அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/032-383
28. தாலிக்கட்டினால் மட்டும் விவாகம்போலும்
இத்தேசத்திலுள்ளோர் சிலர் ஓர் இஸ்திரீயைத் தாலிகட்டினால் மட்டிலும் அது விவாகமென்றுந் தாலிக்கட்டாவிடில் அஃது விவாகமன்றென்றும்,
ஓர் இந்து மற்றோர் மத இஸ்திரீயை விவாகஞ்செய்யமுடியாதென்றும் கூறுவது மிக்க ஆட்சரியமேயாம். அதாவது இந்துக்கள் வகுத்துள்ள எட்டுவகை விவாகங்களில் காந்தருவவிவாகமானது எந்ததேசம், எந்தபாஷை எந்தசாதியோராயிருப்பினும் புருஷனும், இஸ்திரீயும் சம்மதித்துக் கூடிக்கொள்ளுவார்களாயின் ஓர்விவாகமென்றே வகுத்திருக்கின்றார்கள்.
அங்ஙனமிருக்க தாலிகட்டாவிட்டால் விவாகமல்ல என்றும், ஓர் இந்துவானவன் மற்றோர் மத இஸ்திரீயை விவாகஞ்செய்ய முடியாதென்றுங் கூறுவது எட்டுவகை விவாகங்களுக்கும் மாறுபட்ட விவாதம்போலும்.
ஓர் புருஷன் இராஜாங்கமறிய ரிஜிஸ்டர் செய்து ஓர் பெண்ணை சேர்த்துக்கொண்டு ஓர் குழந்தையும் பிறந்தபின்னர் அந்த இஸ்திரீயையும் பிள்ளையையும் நிராதரவாய் விட்டுவிடுவதற்காய் தாலிகட்டாதது விவாகமல்லவென்றும், ஓர் இந்துவானவன் மற்றோர் மத இஸ்திரீயை விவாகஞ்செய்ய முடியாதென்றுங் கூறுவது எந்த மகாத்மாக்களால் இயற்றிய சட்டமோ விளங்கவில்லை.
இத்தேசத்துள்ளோர் குணமுஞ் செயலும் மாறியபோதினும், ஐயர், முதலி, நாயுடு, செட்டி என்றும் ஒவ்வொருவர் பெயர்களினீற்றிலுமுள்ள தொடர்மொழிகளை சேர்த்துள்ள வரையில் சட்டங்களும் மாறாது போலும்.
ஓர் அமேரிக்கராயினும், ஐரோப்பியராயினும், ஜெர்மனியராயினும் இத்தேசத்துள் வந்து யாதாமோர் விவாகமுமின்றி ஓர் இந்து இஸ்திரீயைச் சேர்ந்து பிள்ளையைப் பெற்றுவிடுவாராயின் அப்பிள்ளைக்குந் தாயிக்கும் ஜீவனாம்ஸம் சகலரும் அறிந்தேனும், அறியாமலேனும் பெறலாமோ. தாலிகட்டாதபடியால் அது விவாகமல்ல. ஓர் இந்துஸ்திரீ அன்னியமார்க்க புருஷனை விவாகஞ்செய்துகொண்டாலும் அது சரியானவிவாகமாக மாட்டாது. ஆதலின் அவரிடம் ஜீவனாம்ஸம் பெறப்போகாதென்று ஏதேனும் ஓர் சட்டமுண்டோ. அதையும் இந்து சட்டதாரிகள் யோசிக்க வேண்டியதேயாகும்.
காந்தருவவிவாகம் - தொல்காப்பியப் பொருளதிகாரம் - மூன்றாவது களவியல்
அதிர்ப்பிலயைம்பூணாரு மாடவருத்தம்மு
ளெதிர்ப்பட்டுக்கண்டியை நனென்ப - கதிர்ப் பொன்யாழ்
முந்திருவர்கண்ட முனிவருகண்காஷிக்
கந்திருவர் கண்ட கலப்பு.
- 2:27; டிசம்பர் 16, 1908 -