அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/074-383
70. வேஷ வேதாந்திகள் பிறவி
தற்காலம் வேதம் இன்னது இனியதென்றறியாத வேஷவேதாந்திகள் சமட்டியென்றும் வியட்டியென்றும் ஆரோபமென்றும், அபவாதமென்றும் உள்ள வடமொழிகளை புகட்டி ஏனையோரை மருட்டி பிரமம் எங்கும் நிறைந்திருக்கின்றாரென்று சொல்லுவேன், ஆயினும் பறையனிடமட்டிலும் இல்லையென்பேன், பிரமம் சருவமயமென்பேன், பிராமணன் தனியென்பேன்.
பிரமம் எங்கு நிறைந்திருக்கினும் சூத்திரனுள் பிரமம் வேறு, வைசியனுள் பிரமம் வேறு, க்ஷத்திரியனுள் பிரமம் வேறு, பிராமணனுள் பிரமம் வேறென்பேன்.
காரணம், சூத்திரனாகப் பிறந்தவன் வைசியனுக்கு ஏவல்செய்து அவனிடம் நற்சாட்சிப் பெறுவனேல், மறுபிறவியில் வைசியனாகப் பிறப்பான்.
வைசியனாகப் பிறந்தவன் க்ஷத்திரியனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சி பெறுவனேல் மறுபிறவியில் க்ஷத்திரியனாகப் பிறப்பான்.
க்ஷத்திரியனாகப் பிறந்தவன் பிராமணனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சிப் பெறுவனேல் மறு பிறவியில் பிராமணனாகப் பிறப்பான்.
என்பேன், எனக் கூறும் வேஷவேதாந்திகள் விசாரிணையால் அறிந்துள்ள பிரம்மத்தின் செயலையும், சாதிகளின் பிரிவையும் ஆராயுங்கால் சூத்திர பிரமம் வேறு, வைசிய பிரமம் வேறு, க்ஷத்திரிய பிரமம் வேறு, பிராமண பிரமம் வேறாகவுள்ளனபோலும்.
அவற்றிற்கு ஆதாரமாம் செட்டி பிரமம் வேறு, ஆச்சாரி பிரமம் வேறு, அவர்கள்பால் தூர நின்று தேறவிசாரிக்கும் பறையன் பிரமம் வேறுபோலும்.
இத்தியாதி சாதிபிரம்ம ஜமாத்து பிரம்மவிசாரிணைப் புருஷர்களுக்கு வேதபிரம், வேதாந்த பிரம்மவிசாரிணையுமாமோ.
வேதத்திற் கூறாத சாதியாசாரம் வேதாந்தத்திற் கூறவந்தது விந்தையேயாம். சூத்திர பிரம்மம் வைசியப் பிரம்மமாகிறதும், வைசியப்பிரம்மம் க்ஷத்திரியப்பிரம்மமாகிறதும், க்ஷத்திரியப்பிரம்மம் பிராம்மணப்பிரம்மமாகிறதுமாயின் பிராம்மணப் பிரம்மம் யாதாகுமோ விளங்கவில்லை.
சூத்திரனிலிருந்து மேலுமேலும் நோக்கி பிராம்மணனெனும் உயர்ந்த சாதியாகவும், பிராம்மண பிரம்மமுமாகவும் விளங்கியவன் கைதியாகி சிறைச்சாலைக்கு ஏகுவானாயின் (ஜெயில் வார்டர்களாகும்) பறை பிரம்மங்கள் பிராம்மண பிரம்மங்களை வேலைவாங்குகின்றார்கள்.
சூத்திரனினின்று வைசியனாகவும், வைசியனினின்று க்ஷத்திரியனாகவும், க்ஷத்திரியனினின்று பிராம்மணனாகவும் உயர்ந்து சிறக்கவேண்டிய சாதி வேதாந்தம், சிறைச்சாலைகளில் பரக்க விளங்குகின்றபடியால் உயர்ந்த பிறவியில் உழைத்துச்சென்ற உல்லாசமென்னை.
பிரம்மத்தால் சாதிப்பெயர் தோன்றிற்றா அன்றேல் கர்ம்மத்தால் சாதிப்பெயர்தோன்றிற்றா.
பிரம்மா முகத்தில் பிராம்மணன் தோன்றினான் என்பானாயின் பிராம்மணத்தி எம்முகத்திற் தோன்றினாள். இஃது வேதாந்தவிசாரிணையன்று, சித்தாந்த விசாரிணை யென்பார்போலும்.
வேதாந்தத்திற்கு எதிரடை சித்தாந்தமாயின் வேதத்திற் கெதிரடை அபேதமென்பார்போலும்.
பாலிமொழியில் பிம்ம மென வழங்கி சகட மொழியில் பிரம்ம மெனுங் குணசந்திப்பெற்று ஞானவொளிவையும், அதைக்கண்டறியும் வழியையும், அதன் பலனையும் நன்குணராது, வீணே பொருளறியா பிரம்ம கதையால் மதக்கடைபரப்பி தாங்களறியாததும், தங்களை அடுத்தவர்கள் அறியாததுமாகிய வேதகதையென்றும் வேதாந்த கதையென்றும், நீதி கதையென்றும், சாதிகதையென்றும் வழங்கும் புத்தகங்களைப் பரப்பி அவற்றால் சீவிப்பவர்கள்பால் வேதாந்த விசாரணைச் செய்வதாயின், “பசியில்லா வரங்கொடுப்போம் பழையதிருந்தால் போடும்” என்பார்போல் தங்கள் சுயப்பிரயோசனங்களையும், சுசாதி அபிமானங்களை விருத்தி செய்வார்களன்றி யதார்த்த வேதாந்தம் விளக்க அறியார்கள்.
யதார்த்த வேதாந்தம் விளங்கவேண்டியவர்கள் சாதிபேதங்களையும், சமயபேதங்களையும் ஒழித்து பொய்ப்பொருளாசையை வெறுத்து யதார்த்த பிராம்மண நிலை அடைதல் வேண்டும்.
அஃது எக்கூட்டத்தோர்பால் சேர்ந்தடைய வேண்டுமென்பீரேல், ஆற்று நீர்களும், கால்வாய்நீர்களும், சாக்கடைநீர்களும், சாரளநீர்களும் சமுத்திரத்திற் சேர்ந்து சுத்தமடைவதுபோல், சாதிபேதத்தால் பொறாமெ நாற்றம், சமயபேதத்தால் விரோதநாற்றம், அடைந்தோர்கள் யாவரும் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பூர்வபௌத்தர்களை அடைவார்களாயின் சாதிநாற்றம், சமய நாற்றங்கள் யாவுமகன்று களங்கமற்ற சுத்தவிதயமுண்டடாகி சுயஞானமுற்று சுப்பிரவொளியாவார்கள்.
இன்னிலைக்கே பிம்மநிலையென்றும், பிரம்மநிலையென்றும், பிறவியற்ற நிலையென்றுங்கூறப்படும்.
இத்தகைய யதார்த்த வேதாந்த பாதையை விட்டு வேஷவேதாந்த பாதையாகும் சூத்திரனினின்று வைசியனாகப் பிறப்பதும், வைசியனினின்று க்ஷத்திரியனாகப் பிறப்பதும், க்ஷத்திரியனினின்று பிராமணனாகப் பிறப்பதும் பெரும் பொய்யேயாம்.
இஃது மெய்யாயின் க்ஷத்திரியர் வம்மிஷம் யாவையும் பரசுராமன் கருவறுத்து விட்டான் என்னும் கதையின் போக்கென்னை?
வேஷவேதாந்தம் சகலருக்கும் பொதுவாயின் சூத்திரன் தபசு செய்வதால் பிராமணர்களுக்கு அனந்தங் கெடுதி பூண்டாயதென்று இராமரிடங்கூற, இராமர் அம்பெய்தி தபசுசெய்துள்ள அச்சூத்திரனைக் கொன்றுவிட்டாரென்னும் கதையின் சாக்கென்னை.
இத்தியாதி மித்திரபேதக் கதைகள் யாவும் வேஷ வேதாந்திகள் சுயப்பிரயோசனத்திற்காய்த் தங்களை உயர்த்திக்கொண்டு பூர்வபௌத்தர்களைத் தலையெடுக்கவிடாமல் தாழ்த்துவதற்கேயாம்.
ஆதலின் அவனவன் துற்கன்மத்தால் துற்குணனாகவும், நற்கன்மத்தால் நற்குணனாகவும் பிறப்பானென்பது சத்தியமாகும்.
துற்கன்மத்தால் பிராம்மணனென்று பெயர் வைத்துக்கொண்டவன் சிறைச்சாலை சேருவதும், நற்கருமத்தால் பறையனென்று அழைக்கப்பெற்றவன் அவனை வேலைவாங்குவதுமாகியச் செயலே முன்வினையின் பயனை விளக்கும் அநுபவக்காட்சியாம்.
- 3:9; ஆகஸ்டு 11. 1909 -