அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/072-383
68. மந்திரிகள் என்னும் மந்திரவாதிகள்
ஓரரசனுக்கு ஆலோசினைத் தலைவனாக வீற்றிருப்பவர்கள் தாங்கள் வாசஞ்செய்யும் இடத்தின் பேதாபேதங்களையும், அதன் வசதிகளையும் செவ்வைப்படுத்தல் வேண்டும்.
2-வது தனப்பொருள், தானியப்பொருள் யாவும் விருத்தியடையும் ஏதுக்களையும், அவற்றை பண்டிகளிலடைக்கும் பக்குவங்களையும், பாதுகாக்கும் ஏவல்களையும் நியமித்தல் வேண்டும்.
3-வது பூமியின் உழவுக் கருவியின் விருத்திகளையும், வித்தியா கருவிகளின் விருத்திகளையும் நன்காராய்ந்து உழவின் விருத்திக்கும், வித்தியாவிருத்திக்கும், ஆயுதவிருத்திக்குத் தக்கமுயற்சிகளை செய்துவரல்வேண்டும்.
4-வது தங்களுக்குப் பாதுகாப்பாம் படைவீரர்களாகும் சேனைகளை எவ்விடத்தில் அதிகப்படுத்திவைக்க வேண்டுமென்றும், அந்தந்த இடங்களில் வாசஞ்செய்வோர் குணாகுணங்களைக் கண்டறிந்து பொருட்சிலவை பாராது சேனைகளை நிருமித்தல்வேண்டும்.
5-வது ஓர் காலத்தில் குடிகள் யாவரும் ஒன்றுகூடி அரசை விரோதிக்க ஆரம்பிப்பார்கள். ஓர்கால் குடிகள் யாவரும் ஒன்றுகூடி அரசரைக் கொண்டாட ஆரம்பிப்பார்கள். இவ்விரண்டுங் குடிகளுக்கும் அரசர்களுக்குமுள்ளக் காலபேதங்களாதலின் குடிகள் அரசரைக் கொண்டாடுகின்றார்களென்று குதூகலிக்காமலும் குடிகள் அரசரை விரோதிக்கின்றார்களென்று சினங்கொள்ளாமலும், காலபேதங்களை உணர்ந்து அப்பேதங்கள் நேரிட்டு அரசரை குடிகள் விரோதிப்பதற்கு மூலகாரணமாக இருப்பவர்கள் யாரென்று உணர்ந்து அவர்கள் செயலையும் அறிந்து காலத்திற்குக்காலம் அடக்கிவிடும் உபாயங்களைத் தேடல் வேண்டும்.
மந்திரவாதிகள் தாமெடுத்துள்ள காரியாதிகளை முடிப்பதற்கு முன்பு அத்தகையக் காரியாதிகளை முன்பு யாவரேனும் எடுத்து நடத்தியிருக்கின்றார்களா நடத்திய விஷயங்கள் சுகபேருற்றிருக்கின்றதாவென்று ஆராய்ந்து முன் ஆக்கியோன்செயலைப் பின்பற்றி அக்காரியாதிகளை முடித்தல் வேண்டும்.
தோன்றிய விரோதிகளுக்குள் சிலரடங்கி கிஞ்சித்து விரோதிகள் இருப்பார்களாயின் ஓர்கால் அந்த சொற்ப விரோதிகளே பெரும் விரோதிகளாக எழும்பி நிலைகுலையச் செய்வார்கள். ஆதலின் அந்த சொற்ப விரோதிகளும் தோன்றாவண்ணம் அமைதிசெய்துவிடுதலே ஆறுதலாகும். அங்ஙனம் அமைதியின்றி ஒவ்வோர் விரோதிகள் தோற்றிக்கொண்டே வருவார்களாயின் சிறுபாம்பாயினும் பெருந்தடிக்கொண்டடிப்பதே பயனாதலின் நேரம் பொருட்சிலவுகளைக் கவனியாது உள்ள விரோதிகளை ஒடுங்க வைத்தல் வேண்டும்.
நமது அரசர்மீது யாரும் விரோதிகளில்லை. சகலரும் அவிரோதிகளென்றெண்ணி உள்ள படை வீரரையும் அவர்கள் பராக்கிரமங்களையும் ஒடுக்கி வைப்பதாயின் வீரரை நோக்கி அடங்கியிருந்த விரோதிகளாம் வீணர்கள் யாவருக்கும் ஓர் அறிவிலி உற்சாகந்தோன்றி தங்களுக்குள்ள விரோதத்தைக் காட்டுவார்கள். அக்காலத்தில் படையை பிலப்படுத்துவதாயின் தாமதமாகும். ஆதலின் உள்ளப் படைகளின் சிலவைக் குறைக்காது மற்ற சிலவுகளைக் குறைத்து படைகளை விருத்தியில் வைக்கவேண்டும்.
- 3:7; சூலை 28, 1909 -
அரசுக்கும், அமைச்சுக்கும் படையே பக்கத்துணையென்னும் பழமொழியாதலின் பலவகை வீண்சிலவுகளைக் குறைத்து படைகளை விருத்தி செய்தல் வேண்டும்.
அத்தகைய படைகளினும் ஓர்கால் அரசுக்கு சத்துருக்களாயிருந்தவர்களையேனும் அந்தரங்க சத்துருக்களாய்க் காணபடுகிறவர்களையேனும் சேர்க்காது இராஜவிசுவாசத்துடன் பாதுகாக்கும் படைவீரர்களையே நியமித்தல்வேண்டும்.
மந்திரவாதிகளின் முழுநோக்கம் அரசைப்பாதுகாத்தலிலும் படை நிறப்புவதிலுமிருக்கவேண்டியது அவசியமாதலின் ஓர்கால் சத்துருக்களாயிருப்பவர்களே நீடித்தச் சத்துருக்களாயிருப்பார்களா. அன்றேல் மித்துருக்களாயிருப்பவர்களே நீடித்த மித்துருக்களாயிருப்பார்களா என்று அவரவர்களுக்குள்ள அவாக்களையும் குணாகுணங்களையும் சீவிக்கும் செயல்களையும் நன்காராய்ந்து படைநிறப்பல் வேண்டும்.
அதாவது பூமியின்மீதும், பொருளின் மீதும் அவாமிகுத்தோர்களைப் படைகளிற் சேர்ப்பதாயின் அவாவின் மிகுதியே அரசுக்கு பின்னந்தேடி அழித்துவிட்டுத் தாங்களே அனுபவிக்கத்தக்க ஏதுக்களைத் தேடுவார்கள்.
குணங்களில் மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால் மிஞ்சுவதுமாகிய எட்டினாற் குடிமியைப் பிடித்துக்கொள்ளுவதும் எட்டாவிட்டால் பாதத்தில் விழுபவர்களாகவும் இருப்பார்களாயின் எவ்வகையாலும் அரசக்குக் கெடுதியைத் தேடுவார்கள்.
சீவிக்கும் விஷயங்களில் வித்தையையும் புத்தியையும் விருத்திசெய்து தேகங் களைக்கினும் சோர்வடையாது உழைக்கக்கூடிய ஏதுக்களின்றி பொய்யைச்சொல்லி வஞ்சினத்தாலும் சூதுகளினாலும் சோம்பேறிகளாய்த் திரிந்து சீவிக்குங்கூட்டத்தோர்களாய் இருப்பார்களாயின் ஏழைக்குடிகளை ஏமாற்றிப் பிழைப்பதற்காய் தங்களை அடக்கியாளும் அரசைக் கெடுத்து விட்டு அநுபவிக்கும் வழிகளைத் தேடுவார்கள்.
இத்தகைய விஷயாதிகள் யாவையுந் தேற ஆய்ந்தறிந்து படை நிறப்பல்வேண்டும்.
இவர்களுள் இராஜவிசுவாசத்திலும் இராஜகாரியாதிகளிலும் ஊக்கம்வைத்து உழைப்பவர்களையே எக்காலும் நம்பலாம். இராஜ விசுவாசமின்றி இராஜ காரியாதிகளிலும் ஊக்கமின்றி உழைப்பிலும் முயற்சியின்றி அரசையும் அமைச்சையும் அடுத்து வசியவார்த்தைகளாடி தன்னை அதிஜாக்கிரதையுடையக் காரியஸ்தனைப்போல் அபிநயித்துக் காட்டுவோனை அரசர் அப்புற வேலைக்கேனும் அமர்த்தலாகாது.
ஏகசாதி, ஏக மதம், ஏகபாஷையோரென்று சொல்லுவோர் மத்தியில் இத்தியாதி ஆராய்ச்சிகளும் தேற விசாரிப்புகளும் வேண்டியதிருக்க பலசாதி, பலமதம், பலபாஷையுள்ளவர்கள் மத்தியில் அரசுபுரிவோரும், அமைச்சரும் எத்தகைய ஜாக்கிரதையில் அவரவர்கள் குணாகுணச் செயல்களை அறிந்து சகலரையுஞ் சுகமடையச் செய்யலாமென்று மேலுமேலுந் தங்களுடைய ஆராய்ச்சியில் நிறுத்தல் வேண்டும்.
- 3:8; ஆகஸ்டு 4, 1909 -
ஒரு பாஷைக்காரர்களாகுங் கூட்டத்தாருக்குள் நல்லினத்தோரென்றும், தீயினத்தோரென்றுங் கண்டறியவேண்டியது விசேஷமாம்.
தீயவினத்தோர் யாவரெனில்:- வஞ்சித்தல், குடிகெடுத்தல், பொய்யைச் சொல்லி பொருள் பறித்தல், தனது ஒரு குடும்பம் பிழைப்பதற்கு பத்துக்குடும்பங்களை பாழாக்குதல், எக்காலும் அடுத்தவர்களைக் கெடுக்கத்தக்க எண்ணங்கொள்ளுதல், தங்களுக்கு வேண்டிய பிரயோசனத்திற்காய் எதிரியை அடுத்துக்கேட்டபோது அவர்களால் கொடாவிட்டால் எவ்விதத்தாலும் அவர்கள் குடியை கெடுக்க ஆரம்பித்தல், தங்களுக்காக வேண்டிய காரியங்கள் நிறைவேறும் வரையில் எதிரியின் பாதத்தைப்பற்றி தொழுதிருந்து தனக்கான காரியம் நிறைவேறியவுடன் எதிரியின் குடிமியை எட்டிப்பிடித்துக் கெடுத்தல் ஆகிய வன்நெஞ்சத்தை நன்நெஞ்சம் போல் நடித்துக்காட்டுவோர் தீய இனத்தவர்களாகும்.
நல்லினத்தோர் யாவரென்னில், கல்விகற்பித்தவர்களை தந்தைபோல் கருதும் நன்றியறிந்தவர்களும், வித்தை கற்பிப்பவர்களை தந்தைபோல் கருதும் நன்றியறிந்தவர்களும், உத்தியோகமளித்துக் காப்பவர்களை தந்தைபோல் கருதும் நன்றியறிந்தவர்களும், தாங்கள் சுகமடைவதுபோல் சகலருஞ் சுகமடைய வேண்டுமென்று முயற்சிப்பவர்களும், புல் விற்றேனும் வண்டியிழுத்தேனும்
தேகத்தை வருத்தி சம்பாதிப்பவர்களும், ஆகிய நன்நெஞ்சத்தை உடையவர்களே நல்லினத்தோர்களாகும்.
ஒரு பாஷையின்கண்ணே இருவினையோர் தோன்றி ஈடேற்றங்களை யழிப்பார்களாயின் அவர்களுள் தீயோரை அடக்கி ஆள்வதே அரசர்களுக்குக் அதிகஷ்டமாவது அநுபவத்திலிருக்குங்கால் பலசாதி, பலமதம், பலபாஷையுமுள்ளவர்களுக்குள்ள நல்வினைச்செயலுள்ளோர் யாவரென்றாராய்ந்து பிரதம உத்தியோகங்களில் வைக்க வேண்டியது அமைச்சர்களின் கடனாகும்.
நல்வினைச்செயலோர் இன்னாரின்னார், தீவினைச்செயலோர் இன்னாரின்னாரென்றறிந்து நல்லினத்தோர்களுக்கு இராஜகீயே பிரதம உத்தியோகங்களை அளித்து சிறப்புறச்செய்யல் வேண்டும்.
இனமறிந்தளிக்கும் எத்தனங்களினால் ஏழைகள் யாவரும் முன்னேறி கனவான்களாவதுமன்றி தீய வினங்களுக்குள்ள தீயச்செயல்களும் நாளுக்குநாளற்று நல்லினத்தோராவார்கள்.
காரணம், நல்லினத்தோர் இவர்கள், தீயினத்தோர் இவர்களென்று கண்டறிந்த வமைச்சர்கள் இராஜகீய பிரதம உத்தியோகங்களில் தீயோர்களை அகற்றி நல்லோர்களை சேர்ப்பதினால் அவற்றைக்காணுந் தீயவினத்தோர் தங்களுக்குத் தாங்களே தங்கள் தீயகுணங்களை அகற்றி நற்குணங்களைப் பின்பற்றுவார்கள்.
பெருங்காய மென்னும் ஓர் பதார்த்தத்தை எடுத்துவிட்டபோதிலும் அஃதிருந்த பாண்டத்தின் நாற்றம் விடாததுபோல் தீயோர் நல்லோரை அடுத்தபோதினும் அவர்களது தீயனாற்றம் விடாதிருப்பின் நல்லின பிரதம உத்தியோகஸ்தர்கள் மறக்கருணையாம் சொற்பக் கொடுங்கோலால் அடக்கி உள்ளக் கெட்ட நாற்றங்களாம் தீயச்செயல்களைப் போக்கிவிடுவார்கள்.
இத்தகைய குணாகுணங்களை அறிந்து பிரதம உத்தியோகங்களை அளிக்காது தீயவினத்தோர்களை பிரதம உத்தியோகங்களில் நியமிப்பதாயின் தங்களையொத்த தீயர்களுக்கே சகல சுகங்களையும் அளித்து இராஜகீய காரியாதிகளையுங் கெடுத்து இராஜகீய சுதந்திரங்களைத் தாங்களே எடுத்தாள ஆரம்பித்துக்கொள்ளுவார்கள்.
இத்தகையத் தீயச்செயலால் நல்லினத்தோர் யாவரும் நாசமடைந்து, அரசருக்கும், அமைச்சருக்கும் அல்லலுண்டாகி தீயர்கள் பெருகி தேசமும் பாழடைந்துபோம். ஆதலின் நல்லினத்தோர்களை தெரிந்தெடுத்து பிரதம உத்தியோகங்களை அளித்தாள்வதே அமைச்சர் செயலாகும்.
அங்ஙனமின்றி அமைச்சர்கள் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே காலென்று கூறும் பிடிவாதம்போல் எடுத்த ஆலோசனையை முன்பின்னுணராது முடிக்க ஆரம்பிப்பார்களாயின் தன்னையும் தனதரசையுங் கெடுத்துக்கொள்ளத் தக்க அஸ்திபாரப்படையிட்டுக்கொண்டதாக முடியும்.
- 3:9; ஆகஸ்டு 11, 1909 -
தேசத்தை ஆளுவோன் அரசனாயினும் அவ்வாளுகையை முற்றும் ஆராய்ந்து நடத்துபவன் அமைச்சனேயாவன்.
ஆதலின் சுதேச மந்திரவாதச் செயல்களையும், புறதேச மந்திரவாதச்செயல்களையும் ஒரேயமைச்சன்வசம் ஒப்பி விடலாகாது.
காரணம்:- சுதேசத்துள் தனது தேசாச்சார செயலும், மதாச்சாரச் செயலும் உள்ளபடித் தெள்ளற விளங்கும். அத்தகைய விளக்கத்தால் செய்யப்படுந் தொழில்களும், தொழிலின் விருத்திகளும், வேண்டிய கருவிகளும், அதனை ஆளும் வல்லபங்களும், செங்கோலால் நடத்தும் சீருகளும், கொடுங்கோலால் அடக்கும் உபாயங்களையுங் காலமறிந்து நடத்தி அரயனுக்கு யாதாமோர் ஆயாசமுந் தோன்றாது செய்துவருவார்கள்.
புறதேசச் செயலை சீர்திருத்தும் அமைச்சன் அத்தேசத்திற் சென்று தங்களது அரசுக்குள் அடங்கிய குடிகள் யாவரும் சுகவாழ்க்கையில் இருக்கின்றார்களா, அசுகவாழ்க்கையில் இருக்கின்றார்களா, சுகவாழ்க்கையில் உள்ளவர்கள் யாவர், அசுகவாழ்க்கையில் உள்ளவர்கள் யாவரென்று ஆராய்ந்து தங்களது செங்கோலில் சிலர் சுகமுற்றுவாழ்வதும், சிலர் அசுகமுற்று வாழ்வதுமாகிய
காரணங் கண்டுணர்ந்து சகலருஞ் சுகமுற்று வாழும் விதிவிலக்குகளை வகுத்தல் வேண்டும்.
விதிவிலக்குகளாவது:- தங்களது ராஜகீய சங்கங்களிலும், உத்தியோக சாலைகளிலும் சகலசாதியோரும் சமரசமாய் விற்றிருந்து உத்தியோகங்களை நடாத்தி சுகம்பெறவேண்டிய சட்டதிட்டங்களையும், அவற்றிற்கு மாறுபட்ட வேறுபாட்டுகளை விலக்கவேண்டிய சட்டதிட்டங்களையும் அமைத்தல் வேண்டும்.
ஒருதேசத்துள் ஒரேசாதி, ஒரேபாஷைக்காரர்களிருக்கின்றார்கள். அவர்களை ஆளுவதுபோல் பலசாதி, பலபாஷை, பலமதம் உள்ளவர்களையும் ஆளவேண்டுமாயின் ஒவ்வொருவரின் தேசாச்சாரம், மதாச்சாரம், சாதியாசாரம் இவற்றுள் ஒற்றுமெயற்றப் பிரிவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.
அத்தகையப் பிரிவுள்ளோர்களை ஆளுவோர் மதபேதம், சாதிபேதமற்ற மதியூகிகளாகவும், சகலமக்கள்மீதும் அன்பு பாராட்டுகிறவர்களாகவும், நீதிநெறியில் மிக்கோர்களாகவும் உள்ளவர்களையே தெரிந்தெடுத்து பிரதம காரியாதிகளில் அமைத்து சகலசாதி, சகல மதக்குடிகளையும் ஆதரித்தல் வேண்டும்.
தங்கள் சாதியே உயர்ந்த சாதி மற்ற சாதிகள் தாழ்ந்த சாதிகளெனக் கூறித்திரியும் சாதிகர்வம் உள்ளோர் இடத்தில் பிரதம உத்தியோகங்களை அளிக்கினும், தன் மதமே மதமென்று ஏனையோர் மதத்தைத் தூற்றித்திரியும் மதகர்வமுற்றோர்களிடத்தில் பிரதம உத்தியோகங்களை அளிக்கினும், மிக்க திரவியமிருந்தும் மற்றவர்களுக்கு உபகாரமற்றவனாகவும், தன்மானம் போனாலும் போகட்டும் பிறர்மானம் போனாலும் போகட்டும் பணங்கிடைத்தால் போதுமென்னும் பேராசையுள்ள லோபிகளிடத்தில் பிரதம, உத்தியாகங்களை அளிக்கினும், குடும்ப அந்தஸ்துகளிலும், சீவனங்களிலும், ஒழுக்கங்களிலும் மிகத் தாழ்ச்சியிலிருந்து கல்விகற்றுக் கொண்டவர்கள் வசம் பிரதம உத்தியோகங்களை அளிக்கினும் தங்களது பிறவிகுணமாம் நீச்சசெயலும், பேராசையும் மாறாது தங்கள் சாதி தங்கள் மதத்தோருக்கு மட்டிலும் உபகாரியாக இருந்து ஏனைய மதத்தோர்களுக்கு இடுக்கண்களை உண்டாக்கி தங்களுக்கு மேலதிகாரிகளாயுள்ளவர்களுக்கும் அஞ்சாது பணம் சம்பாதிக்க ஆரம்பித்துக்கொள்ளுவார்கள்.
- 3:11: ஆகஸ்டு 25, 1909 -
எக்காலும் தானமைச்சு நடாத்தும் தேசத்தின்மீதும் விழித்த நோக்கமுற்றிருத்தல், குடிகளில் அவரவர்கள் குணாகுணங்களை அறியத் தக்கவைகளை கற்றல், இடைவிடா நீதி நூலாராய்ச்சியில் நிற்றல், விதிவிலக்குகளை நோக்கி கூட்டவேண்டியவைகளைக் கூட்டி, குறைக்க வேண்டியவைகளைக் குறைத்தல், குடிகளுக்குள்ள முயற்சியையும், அவர்கள் தொழில் விருத்திகளையும் நோக்குதல் ஆகிய தனது ஜாக்கிறதையில் இருக்க வேண்டுமேயன்றி மற்றவர்கள் வார்த்தைகளை மெய்யென்று நம்பி மோசம் போகலாகாது.
குடிகள் சீர்திருத்தத்திற்காக முன்பு ஆலோசித்துள்ள காரணங்களுக்கு சிலது கூடியும் கூடாததுமாக நிற்கும் அவற்றை தேறவிசாரித்து கூடியவற்றைக் கூட்டியும் கூடாதனவற்றை அகற்றியும் எண்ணிய காரியத்தை முடித்தல் வேண்டும்.
அரசனுக்கு அத்தியந்த அமைச்சனாய் அருகிருப்போன் தனது அறிவுக்கு எட்டாமலோ, கெடு எண்ணத்தினாலோ அரசுக்குங் குடிகளுக்குமுள்ள அன்பை மாற்றிவிடுவானாயின் அன்றே தனதரசுக்கு விரோதமாய் ஆயிரங்கோடி படைகளை அமைத்துவிட்டதொக்கும்.
ஒருவர் சொல்லும் வழிகளைக் கேளாமலும் அதனந்தரார்த்தங்களைத் தானும் ஆராய்ந்து செய்யாமலும், நம்மெய்விட வேறு விவேகிகளில்லையென்று இருமாப்புற்று அமைச்சுக்குக்கேடாம் அமையா நிலைகளை உண்டு செய்வானாயின் உடனே அவ்வமைச்சனை அரசனகற்றி விவேகமும் பெருந்தண்மெயுமிகுத்த வேறமைச்சை நியமித்தல் வேண்டும்.
விவேகவிருத்தியும், பெருந்தண்மெயும் அமைந்திருப்பதுடன் குணத்திலும் அமைச்சு, வார்த்தையிலும் அமைச்சு, செய்கையிலும் அமைச்சுள்ளவனே பிரதம அமைச்சனாவான்.
பொய்ப்பொருளாசை யற்று மெய்ப்பொருளாசையுற்று நீதிநெறிகளையே அன்னமும் நீருமாகக்கொண்டுள்ளக் குடும்பங்களை ஆய்ந்து அக்குடும்பத்துள் தோன்றிய விவேகிகளைத் தெரிந்தெடுத்து அமைச்சுக்கு அமர்த்துவதே அரசுக்கழகாகும், அமைச்சுக்கும் நிலையாகும். (இத்தொடர் நிறைவு பெறவில்லை)
- 3:12; செப்டம்பர் 1, 1909 -