, பணம் இருப்பவர்க்கு மனமில்லை; மனமும் பணமும் இருப்பவர்கள் நமது சமூகத்தில் யாருமில்லை அதுதான் காரணம் என்று சொன்னேன்.
பகுத்தறிவாளர் பண்டிதர் அயோத்திதாசரின் சிந்தனை வளத்தைக் கண்டு வியந்த அலாய்சியஸ் அவற்றைத் தொகுத்து வெளியிடும் விருப்பத்தைத் தெரிவித்தார். ஏற்கனவே பலருக்கு நூல்கள், பத்திரிகைகள், மாநாட்டு உரைகள், தீர்மானங்கள் போன்றவைகளைக் கொடுத்து ஏமாந்த நான் இறுதி முறையாக நம்புவோம் என்ற முடிவுக்கு வந்தேன். பல சந்திப்புகளுக்குப்பிறகு என்னிடமிருந்த தமிழன் பத்திரிகைத் தொகுப்பை அவர் முயற்சிக்கு உதவட்டும் என்று கொடுத்தேன்.
தமிழகத்தின் புதைக்கப்பட்ட களஞ்சியமாகக் கிடந்த இது, நான் எண்ணிப் பார்க்க முடியாதளவில் பல நூறு பக்கங்கள் கொண்ட இரண்டு தொகுதிகளாக வெளி வருவதை தமிழன் பத்திரிகையின் மறு பிறப்பாக எண்ணி மகிழ்கிறேன், இது தமிழினத்திற்கேகூடஅதிர்ச்சியுடன் வியப்பூட்டும் நிகழ்வாகத்தெரியக்கூடும் என்று கருதுகிறேன்.
இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கும் அலாய்சியஸ் தமிழ் நாட்டவரின், குறிப்பாகத் தமிழ்ப் பழங்குடி ஆதிதிராவிடரின் பாராட்டுக்குரியவராவார். இந்த இரண்டு தொகுதிகளின் வாயிலாக பண்டித அயோத்திதாசரின் வாழ்க்கையையும் ஆதிதிராவிடரின் வரலாற்றையும் அறிய வாய்க்கப்பெற்றது வரவேற்கத்தக்கதாகும்.
அன்றைய தமிழர் அயோத்திதாசரைத் தனித்தன்மையாளராகப் பார்த்தார்கள். அவர் காலத்திலும் பல பண்டிதர், புலவர், கவிஞர், நாவலர், அவதானிகள், பாகவதர்-பேச்சாளர், எழுத்தாளர் ஆதிதிராவிடர்களிடையே இருந்தார்கள். இருப்பினும் சமுதாயம், சமயம், இலக்கியம், அரசியல், வரலாறு, தொழில், பகுத்தறிவு, சீர்திருத்தம் போன்றவைகளில் ஈடுபாடு கொண்டு மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தொண்டாற்றியதுதான் பண்டிதரை தனித்தன்மை கொண்ட மனிதராக எண்ணத் தூண்டியது எனலாம்.
அயோத்திதாசர் 1875 இலிருந்து 1914 வரை விதைத்த முன்னேற்ற சிந்தனைகளின் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி. ராஜா போன்ற தலைவர்களைப் படைத்து மக்களுக்குப் பாடுபட வைத்தது என்று தயக்கமில்லாமல் குறிப்பிடலாம். இதுவும் 1965இல் பேராசிரியர் என். சிவராஜ் அவர்கள் காலத்தில் முடிந்து போன சகாப்தமாக எண்ணத்தக்கதாக அமைந்துவிட்டது.
மதத்தால் நலிவும் வருண வேறுபாட்டால் அவல நிலையும் ஆதிதிராவிடர்க்கு ஏற்படக் காரணமாகயிருந்தது பிராமணரும் பிராமணியமுமே என்ற கருத்து இலைமறைகாயாக இருந்து கனிந்தது. இதைப் பொதுமக்கள் கவனத்திற்கு 1900க்கு முன்பே கொண்டு வந்தது. அயோத்திதாசரின் பேச்சும் எழுத்தும் என்றால் மிகையாகாது. அவை ஆதிதிராவிடர்களிடையே அரசியலையும் பேச வைத்தது.
ஆங்கிலேயர் ஆளுமையில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை வரவேற்றும், இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய மயமாக்கி சனாதன தர்மத்திற்கு, வழிகோலும் போக்கினைத் தாக்கியதின் மூலமும் இவ்வுணர்வு வெளிப்பட்டது. ஆதிதிராவிடர்களின் இந்தச் சிந்தனையின் சாயலில் பிற்காலத்திய திராவிடர் என்போரின் எண்ணமும் வளர்ந்தது என்றால் தவறாகாது.
சிலதென்னக மக்களின் முன்னோடிகளிடையே பிராமணிய ஆதிக்கத்தின் மீது எழுந்த சலிப்பும் வெறுப்பும் தோல்வியும் தென்னிந்தியரின் நல உரிமையைக் கேட்கத் தூண்டியது. இந்நிலை 1916இல் பிறந்து 1945இல் வளர ஆரம்பித்ததாகும்.
1870வாக்கில் எழுந்த ஆதிதிராவிட சங்கங்கள், சபாக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமற் போனாலும் 1892இல் பதிவு செய்யப்பட்ட ‘ஆதிதிராவிட ஜன சபை’, 1916இல் பதிவு செய்யப்படாத 'ஆதிதிராவிட மகா ஜன சபை', 1928இல் பதிவு செய்யப்பட்ட ‘அகில இந்திய ஆதிதிராவிட மகா ஜன சபை’ போன்றவைகளின் சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை என்பதும் அவற்றில் அயோத்திதாசரின் பங்கு சமச்சீர்மையானது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கனவாகும்.
சமுதாய உரிமையையும் முன்னேற்றத்தையும் மட்டுமே எண்ணிப் போராடிக் கொண்டிருந்த ஆதிதிராவிடசபைகளை ஊக்குவிக்கும் வகையில் பண்டிதரின் தொண்டு அமைந்தது. பஞ்சாயத்து, நகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றவைகளிலும் தொழிற்துறை, கல்வி, விவசாயம், காவல் துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவம் எல்லா வகுப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தன் பேச்சிலும் எழுத்திலும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தார், இந்து, பவுத்தர், கிறிஸ்தவர், இசுலாமியர், ஆங்கிலோஇந்தியர், ஐரோப்பியர் என்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமென்று 1909லேயே தனது பத்திரிக்கையில் எடுத்துரைத்தவர் அயோத்திதாசர் (தமிழன்3.2.1909). இது காலத்தால் முந்திய கருத்தாகக் கருதத்தகும்.
“சென்னை மாநிலத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை பார்ப்பனார் அல்லாத திராவிட இயக்கத்திற்கு முற்பட்டது... பிற்பட்டோர் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் பட்டியலானது 1885ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் போதே கால் கொண்டுவிட்டது. இத்திட்டம் தீண்டாதவர் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது” (ஏ.என். சட்டநாதன், தமிழ் நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும், பக். 43. சென்னை பல்கலைக்கழகம், 1984) என்றாலும் அவை நேர்மையாக சேரவேண்டியவர்க்குப்போய் சேரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டவேண்டியிருந்தது.
ஆங்கிலேய அரசு தந்த சலுகைகள் எல்லாம் அன்றைய ஆதிதிராவிடர்களின் இடைவிடாத முயற்சியால் பெறப்பட்டதாக இன்றைய ஆதிதிராவிடர்கள் கருதுவது பெருமைக்குரிய செய்தியாகும். இத்தகைய சலுகைகளுக்காக அரசுக்கும் அரசின் மேலதிகாரிகளுக்கும் 1870இலிருந்து 1892 வரையிலும் அயோத்திதாசர் போன்றோர்கள் விடுத்த விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள். 1772இல் வருவாய்த்துறை, தாழ்த்தப்பட்டோர் நலனில் கவனம் கொண்டதாக இரட்டைமலை சீனிவாசனார் கூறுவதையும் (இரட்டைமலை சீனிவாசன், ஜீவிய சரித்திர சுருக்கம், ப.2.) 1779இல் கிழக்கிந்திய கம்பெனி ஆளுமையாரிடம் ஆதிதிராவிடர் கொடுத்த விண்ணப்பங்களையும்கூட சான்றாகக் கொள்கிறார்கள்.
ஆதிதிராவிடரில் தனிமனிதர், சிறு குழுவினரின் கூட்டுக் கோரிக்கைகளே அவர்களது போராட்ட மரபாக அக்காலத்தில் இருந்திருப்பதை அறிகிறோம். கவர்னர், வைசராய் போன்றவர்களை தனியாகவோ கூட்டாகவோ சந்தித்து தங்கள் குறைபாடுகளை, கூட்டம் அல்லது மாநாட்டு தீர்மானங்களாகக் கொடுத்து தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பதை அரசு குறிப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஆதிதிராவிடர் மகாவிகடதூதன், பூலோக வியாசன், பறையன், ஆதிதிராவிட மித்திரன் போன்ற பல பத்திரிகைகள் கிடைத்திருக்குமாயின் இன்னும் பல செய்திகள் தெரிய வந்திருக்கும். அவை இன்று கிடைப்பனவாக இல்லை. மேலும் 1860இலிருந்து 1910 வரை 50 ஆண்டுகள் ஆதிதிராவிடர்களால் படைக்கப்பட்ட கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவைகளும் கிடைக்காமையால் அவர்களது வரலாற்றைத் தெரிந்து கொள்ள அரிதாகிவிட்டது. சென்னை அயோத்திதாசரின் தமிழன், கோலார் ஜி. அப்பாதுரையார்,பி.எம். இராஜரத்தினம் ஆகியோரின் தமிழன் பத்திரிகைகள் மட்டுமே நமக்குப் பெரிதும் உதவக் கூடியவைகளாக இருக்கின்றன. 1896இல் வெளியிடப்பட்ட மதுரை பிரபந்தம், இரங்கூன்பிரவேசத்திரட்டு (புலவர் புதுவை த. செய்யப்ப முதலியார், வெற்றிக் கொடியோன் பத்திரிகை ஆசிரியரால் 1896இல் வெளியிடப்பட்டது) ஆகிய நூல்களில் ஓரளவு செய்திகள் அறியக் கிடக்கின்றன.
அயோத்திதாசரின் பெரு முயற்சியால் சென்னையில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. இலவசக் கல்வி, பகல் உணவு போன்றவை பெற்றதிலும் அவரது பங்கு, பணி மகத்தானதாகும். அவரது காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் ஆதிதிராவிடரின் இடைவிடாத முயற்சிகளின் பயனே இன்றைய ஆதிதிராவிடரின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்றால் மிகையாகாது. அரசுகளின் அந்தந்தக் கால திட்டங்களால் ஆதிதிராவிடரின் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு பயன் கிடைத்திருக்குமானால் அவை அரசுகளின் கடமையும் காலத்தின் கட்டாயமுமாகும் என்று கொள்வது தவறாகாது.
அரசு, நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டு தங்களுக்குத் தோன்றியவண்ணம், அரசு வசதிக்கேற்ப திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்துவது ஒரு வகையாகும். மக்கள் தங்கள் நிலைமையை எடுத்துக்கூறி அரசின் முடிவுக்கே விட்டுவிடுவது அல்லது இன்னின்ன முறைகளில் இந்தெந்த குறைபாடுகள் போக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது மற்றொரு வகையாகும். அயோத்திதாசரும் மற்ற ஆதிதிராவிட தலைவர்களும் இந்த இரு முறைகளால் தங்கள் சமுதாயத்திற்குப் போராடியிருப்பதும் அதில் பண்டிதரின் பணி விஞ்சி நிற்பதும் சிந்திக்கத்தக்கது.
அயோத்திதாசர் போன்ற ஆதிதிராவிட முன்னோடிகளின் சிந்தனைகள் மேலும் பல வெளிவர வேண்டும். ஆயினும், இவருடைய வாழ்வும் தொண்டும் எண்ணங்களும் முதன்மை பெறுவதால் இப்பெரியாரின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சுருக்கமாக இங்கு கூறுவது அவரை ஓரளவு அறிந்து கொள்ளப்பயனாக இருக்குமென்று நம்புகிறேன்.
ஓர் அந்தணர்
ஒருவருடைய வரலாறு பிறந்து வளர்ந்து வாழ்ந்து விடுவதோடு முடிந்து விடுவதில்லை. அவரது நேர்மையான சிந்தனையும் செயலும் சாதனையுமே அவருக்கு ஒரு வரலாற்றைப் படைப்பனவாகும். சாதனை படைத்தவரெல்லாம் சரித்திர நாயகர்களாகி விடுவதில்லை. ஒருகாலத்தில் மக்கள் மனதில் நின்றவர்கள் கூட மற்றொரு காலத்தில் நில்லாமல் போனதும் உண்டு; கால வெள்ளத்தால் மறைக்கப்பட்டு பிறகு மக்கள் நினைவுக்கு வரும் சிந்தனையாளர்களும் உண்டு - அத்தகையவர்களில் ஒருவர்தான் பண்டிதர் க. அயோத்திதாசர்.
நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு என்ற ஐந்தும் ஒரு சேரப் பெற்ற அயோத்திதாசர் மறக்கப்பட்டது வியப்புக்குரியதல்ல. நான் உயர்ந்தவன், என் சமுதாயம் உயர்ந்தது, எம்மவர் கூறுவதுதான் அறிவும் அறமுமாக ஏற்கத்தக்கது, எதிர்க்கக் கூடாதது என்று எண்ணிய கூட்டம் எடுத்துக் கொண்ட மேலாண்மையால் - சிதறடிக்கப்பட்டுவிட்ட கூட்டத்தில் பிறந்துவிட்ட, சிந்தனையாளன் மறுக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் காலத்தின் குற்றமே எனலாம். காக்கைக் கூட்டத்துள் ஒரு புறா வர நேர்ந்தால் ஒன்று கொத்தப்படும் அல்லது கொல்லப்பட்டுவிடும். அதுபோல் அறியாமையில் வாழ்வோரிடையே தோன்ற நேர்ந்த ஒரு அறிவாளியின் நிலையும் அப்படிப்பட்டதுதான். அயோத்திதாசரும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.
இந்நிலை ஆதிதிராவிட தமிழ்ப் பழங்குடிகளின் பலவீனத்தால் வந்ததல்ல - மாறாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்கள் முடமாக்கப் பட்டதின் விளைவால் வந்த வினையாகும்.
அயோத்திதாசர் எங்கே பிறந்தார் எத்தனை பேர்களோடு பிறந்தார் என்பதிலும் - அவரது வயது, வளர்ச்சி, வாழ்வு போன்றவைகளிலும் முரண்பாடுகள் உண்டு; இதில் உண்மையை அறிந்துஏற்பது நல்லோர் கடமையாகும். பிறப்பு, சுற்றம், சூழல் அனைத்தும் வரலாற்றுக்குத் தேவைப்பட்டதுதான் என்றாலும் அதுவே வரலாறாகிவிடாது. பிறந்தார் வளர்ந்தார் இறந்தார் என்பவைகளிடையே என்ன செய்தார் என்பதுதான் முக்கியமானதாகும்.
அயோத்திதாசருடைய கொள்கை சீரியதும் சிறந்ததுமாகும். அவர் மக்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று எண்ணினார். நாடு நலிவடையாமல் முன்னேற வேண்டும் என்றும் நினைத்தார். அதுவே அவரை மக்களைப்பற்றியும் மக்களின் சீரான வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டியது. தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு மக்களை விழிப்படையச் செய்யும் தொண்டுப் பணியில் இறங்கினார்.
அவர் பிணக்குடன் ஒரு சமுதாயத்திலிருந்து மற்றொரு சமூகத்தைத் தாக்கவில்லை அல்லது ஒரு அமைப்பிலிருந்து கொண்டு மற்றொரு இயக்கத்திற்கு மாறி தன் தொண்டைத் தொடங்கவில்லை. அல்லது ஒரு தனி மனிதர் மீதோ, அமைப்பின் மீதோ சலிப்பும் வெறுப்புமடைந்து தன்னார்வத்தை வெளியிட வந்தவருமல்லர். (அயோத்திதாசருக்கும் இரட்டை மலை சீனிவாசனாருக்கும் பகைமை இருந்ததாகக் கூறுவார்கள். குடும்பத்தில் உறவும் கொள்கையில் மாற்றமும் இருந்தது உண்மை. அது பகைமையல்ல. அன்றைய பல பேரிடத்தில் அயோத்திதாசரின் கொள்கை ஒத்துப் போகவில்லை. அவருக்கும் அருட்கவி கங்காதர நாவலருக்கும், அத்துவைதானந்த சுவாமிகள், ஒம்பிரகாச சுவாமிகள், புனிதர் ஜான் ரத்தினம், வேலாயுதம் புலவர் போன்றோர் கொள்கையால் மாறுபட்டவர்கள். எல்லோருமே பழந்தமிழர், தமிழறிந்த பன்னூல் ஆசிரியர்கள்தான் - சமயக் கொள்கையால் அவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தனர் - இது தவிர்க்க முடியாத நிலை எனலாம், பகைமையல்ல என்றும் உறுதியாகக் கூறலாம்).
தமிழையும் தருமத்தையும் நன்கு கற்றுத் தெளிந்து நாடும் மக்களும் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்தார்வத்தோடு உழைக்க வந்த அவர், கருத்துகளனைத்தையும் இலக்கியம், வரலாறு, அறநெறி ஆகியவைகளிலிருந்தே தேர்ந்தெடுத்துக்கொண்டார் என்பதை அவர் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த கொள்கைகளிலிருந்து அறியலாம்.
அயோத்திதாசரின் அறிவு ஆற்றல்களை அவர் காலத்திய பெருமக்கள் ஒரு சிலரின் புகழுரைகளிலிருந்து அறியலாம். சான்றாக:
செந்தமிழ்க் குடியில் வந்தவ னெவனோ
இளமையிற் கற்றார் உளம்வழி நின்று
நூல்பல கற்ற சால்பின னெவனோ
ஈங்குளோர் புகழ் ஓங்கி நாடோறும்
வல்லவர் போற்றுங் கல்விமா னெவனோ
இல்லற மென்று நல்லற மேற்றே
மக்கட் பேறோடு மிக்க அன்பின்
விருந்தினை யோம்பி யிருந்தவ னெவனோ
செந்தமிழ் பூண்ட அந்தண னெவனோ
பொறுமைக் கேயொரு உறைவிட மாக
அண்டினர்ப் புரக்கும் அயோத்தி தாச
பண்டிதப் பெயரைக் கொண்டவ னெவனோ
(அயோத்திதாசரின் வீடு பேற்றின் போது 1914இல் திரு.வி.க. அவர்களால் எழுதப்பட்ட ‘இரங்கற்பா’விலிருந்து ஒரு பகுதி)
ஆகம் புராண மிதிகாச மறை கோசங்கள்
அத்வைதம் வசிட்டத்வைதம்
அமண முனிவர்கள் பஞ்சகாவியம் கலைஞானம்
ஆயுர்வேதம் தத்துவம்
யோக நிலை சாத்திரம் சித்தர்நூல் பக்தி நெறி
யுகமொடு பலதுமாய்ந்து
வாகை தயை பொறை கடைப்படி மனத்திடன் வாய்மை
வாய்ந்ததொரு வரக் கவிஞனாய்
(புலவர் பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை, மகாவிகடதூதன் பத்திரிகையின் ஆசிரியர். பன்னூல் ஆசிரியர் வீஅ.ராமச்சந்தர புலவர், தங்கவயல் அறவர் இநா. ஐயாக்கண்ணு புலவர் போன்றோர்களின் இரங்கற்பாக்களும் குறிப்பிடத்தக்கன. தமிழன் -17.6.1914).
என்றெல்லாம் புகழப் படுவதிலிருந்து பண்டிதர் அயோத்திதாசரின் புலமையை அறியலாம். தமிழறிந்த மா மனிதராய், அறிவுச் செழுமையினராய், பகுத்தறியும் பண்பினராய், காலத்தை உணர்ந்த தொலை நோக்கராய் திகழ்ந்த அவர், அற நூல்களைக் கற்றறிந்தும், போதித்தும், எழுதியும் அன்பு பூண்ட அந்தணராய்த் திகழ்ந்தார்.
அவரது அறிவாற்றல்களுக்கு அவரின் நூல்கள், சிறப்புரைகள், ஆராய்ச்சிகள், அவரால் 1907இலிருந்து 1914 வரை நடத்தப்பட்ட தமிழன் வார ஏடு ஆகியவை சான்றுகளாகும். சித்தர்களின் சித்தாந்தத்தையும், பக்திநெறியின் நீக்குப் போக்கையும் அறிந்தவராகவும் ஆயுர்வேத மருத்துவமும், கலையறிவும் கொண்டு கவிஞராய் வாழ்ந்த அவர் தமிழர், தமிழைக் கற்றவர், தமிழறத்தைப் பேணிய அந்தணர் என்றால் மிகையாகாது.
பழந்தமிழர்
ஒவ்வொரு நாட்டிலும் பூர்வீக அல்லது தொல்குடியினர் இன்னின்னவர் என்று சுட்டிக்காட்டுவது மரபாகும். அந்தப் பழங்குடியினர் அந்நாட்டில் பிறந்ததினால் பெருமைப்படுவது, அந்நாடு வளரப் பாடுபட்டதற்காக பாராட்டப்படுவது, அதனால் அம்மக்கள் உரிமை பெற்றவர்கள் என்று மதிக்கப்படுவதும் வழக்காகுமென்ற கருத்தை வலியுறுத்த வந்த அயோத்திதாசர், அப்பூர்வகுடி தமிழ் மக்கள் யார், அவர்கள் எவ்வாறு கெட நேர்ந்தது, எப்படி பிறர் அவர்களைக் கெடுத்தார்கள் என்பதையும் கூறுகிறார்.
“சுதேசிகள் என்பது தேசத்தின் சுதந்திரமுடையவர்கள், தேசப் பூர்வ குடிகள். தேசத்திலேயே பிறந்து வளர்ந்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்கள் (மற்றையோர்) காலத்திற்குக் காலம் இவ்விடம் வந்து குடியேறியவர்கள் பரதேசிகளே... இத்தேசப்பூர்வ குடிகளும், இத்தேசத்தை சீர்பெறச் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே பூர்வகுடிகள் என்றும் சுதேசிகள் என்றும் கூறத்தகும்...
அவர்கள் யாவரெனில் தமிழ் மொழியில் பிறந்து, வளர்ந்து தமிழ் மொழிக்குரியவர்களாக விளங்கும் பூர்வ திராவிடக் குடிகளேயாகும்.
“திராவிடராம் தமிழ்மொழிக்குரியவர்களுக்குள் சாதி பேதமென்னும் நூதன கட்டுப்பாட்டில் இருப்போர்களைப் பூர்வ குடிகள் என்று அழைப்பதற்கு ஏது கிடையாது. ஏனெனில் இத்தேசத்தில் வந்து குடியேறிய சாதிகளையும் மதங்களையும் உற்பத்தி செய்து வாழ்வோர்களுடன் சேர்ந்து தேசத்தை பாழ்ப்படுத்த ஆரம்பித்துவிட்டபடியினாலேயாம்.
இத்தேசத் திராவிடர்கள் அந்நிய சாதி கட்டுக்குள் அடங்கி விட்டபடியால் ஒற்றுமெய்க் கேடும் அவர்கள் மதத்தைச் சார்ந்துவிட்டபடியால் அவர்களால் ஏற்படுத்தியுள்ள சாமி என்னும் சோம்பலால் முயற்சி இல்லாமல் கலை, விவசாயம், வியாபாரம், முன்னேற்றம் யாவையும் பாழ்படுத்தி தேசத்தையும் சீர் கெடுத்துவிட்டார்கள்” (தமிழன் - 30.10.1912) என்று கூறுகிறார். அயோத்திததாசர் தமிழர் அனைவரையுமே திராவிடராக நினைக்கிறார். இவர்கள் ஒற்றுமையாக சாதிபேத வேற்றுமை பாராட்டாமலும் அந்நியக் கொள்கைகளை ஏற்காமலும் இருந்திருந்தால் ஆரியக் கொள்கைகள் தமிழகத்தில் பரவியிருக்காது. தமிழர்களான திராவிடர்களில் பலர் ஆரியர்களின் பிராமணியத்தைத் தழுவியதால் நாடு கெட்டுப் போய்விட்டது என்ற முடிவுக்கு வருகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கால சிந்தனையான அயோத்திதாசரின் இக்கருத்து இன்று பேசப்படுவது அவருக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
மக்களும் நோக்கங்களும்
மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கதாக இருக்க வேண்டும். மக்கள் அந்நிலையையெய்த அவர்களுக்குள் ஒரு வழிகாட்டி அமையவேண்டும். மக்களுள் அவர் மா மனிதராக, அறிவாற்றல் பெற்ற தலைவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருந்தால் அவரை வணக்கத்திற்குரியவராக மக்கள் ஏற்பார்கள். அவரைக் கடவுளென துதிப்பார்கள். இத்தகைய பண்பாளர்கள் இல்லாமற்போனால் இயற்கைகூட உதவாமல் போய்விடும் என்று சொல்ல வந்த அயோத்திதாசர் கூறுகிறார்:
“.... நிலம் போக்கி வானம் பொய்யாமைக்குக் காரணம் சீலமிக்க ஞானிகள் இல்லாமையாம், ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த விவேகிகள் இல்லாமையாகும். விவேகிகள் இல்லாமைக்குக் காரணம் சதுர்வித உபாயமும் அன்பு மிகுந்த அரசர்கள் இல்லாமையே. அன்பு மிகுந்த அரசர்கள் இல்லாமைக்குக் காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், நன்னெறி, ஒற்றுமையுள்ள குடிகள் இல்லாததால்...” (தமிழன் -19.6.1907) என்ற பழந்தமிழர் கொள்கை ஒன்றை நமக்கு எடுத்துக் கூறுகிறார். சிறந்த மக்களிலிருந்தே நல்லறிஞர்களும், விவேகிகளும், வீரர்களும், அரசர், ஆளுவோர்களும் வருவார்கள், வரவேண்டும் என்று கூறுகிறார்.
அறிவாளிகள் தங்கள் அறிவால் மக்களையும் நாட்டையும் வழிநடத்த வேண்டும். ஆட்சியிலுள்ளோர் ஆளுமையில் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வணிகர் பொருள் பரிமாற்றங்களால் பயனடையும் பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும், வேளாளர் பூமியின் தரத்திற்கேற்றவாரும், காலத்திற்கேற்றவாரும் உற்பத்தியைப் பெருக்க நோக்கமாக இருக்க வேண்டும். நிலம் பண்பட்டிருந்தால்தான் பயிர்பயனையளிக்கத் தக்கதாக வளரும் என்பதைப் போல் மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களில் முன்வருவோர்களின் நோக்கும் போக்கும் நல்லதாக அமையும் என்று கூறவந்த அயோத்திதாசர்:
“அந்தணருக்கு ஞானத்தில் நோக்கமும், அரசனுக்கு ஆளுகையில் நோக்கமும், வாணிபர்களுக்கு பொருளில் நோக்கமும், வேளாளருக்கு பூமியில் நோக்கமும்...” (தமிழன் -15.7.1908) இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். விவசாயிகள் அறிவாளிகளாகவும், கல்வியாளர் வணிகர்களாகவும், அரசர்கள் கவிஞர்களாகவும் புரவலர்களாகவும் இவ்வாறு எல்லோரும் எல்லா துறைகளிலும் சிறந்து வாழ்ந்தது தமிழர் கண்டபெருவாழ்வாகும்.
வீட்டையும் நாட்டையும் தேடிச்சென்று பிச்சையேந்திய பாணரும் பாடினியரும் பெரும் புலமை பெற்று அரசர்களுக்கும் மக்களுக்கும் அறிவுரை வழங்கியதை நமது வரலாறு பேசும். எனவே மக்கள் சிறந்தவர்களாக இருந்தால் அவர்களின் நோக்கும் போக்கும் தூய்மையானதாக இருக்கும், நாடும் பயன்படும் என்று அயோத்திதாசர் எண்ணினார்.
சாதி - சமூகங்கள்
1885 வாக்கில் விக்டர் ஹியூம் அவர்களால் தோற்றுவித்து தரப்பட்ட தேசிய காங்கிரஸ் இயக்கம் பிரிட்டனோடு ஒத்துப் போவதிலிருந்து மெல்ல மெல்ல இந்திய மயமாக்குதல் கொள்கைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது சுதேசி சீர்திருத்தத்தைப் பற்றிய கருத்தைப் பொது மக்களிடம் வைத்தது, இந்த இயக்கம் படித்த மேல் சாதியினரின் ஆதிக்கத்திற்குள் இருந்ததால் இந்திய சமுதாய கீழ்த் தட்டில் உள்ள சமுதாயங்களின் பிரச்சினைகளில் தலையிடுவது எங்கள் நோக்கமல்ல என்று வெளிப்படையாகவே அறிவித்தது. இதனால் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பேரியக்கம் கூறிய சுதேச சீர்திருத்தத்தை நம்ப மறுத்தார்கள். அயோத்திதாசர் கூறினார்:
“சுதேச சீர்திருத்தமென வெளி வந்திருக்கும் இந்துக்கள் ஜாதி பேதத்தை நீக்கிவிட்டு ஒற்றுமையாக வேண்டும் என வீண் புரளி செய்கிறார்களே ஒழிய நிச்சயமாக ஜாதி பேதத்தை நீக்க பிரயத்தனப்படுபவர்களாக இல்லை. அவர்கள் முக்கியமாக ஜாதிபேதம் விட்டுவிடவேண்டும் எனபிரசிங்கிப்பதெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களாகிய நாலு வர்ணத்தார்கள் மாத்திரம் சேர்ந்து கொள்ளவேதான்.
மற்ற தாழ்ந்தவர்கள் என சொல்வோர்களிடம் சமயத்திற்கு மட்டுமே சேர்ந்து போரில் வெற்றி பெற்று சுய ஆதீனம் பெற வேண்டும், பிறகு முன்போல தாழ்ந்தவர்களாக அந்த நாலு வர்ணத்துடன் சேர முடியாது என்பது எல்லா சுதேச சீர்திருத்தக்காரர்களுடைய கொள்கைகளேயாம் (தமிழன் - 27.5.1908) என்று வெளிப்படையாகக் கூறினார்.
மனிதாபிமானமே இல்லாத மேல் சாதியினர் எந்தச் சாயலிலும் சீர்திருத்தத்தை விரும்பமாட்டார்கள் என்று அவர் எண்ணினார். அந்த நான்கு உயர்த்தப்பட்ட இனத்தினரும் தாழ்த்தப்பட்டு ஐந்தாவதாக உள்ள இனத்தினரைச் சமமாக நடத்தமாட்டார்கள் என்பதை அவர் கூட்டிக்காட்டினார். இதற்கு ஒரு செய்தியையும் ஆதாரமாகக் கூறினார்:
“இந்தியா என்னும் பத்திரிகையில் ஒருவர் தங்களுக்காக கல்விச்சாலை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதில் பஞ்சமர்களுக்கென்று வேறு தனிப்பட்ட பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்... - இப்படிப்பட்டவர் சுயராட்சியம் பெற்றுக் கொண்டால்...(தமிழன் -17.6.1908)
“சாதியை ஒழித்து சமமாக நடத்துவார்களா?” என்று கேட்டு “தீண்டக்கூடாது என்ற இடுக்கண் செய்த வகுப்பினனே தற்காலம் ஏழைபிள்ளைகளின் பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்ந்து உண்ணவும் அருந்தவும் செய்கிறார்கள்” (தமிழன் - 16.9.1908) என்பதையும் எடுத்துக் கூறுகிறார்.
தேசத்தைச் சீர்திருத்த வேண்டும், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவோரை அயோத்திதாசர் நம்பத் தயாராக இல்லை என்று தெரிகிறது. “சாமிக்கதை சொல்லும் போதே சூத்திரன் கேட்கப்படாது என்று விரட்டும் பாவிகள் சாப்பாடு போடும்போது யாருக்கு இட்டுயாரைவிலக்குவார்கள் என்பது தெரியாதோ” (தமிழன் -3.6.1908) என்று சொல்கிறார். நாலாம் வருணத்தாரான சூத்திரர்களுக்கே இந்த நிலையென்றால், சூத்திரர்களுக்கும் கீழே உள்ளவர்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்பதை இக்கருத்தில் காணலாம்.
பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் உழைத்துச் சாப்பிடுகிறவன் எந்தவிதத்தில் தாழ்ந்தவன் என்று அயோத்திதாசர் சற்றுக் கடுமையாக கேட்பது நியாயமானதேயாகும்.
“இந்த தேசத்தில் பிச்சை எடுப்பவன் பெரிய சாதி என்றும் உழுது உண்பவன் சின்ன சாதி என்றும் சோம்பேறி செய்து கொண்டு வருகிறார்கள் (தமிழன் - 4.3.1908)
பணமுள்ளோர் பெரிய சாதி,பணமில்லாதவன் சின்ன சாதி, உழைப்பவர்கள் சின்ன சாதி, சோம்பேறிகள் பெரிய சாதி, மத சார்பாக இருப்பவர்கள் உயர்ந்த சாதியார்கள், என்று தங்கள் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்ட கதையாவும் பொய் என்று கூறி யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் யாவரும் தாழ்ந்த சாதியார் என்று வருகின்றது” (தமிழன் - 25.121907). இது எந்த விதத்தில் நியாயம் எத்தகைய அறிவீனம் என்று அவர் மனக்கசப்புடன் கேட்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்விதான்!
“16.9.1908 அன்று கூடிய நகர சீர்திருத்த சங்கத்தாருள் மயிலாப்பூர் சுடலை விஷயமாக நடந்த ஆலோசனையில் ஸ்ரீ சேஷாச்சாரி மறுப்புக் கூறியிருக்கிறார். சுடலைக்கு போகும்போது வழியில் பறைச்சேரி இருக்கிறபடியால் அவ்வழியில் உயர்ந்த சாதியார் போக அஞ்சுவார்கள். இப்பிராமணர் என்போர் பறையர் என்போர் வாழும் இடங்களுக்குப் போவார்களானால் அடித்துத் துரத்திச் சாணச் சட்டியை உடைப்பது பழைய வழக்கமாயிருந்தது. அந்த பயத்தைக் கொண்டு உயர்ந்த சாதியார் பறைச் சேரியின் வழியாகப் போவதற்கு அஞ்சுகிறார்கள்” (தமிழன் -23.9.1908) என்று அயோத்திதாசர் குறிப்பிடுவதிலிருந்து இந்த இரண்டு வகுப்பினருக்குமிடையே நீண்ட காலமாகப் பகைமை இருந்து வருவதாகத் தெரிகிறது. இதே செய்தி புலவர் திரிசிபுரம் ஆ. பெருமாள் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிதிராவிடர் வரலாறு என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது (அ. பெருமாள் பிள்ளை , ஆதிதிராவிடர் வரலாறு, 1922).
இதே செய்தியை அயோத்திதாசர் வேறொரு வரலாற்று நிகழ்ச்சியிலும் கூறியிருக்கிறார். தமிழ் பற்றுகொண்ட எல்லீஸ் ("Ellis, Francis whyte-arrived in India in 1796. He was a member of the Madras Civil Service. ... died under tragic circumstances in 1819... During this short period he early devoted himself to the study of the language, history and antiquities of the land .... Ellis' outstanding work which has come down to us is his commentary on the Kural... It does reveal to remarkable degree the author's extensive knowledge of Tamil literature".K. Meenakshi sundaram- The contribution of European scholars of Tamil, University of Madras.p. 38-40) என்ற ஆங்கிலேயர் தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேர்த்துக் கொண்டிருந்தார். திருக்குறளை அவரிடம் யாரும் கொடுக்கவில்லை. அவருடைய நண்பர் ஆரிங்டன் என்ற மற்றொரு ஆங்கிலேயரிடம் வேலையாக இருந்த அயோத்திதாசருடைய பாட்டனாரான கந்தசாமி என்பவர் திருக்குறளையும் நாலடி நானூறு போன்ற சில ஓலைச் சுவடிகளையும் கொண்டு போய் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்து கொண்டிருக்கும் பிராமணர்களிடம் கந்தசாமி கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள் கந்தசாமி தீண்டாதவர் என்றும் சாதிப்பாகுபாட்டையும் கூறினார்கள். எல்லீஸ் மீண்டும் கந்தசாமியை அழைத்து மேலும் சில விளக்கங்கள் கேட்க கந்தசாமி கீழ்வரும் விபரங்களைக் கூறியதாக அயோத்திதாசர் தன் பத்திரிகையில் எழுதியுள்ளார்:
“எங்கள் குலத்தோருக்கும் இவர்கள் குலத்தோர்க்கும் ஏதோ பூர்வ விரோதம் இருக்கிறது. அதனால் இவர்களை இழிவாகக் கூறி துரத்துவது வழக்கம். எங்கள் குலத்தோர் வீதிக்குள் இவர்கள் வந்துவிடுவார்களானால் இவர்களை துரத்தி உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி இவர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்து தெளித்துச் சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்” (தமிழன் - 10.3.1909) என்று அயோத்திதாசர் எழுதுவதைப் பார்க்கும்போது இந்தப் பகைமை 19ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. இவரது பாட்டனார் கந்தசாமி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 1785 வாக்கில் வாழ்ந்தவராகும். தமிழ்நாட்டின் தீண்டாமை வரலாற்றிற்கு இச்செய்தி மிக முக்கியமாகக் கருதப்பட வேண்டும். இந்த இரு வகுப்பினரும் இருவேறு கலாச்சாரப் பண்புடையவர் என்பதையும் வேறொரு நிகழ்ச்சியின் மூலம் அயோத்திதாசர் எடுத்துக் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“1892-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை விக்டோரியா ஹாலில் மகாசபை கூடிற்று. தலைமை தாங்கிய பி. அரங்கைய நாயுடு அவர்கள் ஜில்லாக்களின் குறைகளைச் சொல்லிக் கொண்டே வந்து “பறையர் பிராபலம்” என்னும் வாக்கியத்தை அடித்துவிட்டு இவர்களை பற்றி வேண்டிய வரையில் சில துரைகள் எழுதியிருக்கிறார்கள். ஆதலின் இவர்களின் குறைகளை நாம் ஆலோசிப்பது யாது பயனுமில்லை என்று கூறினார். சபையின் செயலாளர் எம். வீரராகவாச்சாரி அவர்கள் தலைவரை நோக்கி நீலகிரியிலிருந்து அக்குலத்தோருக்கு ஒரு பிரதிநிதி வந்திருக்கிறார் என்று கூறினார். உடனே நான் எழுந்து இக்குலத்தோரைப் பற்றி சில துரைமார்கள் உபகாரம் செய்கிறார்கள் என்று கூறி எல்லோரும் மவுனம் சாதிப்பது அழகன்று. உங்களாலேயே இக்குலத்தோர் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து இருக்கின்றபடியால் நீங்களே இவர்களை சீர்திருத்தி சுகம்பெற செய்ய வேண்டும் என்றேன். அதற்கு தலைவர், இது உள்சீர்திருத்தச் சங்கமாதலின் இவர்களால் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். நான் இக்குலத்தாரிலுள்ள வைணவர்களையும், சைவர்களையும் அந்தந்த கோயில்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றேன். எல்லோரும் ஏகமயமாய் நின்று அப்படி கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூச்சலிட்டார்கள். அப்போது தஞ்சாவூர் பிரதிநிதி சிவராம சாஸ்திரி அவர்கள் உங்கள் குலத்தோர்க்கு மதுரை வீர சாமி, காட்டேரி சாமி, கருப்பண்ண சாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும், விஷ்ணு சாமியும் உங்கள் குலத்தோர்க்கு உரியதல்ல என்று ஆட்சேபித்தார். நான் அவரை நோக்கி ஐயா, அப்படியிருக்குமாயின் உங்கள் சாமி எங்களுக்கு வேண்டாம். இக்குலத்து சிறுவர்களுக்கு கிராமங்கள் தோறும் கல்விச் சாலைகளை வைத்து இலவசமாக கல்வி கற்கவைக்க வேண்டும் என்றேன். மேலும் கிராமவாசிகளுக்கு வெறுமனே உள்ள நிலங்களைக் கொடுக்க வேண்டும் என்று கூறினேன்” (தமிழன் - 21.10.1908) என்று அயோத்திதாசர் நிலைமையை விளக்குகிறார்.
இக்கூட்டம் சென்னை மகாஜன சபையாரால் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் “ஏரி மரமத்துக்கள், கிணறுகளின் விருத்திகள், ரோடுகளின் மரமத்துக்கள், மேலும் வெளி ஜில்லாக்களின் சீர்திருத்தங்களைப் பேசுவதுடன் பறையர்களுக்கான உபகாரங்களும் யோசிக்க” கூட்டப்பட்ட கூட்டத்தின் போக்கிலிருந்து என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதை அயோத்திதாசர் விளக்கிவிட்டார்.
அவர் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற இரு சாராரையும் ஒப்பிட்டே பேசுகிறார். இரு வகுப்பினரும் தீண்டாமையை, சாதியை - தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்களே என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார். பிராமணர் மேலாண்மையைப் பிராமணரல்லாதார் வெறுக்கிறார்கள், பிராமணர் பிராமணரல்லாதார் ஆதிக்கத்தைத் தாழ்த்தப்பட்ட தீண்டாதவர்கள் விரும்பவில்லை என்பதையும் அயோத்திதாசர் மிகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துக் கூறுகிறார்.
தண்டனையடைந்த குற்றவாளிகளுக்குத் தரும் தண்டனைகள் கூட மேல்சாதிக்கு ஒரு விதமாகவும் கீழ்சாதிக்கு வேறு விதமாகவும் அளிக்கப்படுவதையும் கூறுகிறார்.
“உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்வோர்கள் தங்களுக்கு எதிரிகளாகவும், விரோதிகளாகவும் உள்ளோர்களை தாழ்ந்த சாதியென்று வகுத்து நிலைகுலையச் செய்து வந்தனர். 1876ஆம் (183 ஆண்டுகளுக்கு முன்பு) வருஷத்தில் தாழ்ந்த சாதி என்போருக்கு தொழுக்கட்டை தண்டனையும் உயர்ந்த சாதியார் என்போர்க்கு சாதாரணக் காவல் தண்டனையும் உண்டாக்கிக் குடிகளை பலதேசங்களுக்கு சிதறி ஓடிப்போகும்படி செய்துவிட்டார்கள், விக்டோரியா ஆட்சியில்... தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்னும் வரம்பின்றி குரூரச் செய்கையுள்ளவனை தொழுக்கட்டையில் போடலாம் என்று மாற்றிவிட்டார்கள். பொறாமையினால் சிலரைத் தாழ்ந்த சாதி என்றும் சோம்பேறிகளாய் வயிறு வளர்ப்பதற்குப் பெரிய சாதிகள் என்றும் ஏற்படுத்திக்கொண்டார்களேயன்றி எதார்த்தத்தில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது.”(தமிழன் -15.4.1908)
“கிராமங்களிலும், தாலுக்காக்களிலும் உள்ள கோர்ட்டுகளில் தாழ்ந்த சாதி என்போர்கள் உள்ளே நுழையவும் கூடாது, அருகில் வரவும் கூடாது. தூர நின்று கொண்டு அவன் பிராதை (வழக்கை) எவனாவது கேட்டுச் சொல்ல அவன் தீர்ப்படைவது நியாயமோ...” (தமிழன்-7.11.1914) என்று வழக்கு மன்றத்திற்குள் போகாமலேயே வழங்கப்படுகிற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுகிற கொடுமை தமிழகத்தில் மட்டுமே காணலாம் என்று கூறுகிறார். இத்தகைய நிலைமையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டால் கொடுமையாளர்களின் ஆட்சி கொடுங்கோலாட்சியாகத்தான் இருக்கும் என்று கருதுகிறார். மேலும், தாழ்த்தப்பட்டோர்கள் கல்வி கற்று அறிவைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் உயர்த்தப்பட்டோர் மிகக் கவனமாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
26.1.1908இல் சுதேசமித்திரன் பத்திரிகையில் ‘ஐயோ அநியாயம் அநியாயம்’ என்று ஓர் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் ‘இழிந்தோர் பலர் கல்விக் கற்றுக் கொண்டு இந்தியாவின் சாதி வித்தியாசத்தைப் பற்றியும், உயர் குலத்தோரைப் பற்றியும் மற்றும் பெரியோர்களைப் பற்றியும் வாயில் வந்தபடி பேசுவதுமாகயிருக்கிறார்கள்’ என்று எழுதியிருந்தது...
இந்தியாவில் இருக்கும் பூர்வக்குடிகளும் விவேகம் மிகுந்தவர்களும் முயற்சியில் தளராதவர்களும், பூமிகளை பண்படுத்த வல்லவர்களுமாகியவர்களை ...தாழ்த்தி ராஜாங்க உத்தியோகங்களில் சேர விடாமலும் செய்துவரும் கொடூரங்களைக் கேட்பதற்கு நியாயம் இல்லாமல் போனதென்ன? (தமிழன் - 4.3.1908) என்று கேட்பதில் பயனில்லை என்பதை அயோத்திதாசர் அறிவார். எனினும் மனிதர் திருந்தக்கூடியவர்களாயிற்றே, என்றாவது திருந்தமாட்டார்களா என்றும் எதிர்பார்த்தார். எதிர்பார்ப்பே தவிர நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஓநாயிடமிருந்து ஆட்டுக்குட்டி அன்பை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். தாழ்த்தப்பட்ட தீண்டாத மக்களை பயமுறுத்தி எப்படியெல்லாம் உயர்த்தப்பட்ட மக்கள் பணிய வைக்கிறார்கள் என்பதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் அயோத்திதாசர் விளக்குகிறார்:
“கேயர் ஆர்டி என்ற எம்.பி. 7. 11. 1907-ந் தேதி தஞ்சாவூருக்குப் போகும் வழியிலுள்ள ஓர் ஸ்டேஷனில், பெருங்கூட்டமாக ஏழைப் பறையர்களையும் பள்ளர்களையும் நிறுத்தி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கவர்ன்மெண்டார் அதிகவரியைப்போட்டுவாதிக்கிறார்கள் என்று கூச்சலிடும்படி செய்தார்களாம்... ஓர் சாதியார் உழைப்பதற்குத்தான் ஆளாகி இருக்கிறார்களோ, உழைப்பதுடன் அவர்களை முன்தள்ளி மற்றோர் பிழைப்பதற்கும் ஆளாகி இருக்கிறார்கள். ஏழைகளை முன்தள்ளி தங்கள் பெயரையும் தங்களையும் அரசாங்கத்திற்குக் காட்டிக் கொள்ளாமல் சமய யுத்தம் செய்திருக்கிறார்கள்...” (தமிழன் - 20.11.1907)
இவ்வாறு கோழைத்தனமாக ஆங்கில ஆட்சியை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள் எளிய மக்களைத் தங்களுக்குச் சாதகமாகக் கூச்சல் போட்டு போராட வைத்து ஆங்கிலேயர்களின் பகைவர்களாக ஆக்கிவிட்டார்கள். ஆங்கிலேயரிடமும் அவர்கள் உதவி பெற்று பொது ஊழியம் செய்யும் மிஷனரிமார்களிடம் சந்தேகப்பட வைத்து சிற்சில சலுகைகளையும் உதவிகளையும் பெற்று வந்ததையும் இதனால் பெறாமல் செய்துவிட்டார்கள்.
ஆனாலும், நம்பிக்கையை இழக்காத அயோத்திதாசர் காலம் கனியும், குருடாக்கப்பட்டோர் விழித்துக் கொள்ளத்தான் போகிறார்கள். அப்போது கொடுமை செய்தவர்களை அவர்கள் பழிவாங்க மாட்டார்கள். செய்த பாவத்திற்கு அவர்களை அவர்களே அழித்துக் கொள்வார்கள் என்று கனத்த மனத்தோடு கூறுகிறார்:
“தாழ்த்தப்பட்ட பூர்வகுடி மக்கள் ஓர்கால் உயர்த்தப்படுவார்கள் என்பது சத்தியம். அவ்வாறு உயர்த்தப்படுங்கால் தங்களைக் காலமெல்லாம் தாழ்த்தி நிலைகுலையச் செய்தவர்களை அவர்கள் தாழ்த்தி துன்பம் செய்யாவிடினும் அவர்கள் செய்து வந்த தீவினைகள் சுட்டு பாழாக்கிவிடும்” (தமிழன் - 18.3.1908) என்று சலிப்புடன் கூறும் அயோத்திதாசர் எந்தவித வன்முறை கருத்துகளாலும் மக்களின் உணர்வுகளைத் தூண்டவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. அவரவர் செய்த நல்வினைகளும் தீவினைகளுமே அவர்களை வழி நடத்தும் என்று சொல்கிறார். இருப்பினும் தாழ்த்தப்பட்ட தீண்டாத மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏமாந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
“சுயப்பிரயோசன சுதேசிகள் தோன்றி ஆங்கிலேயர் அரண்மனை உத்தியோகங்களை விட்டு விடுங்கள் என்றும் பூமியை உழுது பயிரிடுங்கள் என்றும் உங்களுக்கு போதித்து வருவதாக அறிகிறோம். அவர்களுடைய போதனைகளை நம்பி மோசம் போகாதீர்கள். இத்தகைய சத்துருக்களுடைய கொடுமைகளுக்குப் பயந்து நெட்டாலுக்குப் போய் ஜீவிப்பவர்களுக்கும் ஜீவனம் கெட்டிருக்கிறது...
சுதேசி என்னும் சுயநலக்காரர்களின் வார்த்தைகளை மெய்யென்று நம்பி மோசம் போவீர்களானால் உங்களுக்கு போதித்துக்கொண்டே தொழுக்கட்டை சட்டத்தை கடைப்பிடிப்பார்கள். துரைகள் வீட்டு உத்தியோகங்களை விட்டு நீங்கி பூமி வேலைக்குப் போய் பழய சத்துருக்களிடம் தொங்குவீர்களானால் கோலும் குடுவையும் கொடுப்பதுடன் கழுமரங்களை நாட்டி வழுவிய வஞ்சங்களையெல்லாம் தீர்த்துக்கொள்வார்கள்.
...சுத்த ஜலம் மொண்டு குடிக்க விடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள். உங்கள் சத்துருக்கள் செய்த தீங்குகளை மறந்துவிடாதீர்கள், என்றும் மறவாதீர்கள், (தமிழன் - 20.5.1908) என்று ஆங்கிலேயர் வீடுகள், தொழிலகங்கள், பண்ணைகள் போன்ற இடங்களில் வேலை செய்யும் ஆதிதிராவிடர்களை எச்சரிக்கிறார்.
நல்ல அரசு அமையாததற்குக் காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை இல்லாத மக்களே என்று அயோத்திதாசர் கருதுகிறார். கல்வியை முதலில் கூறி கல்வியால் அறிவும், அறிவால் அருளும், இவைகளால் பெற்ற ஒழுக்கமும் வளர்ந்த மக்களின் ஒற்றுமையால்தான் நல்ல அரசு அமையும் என்று அவர் நினைக்கிறார்.
அறிவும் ஒழுக்கம் போன்றவைகளும் நல்ல நூல்களால்வருவனவாகும். இவை கற்றறிந்த ஒழுக்க சீலர்களால் படைப்பனவாகும். சிறந்த நூல்கள் கடவுள்களால் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவை மக்கள் சீரடைவதற்காகப் பயன்பட வேண்டும். ஆனால் கடவுள்களால் அல்லது அவர்கள் வாயிலாக வழங்கப்பட்டதாகக் கூறும் வேதங்களும் சாஸ்திரங்களும் யாருக்கு எதற்கு எப்படி பயன்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார்.
“வேதங்களும் சாஸ்திரங்களும் எதற்கு? மக்களை சீர்திருத்தி செவ்வைப்படுத்துவதற்கேயாம். அத்தகைய வேதம் என்பது சகல மக்களுக்கும் பொதுவாக இருப்பது நலமா, சில மக்கள் அவற்றை பார்க்கவும் கூடாது, கேட்கவும் கூடாது என்பது நலமா. அந்த வேதங்களை அறிந்த கடவுளுக்கு தனது சிருஷ்டிகளாம் மக்கள் மீதும் மக்களுருவில் மாற்றமின்றி சிருஷ்டித்தும் கொடுத்துள்ள வேதத்தைத் கூறுபோடலாமோ. அவ்வகைப் பிரித்திருப்பாராயின் அவரை ஓர் கருணை மிகுந்த கடவுள் என்னலாமோ. அத்தகை கருணையற்ற வேதத்தை சீர்திருத்த முதல் நூலென்றும் பாவிக்கலாமோ, கருணையற்ற கடவுளைப் பின்பற்றியவர்களும், கருணையற்றவேதத்தைப் போதிப்போர்களுக்கும், அதனைக் கேட்போர்களுக்கும் கருணை என்பது ஏதேனும் இருக்குமோ, கனவிலும் இருக்காது என்பதே அனுபவ காட்சியாகும்” (தமிழன் - 16.10.1912) என்று அவர் நடைமுறையில் இருக்கும் வருண- சாதி ஒழுக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
மக்கள் வாழ்க்கையில் எப்படியோ தோன்றிவிட்ட வருணபாகுபாடும் சாதி வெறியும்தான் மக்களுக்குள் ஒற்றுமையின்மையை வளர்த்துவிட்டது என்று எண்ணுகிற அவர், ஆன்மீகத்திற்காக எழுந்த நூல்கள் அறிவை வளர்க்கப் பயன்படவில்லையே என்றும் கூறுகிறார். எனவே வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் பகுத்தறியும் தன்மையை இழந்து விட்டார்கள் என்று கருதுகிறார். வாழ்க்கையின் மிக அத்தியாவசியமான தொழிலான விவசாயத்தைக் கூட சாஸ்திரத்தின் பேரால் இழிவாக எண்ண வைத்து விட்டவர்களை விவேகிகள் எனக் கருத முடியுமோ என்று கேட்கிறார்:
“தற்கால இந்துக்களின் தர்ம சாஸ்திரமே விவசாய கேட்டை உண்டாக்கிவிட்டது. மநுதர்ம சாஸ்திரம், பத்தாவது அத்தியாயம் 84வது வசனம் ‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது’ என்னும் இவ்வசனத்தை சாதிபேதம் பார்ப்போர்கள் மதிப்பார்களா? அதில் தங்கள் கருத்தை செலுத்துவார்களா? அதனினும் இவ்வாக்கியத்தை வேத விளக்கம் என நம்பி நடக்க வேண்டும் என்பதும் விதி...”
வேதத்தை நம்பி நடப்பவர்களே இந்துக்களாவார்கள் என்பதும் அன்னோர் முடிவு. விவசாய விருத்திக்குக் கேடாயுள்ள இத்தகைய சாஸ்திரத்தை எழுதினோரும் வாசிப்போரும் கேட்போரும் நடப்போரும் எத்தகைய விவேகிகள் என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய சாஸ்திரங்களை ஓர் தர்மசாஸ்திரம் என்று எண்ணி நடக்கும் கூட்டத்தோரால் இந்த தேசத்து விவசாயத் தொழில் சீர்கெடுமா சீர்பெறுமா? (தமிழன்-7.5.1913)என்று கேட்கிறார்.
மக்களின் உயிர்வாழ்வுக்கு உணவு என்பதும் அந்த விவசாயம் நிந்திக்கப்பட்டது ஏன் என்றும் கேட்கிறார், அத்தகைய சிறந்த விவசாய தொழில் செய்வோரை சூத்திரர் என்றும், தாழ்த்தப்பட்டோர் என்றும் கூறுவோரை அறிவாளிகளாகக் கருத முடியுமா என்பது அவருடைய கேள்வியாகும். பகுத்தறியும் பண்பில்லாதவர் இதனை ஏற்று நடைமுறைப் படுத்துவது தமிழினத்திற்கே பேரிழுக்காகும். இதற்கு வேதங்களை ஆதாரமாகக் காட்டுவது அதைவிட அறிவீனமாகும் என்று அயோத்திதாசர் எண்ணுகிறார். “பிரம்மாவின் முகத்தில் பிறந்த பிராமணர்களும், அவர்கள் ஓதுதற்கு தவளை வயிற்றிலும், நாயின் வயிற்றிலும், கழுதை வயிற்றிலும் பிறந்தவர் எழுதி வைத்த வேதங்களும் ஆதாரமாயினும்.....” என்று சிறிதும் அருவெறுப்பின்றி எழுதி மக்களை ஏற்கச் செய்வது அறிவுடைமை ஆகுமா என்கிறார், படைத்தலும் காத்தலும் அழித்தலுமான தொழிலை எவ்வெப்போது எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களாக, மக்களுக்குப் பயன்படாதவர்களாக இருக்கும் கடவுளர்களைப்பற்றி சொல்ல வந்தவர்:
“படைத்தலுக்கு ஒருவன், காப்பதற்கு ஒருவன், அழித்தலுக்கு ஒருவன் என மூவரை சிருஷ்டித்துக் கொண்டு, அதனால் உண்டாகும் கேடுகள் இன்னவை என்றும், நற்கர்மங்கள் யீதென்றும், அதனாலுண்டாகும் சுகங்கள் இன்னவை என்றும் விளங்குமோ. படைப்பவன் பாம்பையும் தேளையும் சிருஷ்டித்து மக்களையும் சிருஷ்டித்து அவனைக் கொட்டவும் கடிக்கவும் விடுவது படைப்போன் திருவிளையாட்டோ... அழித்தலுக்கு என்றே ஒருவன் எனில் காணும் பொருட்களில் அழியாதது ஏதேனும் உண்டோ. காப்பவன் ஒருவன் உண்டு எனில் ஊருக்குள்ள மக்களை உவாந்தி பெருகி மடியும் போதும் பிளேக் நோய் கண்டு மடியும் போதும் வெள்ளம் பெருகி மடியும் போதும் காக்காதவர் மற்றும் எக்காலத்தில் காப்பர்”. (தமிழன்- 2.10.1912)
என்று அயோத்திதாசர் கேட்பது படைத்தவன் அல்லது கடவுள் என்ற தத்துவத்தின் ஆணிவேரை அசைப்பதாகவே இருக்கிறது. எந்தக் கருத்தும் அது கதையாக இருந்தாலும் தத்துவமாக இருந்தாலும் மக்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும். எளிதில் புரிந்து கொண்டு பின்பற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். எழுதுவது, பேசுவது, செயல்படுவது ஏதாக இருந்தாலும் அவை மறவழிக்கின்றி அற வழிக்கு அழைத்துச் செல்லுவதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இராமாயணம், பாரதம் போன்ற கதைகளும் அவற்றின் தத்துவங்களும்கூட படிப்போர்க்கும் கேட்போர்க்கும் நீதி மார்க்கத்தை போதிக்கவில்லை என்று கூறுகிறார்.
“இராமயணக் கதை.... கடவுள் இராமனாகப் பிறந்து தம் மனைவியுடன் சுகித்திருக்குங்கால் பத்து தலையும் இருபது கையுமுடைய ஓர் இராட்சதன் சமுத்திரங்கடந்து எடுத்துப் போய்விட்டான் என்றும் அவனை கொல்லுவதற்காக அந்த தேசத்திற்கு சென்று அவனையும் அவன் குடும்பத்தாரையும் அவன் தேசத்தோர் அனைவரையும் கொன்று இராமன் தன் மனைவியை அழைத்துக் கொண்டுவந்துவிட்டார் என்பதாம். இத்தகைய கதையை சிறுவர்கள் வாசித்து வருவார்களாயின் அவர்களுக்கு நீதிமார்க்கம் நிலைக்குமா?
“பாரதக் கதை சுருக்கம் என்னவெனில் பங்காளிகள் பூமி வழக்கேயாம். ஒரு சகோதரருக்குக்கொடுக்க வேண்டிய பாகத்தை மற்றொரு சகோதரன் கொடுக்காத தடையால் அனைவரையும் அவனைச் சார்ந்த குடும்பத்தோர்களையும் மற்ற தேசத்து அரசர்களையும் வஞ்சினம் சூது மித்திர பேதம் மாயாவாதம் முதலியவைகளால் கொன்றார்கள் என்பதேயாம். இதை வாசிக்கும் சிறுவர்கள்...” (தமிழன்-26.3.1973)
எத்தகைய மனப்பான்மையுடன் வளர்வார்கள் என்று அயோத்திதாசர் கேட்கிறார். இளமையில் தூய்மையான ஒழுக்கத்தையும், அற நெறியையும், வன்முறையற்ற பண்பாட்டையும் சிறுவர்கள் எவ்வாறு இக்கதைகளால் பெறமுடியும் என்பது அவரது கவலையாகத் தோன்றுகிறது. எக்காலத்திலும் எவ்வகையிலும் வன்செய்கை, கொடுமை, கொல்லும் தன்மை மக்களிடையே வளரக் கூடாது என்று அவர் எண்ணுகிறார். எனவே அவர் கொடுமை, கொலைபுரிவது கடவுளாக இருந்தாலும் அவர்களை வணங்காதிருப்பது நல்லது என்று கூறுகிறார்.
“கோடி கோடியாக மக்களைக் கூட்டி கொல்ல வைத்து தானும் கொன்ற கொலைப்பாதக சாமியைக் கும்பிடுவதிலும் கொலைப் பாதகம் மேற் கொள்ளாதீர்கள் என்று கூறிய மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ. வீடு வீடாக திருடி தின்னும் சுவாமிகளைக் கும்பிடுவதினும் திருட வேண்டாம் என்று கூறிய மனிதரைக் கும்பிடுவது மேலன்றோ.
அன்னமிட்ட அன்னிய மனைவியை பெண்டாள ஆரம்பித்த சுவாமியைக் கும்பிடுவதினும் அன்னியன் தாரத்தை இச்சியாதீர்கள், ஏறெடுத்தும் பாராதீர்களென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ” (தமிழன் - 15.10.1913)
என்று தலை சிறந்த ஒழுக்கங்களில் ஐந்தில் மூன்றை முக்கியமாகக் கருதிச் சுட்டிக் காட்டுகிறார். மற்ற இரண்டு, மயக்கம் தரும் மதுவையும் அன்றாட வாழ்க்கையில் பேசும்பொய்யையும் அவர் குறிப்பிடாததற்குக் காரணம் இவைகுறைந்த கேட்டை விளைவிப்பதாகக் கருதினார் போலும். தொன்று தொட்டு அதிகாரமிக்க அரசனிலிருந்து, அன்றாடம் வியர்வை சிந்த உழைக்கும் தொழிலாளர் அயர்வைத் தீர்க்கும் தேவையாக பழக்கத்திலிருந்த மதுவை விதிவிலக்காக அவர் எண்ணியிருக்க மாட்டார். பழங்காலத்தில் தொழிலுக்குக் கூலியாக மதுவைக் கொடுக்கலாம் என்ற கவுடில்யரின் சட்டத்தை (கெளடலீயம் பொருணூல்) - பகுதி 7, பக். 315-334 அண்ணாமலை பல்கலைக் கழகம், மது குடிகேட்டைப் பற்றிய தலையங்கம் - தமிழன் 13.8.1913) அரசு ஊக்குவித்து நடைமுறைப்படுத்திய இந்த நாட்டு வழக்கத்தை எவ்வாறு எளிதாக மாற்ற முடியும் என்று அவர் கருதியிருக்கவும் கூடும். நன்மை விளைவிக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மையாகக் கருதத்தகும் (குறள்-292) என்ற வள்ளுவரின் கருத்துக்கேற்ப பொய்யைப் பற்றிக் கூறாமல் தவிர்த்தார் என்று எண்ணுதலும் தவறாகும். மது குடியையும் பொய்யையும் தன் தமிழன் பத்திரிகையில் கடுமையாகவே கண்டித்திருப்பது கவனத்திற்குரியதாகும். ஒழுங்கீனங்களில் கொலை, களவு, விபசாரம் ஆகியவை அதிக பழிக்கும் இழிவுக்கும் அழிவுக்கும் காரணமாகும் என்பதால் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தந்ததாக நாம் கொள்ளலாம்.
பகுத்தறிவதிலே பண்டிதர் அயோத்திதாசர் காட்டிய ஆர்வம் மகத்தானதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நல்ல சிந்தனையும் காலத்தால் முற்பட்டதுமாகும்.
மொழி
தமிழறிஞர்கள் போலவே சமணர்களாகிய பவுத்த, ஜைன அறிஞர்கள் தமிழுக்குச் சிறப்பான வகையில் தொண்டாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழகம் கண்ட உண்மையாகும். தமிழ்காலந்தோறும் மாற்றங்களோடு முன்னேறியிருப்பதும் நாம் காணும் வரலாறாகும். அத்தகைய தமிழ் அரசால் சீர்திருத்தம் பெறும்போது பொருள் மாறாமலிருக்க மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று அயோத்திதாசர் வலியுறுத்துகிறார்.
“மொழி என்னும் தமிழ் சொற்களில் வேற்றுமை எட்டும், திணை இரண்டும், பால் ஐந்தும், வழுக்கள் ஏழும், மாறுதல் எட்டும், காலம் மூன்றும், இடம் மூன்றும், அடி இரண்டும் கண்டு எழுதுவதே சொற்களின் சிறப்பாகும் என தமிழினையீன்று வளர்த்த தாதாக்களாகும் சமண முனிவர்களின் கருத்தாதலின் தற்கால அக்கருத்தை மேற்கொண்டு தமிழினைக் கேடற வளர்க்கவும் தோன்றிய... துரைத்தனத்தார் இலட்ச ரூபாய் செலவிட்டு வெளியிடும் தென்மொழி நிகண்டினை மிக்க ஆராய்ந்து வெளியிடுவார்களென்று நம்புகிறோம்.
“... தென்மொழியிலுள்ள வடமொழி கிடப்பை விளங்கக் கூறினும் மகமதியர் காலத்தில் கலந்துள்ள மொழிகளும், போர்ட்சுகீசியர்கள், ஐரோப்பியர் காலங்களில் கலந்த பலவகை மொழிகள் யாவற்றையும் கண்டு, நீக்க வேண்டியவைகளை நீக்கியும், சேர்க்க வேண்டியவைகளை சேர்த்தும்... பெரும் நிகண்டினை வெளியிடுதற்கு பல வித்வான்களை கலந்தே ஆராய்ந்து பதிப்பது மேலாம்” (தமிழன்- 12.31913).
என்று அவர் தமிழ் மொழி மீதுள்ள பற்றுடன் கூறுகிறார். அந்நிய ஆட்சிகளில் தமிழ் மொழியின் வளர்வும் தளர்வும், இயல்பாக பல் மொழி கலந்து விடுவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனவே தமிழறிந்த சான்றோர்கள் மூலமாக மட்டுமே ஆழ்ந்து அலசி வெளியிட வேண்டுமென்று எண்ணுகிறார். கடந்த காலத்தில் மத வாதிகளாலும் சாதி வெறியர்களாலும் தமிழ் நூல்கள் பட்டபாட்டையும் அவர் நினைவுகூறத் தவறவில்லை.
“.... சாதி வேஷத்தை பெருக்கியும், பொய்யைச் சொல்லி மதக் கடைகளைப் பரப்பிப் பொருள் சம்பாதித்தும் பொய்யைச் சொல்லி ஆடு மாடு குதிரைகளை நெருப்பிட்டு வதைத்து தின்று வந்தவற்றை சமண முநிவர்கள், பௌத்தக்குடிகளும் ஆயாசமுற்று கண்டித்தும் துரத்தியும் வந்த காலத்தில் நூதன வேஷ சாதியோர் மித்ர பேதத்தாலும் வஞ்சினத்தாலும் பொறாமெயாலும் அக்காலத்திலிருந்த சிற்றரசர்களையும் பெருந்தொகைக் குடிகளையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு சமண முனிவர்களையும் அவர்கள் கட்டிடங்களையும் அழித்து வந்ததுடன் பெரும்பாலும் அவற்றுள் அடுக்கிவைத்திருந்த சுவடிகளையே கொளுத்தி நாசம் செய்துவிட்டார்கள்” (தமிழன் - 12.3.1913)
என்று வந்து குடியேறியவர்களாலும் அந்நிய நாட்டவராலும் இலக்கியம், மருத்துவம், கலை போன்ற செல்வங்கள் அழிக்கப் பட்டதை நினைவுகூறும் அயோத்திதாசர், இழந்தவைபோக சில நூல்களை தாழ்த்தப்பட்டுவிட்ட ஆதிதிராவிட பௌத்தர்கள் அச்சிட்டு வெளிக் கொண்டு வந்திருப்பதையும் கூறுகிறார்.
“பெளத்தர் குடிகள் யாவரையும் தாழ்த்தி தாழ்ந்த சாதியாரென வகுத்து பலவகையாகத் துன்பங்களைச் செய்து தேசம்விட்டு தேசம் துரத்திய போதிலும் தங்கள் தங்கள் கையிருப்பில் இருந்த நீதி நூற்கள், ஞான நூற்கள், சோதிடநூற்கள் யாவுமே தற்காலம் அச்சுக்கு வெளிவந்து பூர்வ வைத்தியத்தில் அரைக்கால் பாகம் தாழ்ந்த சாதியாரென்று வகுக்கப்பட்ட கூட்டத்தோர்களாலேயே பரவி வருகிறதன்றி, பூர்வ நூற்களையும் அவர்கள் அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறார்கள்.
அவற்றுள் எனது பாட்டனார் ஜார்ஜ் ஆரிங்டியன் துரை பட்ளர் கந்தப்பன் என்பவர் ஓலைப் பிரிதியாயிருந்த திரிக் குறளையும், நாலடி நானூரையும், ஈஸ்ட் இன்டியன் கம்பனியார் காலத்தில் தமிழ்ச் சங்கம் கூட்டி வைத்த கனம் எல்லீஸ் துரை அவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வந்திருக்கின்றது.
போகர் எழுநூறு, அகஸ்தியர் சிமிட்டு ரத்தினச் சுருக்கம், புலிபாணி வைத்தியம் ஐந்நூறு, அகஸ்தியர் பரிபாஷை ஐந்நூறு, பால வாகடம் மற்றும் நூல்கள் எமது தமிழாசிரியர் தேனாம்பேட்டை வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதர் அவர்களால் அச்சிட்டு வெளிவந்திருக்கின்றன.
இச்சென்னையில் பர்ஸுவேலையர் தமிழ்ப்பத்திரிகை வெளிவருவதற்கு முன் புதுப்பேட்டையில் “சூரியோதயப் பத்திரிகை” என வெளியிட்டுவந்த திருவேங்கிடசாமி பண்டிதர் அவர்கள் சித்தர்கள் நூற்களையும், ஞானகும்பிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்நூரையும், தன்வந்திரியர் நிகண்டையும் அச்சிட்டுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறார்” (தமிழன்- 25.2.1914)
என்று பட்டியலிட்டு ஆதிதிராவிடப் பெரியார்கள் பல இடையூறுகளுக்கு இடையிலும் தமிழுக்குத் தொண்டாற்றியிருப்பதைப் பெருமையோடு குறிப்பிடுகிறார். கல்வியறிவு படைத்த அறிவாளிகளாலும், தமிழ் பற்றாளர்களாலும் இத்தொண்டைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆதிதிராவிடர் கல்வியறிவற்றவர்களாகவே இருந்தவர்கள் என்று ஆணவத்தோடு எண்ணியவர்க்கும் கூறுவோருக்கும் பண்டிதரின் இந்தச் செய்தி நல்ல படிப்பினையாகும்.
அயோத்திதாசர் தமிழ் எழுத்துகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தார். இது படிக்காத மக்களும், சிறிது படித்து அதை பிறர்க்கு கூறவும், கூறக் கேட்டவர்க்குப் புரியவுமாக இருக்க வேண்டும் என்பது அவர் எண்ணமாகும். அவர் நடத்திய தமிழன்வாரப்பத்திரிகையில் அவர் ஆண்ட சொல்லாட்சி (தமிழன் - 30.12.1908) இதை உறுதிப்படுத்துகிறது. உதாரணமாக அரையன் என்பதை ‘அரயன்’ என்றும், பழைய என்பதை ‘பழய’ என்றும் ஒற்றுமை என்பதை ‘ஒற்றுமெய்’ என்றும். மெளனம் என்பதை ‘மவுனம்’ என்றும் எழுதிக் காட்டியிருப்பது சிந்திக்கத்தக்கது. இம்முறையானது எழுத்து குறைப்புக்கும் அச்சுக் கோர்ப்பதற்கும் வசதியாக இருக்கும் என்பது மனங்கொள்ளத்தகும். பழங்கால கல்வெட்டுகளிலும் இவ்வகை கையாளப்பட்டிருப்பதைக் காணலாம்.
கல்வி
கல்வி பெறுவது என்பது அவரவர் வசதியும் வாய்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டதாகும். பொருள் வசதியின்றி படிக்கும் வாய்ப்புமின்றி, ஒருவேளை வசதியிருந்து வாய்ப்பும் கூடி வரப்பெற்றால் படிக்காதபடி தடைப்படுத்தும் இன சாதி குறுக்கீடுகள் கடுமையாக இருக்குமாயின் எந்தத் தாழ்ந்தவரும் கல்வியால் வளமும் வாழ்வும் பெறமுடியாது. இத்தகைய தடங்கல்கள் கிராமங்கள் தோறும் இருந்தன என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். தமிழக முடிமன்னர் காலத்திலிருந்து இவ்வழக்கம் ஆங்கிலேய அரசுவரை நீடித்தது. எனினும் அயோத்திதாசர் போன்ற ஆதிதிராவிட முன்னோடிகளால் மெல்ல மெல்லக் கல்விக்கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களிடையே கல்வி பரவ ஆரம்பித்தது. இதிலும் எத்தனை சங்கடங்கள் என்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்.
“1897-ஆண்டில் மகாஜன சபைக்கு பூர்வீக திராவிடர்களால் ஒரு பிரதிநிதியை அனுப்பி கலாசாலை,பூமிகளின் விஷயமாக கேட்டபோது சாதியைக்குறிக்காமல் பூர்வ திராவிடர் என்றே குறிப்பிட்டு இருந்தார்கள்.... இந்த எளிய குலத்து சிறுவர்க்குக் கருணைதங்கிய ராஜாங்கத்தார் ஆரம்ப வகுப்பு வரையில் இலவச கல்வி கற்பிக்கும்படி ஆரம்பித்த போது பெயர் வைத்தவர்கள் சாதிபேதமற்ற எளிய பிள்ளைகளின் இலவச கலாசாலைஎன வகுத்திருப்பார்களானால் பேருபகாரமாக விளங்கி இருக்கும். அங்ஙனமின்றி இக்கூட்டத்தாருக்கு எதிரிகளாகவும், சத்துருக்களாகவும் விளங்குவோர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டுகொண்டு “பஞ்சமர் கலாசாலை” என்று வகுத்துவிட்டார்கள்” (தமிழன் - 3.3.1909)
என்று கல்வி கற்கும் புனிதமான இடத்தையும் ஒரு சாதிப் பெயரிலேயே இயங்குமாறு செய்த வெறித்தனத்தை வேதனையோடு குறிப்பிடுகிறார். சிறுவயதிலேயே வேற்றுமையைப் புகுத்தி உயர்வு தாழ்வைக் கற்க வைத்து சாதி பாகுபாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை ஒரு மார்க்கமாக ஆக்கி விட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் பள்ளிக்கூடங்கள் நடத்துபவர்களும் கண்காணிப்பவர்களும் சாதி - சமய பேதமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.
“பெரிய சாதிகளென்று பெயர் வைத்துக் கொண்டிருப்போர்கள் சிறிய சாதிகளென்று அழைக்கப்படுவோர் வாசஞ் செய்யும் கிராமங்களிலுள்ளப் பள்ளிக்கூடத்து சிறுவர்களை அவர்கள் வசிக்கும் சாலைகளுக்கே நேரில் போய் பார்வையிடவும், பரிட்சை செய்யவுமில்லாமல் தூர விலகி சில தோப்புகளிலும், தங்களுக்கு வசதியான இடங்களிலும், உட்கார்ந்துகொண்டு பிள்ளைகளை தருவித்து தூர நிறுத்திக் கொண்டு தாங்களும் பரிட்சை செய்துவிட்டோம் தாங்களும் பார்வையிட்டோமென்று (ரிப்போர்டுகள்) எழுதிவிடும்படியான சில சாதியாரிருக்கின்றார்கள்.
அவ்வகை சாதியோரை இச்சூப்பர்வைசர் வேலைகளுக்கு நியமிப்பதனால் இராஜாங்கத்தோரின் நல்லெண்ணம் முற்றும் பாழடைந்து போவதுடன் இராஜாங்கத்தின் பணமும் வீண்விரயமாகும். ஆதலின் சாதி பேதமற்றவர்களும், சமய பேதமற்றவர்களும், தன்னவர் அன்னியரென்னும் பட்சமற்றவர்களும், மனிதர்களை மனிதர்களாக யெண்ணுகிறவர்களும் பேராசையற்றவர்களுமாகிய பெரியோர்களையே பார்த்து சூப்பர்வைசர் உத்தியோகங்களில் நியமிப்பதனால்... ராஜாங்கத்தோர் கருத்தையும் மீடேற்றுவார்கள்” (தமிழன்-27.1.1909).
என்று எடுத்துக் காட்டுவதன் மூலம் சாதி பாகுபாட்டால் உயர்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் அச்சுறுத்தலாம், படிக்க இயலாதவாறு செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டுகிறார். மற்றும் கல்வி என்பது வெறும் வாழ்க்கைக்கும் வசதிக்கும் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் நல்ல ஒழுக்கத்தைப் பெறவும் பிறரையும் சிறந்த ஒழுக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும் நூற்கல்வி பயன்பட வேண்டும் என்றும் கருதுகிறார். இத்தகைய படிப்பு சிறுவயது முதற்கொண்டே அமைய வேண்டும் என்றும் விரும்புகிறார்.
“...திராவிடமொழியில்... அந்த பூமியில் வாழும் குடிகளின் செயல்களையும், சிறப்புகளையும் நெறிகளையும் தெள்ளென விளக்கி அநேக நூற்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். அத்தகை நூற்களை தற்கால சிறுவர்களுக்குக் கற்பித்து வருவதாயின் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் இவைகள் பெறுகுவதுடன் குரு விசுவாசம், ராஜவிசுவாசம் நிலைத்து தாங்கள் சீரடைவதுடன் பிறரையும் சீர் பெறச் செய்வார்கள்.
இத்தகைய நூற்களை சிறுவர்கள் கையில் எடுக்கவே கூடாமற் செய்துவிட்டபடியால் சிறுவர்கள் ஆங்கில மொழியை வெகுவாக கற்றிருப்பினும் தாய்மொழியின் செயலும் பயனும் குறைந்து போயிற்று. அத்தகைய நூல்களை கலாசாலையில் கற்பித்தால் தற்கால நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட சாதி வித்தியாசங்களையும் மதக்கடை வியாபாரங்களும் இராஜாங்கத்தோடு விளங்கிவிடுவதுடன் சிறுவர்களும் விவேக விருத்திப் பெற்று சாதித் தலைவர்களையும் சமயத் தலைவர்களையும் மதியாமற் போய்விடுவார்கள் என்ற கருத்தினால் சாதித்தலைவர்களும் சமயத்தலைவர்களும் பூர்வ திராவிட நூற்களை கலாசாலையில் பரவ விடாமல் செய்து விட்டனர்” (தமிழன் -6.3.1912)
என்று இவர் கூறும் திராவிட நூல்கள் நீதி நூல்களேயாகும். இவை திருக்குறள், நாலடியார் போன்றவை என்று கூறலாம். இவைகளே ஒழுக்க நூல்கள் என்றால் பொருந்தும். இவற்றிலிருந்தே வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் போன்றவைகளைப் பெற முடியும் என்று அவர் கருதி தம் பத்திரிகையில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். வாழ்க்கை நெறிநூலான திருக்குறள் போன்றவை இவர் குடும்பத்தாரிடமிருந்ததும் இவருடைய பாட்டனாரால் எல்லீஸ் என்ற ஆங்கிலேயரிடம் கொடுக்கப்பட்டது என்பதும் நினைவுபடுத்திக் கொள்ளத்தக்கதாகும்.
பழந்தமிழர் நூல்களை அழிப்பதற்கென்றே ஒரு விழாவை ஏற்படுத்தி ஓலைச் சுவடிகளை ஆற்று நீரில் விட்டு அழிக்கச் செய்த சூழ்ச்சியைத் தமிழர்கள் காலங்கடந்து உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. பல தமிழ் இலக்கியங்கள் அழிய தமிழர்களே காரணமாக இருந்தது வருந்தத்தக்கது. இருப்பினும் சில தப்பி இருக்கின்றன. அவைகளில் சில ஆதிதிராவிடர் பாதுகாப்பில் பிழைத்திருந்தன.
அரசியல்
சமுதாயம், சமயம், அரசியல் என்று எத்துறையாயினும் அவை மக்களின் செம்மையான வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என்பதே பண்டிதர் அயோத்திதாசரின் கருத்தாகத் தோன்றுகிறது. அரசியலைப்பற்றி ஒரு நூற்றாண்டுக்கு முன் அவரது சிந்தனை எவ்வாறு இருந்தது என்பது எண்ணி மகிழத்தக்கதாக இருக்கிறது.
“அரசியல் என்னும் இறை மாட்சி வழங்கும் விசாலமுற்ற முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி என்னும் வளநாடுகளும், இரத கஜ துரக பதாதிகளென்னும் சதுரங்க சேனைகளும், சாம பேத தான தண்டமென்னும் சதுர்வித உபாயங்களும், அமைச்சர்களும், வித்தை புத்தி ஈகை சன்மார்க்கமென்னும் சதுர்முறைக் குடிகளும், நாடரண், காடரண், மலையரண்,மதிலரண் என்ற நான்கு அரண்களும், தன சம்பத்து, தானிய சம்பத்து, ஆடை சம்பத்து, ஆபரண சம்பத்துகளுடைய நிலை அரசாங்கம் எனப்படும்.
இத்தகையவற்றைப் பெற்ற அரசன், விடாமுயற்சி, ஈகை, தைரியம், விசாரணை, விழிப்பு, கலை நூல்பயிற்சி,தர்மம் நிலை நிறுத்தல், அதருமம் நீக்கல், குற்றத்திற்கு நாணுதல், அந்தஸ்தை நிலை நிறுத்தல், வித்தியா விருத்தி செய்தல், விருத்தியால் கிடைத்த பொருட்களை சேர்த்தல், சிதறவிடாமல் காத்தல், காத்த பொருளை அறம், பொருள், இன்பத்திற்கு செலவு செய்தல், குடிகளை நேரில் பார்வையிடல், ஒரு குடியால் மற்றோர் குடிக்கு கெடுதி நேரிடாமல் காத்தல், குடிகளுக்கு நேரிடும் துன்பங்களை தனக்குற்ற துன்பம் போல் கருதி காத்தலுமாகிய செயல்களில் செங்கோலைச் செலுத்துவானாகின் அவனை காக்கும் இறையென்றும் கொண்டாடுவார்கள்” (தமிழன் -24.7.1907)
என்று தொல் தமிழர் நீதி நூல் கொள்கையை எடுத்துக் கூறுகிறார். இந்த நெறிப்படி, பழந்தமிழர்கள் ஆட்சி சங்க காலத்திற்கு முன்போ பின்போ நடைபெற்றதா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். ஆனால் முடி மன்னர் ஆளுமைக்குப் பிறகும் மகமதிய-ஆங்கிலேய ஆட்சிகளும் நீதி நூல்கள் கூறின அத்தகைய தரும நெறியால் ஆளப்படவில்லை என்பதை வரலாறு காட்டும். ஆங்கில ஆட்சி மாற்றப்பட்டு இந்தியா தன்னாட்சி அல்லது சுயாட்சி பெற்றாலும் நீதிநெறிப்படி ஆட்சி நடைபெறாது என்று ஐயப்பட்ட அயோத்திதாசர் வருணாசிர தர்மத்தைக் கடைப்பிடிக்கும் இந்திய மக்களில் எந்த சாதியாரிடம் ஆட்சி செல்லுமோ என்று கேட்கிறார்.
“சுயராட்சியமென முயற்சிக்கும் இந்துக்கள் தங்களது மநுதர்ம சாஸ்திரத்தை நீக்கிவிட சுயராட்சியம் விரும்புகிறார்களா அன்றேல் மனுதர்ம சாஸ்திரத்தை சட்டமாக வகுத்துக் கொண்டே ஆள விரும்புகிறார்களா விளங்கவில்லை. மனு தர்ம சாஸ்திரத்தை அனுசரித்துக் கொண்டே சுயராட்சியம் பெறுவதாயின் தேசாதிபதியாக கவர்னரும் படைத்தலைவராக கமாண்டர்சீப்பும் சத்திரியர்களாக இருந்து தீர வேண்டும்... எந்த க்ஷத்திரர்பால் ஈய்வரோ”... (தமிழன் -21.8.1912)
என்று கேட்கிற இவர் ஆங்கில ஆட்சிக்குப் பிறகும் வருணாசிரம் ஆட்சியே நடைபெறும் என்று நம்பியிருக்கிறார். கவர்னர், கமாண்டர் என்ற பதவிகள் ஆட்சி மாற்றமடைந்த பிறகும் சத்திரியர், பிராமணர் போன்ற வருணத்தாரின் ஆளுமைக்கு நாடு உட்படும் என்று கருதியே இவ்வாறு கூறுகிறார். அவ்வாறு மாறினால் ஆறுகோடி- தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பாழ்பட்டுவிடும் என்றும் அஞ்சுகிறார்.
“நமது சக்கரவர்த்தியார் கருணை வைத்து அதிகாரங்களை (இந்தியர்களிடம்) முற்றும் கொடுத்துவிடுவார்களாயின் சாதிபேதத்தால் நசுங்குண்டுள்ள ஆறுகோடி மக்களும் அடியோடு நாசமடைந்துவிட வேண்டியதேயாம்... சாதி துவேஷம் இத்தேசத்தை விட்டு எப்போது தொலைக்க முயல்கிறார்களோ அப்போதுதான் இந்திய தேசத்தோருக்கு சுயராட்சியமும் மற்றுமுள்ள உத்தியோகங்களும், சகல சுதந்திரங்களும் கொடுக்க வேண்டுமேயன்றி சாதி துவேஷம் இந்தியாவில் இருக்குமளவும் சக்கரவர்த்தியாரும் கவர்னர் ஜெனரலும் காரியாதிகளை நடத்துவார்கள் என்று நம்புகிறோம்” (தமிழன் - 25.12.1912)
என்ற அயோத்திதாசரின் கருத்தில் நாடு சுதந்திரம் பெறும் என்ற நம்பிக்கை இருந்தது தெரிகிறது. ஆயினும் சாதிவெறி ஒழியாமலே இருக்கும் என்ற அச்சம் இருப்பதும் தெளிவாகவே தெரிகிறது. தேசம் இந்திய மயமாக்கப்பட்டாலும் அல்லது விடுதலை பெற்றாலும் நாட்டில் சாதி பாகுபாடு ஒழியும்வரை ஆங்கில ஆளுமையே இருக்கட்டும் என்ற ஆவலும் தெரிகிறது. அதே சமயத்தில் இந்திய மக்களில் நல்லவர் சிலர் உள்ளனர். அவர்களால் நாட்டை ஆளவும் முடியும் என்றாலும் சாதிவெறி நாட்டிற்குக் கேட்டை விளைவித்துவிடும் என்றும் கூறுகிறார்.
“இத்தேசத்துகுடிகள் இராஜாங்க உத்தியோகத்திற்கு பொருந்தியவர்கள் அல்ல என்பது எனது அபிப்பிராயமன்று. அவர்களுக்குள்ள சாதி சம்பந்தப் பிடிவாதமும் மதசம்பந்த வைராக்கியங்களுமே அவற்றிற்கு கேடாக முன் நிற்கிறது ... சாதி பேதமின்றியும் சமய பேதமின்றியும் மனிதர்களை மனிதர்களாக பாவித்து நீதி செலுத்தும் புண்ணிய புருஷர் நூற்றிற்கு ஒருவரோ இருவரோ இருப்பாரின்றி வேறில்லை” (தமிழன் -1.10.1913) என்று கூறி பெருவாரியான மக்களால் தாழ்த்தப்பட்டோர்கள் அவதிப்படுவார்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி கூறுகிறார்: “இத் தேசத்தில் உழுது பண்படுத்தி சீவிக்காது வேறு தேசங்களுக்குப் போய் துயரடைய காரணமாக இருந்தவர்கள் யார்? பொய்யான சாதி நாற்றத்தை போர்த்துத் திரிந்தவர்களன்றோ?” (தமிழன் -17.12.1913) என்று கேட்டு, “கல்வியற்ற எளிய குடிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க சக்தியற்று நாளுக்குநாள் நசிந்து உள்ள பூமியையும் வஞ்சகருக்கு தாரை வார்த்துவிட்டு வெளிதேசங்களுக்குப் போய் பிழைக்கிறார்கள்” (தமிழன் - 37.1907) என்று தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி நாட்டிலிருக்கும் சாதி வெறியின் நேர்மையற்ற தன்மையையும் விளக்குகிறார்.
“கொல்லாமல் கொல்லப்பட்டு வரும் இத்தேசத்திய பூர்வ இந்தியர்களாம் ஆறுகோடி ... தாழ்த்தப்பட்டோர்களில் முன்னேறியிருப்பது பிரிட்டிஷ் துரைமார்களின் கருணையாலும் மிஷனரி கிறிஸ்தவ துரைமார்களின் அன்பினாலுமேயன்றி சாதி வேஷமுள்ள சீர்திருத்தக்காரரால் அல்ல என்று துணிந்து கூறலாம்” (தமிழன் - 24.12.1913)
என்று வலியுறுத்திக் கூறும் அயோத்திதாசர், ஆட்சி ஆங்கிலேயரிடத்தில் இருந்தாலும் அதிகாரங்களில் பெரும்பாலும் சாதி வெறியர்களே இருக்கிறார்கள் என்பதையும் கூறுகிறார். அந்நிய ஆட்சியை மாற்றி இந்திய ஆட்சியை நிறுவ எண்ணுகிற தேசிய இயக்கத்தை அவர் சரியாகவே கணித்தார்.
“ஆறு கோடி மக்களையும் நாசம் செய்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டே மேலுக்கு ‘நேஷனல் ’காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக்கொண்டு பெரிய வேஷக் காங்கிரசாகவே நடத்தி வருகின்றார்கள்” (தமிழன் - 7.1.1914) என்றும் இன்னும் சற்றுக் கடுமையாகவே சாடுகிறார்: “சீர்திருத்தம் வேண்டும் என்றும் சுயராட்சியம் ஆளவேண்டுமென்றும் கோறுவது மேல் மக்களின் எண்ணங்களாகக் காணவில்லை. தேசத்தை இப்போது சீர்கெட்டுள்ளதைவிட இன்னும் சீர்கெடுத்து பாழாக்கிவிடவும் ... இராஜாங்கத்திற்கும் குடிகளுக்கும் கலகத்தை உண்டாக்கிவிட்டு மத்திய பஞ்சாயத்தில் மகிழ்ச்சி பெற்றுக் கொள்ளும் கீழ்மக்கள் செயலாகவே காணப்படுகின்றது” (தமிழன் - 13.5.1908) என்று கூறுகிறார். முதலில் சமுதாய சீர்திருத்தம் வேண்டும் என்று விரும்புகின்ற அவர் “எப்போது இராஜாங்க சீர்திருத்தத்தை நாடினரோ அப்போதே குடிகளின் சீர்திருத்தத்தை நாம் வேண்டியதுதான். குடிகளின் சீர்திருத்தத்தை ஆலோசிப்பதால் என்ன பயன். தேசம் சிறப்படையுமா?” (தமிழன் - 5.11.1913) என்று கூறி இந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் சேர்த்து சுயராட்சியம் கொடுப்பதிலும் பெரும் கலகமே உண்டாகி... தேச மக்கள் சீரழியும்படி நேர்ந்துபோம்” என்றும் எச்சரிக்கிறார்.
இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் அன்று இந்திய ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடத் தோன்றியதல்ல என்பதை அவ்வியக்கத்தின் ஆரம்ப கால மாநாடுகளின் திட்டங்களும் தீர்மானங்களுமே அறிவித்துவிட்டன. எனவே அயோத்திதாசர் அக்கட்சியின்மீது அவநம்பிக்கை கொண்டதில் வியப்பில்லை. அத்துடன் அவர் காட்டும் காரணமும் நியாயமானதேயாகும்.
“... நெட்டால் தேசத்தில் அவலைப்படும் குடிகளுக்காகப் பரிந்து பரிந்து பேசும் கனவான்கள் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்த தேசத்து பூர்வத் தமிழ்க்குடிகளை தாழ்த்திப் பாழாக்கிவரும் பரிதாபத்தை பத்திரிகை மூலமாகவும் (நேரே) கண்டு வரும் கனவான்கள் இக்காங்கிரஸ் கூட்டத்தில் விளக்கி ஈடேற்றினார்கள் இல்லை. (இங்கு) கண்ணாரக் கண்டும் கவலைப்படாதவர்கள் காணாத நெட்டால் இந்தியர்களின் மீது கவலைப்படுவது என்ன காரணமோ... இக்கூட்டத்திற்கு நேஷனல் காங்கிரஸ் என்னும் பெயர் தகுமா?” (தமிழன் - 6.1.1909) என்று கேட்கும் அவர் அவ்வியக்கம் ‘நேஷனல்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதே அதற்குக் களங்கம் என்பதைப்போல் கருதுகிறார். இந்தியாவில் உள்ள மக்கள் அலைக்கழிக்கப்படுவதை எண்ணிப் பார்க்காதவர்கள் அந்நிய நாட்டில் வாழும் மக்களைப் பற்றி அக்கறை கொள்வது நியாயமா என்று வியப்புடன் கேட்கிறார். மேலும், “தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டை விளைவித்துக் கொண்டது போக ஏழைக் கூலிகளையும் துன்பத்திற்கு உள்ளாக்கிவிட்டது சிறக்க விளங்குகிறது ... இத்தேசத்திலுள்ள ஆறுகோடி இந்திய ஏழைகள் கண்ணீருடன் கதறுவதை நோக்காது தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களுக்குப் பரிந்து பேசுவது விந்தையிலும் விந்தையே...” (தமிழன் -7.1.1914)
“சௌத் ஆப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியர்கள் இந்தியர்களை மிக்கக், கஷ்டப்படுத்துகிறார்கள் என்றும் கறுப்பு தேசத்திற்கும் வெண்தேசத்திற்கும் வித்தியாசம் பாராட்டியே பிரித்து நடத்துகிறார்கள் என்றும் கூட்டங்கள் கூடி பேசும்படியானவர்கள் தங்கள் சுய தேசத்திலேயே கறுப்பாயிருக்கும் சாதிபேதமற்ற ஆறுகோடி மக்களை கறுப்பாயிருக்கும் பலகோடி மக்கள் ஒன்று கூடிக் கொண்டு கொல்லாமல் கொன்றுவிடும் பாவிகளின் செயல்களை இக்கூட்டங்கள் கூடி பேசும் பெரியோர்கள் அறியார்களோ” (தமிழன் - 10.9.1913)
என்று சலிப்புடனும் வெறுப்புடனும் கேட்கிறார். இந்திய நாட்டிலே அரை வயிறு கஞ்சிக்கும் வழியில்லாமல் வாடிய மக்கள் அயல் நாடுகளுக்குச் சென்று பொருள் சம்பாதிப்பதை அயோத்திதாசர் வரவேற்கிறார். “தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியர்கள் கூலிகளாகச் சென்றார்கள். இவர்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கூலிகள் நூறு பவுன், இருநூறு பவுன் கையிருப்புடன் இந்தியாவிற்கே திரும்பி வந்தார்கள்” (தமிழன் - 24.12.1913)
என்ற செய்தியையும் தெரிவிக்கிறார். அயோத்திதாசர் அதில் மகிழ்ச்சியடைகிறார் என்று தெரிகிறது. இந்த வருவாயும் கெட்டுவிடக்கூடாது என்றும் அவர் எண்ணுகிறார். தென்னாப்பிரிக்கா சென்று அங்குள்ள இந்தியர்களுக்காகப் போராடுவோரால் இந்திய முன்னேறிய வணிக மக்களிலிருந்து அடிமட்டக் கூலித் தொழிலாளர் வரையிலுள்ள எல்லா தரப்புமக்களும் பாதிக்கப்பட்டார்கள். இதில் அதிகமாக துயரத்திற்குள்ளானோர் தாழ்த்தப்பட்ட மக்களே ஆவர். இது அதே காலத்தில் இருபது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் கணக்காயராக பணியிலிருந்த ஆதிதிராவிட தலைவரான இரட்டைமலை சீனிவாசனார் அறிந்ததுதான். எனவே அயோத்திதாசரின் கேள்வி நியாயமானதேயாகும்.
எனவே, சமுதாயம் முதலில் சீர்திருத்தப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அயோத்திதாசர் அதை அரசே செய்யவேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார். ஆயினும் ஆளுவோருக்கு சமுதாயப் பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீர்வுகாண சமூகப் பிரதிநிதிகள் அரசியல் வாய்ப்பும் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறார். 1900இல் இதற்கான சூழ்நிலை கனிந்தது.
இந்திய சமுதாயங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அரசியலில் வாய்ப்பு கோரியதன் விளைவாக ஆங்கில அரசு சில சீர்திருத்தங்களை மேற்கொண்டது. 1909இல் மிண்ட்டோ -மார்லி குழு அளித்த அறிக்கையின் பயனாக சட்டமன்றங்கள் விரிவு படுத்தப்பட்டு பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டனர். 1919இல் மாண்ட்டேகு - சேம்ஸ்போர்ட் குழு மேலும் சில சீர்திருத்தம் மேற்கொண்டது. 1909இல் வர இருக்கும் மார்லி குழுவைப் பற்றி 1908இல் ஆதிதிராவிடர் கவனத்திற்காக எழுதினார்:
“பிரிட்டிஷ் ராஜாங்க சங்கத்தின் பெருந்தொகையாயிருந்து பேச வேண்டிய விஷயங்களுக்கு பார்சிகளும், சிக்ஸ்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், மற்ற தாழ்ந்த குடிகளும் தங்கள் தங்கள் மரபிலுள்ளோர் பெருந்தொகைக்குஞ் சிறுதொகைக்குந் தக்கவாறு பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்து மேற்படி சங்கத்திற் சேர்ந்து ஆலோசனை முடிவு செய்யலாமென்று வகுத்திருக்கின்றனர்.
ஆயினும் சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையோரனுப்பியுள்ள விண்ணப்பத்திற்கு பதில் சென்னை இராஜதானி சீர்திருத்த சங்கத்தோர் அவைகள் யாவற்றையும் விளக்கி வெளியிடுவார்கள் போற் காண்கிறது. அத்தகைய விளக்கவுரை வெளிவந்தவுடன் சகல தேசங்களிலும் பரவியிருக்குஞ் சாதி பேதமற்ற திராவிடர்களுக்குத் தெரிவிப்பதுடன் சகல தேச பிரதிநிதிகள் வந்திருந்து பெருங்கூட்டம் நடக்கவேண்டிய காரணமும் நேரிடும்... ஆதலின் நமது சாதி பேதமற்ற திராவிடர்கள் யாவரும் காரணங்களிற் கண்ணோக்கம் வைத்திருந்து காரியத்தை நிறைவேற்றுவார்களென்று நம்புகிறோம்” (தமிழன் - 23.12.1908)
என்று அவர் 1891ஆம் ஆண்டு சீர்திருத்தம் கோரி இந்திய நேஷனல் காங்கிரசுக்கு எழுதியதை நினைவுபடுத்தி வர இருக்கும் மிண்டோ -மார்லி குழுவினரின் சீர்திருத்த திட்டத்தில் தமது அரசியல் வாய்ப்பைப் பெற ஆதிதிராவிடர்களையும் அவர்களது அமைப்புகளையும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆதிதிராவிடர்களும் எச்சரிக்கையாகத்தான் இருந்தார்கள். மார்லி குழு இந்திய பிரச்சினையை மத ரீதியாகவே பார்த்தது. அதனால் மகமதியர்களுக்கு தனித்தொகுதி என்ற சலுகை கிடைத்தது. தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்கள் இந்துக்களுக்குள் அடக்கப்பட்டு ஏமாந்தார்கள்! அயோத்திதாசரால் வருந்தத்தான் முடிந்தது:
“ஏழாவது எட்வர்ட் பிரபு தனது பூரணக் கருணையால் இந்து தேசத்தில் குடியிருக்கும் ஏழை குடிகளை முன்பு சீர்திருத்தி சகல விஷயங்களிலும் சமரச நிலைக்குக் கொண்டு வந்து பின்பு இந்துக்களுக்கு சிற்சில அதிகார நியமனங்கொடுக்க வேண்டுமென்ற உத்தேசமுடையவராய் லார்ட் டமார்லி அவர்களின் பிரேரணைக்கு முன்பே தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்.
“... லார்ட் மார்லி அவர்கள் கவனியாமலும் தனது விசாரணைக் கெட்டிய வரையில் இந்து தேசத்தில் வாசஞ் செய்பவர்கள் யாவரையும் இந்துக்களென்று எண்ணங்கொண்டு நூதன சட்டங்களை நிரூபிக்க ஆரம்பித்துக்கொண்டார் ... மகமதியர் வேறென்றும் இந்துக்கள் வேறென்றும் பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்குள் இடிப்பட்டு நசிந்துவரும் முக்கிய வகுப்பாரை கவனித்தாரில்லை ...
... இத்தகைய சாதி பேதமுள்ளோர் மத்தியில் வாசஞ்செய்யும் அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட சாதி பேதமல்லாத பூர்வ திராவிடக் குடிகளை கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரே கவனிக்காமல் விட்டுவிடுவதானால் ... அலைந்து மடியவேண்டியதேயாம். மார்லியவர்கள் ..... ஏழைகளின் மீது இரக்கம் வைக்காத காரணம் விளங்கவில்லை (தமிழன் -3.3.1907)
என்று தன் மனநிறைவின்மையை வெளிப்படையாகவே எழுதினார். அயோத்திதாசர் ஒரு அரசியல்வாதியல்ல. முழுக்க முழுக்க சமூகம் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையாளர். ஆயினும் அது அரசியல் பிணைப்புடன்தான் முன்னேற முடியும் என்பதை அரசியல் ரீதியாக பொதுமக்களுக்கும் ஆளுவோருக்கும் எடுத்துக்கூறி சிந்திக்கத் தூண்டினார்.
கடவுள்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றியோ - மன உளைச்சலுக்கு வடிகாலாக சொல்லப்படுகிற கடவுள் தன்மையைப் பற்றியோ அயோத்திதாசர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை . ஆனால் “கடவுள்” என்பதற்குக் கூறும் கருத்துகளையும் கதைகளையும் விமர்சனம் செய்கிறார். விளக்கம் தருகிறார்.
கடவுள், மதம் என்பதெல்லாம் மக்களின் நன்மைக்குப் பயன்படாமல் போனால் அப்படிப்பட்ட மதம், கடவுள் தேவையற்றது என்பதுதான் அயோத்திதாசரின் கருத்து என்று தோன்றுகிறது. ஒரு மனிதர் தந்த போதனைகளே மதமென்று போற்றப்படுகிறது. அம்மனிதர் போற்றப்படுவதிலிருந்து வணங்கப்படுவராக மாறும்போது அம்மாமனிதர் கடவுளாக்கப்படுகிறார். ஏனெனில் அம்மாமனிதர் கூறிய கருத்துகள் மக்களை ஏதோ ஒருவகையில் நெறிப்படுத்துகிறது. வாழ்க்கை நெருடல்களிலிருந்து காப்பதாக நம்பப்படுகிறது. அத்தகைய வாழ்க்கைக்கு உகந்த நன்னெறிகளைக்கூறி நன்மை செய்தவர்களே கடவுள் எனக் கூறப்படுகிறது என்று எண்ணுகிறார்.
“கடவுள் என்பதற்கு நிகண்டில்...நன்மையென்னும் பொருள் கூறியிருக்கிறார்கள். இதையனுசரித்தே கடவுள், கடவுளர் என்னும் மொழிகளும் பிறந்திருக்கிறது... இதனை பின்கலை நிகண்டுதெய்வப் பெயர் தொகுதியிலும், சூளாமணி, சீவகசிந்தாமணி, முத்திய தெய்வக் கலம்பகம் பகுதியிலும் கூறப்பட்டிருக்கின்றது. நன்மெய் கடைபிடி என்னும் ஒரு சொல்லே ஏதுவாக, இல்லந்துறந்து கடவுளென்று மொழியின் ஆதரவால் நன்மையைக் கடைப்பிடித்த மகாஞானிகள் ஒவ்வொருவருக்கும் கடவுளென்னும் பெயர் நிற்கின்றன” (தமிழன் - 19.6.1907).
என்று நன்மையைக் கடைப்பிடித்த பேரறிவாளர்களைக் கடவுள் என்று கருதத் தூண்டுகிறார். புத்தர், மகாவீரர், ஏசு, நபி, நானக் போன்ற நல்லாசிரியர்களையும் இது குறிக்கலாம். இவர்களெல்லாம் நன்மை பயக்கும் நல்ல நெறிகளைக் கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கிய பெருமக்களாவர். எனவே நல்லறிவாளர்களைக் கடவுள் என ஏற்கலாம் போலும். மேலும் அவர் கவனத்தில் கொள்ளவேண்டியவற்றையும் கூறுகிறார்.
“ஒவ்வொரு மனிதரும் தத்தமது முன்னேற்றத்திற்கு வகை செய்துக்கொண்டு (வித்தை) கல்வி, தொழில் போன்றவைகளில் சிறப்படைய நல்லாசிரியர்களை நாடாமல் சுய நலக்காரர் மதக்கடையைப் பரப்பி தம்மதமே உயர்ந்த மதம் என்று பொய் புராண மூட்டைகளைக் கட்டி வைத்துக்கொண்டு, வஞ்சித்து பொருள் பறிக்கும் போதகர்களாகிய பாதகர்களை நம்பி, கல்வி கைத்தொழில்களின் மூலம் முன்னேறும் வழிகளை மறந்து அடிமை தொழில் புரிந்து இரந்து தின்னும் காரணம், கடவுள் என்பதைப்பற்றி உறுதியாக தெரியாமையேயாகும். (தமிழன்-7.8.1907) என்று பொய் கதைகளால் மெய்யறிவைப் புதைக்கும் பாதகர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.
“... கடவுள்... எனத் தோன்றிய பெயர்கள் ஒலிபற்றிய பெயரா, செயல் பற்றிய பெயரா, மக்கள் பெயரா, தெய்வப் பெயரா அங்ஙனம் தெய்வப் பெயராயின் அத்தெய்வங்கள் ஆகாயத்தினின்றும் தோன்றியவர்களா, மக்களினின்றும் தோன்றியவர்களா, அவற்றையும் விசாரித்து உணர்வாரில்லை.
ஒரு கடவுள் உண்டா ஒரு தெய்வமில்லையா என்று உசாவும் கடாக்களுக்கு உரைமொழியின்றி மவுனமுரலே மாற்றாகும்... விசாரணையற்ற மக்களுடன் வாது கூறல் இருதிற சுகமற்றுப்போம்” (தமிழன் - 11.12.1907)
என்று கூறி கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு முடிவு வர இயலாது என்பது மட்டுமல்ல, தேவையற்றதும் கூட என்று எண்ணி அப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டு வாதிடாமல் பேசாமல் இருந்து விடுவது நல்லது என்று கூறுகிறார். எனவே, நன்னெறியைப் பரப்பிய நல்லறிவாளர்களைப் பின்பற்றிப் பயனடைவதே சிறப்பு என்பதே அயோத்திதாசர் கருத்தாகும் என்று துணிந்து கூறலாம். அத்தகைய நன்னெறியை அருளிய புத்தரையே அவர் பின்பற்றினார். அவர் கூறுகிறார்:
“ஒரு மனிதன் கடவுள் உண்டென்றும், கடவுளை நம்பியும், கடவுளை தொழுதும் கெட்ட காரியங்களைச் செய்தால் துன்பமே அடைவான். ஒருவன் கடவுள் இல்லையென்றும், கடவுளை நம்பாமலும், கடவுளை தொழாமலும் நல்ல காரியங்களைச் செய்தால் பயனடைவான். நற்கருமங்களை செயலே கடவுளென்னு மொழியாய் இருக்கின்றபடியால் கடவுளைக் கடைபிடியெனக் கூறாது நன்மையைக் கடைபிடி என்று கூறுவதை உணருங்கள்” (தமிழன் - 16.10.1907)
என்று சொல்லுகிறார். புத்தர் கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல் நன்மையைக் கடைபிடித்து நன்னெறிகளைப் பரப்பியவர். அவரைப் போன்ற நல்லாசிரியர்களை ஏற்கத் தயங்கத் தேவையில்லை என்று கருதுகிறார். இக்கருத்தோடு பேரறிஞர் கருத்தோட்டத்தையும் இணைத்துப் பார்ப்பது சிறப்பாகும்.
“கடவுளைக் கண்டவர் ஒருவருமில்லை. பேசமட்டுமே செய்கிறார்கள். கடவுள் அறியப்படவுமில்லை காணப்படவுமில்லை. கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல்ல. கடவுளால் ஒரு பயனுமில்லை. (பி.ஆர். அம்பேத்கார், புத்தரும் அவர் தம்மமும் - தமிழாக்கம் 1994, ப.213).
என்று விளக்கி ‘பழைய கர்ம வினையே இப்போதைய இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்ற தத்துவமானது எதிர்கால வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது என்னும் கோட்பாடு நேர்மையற்றது. ஏழையரின், தாழ்ந்தோரின் நிலைக்கான பொறுப்பிலிருந்து அரசையும் சமூகத்தையும் தப்பிக்கச் செய்யும் ஒரே நோக்கமாகும் (அதே நூல், பக். 302-303)” என்று புத்தர் கூறியதை டாக்டர் அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார்.
வாழ்வாங்கு வாழ அன்பு, அறம், அறிவு, ஒழுக்கம், தியாகம் ஆகியவற்றை போதித்த புத்தரே சிறந்த சிந்தனையாளரும் அருளாளருமாவார் என்று ஏற்றுக்கொண்ட பண்டிதர் அயோத்திதாசர் தமிழகத்தில் பவுத்தம் வளர வித்தூன்றி ஐம்பது ஆண்டுகளில் பவுத்தம் தழைத்தோங்கும் என்று கூறிச்சென்றார். பேரறிஞர் அம்பேத்கர் அதைச் செழிக்கச் செய்திருக்கிறார். இந்திய தேசத்திற்கு வன்முறையற்ற, கருணைமிக்க நல்வாழ்விற்கு பாதைகாட்டிச் சென்ற இக்கற்றறிந்த பெரியார்கள் பாராட்டத்தக்கவராவார்கள். தமிழகமெங்கும் பகுத்தறிவைப் பரப்பிய பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் புகழுக்குரியவராவார்.
மக்களிடையே பிணக்கும் பகைமையும் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கையும், மதப்பற்றும், சாதிவெறியுமே என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. மக்களுக்குள் மனிதாபிமானம் நிலவி நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டால் ‘மதம்’ தானாகவே மறைந்துவிடும். மத சாதி கலவரங்கள் கடந்தகால வரலாறாக ஆகிவிடும். இதற்கு கடவுள், மத, சாதி தேவையா அல்லது அன்பும் அறிவும் செறிந்த ‘மனித நேயம்’ தேவையா என்பதுதான் அயோத்திதாசரின் சிந்தனைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடங்களாகும்.
அயோத்திதாசர் என்ற நல்ல சிந்தனையாளரின் கருத்துகளைத் தமிழுலகத்திற்கு கிடைக்கச் செய்திருக்கும் நண்பர் ஞான. அலாய்சியஸ் அவர்களைத் தமிழ்நாடு என்றென்றும் நினைவில் கொள்ளும். தமிழக மக்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. சிறப்புரை வழங்க எனக்கு வாய்ப்பளித்தமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை
வாழ்த்துடன்
அன்பு பொன்னோவியம்