அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/014-383

10. நாஷனல் காங்கிரஸ் நாட்டத்தாரும் சுதேசிய நாட்டுகூட்டத்தோரும்

அத்தியாவசியம் நோக்கி ஆட்சேபித்து ஆதரிக்கவேண்டியது ஒன்றுண்டு. அதாவது வடநாடுகளிலுள்ள சில அன்பர்கள் கூடி சாராயக்கடைக் கள்ளுக்கடைகளின் எதிரில் நின்று மதுவினால் உண்டாகும் கெடுதிகளை தெள்ளற விளக்கிக் கொண்டு வருகின்றார்களாம். அதுபோல் தென் தேசத்திலுள்ள நாஷனல் காங்கிரஸ் மெம்பர்களுஞ் சுதேசிய மெம்பர்களும் பல கிராமங்களுக்குச் சென்று சாதிநாற்றஞ் சமயநாற்றக் கசிமலங்களை அகற்றிக்கொண்டே வருவார்களாயின் காங்கிரஸ் கமிட்டியும் கனம்பெரும் சுதேசியமுஞ் சுகமடையும்.

இத்தகைய உள் சீர்திருத்தங்களை நோக்காது புற சீர்திருத்தத்தில் நோக்கம் வைப்பார்களாயின் அமிதவாதிகளின் அக்கிரமத்தாலும் மிதவாதிகளின் மூர்க்கத்தாலும் முழுமோசமுண்டாய் சாதியுங் கெட்டு சங்கையுண்டாம்படி நேரிடும். அவ்வகை சங்கைகெட்டு சாதியைத்துலைப்பதைப் பார்க்கினும் அங்கங்குள்ள விவேகிகள் ஒன்றுகூடி ஒற்றுமெய் நாடி உழைப்பார்களாயின் ஊருஞ் சுகம் பெற்று பேரும் பிரபலமாவதுடன் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரும் இத்தேசத்தோருக்கு இப்போதுதான் அறிவுண்டாயதென்று அறிந்து சுதேசியத்தையும் அளித்து சுகமடையச் செய்வார்கள்.

ஆதலின் தாழ்ந்த சாதியோருக்குத் தொழுக்கட்டையும் உயர்ந்த சாதியோருக்கு உழ்க்கார்ந்து தின்னும் பட்சபாத சட்டத்தைப் பறக்கப் போக்குங்கள். தாழ்ந்த சாதியாருக்கோர் சட்டம் என்பது நீதிமான்களுக்கு பொருந்துமோ, கறுப்பர்களுக்கு கறுப்பர்களே சட்டம் மாறுபடுத்திக் கொண்டால் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்குஞ் சட்டங்கள் மாறுபடாமற்போமோ.

உட்கார்ந்து தின்னுஞ் சோம்பேரிகளுக்கு ஊரை ஆளும்படியான ஆசையும், ஊராரைத் தாழ்ந்தவர்கள் என்று கூறித்தொழுக்கட்டைப் போடவேண்டும் என்னும் ஓசையுங் கொடுப்பவர்கள் வசம், தங்களுயிரையுந் தங்கள் பந்துமித்திரர்களுயிரையும் பறிகொடுத்து ஊரைக் கைப்பற்றியவர்கள் அவன்சாதி சின்னசாதி, என்சாதி பெரிய சாதி என்னும் அறிவிலார்வசம் தங்கள் கஷ்டார்ஜித சொத்தைக் கைநழுவவிட்டுப் போவர்களோ, கீழ்ச்சாதி மேற்சாதி என்னும் அக்கிரமக்காரர்கள் முன்பு தங்கள் கிராமத்தைக் காட்டுவரோ. உட்கார்ந்துதின்னுஞ் சோம்பேரிகளே, உயர்ந்தசாதி தாழ்ந்த சாதி சட்டங்களை வகுத்துக் கொள்ளும்போது உயிரைக் கொடுத்து ஊரைப்பிடித்தவர்களுக்கு வேறு சட்டம் இருக்காதோ.

இவைகள் யாவற்றையும் சீர்திருத்தக்காரர்கள் நன்காலோசித்து தாழ்ந்தவர்களுக்குத் தொழுக்கட்டையும் உயர்ந்தவர்களுக்கு உழ்க்கார்ந்து தின்னும் பட்சபாதசட்டம் உண்டு செய்வதை விலக்கி அவன் எச்சாதியோனாயிருந்தாலும் துஷ்டசெயலையுடையவனைத் தொழுவில் மாட்டவேண்டும் என்னும் பொதுச் சட்டத்தை நிலைநிறுத்தல் வேண்டும். அங்ஙனமின்றி இவர்கள் சுயப்பிரயோசனங் கருதி தாழ்ந்த சாதியோருக்குத் தொழுக்கட்டை என்னும் சட்டத்தை நிலைக்கச் செய்வார்களாயின் இங்குள்ள நாஷனல் காங்கிரஸ் கமிட்டியார் சுயப்பிரயோசன பெளஷையுஞ் சீர்மையிலுள்ள நாஷனல் காங்கிரஸ் கம்மிட்டியாரின் பெளஷையும் பறக்கத் தீட்டிக்காட்டுவோம்.

- 1:46; ஏப்ரல் 29, 1908 -