அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/027-383

23. அரிசி ரூபாயிற்கு 4-படியா

சுயராட்சியம் விரும்பும் சுதேசிகளே! இராஜாங்கசமத்துவம் விரும்பும் சாமர்த்தியர்களே! சற்று கண்ணோக்குங்கள்.

பூர்வப் பழமொழி, ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலென்றும், தற்கால பழமொழியோ சுயராட்சியமும், சுதேசியமும் சோற்றில் இருக்கின்றதென்கின்றார்கள்.

ஆதலின் சுவற்றிற்கு மண்ணறைந்து உருபடுத்துதல்போல் தேகங்களுக்கு சோற்றையூட்டி உருப்படுத்தவேண்டியது இயல்பாம்.

இவ்வகை ஊட்டுஞ் சோற்றுக்கு அரிசியே காரணமாகும். அவ்வரிசியோ ஒரு ரூபாயிற்கு நான்குபடி விற்கின்றார்கள்.

சுதேசிகளோ பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் கருணையினால் மாதம் ஒன்றுக்கு நாலாயிரம், மூவாயிரம், ஈராயிரம், ஓராயிரம், ஐந்நூறு, நாநூறு, முந்நூறு, இருநூரென்னும் சம்பளங்களைப் பெற்றுக்கொண்டு கடைக்காரர்கள் ரூபா ஒன்றுக்கு நான்கு படி அரிசி விற்றால் என்ன இரண்டுபடி அரிசி விற்றால் என்ன என்னும் சுகபோகத்தில் இருக்கின்றார்கள்.

கூலிவேலை செய்யும் ஏழைகளோ ஒருநாள் முழுவதும் எலும்பு முறியக் கஷ்டப்பட்டு மூன்றணா சம்பாதித்து முக்கால்படி அரிசி வாங்கிவிடுவார்களாயின் உப்பு, புளி, விறகு இவற்றிற்கு யாது செய்வார்கள். அல்லது இரண்டணாவிற்கு அரைபடி அரிசியை வாங்கிக்கொண்டு ஒரு அணாவை மேற்சிலவுக்கு வைத்துக் கொள்ளுவார்களாயின் புருஷன் பெண்சாதியுடன் இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின் ஒருவேளைப் புசிப்புக்கும் போதாது ஒடுங்கவேண்டியதாகும்.

ஏழைகள் இவ்வகையாகப் பசியால் ஒடுங்கிக் கொண்டுவருவார்களாயின் நாளுக்குநாள் க்ஷீணித்து நாசமடைவார்கள்.

ஏழைகள் யாவரும் நாசமடைந்துவிடுவார்களாயின் கனவான்களின் சுகமுமற்று கவலையே மிகுவது திண்ணமாகும்.

நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்குக் கடைக்காரர்கள் விற்பனைச்செய்யும் நிலவரம்பற்ற வியாபாரமும், ஏழைக்குடிகள் படும் கஷ்டமுந் தெரியமாட்டாது.

சுதேசிகள் என்று வெளி தோன்றியவர்களே சுதேச வியாபாரிகளை நிலை வரம்பில் நிறுத்தவும், சுதேச ஏழைக்குடிகளைக் காப்பாற்றவும் வேண்டும்.

இத்தகைய முயற்சி சுதேசிகள் என்போரால் கூடாதாயின் வியாபாரிகள் தங்கள் மனம்போனப்போக்கில் வியாபாரஞ் செய்யும் விற்பனைகளையும், ஏழைக்குடிகள் படும் கஷ்டங்களையும் கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்கு விளக்கி அவர்களைக் கொண்டேனும் வியாபாரிகளை நிலை வரம்பில் நிறுத்தி ஏழைக்குடிகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஆதலின் நமது ராஜாங்கக் கவுன்சில் மெம்பர்களும், முநிசபில் கமிஷன் மெம்பர்களுமாகிய சுதேசிகள் யாவரும் ஏழைக்குடிகளின் கஷ்டங்களை நோக்கி ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

- 2:23; நவம்பர் 18, 1908 -