அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/049-383
45. கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் திருத்தம்
கனந்தங்கிய மந்திரி லார்ட் மார்லியவர்களின் சீர்திருத்தத்தின்பேரில் நமது பத்திரிகையில் சென்றவாரம் எழுதியுள்ள ஆலோசனை சங்கத்தோர் தொகை நியமனத்தைப்பற்றி சில இந்துக்கள் விரோதசிந்தையால் தூற்றியதாகக் கேழ்வியுற்று மிக்க விசனிக்கின்றோம்.
சாதி வித்தியாசப் பிரிவினைகளும், சமய வித்தியாசப் பிரிவினைகளும் நிறைந்த இத்தேசத்தில் எடுத்தகாரியத்தை ஒற்றுமெயில் நடத்துவது மிக்க கஷ்டமேயாகும்.
ஆதலின் மற்றோர் வகையாலும் இவற்றை நிலை நிறுத்தற்கூடும், அதாவது ஆலோசினை சங்கத்திற்கு நூறுபெயரை நியமிக்க வேண்டுமானால் சாதிபேதமுள்ள இந்தியருள் 20-பெயரையும், சாதிபேதமில்லாத பூர்வ பெளத்தருள் 20-பெயரையும், மகமதியருள் 20-பெயரையும், யூரேஷியருள் 20-பெயரையும், நேட்டிவ் கிறிஸ்தவருள் 20-பெயரையும் நியமித்து ஆலோசினைகளை முடிப்பதானால் சகல குடிகளுஞ் சுகம்பெறுவார்கள்.
கமிஷன் நியமனத்தில் தெரிந்தெடுக்கும் கலாசாலைக்கு 500-பேரை நியமிப்பதானால் சாதிபேதமில்லா பூர்வபௌத்தர்களில் 100-பெயரையும், சாதிபேதமுள்ள இந்துக்களில் 100-பெயரையும், மகமதியருள் 100-பெயரையும், யூரேஷியருள் 100-பெயரையும் இராஜாங்கத்தோரே கண்டெடுத்து நியமித்து விடுவார்களாயின் சகல காரியாதிகளும் யாதோமோர் இடையூரின்றி நிறைவேறுவதுடன் இராஜாங்கமும் ஆறுதலடையும். அந்தந்த வகுப்பார் நூறுபெயருந் தங்களுக்குள் உள்ள விவேகிகளைத் தெரிந்தெடுத்து ஆலோசினைகளை சங்கத்திற்கும் அநுப்புவார்கள். அதினால் இந்துக்கள் சம்பந்த நியமனத்திற்கு மகமதியர் பிரவேசிக்கமாட்டார்கள். மகமதியர் சம்பந்த நியமனத்திற்கு இந்துக்கள் பிரவேசிக்கமாட்டார்கள். சாதிபேதமில்லா பூர்வ பௌத்தர்கள் நியமனசம்மதத்தில் சாதிபேதமுள்ள இந்துக்கள் பிரவேசிக்க மாட்டார்கள். காரியாதிகளும் அந்தந்த வகுப்பார் பிரியசித்தம்போல் நிறைவேறிவரும் சகல ஏழைக்குடிகளும் இடுக்கமில்லா சுகவாழ்க்கைகளை அடைவார்கள் என்பதேயாம்.
- 2:35; பிப்ரவரி 10, 1909 -