அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/025-383

21. சென்னை நாஷனல் இண்டஸ்டிரியல் பண்டுக்கு தீபாவளியில் பணம் சேகரிக்கும் சங்கத்தோரும், சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபையோரும்

நாஷனல் பண்டு இண்டஸ்ட்டிரியல் அசோசேஷன் எனும் சங்கத்து காரியதரிசிகளால் சென்ற செப்டம்பர்மீ 24உ மூன்று அச்சுக் கடிதங்கள் விடுக்கப்பெற்றோம்.

அதன் கருத்துக்கள் யாதெனில், வருகிற தீபாவளியன்று சகலரிடத்திலும் பணம் வசூல் செய்து மேற்கண்டபடி பண்டில் சேர்த்து கைத்தொழில்களை விருத்திசெய்ய வேண்டும் என்றும் அதில் இராயப்பேட்டைக் கிளையோராக நின்று பணம் சேகரிப்பதற்கு,

ம-அ-அ-ஸ்ரீ ஜி.
நாராயண செட்டி காரு
எஸ், கஸ்தூரிரங்க ஐயங்காரவர்கள்,
பி.ஏ., பி.எல். ஏ. அரங்கசாமி ஐயங்கார்,
பி.ஏ. க, அயோத்திதாசர் அவர்கள்.
வி. திருவேங்கடாச்சாரியவர்கள், பி.ஏ., பி.எல்.

ஐவர்களை நியமித்து அதன் கருத்துகளையும் விவரித்து எமக்கெழுதியிருந்தார்கள். அக்கடிதங்களை சாதிபேதமற்ற திராவிட மஹாஜனசபையின் முக்கிய அங்கத்தோர்களுக்குக் காண்பித்ததின்பேரில் அவர்கள் அவற்றை தீர்க்க ஆலோசித்து,

இச்சங்கத்தின் உத்தியோகஸ்தருள் 14-பிராமணர்களும், 1-செட்டியாரவர்களும், 1-முதலியாரவர்களும், 1-மகமதியரவர்களும், 3-நாயுடுகாரவர்களும் இருப்பதில் பெருந்தொகையோர் பிராமணர்களாகவே இருக்கின்றார்கள். "இஃது சில நாட்சென்று செட்டியார், முதலியார், நாயுடுகாரு, மகமதியர் முதலியோர் கடந்து விடுவார்களாயின் நாஷனல் இண்டஸ்டிரியல் அசோசேஷனென்னும் பெயரிருந்தபோதிலும் பிராமணர்கள் இண்டஸ்டிரி யலாகவே முடிந்துவிடும்.

அக்காலத்தில் சகலசாதியோரையும் உள்ளுக்குப் பிரவேசிக்கவிடாமல் தடுத்து தங்கள் குலத்தோர்களையே சேர்த்து பெருந்தொகையார் சம்மதப்படி காரியாதிகளை நிறைவேற்றிக்கொள்ளுவார்கள்.

ஆதலின் நாம் பணங்களை சேகரித்து அவர்களிடம் ஒப்படைத்து சகலசாதியோருக்கும் பிரயோசனம் இல்லாமல் போமாயின் யாது பயன்.

இத்தகையக் கூட்டத்தார் அடியில் குறித்தவாறு உத்தியோகஸ்தர்களை நியமித்து காரியாதிகளை நடத்துவார்களாயின் சாதிபேதமற்ற திராவிடர்கள்

சகலரும் முயன்று வேண்டிய பொருட்களை சேகரித்தீயலாமென்று முடிவுசெய்து,

மேற்சொன்னபடி சங்கத்தோருக்கு எழுதிய பதில் கடிதம்.

நாஷனல் பண்ட் அன்டு இன்டஸ்டிரியல் அசோசேஷன் கூட்டத்தாரவர்களுக்கு.

ஐயா,

தங்களுடைய கூட்டத்தார் விஷயமாக அந்தரங்கத்தில் பெருந்தொகையார் ஆட்சேபனையும், பகிரங்கத்தில் சிறுந்தொகையார் ஆட்சேபனையும் இருக்கின்றது.

1. ஆட்சேபனை.

இக்கூட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் பெருந்தொகை பிராமணர்களாய் இருப்பதினாலேயாம்.

இக்கூட்டம் எப்போது நாஷனலாக ஏற்பட்டதோ அதின் அங்கங்களும் அப்படியாகவே இருத்தல் வேண்டும்.

அதாவது - பிரசிடென்டுகளில் ஒரு பிராமணர், ஒரு யூரேஷியர், ஒரு மகமதியர் இருந்து காரியாதிகளை சமயம்போல் நடத்திவரவேண்டியது.

செக்ரிடேரிகளிலும், டிரஷரர்களிலும் ஒரு பிராமணர், ஒரு நன்பிராமணர், ஒரு மகமதியர் ஆக மூன்று பெயர் பொக்கிஷம் வைக்கவும், வாங்கவும் இருத்தல் வேண்டியது.

டைரக்ட்டர்களில் 4-பிராமணர்கள், 4-யூரேஷியர்கள், 4-நன்பிராமணர்கள், 4-மகமதியர்கள், 4-நன்காஸ்ட்டிரவீடியன்ஸ்கள் இருத்தல் வேண்டும்.

இப்படியிருப்பதில் அந்தந்த வகுப்பாருள் நான்கு பிள்ளைகளை அவரவர்கள் கற்கக்கூடிய வித்தைகளை கற்பிக்கப் பணவுதவி செய்ய வேண்டியது.

கற்றுக்கொள்ளும் பிள்ளைகளில் யாதொரு பேதமில்லாமல் தொழில் அளித்து வேலைகள் கொடுத்து சீவிக்கச்செய்ய வேண்டியது.

தீபாவளிக்கு முன்பே இத்தகையக் கூட்டத்தாரை பயிரங்கத்தில் நியமித்து நோட்டீசுகள் அச்சிட்டு வெளியிடுவீர்களானால் எங்களால் கூடிய முயற்சியை நாங்கள் எடுத்துக் கொள்ளக்கூடும்.

அப்படிக்கின்றி பணம் வசூல் செய்யும்போது சாதிபேதம் கிடையாது.

அப்பணத்தை சிலவிடும்போதும், வேலைகற்பிக்கும்போதும், சாலைகளில் வேலைக்காரர்களை நியமனஞ் செய்யும்போதும் சாதிபேதம் உண்டாகும் போல் காணுகின்றது. ஆதலின் இத்தகைய பேதங்களில்லாமல் சகலகாரியங்களும் நடத்துவோம் என்னும் மேற்குறித்துள்ளபடி அங்கங்களும் பேதமில்லாமல் சேருமாயின் பணம் சேகரிக்கக்கூடிய முயற்சி எடுத்துக் கொள்ளுவோம்.

மேற்குறித்தவண்ணம் அங்கங்கள் சேராதவிஷயத்தில் நாங்கள் அதில் பிரவேசித்து காரியங்களை நடத்த முடியாதென்றும் இத்தகையப் பொதுவானக் கூட்டம் நிகழாதது விசனமென்றும் கடிதம் எழுதி ஒருவாரத்திற்கு மேற்பட்டும் யாதொரு பதிலும் கிடைக்கவில்லை.

இதுவும் நாஷனல்பண்டு அண்டு இன்டஸ்டிரியல் அசோசேஷனா அன்றேல் வேறாயென்பது பின்னுக்கு விளங்கும்.

- 2:19; அக்டோபர் 21, 1908 -