அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/040-383

36. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியோருக்கு நியமிக்கப்பட்ட சங்கம்

இந்த டிசம்பர் மீ விடுமுறைகாலத்தில் சில பெரியோர்கள் கூடி இந்தியாவில் தாழ்த்தப்பட்டுள்ள சாதியோரை சீர்திருத்தவேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றார்கள்.

இவற்றுள் இயல்பாகவே அறிவின்றி தாழ்ந்துள்ள சில வகுப்பாரும் உண்டு. சாதித்தலைவர்களின் விரோதத்தினால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும் நாளதுவரையில் தாழ்த்திவருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஓர் வகுப்பாரும் உண்டு.

அவர்கள் யாரென்பீரேல் - குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்குந் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்.

சாதித்தலைவர்களாகும் வேஷபிராமணர்களால் பறையரென்றும், சாம்பாரென்றும், வலங்கையரென்றும் கூறி அவர்களை சுத்தஜலங்களை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், அந்தஸ்தான உத்தியோகங்களில் பிரவேசிக்கவிடாமலும், ஏதோ துரை மக்கள் கருணையால் ஓர் உத்தியோகத்தைப் பெற்றுக் கொண்டபோதிலும் அதனினின்று முன்னுக்கு ஏறவிடாமலும் பலவகை இடுக்கங்களைச் செய்து தாழ்த்திக் கொண்டே வருகின்றார்கள். இவர்களைத் தாழ்ந்த வகுப்பார் என்று கூறலாகாது. சாதிபேதமுள்ள மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கூறல்வேண்டும்.

இவற்றுள் கூளங் குப்பைகளுடன் குணப்பெரும் பொருட்களையுஞ் சேரக்குவித்து குப்பைக் குழியென்பதுபோல் கல்வியிலும், நாகரீகத்திலும், விவேகத்திலும், ஒற்றுமெயிலும் மிகுத்து வேஷபிராமணர்கள் கற்பனாகதைகளுக்கிணங்காமல் விரோதிகளாய் நின்ற திராவிட பௌத்தர்கள் யாவரையும் பறையர், சாம்பார், வலங்கையரென்று தாழ்த்திக்கொண்டதுமன்றி சக்கிலி, தோட்டி, குறவர், வில்லியர் இவர்கள் யாவரையும் ஐந்தாவது சாதியென்னும் பஞ்சமசாதியென நூதனப்பெயரிட்டு மேன்மக்களாம் பௌத்தர்களையும் அக்குப்பையில் சேர்த்து பஞ்சமசாதியென்று வகுத்திருக்கின்றார்கள்.

ஆதலின் தாழ்ந்தசாதியோரை சீர்திருத்த ஏற்பட்ட கனவான்கள் ஒவ்வொருவரும் இவற்றை சீர்தூக்கி தாழ்ந்த வகுப்போர்கள் யாவரையுந் தருவித்து சாதிபேதம் வைத்துக்கொண்டு வாழ்பவர்கள் யாவர், சாதிபேதமில்லாமல் வாழ்பவர்கள் யாவரென்று தேறவிசாரித்து சாதிபேதம் உண்டென்போர் யாவரையும் சாதித் தலைவர்கள் கூட்டத்தில் சேர்த்துவிட்டு சாதியாசாரங்கெடாது சீர்திருத்திவிடுங்கள்.

சாதிபேதமில்லை என்னும் கூட்டத்தாருக்கு நீங்கள் யாதோர் உபகாரமும் செய்யவேண்டாம் அவர்களைத் தலையெடுக்கவிடாமல் செய்துவரும் மாளாயிடுக்கங்களை மட்டிலும் செய்யாமல் அன்பு பாராட்டுவீர்களாயின் அதுவே தாங்கள் செய்யும் பேருபகாரமாகும்.

உங்களுக்குள் நிறைவேறிவரும் ஒரு தருமத்தைக் கவனித்துப்பாருங்கள், மகா கனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொது சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும், சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இத்தகையச் செய்கைகளினால் சாதியாசாரம் இல்லாதவர்களின் மீது சாதியாசாரமுள்ளவர்கள் யாவரும் நேர் விரோதித்து நிற்பதால் கருணைதங்கிய இரண்டோரன்பர்கள் இந்நோக்கத்தைக் கொள்ளுவது இமயமலையை வெட்டி வழிவுண்டாக்குவதுபோலாம்.

- 2:30; சனவரி 5, 1909 -