அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/021-383

17. பரோடா இராஜா அவர்களின் பெருநீதி

தன்தேசத்துள்ள மத சாதிநாற்ற / சருவ வனாச் சாரமதை யகற்றிமேலோன்
கன்மமதில் நற்கருமங் கடைபிடித்து / கற்றவர்க ளெவராயி னவரே நாட்டின்
மன்னுதொழில் சீரமைச்சு யாவும்பெற்று / வாழ்கவென வரமளித்த மன்னவர்க்கு
பின்னமற வாளுகலை யோதுவித்த / பிரிட்டீஷார் கலைநிதியம் வாழிமாதோ.

கனந்தங்கிய பரோடா இராஜா அவர்கள் கற்றக் கல்வியின் அழகே அழகு, அவர் கற்றக் கல்விக்குத் தக்கவாறு தானடாத்தும் இராஜாங்கங்களின் அமைப்பே அமைப்பு. அத்தகைய அமைப்பில் சாதிநாற்றமின்றி அன்பு பாராட்டி ஐக்கியமடையச் செய்த வாழ்க்கையே வாழ்க்கை. இத்தகைய சுகவாழ்க்கையைத் தன் குடிகளுக்கு அளித்தாளுந் தயாநிதியாம் மன்னன் மனமகிழ மகவுதித்த மாட்சியே மாட்சி. இம்மாட்சிபெற்ற மகவும் மன்னுமரணியும் நீடூழி வாழ்க. அவ்வாழ்க்கைக்கு ஆதாரமாம் பிரிட்டிஷ் ஆதிபத்தியம் அனவரதம் வாழ்க வாழ்கவேயாம்.

- 2:4; குலை 8, 1908 -