அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/055-383
51. இராஜாங்க நூதன சட்டத்திற்காய் இந்துக்களும் மகமதியர்களும் வாதிடல்
தற்காலங் கனந்தங்கிய லார்ட் மார்லி அவர்களின் நூதன சட்டத்தை ஒட்டி, மகமதியர்கள் தங்களுக்குப் பிரத்தியேக நியமனம் வேண்டுமென்றும், இந்துக்களோ அவ்வகைப் பிரத்தியேகஞ் செய்யப்படாதென்றும், இந்துக்களோ இத்தேசத்தில் முக்கால் பாகம் இருக்கின்றோமென்றும் சகலரையும் பொதுவாக இந்துக்களென்றே கொள்ளவேண்டியதென்றும் சமயயுக்த்த வார்த்தைகளாடிக் கொண்டுவருகின்றார்கள்.
அத்தகைய வார்த்தைகளை மகமதியர்கள் நம்பி தாங்கள் கேட்டிருக்கும் பிரத்தியேக நியமன சுதந்தரத்தை விட்டுவிடுவார்களாயின், நரியினிடம் ஏமார்ந்த காக்கை கதைபோல் முடியும்.
இவற்றை நமது மகமதிய சகோதரர்கள் சற்று நிதானித்து எடுத்த காரியத்தை முடித்தே தீர்க்க வேண்டும்.
இத்தேசத்துள் வாழும் ஜனத்தொகையில் இந்துக்கள் முக்கால்பாகம் இருக்கின்றோமென்று கூறுவதற்கு அவர்களுக்கு ஆதாரங்கிடையாது.
எவ்வகையதென்னில் - இத்தேசத்துப் பூர்வக்குடிகளாகும் திராவிட பௌத்தர்களை பறையர்கள் பறையர்களென்று தாழ்த்தி இந்துக்களென்போர் வேறாய் பிரித்துகொண்டு யாதுசுதந்திரமும் அவர்களுக்குக் கொடுக்காமல் இந்துக்களென்பவர்களே அநுபவித்து வருகின்றார்கள்.
அங்ஙனமிருக்க தற்கால கவுன்சல் நியமன சுதந்தரத்தில் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்டக் குடிகளும் ஜனத்தொகை ஐந்து பாகத்தில் ஒருபாகம் உடையவர்களுமாகிய சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களுக்கு பிரத்தியேகமான ஓர் நியமனமளித்தே தீரவேண்டும்.
சாதிபேதமுள்ள இந்துக்களென்னும் பிராமண மதஸ்தர்களுக்கும், சாதிபேதமற்ற திராவிடர்களாம் பெளத்தமதஸ்தர்களுக்கும் யாதொரு சம்மந்தமும் கிடையாது.
பிராமணர்கள் என்போருக்கும், பறையர்கள் என்போருக்கும் பூர்வபுத்தமார்க்க சம்மந்த பெரும்விரோதமுண்டு. ஆதலின் இந்துக்களுக்கு சம்மந்தப்படாத இவர்கள் ஆறுகோடி ஜனத்தொகை உடையவர்களாயிருத்தலின் மகமதியசகோதரர்கள் தங்களுக்கு வேண்டிய சுதந்திரங்களைப் பெற்றுக் கொள்ளுவதுடன் சாதிபேதமற்ற ஏழைக்குடிகளின்
முறைப்பாடுகளுக்கும் உதவியாயிருந்து அவர்களெடுத்துள்ள முயற்சிக்கும் ஆதரவுபுரிவார்களென்று நம்புகிறோம்.
- 2:45; ஏப்ரல் 21, 1909 -