அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/070-383

66. இராஜாங்க ஆலோசினை சங்க நியமனம்

பிரிட்டிஷ் ஆட்சியின் ஆலோசினை சங்க நியமனமாவது தாங்கள் இந்தியாவில் நடத்திவரும் அரசாட்சியில் பலவகை மனுக்கள் சாதிபேதத்தாலும், மத பேதத்தாலும், பாஷை பேதத்தாலும் ஒற்றுமெய்க் கெட்டிருப்பதுமன்றி இத்தகைய பேதங்களைக்கொண்டே பற்பலக் கலகங்களுந்தோன்றி வருகின்றது.

அடுத்தடுத்து சாதிபேத சமயபேத கலகங்கள்தோன்றி கெடுவதுடன் உயர்ந்த சாதியென்றுவேஷம் போட்டுக்கொண்டிருப்போர் தங்களால் தாழ்ந்த சாதியென்று வகுத்திருப்பவர்களை பல்வகையாலுந் தலையெடுக்க விடாமற் செய்து சகல சுதந்திரங்களையுந் தாங்களே அநுவித்துக் கொண்டு பெருந் தொகையாயுள்ள ஏழைக்குடிகளைப் பாழாக்கிக் கொண்டு வருகின்றார்கள்.

இவைகள் யாவற்றையும் நாளுக்குநாளுணர்ந்துவருங் கருணைதங்கிய ராஜாங்கத்தார் இந்தியர்களென்று பொதுவாகக் காரியாதிகளை நடத்தவிடாமல் அவர்கள் எவ்வெவ்வகையாகப் பிரித்துக்கொண்டுபோகின்றார்களோ அதுபோலவே இராஜாங்க ஆலோசினை சங்கத்திலும், சாதிப்பிரிவு, மதப்பிரிவு, பாஷைப்பிரிவு முதலியவைகளில் பெருந்தொகையாய் உள்ளவர்களுக்குத் தக்கவாறு ஒவ்வொருவரை நியமித்து அவரவர்களுக்குள்ள குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சகல சாதியோரும் சகலமதஸ்தரும், சகல பாஷைக்காரர்களும் சமரச சுகம் அனுபவிக்கும்படியான பேரானந்தக்கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.

அக்கருத்தானது கூடிய சீக்கிரத்தில் நிறைவேறுமாயின் பொதுவாகிய இராஜாங்க ஆபீசுகளிலும், சாதி வைத்துள்ள (பியூன்கள்) வேண்டுமென்று வைத்துக்கொண்டு தங்கள் வீட்டுவேலையையும், அப்பியூனைக்கொண்டு செய்வித்துக்கொள்ளும் சுயப்பிரயோசனக்காரர்களின் செய்கைகள் யாவும் வெளிவருவதுடன் சகலசாதியோர்களிலும் ஒவ்வோர் பியூன்கள் நியமிக்கவும் வழிகளுண்டாகும்.

பெரியசாதியென்று உயர்த்திக்கொள்ளுகிறவர்களுக்கும், சிறியசாதி யென்று தாழ்த்தியுள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும், கனவான்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் சுகந்தோன்றும்,

ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் எடுத்தநோக்கத்தை சோர்வடையாமல் நடத்தி சகலசாதியோரிலும் பெருந்தொகையினராயிருந்து பலவகைக் கஷ்டங்களை அநுபவித்து வரும் ஏழைக்குடிகளை சகலரைப் போலும் சுகமடையுஞ் சட்டதிட்டங்களை முன்னுக்குக் கொண்டு வருவார்களென்று நம்புகிறோம்.

- 3:7; சூலை 28, 1909 -