அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/108-383

104. புதிய கவுன்சல் நியமனம்

சென்னை ராஜதானியில் தற்காலம் ஆரம்பித்திருக்கும் ஆலோசினை சங்கத்தில் மகமதியருக்குள்ளும், இந்துக்களுக்குள்ளும் அங்கங்களை நியமித்ததுமன்றி யூரேஷியருக்குள் ஒருவரையும் சுதேசக் கிறிஸ்தவர்களுக்குள் ஒருவரையும் நியமித்துள்ளது கண்டு மிக்க ஆனந்தித்தோம். இத்தகைய நியமனங்களால் அந்தந்த வகுப்பார்களின் குறைகளை அவரவர்களின் பிரதிநிதிகளின்பால் தெரிவித்து ஆலோசனை சங்கத்திற் பேசவும் தங்களுக்கு நேரிட்டுள்ள குறைகளை நீக்கிக் கொள்ளவும். தக்கவழிகளுண்டாயின. இவ்வகை நியமனம் பிரிட்டிஷ் ஆட்சி இவ்விடம் நிலைத்தபோதே ஆரம்பித்திருப்பார்களாயின் சகலவகுப்பாரும் நற்சுகம் பெற்று ஆனந்தத்தில் இருப்பார்கள்.

அங்ஙனமின்றி இத்தேசத்தோர் இட்டிருக்கும் பெரியசாதி, சின்னசாதியென்னும் வேஷத்திற்குத் தக்க இடங்கொடுத்துவிட்டதின் பேரில் பெரியசாதிகளெனப் பெயர்வைத்துக் கொண்டுள்ளவர்களே வேண்டிய சுகங்களை அநுபவித்துக் கொண்டு மற்றவர்கள் யாவரையும் தலை எடுக்கவிடாமல் ஆண்டுவந்ததுமன்றி அரசையும் அநுபவிக்கவேண்டுமென்னும் ஆனந்தத்திலிருந்தார்கள்.

இத்தகைய ராட்சியபாரத்தை விரும்பினோர் ஆங்கிலேயர்களைப்போல் சாதிபேதமற்றவர்களும், சமயபேத மற்றவர்களும் தன்னவ ரன்னியரென்னும் பட்சபாதமற்றவர்களும் அவன் சின்னசாதி, நான் பெரியசாதியென்னும் பொறாமெயற்றவர்களுமாய் இருப்பார்களாயின் கருணை தங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் சுயராட்சியமளித்து சகலரையுஞ் சுகமடையச்செய்வார்கள்.

அங்ஙனமின்றி தங்கள் சாதிவரம்புக்குள் சம்மந்தப்பட்ட அனந்தம் பெயர்களுக்குத் தக்க சுகங்கொடாது அகற்றியதுமன்றி ஆரியர்களுக்கு எதிரிடையான சாதிபேதமற்ற திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை அல்லலடையச் செய்து முன்னேறி சுகமடையும் படியான வழிகளையும் அடைத்து பெரிய சாதிகள் குற்றஞ்செய்தால் சத்திரத்தில் உட்காரவைப்பதும், சின்ன சாதிகள் குற்றஞ்செய்தால் தொழுவில் மாட்டி வெய்யலில் காயவைப்பதுமாகிய அநீதிகளை வகுத்துவைத்துக் கொண்டவர்களாதலின் இவர்கள்பால் சுயராட்சியத்தையளிப்பதாயின் ஆறுகோடி திராவிடர்களை அடியோடு பாழக்கிவிட்டு அவர்களுக்கு அடங்கியுள்ள சாதியோர்களையும் நிலைகுலையச் செய்துவிடுவார்கள் என்றுணர்ந்த கருணை தங்கிய ராஜாங்கத்தோர் சகல வகுப்போரும் தங்கடங்கட் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி குறைகளை அகற்றி முன்னேறி சுகம் பெரும் வழியாகிய நியமனத்தை செய்துவிட்டார்கள்.

இவ்வகையாய் கருணை மிகுத்த நியமனத்தில் ஆரியர்களுக்கு எதிரிடையானவர்களும், சாதிபேதமற்ற திராவிடர்களுமான ஆறுகோடி மக்களின் கஷ்டநஷ்டங்களையும் சாதிபேதம் வைத்துள்ளார் செய்துவரும் இடுக்கங்களையும் தங்கள் வீடு வாசல்களில் சாதியாசாராம் செய்துவரும் வழக்கம்போல் இராஜாங்க உத்தியோகசாலைகளில் செய்துவரும் அக்கிரமங்களையும் இராஜாங்கசங்கத்தில் எடுத்தோதி அவர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்காய் சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள்ளோர் பிரதிநிதியை கருணைதங்கிய கவர்னரவர்கள் நியமித்து ஏழைகளின் இடுக்கங்களை நீக்கி ஆதரிப்பாரென்று நம்புகிறோம்.

அவரது நன்னோக்கத்திற்கு உபபலனாக (டிபிரஸ் கிளாசை) முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்னும் நல்லெண்ணமுடையவர்களாய் வெளிவந்துள்ளப் பொதுநலப் பிரியர்களும் எடுத்தோதுவார்களாயின் நியமனமும் நிலைபெறும் ஏழைகளும் முன்னுக்குவருவார்கள்.

நாளுக்குநாள் சாதிபேதம் பெருகிவரும் இத்தேசத்தில் சாதிபேதமற்றோர் வாழ்க்கையானது சகல ஈடேற்றத்திற்கும் இடுக்கத்தை உண்டு செய்வதாய் இருக்கின்றபடியால் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்து சகல சாதியார்களைப் போல் இவ்வேழைகளையும் முன்னேறச் செய்வார்களென்று நம்புகின்றோம். இக்கூட்டத்தாரில் சிலர் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் உட்காரும்படியான யோக்கியதா பட்டம் இல்லையென்பது சொல்வதற்கு இடமில்லை. இப்போது சேர்ந்த சில லெஜிஸ்லேடிவ் கவுன்சில் மெம்பர்களுடைய வாசிப்புக்கும், யூகைக்குத் தக்க நிலை இவர்களுக்குள்ளும் சிலருக்கு உண்டென்று சொல்வதற்கு ஆட்சேபனை இல்லை. இக்கூட்டத்தார் இங்கிலீஷ் கவர்ன்மெண்ட் இந்தியாதேசத்தில் முதல் நாட்டினத்திலிருந்து இதுவரையில் அவர்களுக்காக உண்மெயோடும், அன்போடும் சேவித்து வருகின்றார்கள். இவர்களை கவர்ன்மெண்டார் முன்னுக்குக் கொண்டு வருவதினால் அவர்களுக்கு எக்காலத்திலும் எவ்விதமான சங்கடங்கள் அல்லது இடையூறுகளாவது உண்டாகுமென்பது கிஞ்சிற்றேனும் நினைக்கப்படாது.

லார்ட் கிளைவ் ஆர்காட் சண்டை முதல் இங்கிலீஷ் செய்த கடைசியாக நடந்த சண்டைகள் வரையிலும் இவர்கள் வெகு உண்மெயாகவும் தங்களுடைய சொந்த பிராணன்களை கவனியாமலும் இங்கிலீஷ்காரர் சண்டைபோடும் இடங்களுக்குச் சென்று அன்பான உதவி புரிந்திருக்கிறார்கள். இந்தியன் மியூட்டினி காலத்திலும் இங்கிலீஷ் துரைகளுடைய லேடிகளையும் பிள்ளைகளையும் இவர்களுடைய காபந்தில் விட்டு போயிருக்கிறார்கள். இக்கூட்டத்தார் மற்ற ஜாதி வகுப்பினர்கள் இடையூரினால் இவர்கள் அதிகமாக முன்னுக்கு வர இடமில்லாமற் போயிற்று.

சில இங்கிலீஷ் துரைகளினால் சிலர் முன்னுக்கு வந்திருந்தார்கள். இப்போதும் சிலர் போதுமான கல்வியை அடைந்து சில உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை தெரிந்தெடுக்கும் எண்ணம் கவர்ன்மெண்டாருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களுடைய பெயர்களையுங் கொடுப்போம். அப்படி கொடுக்கும்படியான பெயர்கள் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் நடக்கும் விஷயங்களை தெரிந்துக் கொள்வதுமன்றி எவ்விதமாக பேசவேண்டும் என்னும் பகுத்தறிவு இருக்குமென்பதற்கும் யாதொரு ஆட்சேபனையுமில்லை. மெட்றாஸ் பிரசிடென்சியில் ஜாதிபேதமற்ற திராவிடர்கள் அநேகமா இருக்கிறபடியால் அவர்களுக்குள்ளக் குறைகளை சங்கத்தில் விளக்குவதற்கு அவர்களுடைய மரபிலேயே ஒரு லெஜிஸ்லேடிவ் கவுன்சில் மெம்பர் இருக்கவேண்டியது அவசியமென்பது நமது கருத்து.

இந்த விஷயத்தைப்பற்றி 1908ம் வருடம் கவர்னரவர்களுக்கு ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் எலெக்ஷன் சிஷ்டத்தைப்பற்றி அதிகமாக விளம்பரமிருந்தபடியால் இக்குலத்தாரைப்பற்றி பேசுவதற்கு ஒரு யூரோப்பியன் அல்லது யூரோஷிய கனவானை நியமனம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்போது கவர்னரவர்கள் யூரேஷியன் வகுப்பையும், இந்தியன் கிறிஸ்டியன்வகுப்பையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக அக்கூட்டத்தார்களில் இருவரை நாமினேட் செய்திருக்கிறதாகத் தெரிகிறபடியால் இக்குலத்தாரிலிருந்தும் ஒருவரை நாமினேட் பண்ணுவதில் மற்ற இந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் யாதொரு ஆட்சேபனை செய்வதற்கு இடமில்லையென்பது நம்முடைய பூர்த்தியான அபிப்பிராயமானபடியால் நமது கவர்னர் கனந்தங்கிய ஸர் ஆர்தர் லாலியவர்கள் அன்புகூர்ந்து ஏழைக் குடிகளிலிருந்து ஒருவரை நாமினேட் செய்வாரென்பது நம்முடைய தாழ்மையான கோரிக்கை.

- 3:31; சனவரி 12, 1910 -