அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/029-383

25. நமது சக்கிரவர்த்தியார் கருணையும் மந்திரிகளின் மதியூகமும் பிரிதிநிதிகளின் பாகுபாடும்

தற்காலம் இவ்விந்துதேசத்தில் நூதனமாக ஏற்பட்டிருக்கும் சாதிபேத செய்கைகளானது சொற்பக்குடிகளுக்கு சுகமும், பெருங்குடிகளுக்கு சுகக்கேட்டையும் உண்டு செய்கின்றபடியால் அத்தகைய சாதி செய்கைகளானது இனிமேல் அவரவர்கள் வீட்டிலும், வாசலிலும் உலாவிக் கொள்ள வேண்டுமேயன்றி இராஜாங்க உத்தியோகங்களிலும், இராஜாங்க பீடங்களிலும் உலாவுவதற்கு இடங்கிடைக்கமாட்டாது போலும்.

பெரும்பாலும் ஏழைகளின் விருத்தியைக்கருதியே நமது சக்கிரவர்த்தியாரவர்களும், மந்திரிமார்களும், பிரதிநிதிகளும் தங்கள் ஆலோசனையைத் தேறவிசாரிணையிற் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இத்தகைய ஆழ்ந்த விசாரிணையால் இந்துதேசத்திலுள்ள சகலகுடிகளும் சீர்பெற்று சுகமடைவார்கள் என்பது திண்ணமாதலின் சாதிபேதமற்ற திராவிடர்கள் முன்னேறி சுகமடைவதற்கு இதுவே சமயமாகும்.

தாய்தந்தையர் பிள்ளைகளுக்கு அன்னத்தை ஊட்டுவார்கள். அதனை விழுங்க வேண்டியது குழவிகளின் செயலாகும்.

அதுபோல் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் சகலசாதியோர்களும், சாதிபேதமற்றவர்களும் களங்கமின்றி நடக்கும் பாதையை உண்டு செய்யப்போகின்றதாய் நமது சக்கிரவர்த்தியார் தொனிசப்திக்கின்றது.

அந்த தொனியைக் கேட்கும் சாதிபேதமற்ற திராவிடர்கள் யாவரும் தங்கள் சோம்பலையும், மந்தத்தையும் அகற்றி விருத்திக்கு முன்னேறும் வழிகளை நிதானித்து கல்வி விருத்தியையும் கைத்தொழில் விருத்தியையும் பெருக்கி சீர்பெறும் வழியில் நில்லுங்கள். சாதிபேதமற்ற திராவிட மகாஜனசபையார் வெளியிடும் சீர்திருத்தத்தைக் கண்ணுற்று அவற்றை வழுவாது நிறைவேற்றுங்கள். பிரிட்டிஷ் துரைத்தனமே நம்மை பாதுகாக்கும் பரம துரைத்தனமென்று எண்ணுங்கள் அவர்கள் துரைத்தனமே இங்கு சதாநிலைக்கப்பாருங்கள். அவர்களடையுஞ் சுகங்களை உங்கள் சுகம்போல் கருதுங்கள். அவர்களுக்கு நேரிடுந் துன்பங்களை உங்களுக்கு நேரிட்ட துன்பம்போல் கருதி பாதுகாருங்கள். அவர்களுக்கு நேரும் ஆபத்துகாலத்தில் உங்கள் பிராணனை முன்பு கொடுத்து அவர்களை ஆதரியுங்கள். இதுவே நமது மூதாட்டியோதிய “நன்றி மறவேல்” என்னும் சத்தியதன்மச் செயலாகும்.

- 2:25; டி சம்பர் 2, 1908 -