அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/042-383
38. சொல்லத்துலையா சாதிகளில் சுயராட்சியம் யாருக்காம்
கருணையும் கனமுத்தங்கி கண்ணிமைப்போல் நம்மை ஆதரிக்கும் பிரிட்டிஷ் ஆட்சியில் கனமும், மேன்மெயுந்தங்கிய இந்துதேச சக்கிரவர்த்தியார் ஏழாவது எட்வர்ட் அரசரவர்கள் தனது அன்புமிகுத்த அமுதவாக்கால் தனதாளுகையில் சருவசாதியோரையும் சமரசமாக பாதுகாப்போம் என்று அருளியதும்,
அவரது முதன்மந்திரியாக விளங்கும் மகாகனந்தங்கிய லார்ட் மார்லி அவர்கள் இந்துதேசக் குடிகள் யாவரும் பலசாதிப் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர்களாதலின் அவர்கள் ஏற்பாட்டிற்கு ஓர் குறைவும் நேரிடாமல் இராஜாங்கத்தோர் இயற்றியுள்ள ஆலோசனை சபைக்கு அந்தந்த சாதியோர்களுக்குத் தக்கவாறு பிரிதிநிதிகளை அனுப்பி சங்கத்தில் பேசலாம் என்று முடிவுசெய்திருக்கின்றார்.
இத்தேசத்தோர் சாதிபேதச் செயலுக்குத் தக்க சுயராட்சியம் இதுவேயாகும். இத்தேசத்துள் சிலர்கள் கூடி தங்களுக்கு சுயராட்சியம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி சகல சாதியோரும் சேர்ந்து ஆளக்கூடிய சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்திருக்கின்றார்கள்.
அங்ஙனமிருக்க சில பத்திரிகைகளில் இந்து தேசத்தோராகிய நாங்கள் சுயராட்சியம் கேட்டிருக்க அவற்றை பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் கவனியாது வேறுவேறு விஷயங்களை ஏற்படுத்தி விட்டார்கள் என்று தங்கள் மனம் போனபோக்கில் எழுதிவைத்திருக்கின்றார்கள்.
கன்னாடாதேசத்தார் ஒரே சாதியோராயிருந்துக் கொண்டு சுயராட்சியம் வினவியபோது யாதோர் ஆட்சேபனையுமின்றி கொடுத்து ஆதரித்து வருகின்றார்கள்.
நெட்டால் முதலிய சௌத் ஆபிரிக்கா வாசிகள் பேதமற்ற ஒரேசாதியோரா இருந்தது கொண்டு அவர்களுக்கு வேண்டிய ஆட்சியைக் கேட்டுக்
கொண்டதின் பேரில் யாதோராட்சேபனையுமின்றி அவர்களுக்கு சுயராட்சியம் அளித்து ஆதரித்துவருகின்றார்கள்.
அதுபோல் இந்துதேசக் குடிகள் யாவரும் ஒரேசாதியினராய் இருப்பார்களாயின் சுயராட்சியம் இராஜாங்க ரீதியாய் கேட்டவுடன் கொடுத்திருப்பார்கள்.
ஆயினும் சுயராட்சியம் என்று சொல்லாமலே சுதந்திரங்களை அநுபவிக்கும்படி இத்தேசத்துள்ள சகல சாதியோருக்கும் சுதந்திரத்தை அளித்துவிட்டார்கள்.
இத்தகைய சுதந்திரத்தை ஒருவருக்கொருவர் சகோதிரவாஞ்சையினின்று பாதுகார்த்துக் கொள்ளுவதாயின் இதுவே பெருத்த சுயராஜரீகமாகும்.
வடகலை ஐயருடன் தென்கலை ஐயர் பொருந்தமாட்டார். பட்டவையருடன் இஸ்மார்த்தவையர் பொருந்தமாட்டார். கொண்டைகட்டி முதலியார் மற்றும் முதலியாருடன் பொருந்தமாட்டார். துளுவவேளாளர், காரைக்காட்டு வேளாளரை பொருத்தமாட்டார். தமிழ்ச் செட்டியார் வடுக செட்டியாரைப் பொருந்தமாட்டார். காஜுலு நாயுடு தெலுகுபாடை, இடைய நாயுடைப் பொருந்தமாட்டார். இவ்வகை பொருந்தாதிருப்பினும் சமயம் நேர்ந்தபோது சகலரும் ஒன்றாய்க் கூடிக்கொண்டு இவர்களால் தாழ்ந்தவர்கள் என்று ஏற்படுத்திக் கொண்ட பறையர்களைப் பொருந்தமாட்டார்கள்.
இத்தியாதி சாதிபேதங்களையும், குணபேதங்களையும் நூற்றாண்டுகளாய் அறிந்துவந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் சகல சாதியோரும் பொருந்தியாளும் இராஜரீகத்தைத் தடுத்து சுயராஜரீகத்தை எந்த சுயஜாதிக்கு அளிப்பார்கள். இத்தியாதி பேதங்களையும் நன்கறிந்த நமது சோதிரர்கள் சுயராட்சியம் சுயராட்சியம் என்று வீணே கூறுவது சுகமின்மெயேயாம்.
சொல்லொண்ணா சாதிகள் நிறைந்த இச்சுதேசத்தில் மகா கனந்தங்கிய லார்ட் மார்லி அவர்கள் சகல சாதியோருக்கும் அளித்துள்ள சுதந்திரமே சுயராட்சியம் எனப்படும். இத்தகைய பேதமற்ற சுயராட்சிய சுதந்திரத்தை விடுத்து வேறு சுயராட்சியம் வேண்டும் என்பது உமிகுத்தி மணிதேடுவதே போலாகும்.
- 2:32; சனவரி 20, 1909 -