அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/012-383

8. மிஸ்டர் கேயர் ஆர்டியும் இந்தியர் சுயராட்சியமும்

மிஸ்டர் கேயர் ஆர்டி அவர்கள் இங்கிலாந்து சேர்ந்தவுடன் அவ்விடமுள்ள இந்தியர்கள் சார்பாம் ஆங்கிலேயர்களைத் தருவித்து ஒரு கூட்டம் இயற்றி இந்தியர்களுக்கு சுயராட்சியங்கொடுக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி ஆலோசிக்கப்போவதாய்க் கேழ்வியுற்று மிக்க ஆட்சரியப்படுகின்றோம். அதாவது இந்தியாவில் பிராமணரென்னும் பெயர்வைத்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பிரிவுகளிருக்கின்றது. க்ஷத்திரியரென்று பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பிரிவுகளிருக்கின்றது. செட்டிகள் என்பார்களில் எத்தனைப் பிரிவுகளிருக்கின்றது. முதலியார் என்பார்களில் எத்தனைப்பிரிவுகள் இருக்கின்றது. ஒரு பாப்பான் வீட்டில் மற்றொரு பாப்பான் சாப்பிடமாட்டான். ஒரு பாப்பான் பெண்ணை மற்றொரு பாப்பான் கொள்ளமாட்டான். இப்படியாகப் பலவகை ஒற்றுமெய்க் கேடாகும் ஆயிரத்தெட்டு சாதிகளுடன் வடதேசங்களிலிருந்து இத்தேசத்தில் வந்து மலமெடுக்குந் தோட்டிகளுக்கும் சாதிகளுண்டென்று ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வகை சாதியேற்பாட்டில் எந்தசாதியோர்களை இந்தியரென்று தெரிந்து கேயர் ஆர்டி. துரையவர்கள் யாருக்கு சுயராட்சியம் வாங்கிக் கொடுக்கப் போகின்றாரோ தெரியவில்லை, ஆதலின் நமது கேயர் ஆர்டிதுரையவர்கள் இந்தியருக்கு சுயராட்சியம் அளிக்கவேண்டும் என்னும் ஆலோசனையை சற்று நிறுத்தி இந்தியாவிலுள்ள எந்த சாதியோருக்கு சுயராட்சியங் கொடுக்கலாம் என்பதைத் தேறத் தெளிந்து முடிவு செய்வாரென நம்புகிறோம்.

- 1:45; ஏப்ரல் 22, 1908 -