அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/106-383

102. கவுன்சல் ஓட்டுகள்

சென்னை ராஜதானியில் ஐயர், முதலி, ராவ், செட்டி , நாயுடு, பிள்ளை , நாயகர், ரெட்டி எனும் வகுப்பாருள் ஒவ்வொரு வகுப்பினருள்ளும் நன்குவாசித்தவர்களும் பட்டாதாரர்களும், பெருந்தொகையான வரி செலுத்துகிறவர்களும் இருக்கின்றபடியால் அந்தந்த வகுப்பாருள் விவேகமிகுத்த பெரியோர்களைக்கண்டெடுத்து கவுன்சல் மெம்பரிற் சேர்ப்பது சகல வகுப்பாருக்கும் சுகத்தை விளைவிப்பதுமன்றி அந்தந்த வகுப்பார்களுக்கு நேரிட்டுள்ள குறைகளையும் அகற்றி வாழ்வதற்கு ஆதாரமென்றுங் கூறியிருந்தோம்.

அவற்றைக் கண்ணுற்ற சுயப்பிரயோசன சோம்பேறிகள் அத்தகைய வகுப்பைப் பிரித்து ஒட்டுக் கொடுக்கப்படாதென்றும், சில மூடர்கள் அவ்வகையான அபிப்பிராயங் கொடுக்கின்றார்கள். அவர்கள் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு ஒவ்வொரு வகுப்பென பிரிக்கலாகாதென்றுங் கூறுகின்றார்கள்.

இவ்வகை பிரிக்கலாகாதென்று கூறுவோர் பிரிக்கத்தக்க தொடர் மொழிகளாகும் ஐயர், முதலி, செட்டி, நாயுடு, நாயகர் என்னும் ஈற்றிலுள்ள சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு முத்துசாமி, இராமசாமி, கோவிந்தன், கோபாலனென வழங்கிவருவாராயின் பிரிவினையாக்கும் யாதோர்வகுப்பு இல்லையெனக் கருதி சகலரையும் இந்தியரென்றே கூறலாம். அங்ஙனமின்றி சாதித்தலைவர்களும் இருத்தல் வேண்டும். அவர்கள் அடக்கியாண்டசாதிகளும் இருக்க வேண்டும். ஆயினும் அவைகளைப் பிரிக்காமல் பழயபடி நாங்களே சுகத்தை அநுபவிக்கவேண்டுமென்றால் செல்லுமோ, ஒருக்காலுஞ் செல்லாவாம். இந்துக்களென்பது சாதித்தலைவர்களுக்குரிய பெயரென்றெண்ணியிருந்தார்கள்.

தற்காலம் நமது கனந்தங்கிய இராஜப்பிரதிநிதியைக் காணவந்தவர்களோ, இந்திய ஆங்கிலர்களென்றும், இந்திய கிறிஸ்தவர்களென்றும், இந்திய கத்தோலிக்குக் கிறிஸ்தவர்களென்றும் வெளி வந்துவிட்டார்கள். இவர்களுள் சாதியாசாரம் வைத்துக் கொண்டிருப்பவர்களையும், சாதியாசாரம் வைக்காமலிருப்பவர்களையும் என்ன இந்தியரென்று கூறலாம். சாதித் தொடர் மொழிகளையும் விடாமல் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். ஆனால் வேறு வேறாகப் பிரிக்கப்படாதென்றால் இஃது சுயப்பிரயோசன மொழியா அன்றேல் பொதுப்பிரயோசன மொழியா விவேகிகளே கண்டறியவேண்டியதுதான்.

இத்தியாதி கவுன்சல் கூச்சலில் நமது ஜைனமத சோதிரர்கள் வெளிதோன்றாமலிருப்பது மிக்க விசனமே. இத்தென்னிந்தியாவில் பூஸ்திதியுள்ளவர்கள் அனந்தம் பேரிருக்கின்றார்கள். கல்வியில் பி.ஏ., எம்.ஏ. முதலிய கெளரதா பட்டம் பெற்றவர்களுமிருக்கின்றார்கள். இவர்களுக்குள் யாரையேனுத் தெரிந்தெடுத்து கவுன்சல் மெம்பரில் சேர்த்துவிடுவார்களாயின் அக்கூட்டத்தாருக்குள்ளக் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சுகம்பெறச் செய்வார்கள். ஆதலின் ஜைன சோதிரர்கள் உடனே வெளிவந்து தங்களுக்குள் கவுன்சலுக்கு ஓர் பிரதிநிதியை அநுப்புவார்களென்று நம்புகிறோம்.

- 3:29: டிசம்பர் 29, 1909 -