அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/115-383
111. மாறுவாடிகள் மோசம் மாறுவாடிகள் மோசம்
மாறுவாடிகளென்பது வாடிக்கையால் சிலவற்றை மாறும் வியாபாரிகளுக்குப் பெயர். அதாவது வெள்ளி நகை, பொன் நகை அல்லது செம்பு பாத்திரம், வெண்கலப் பாத்திரங்களை அடகுக்கு வைத்துக்கொண்டு அதற்கு மாறு பணங்கொடுப்பது.
அத்தகைய மாறுவாடிகளென்போர் பெரும்பாலும் வடதேசத்தோர்களேயன்றி தென்தேசத்தோர்களன்று. அவ்வடதேசத்தோருள் மிக்க திரவியம் சேர்த்துள்ளவன் தன் குலத்து ஏழைகளுக்குப் பணவுதவிபுரிந்து மாறுவாடி வியாபாரத்தை நடாத்தும்படி செய்து தங்கள் குலத்தோரை தனவான்களாகச் செய்துவருகின்றார்கள்.
இம்மாறுவாடிகள் கடைகளோ கிராமத்திற்கு இரண்டுகடை மூன்று கடைகளை வைத்துக்கொண்டு ஏழைகளை பெரும் வட்டியால் வதைத்துப் பொருள்சேர்ப்பதுடன் இன்னொருவகை மாறுவாடி தனமுஞ் செய்து வருகின்றார்கள்.
அவைகள் யாதெனில், அவர்கள் கணக்குவைக்கும் புத்தகங்களில் இரண்டு புத்தகங்கள் ஒன்றுபோல் வைத்திருப்பதாகத் தெரியவருகின்றது. அவைகளுள் ஏழைமக்கள் நல்ல பொன் நகைகளையும், மற்றும் சாமான்களையும் அடகு வைக்குங்கால் ஒரு புத்தகத்தில் நல்ல பொன் நகைகளையும், மற்ற சாமானங்களையும் கண்டெழுதிக்கொண்டு மற்றொரு புத்தகத்தில் நல்ல பொன் நகையை எழுதாமல் விட்டு மற்ற சாமானங்களை எழுதி வைத்துக்கொண்டு ஏழைகள் பணத்தையும் அதன் வட்டியையும் கொண்டுபோய்க் கொடுத்துக் கேழ்க்குங்கால் மற்ற சில்லரை சாமானங்களைக் கொடுத்துவிட்டு நல்ல பொன் நகையை வைக்கவில்லை என்று மறுதலிக்கின்றார்கள்.
உடனே அங்குள்ளப் பெரியோர்களைக்கொண்டு கேழ்க்க ஆரம்பித்தால் பொன்னகைக் கண்டெழுதாத புத்தகத்தை விரித்துக் காட்டி வைக்கவில்லை என்று சாதிக்கின்றார்கள். அதைக்காணும் ஏழைமக்கள் மனம் நொந்து வீடுசேருகின்றார்கள்.
மற்றோர் வகையானும் ஏழை மக்களைக் கெடுத்து வருகின்றார்கள். அதாவது ஐந்து ஆறு ரூபாய் பெரும்படியான நகைகளைக் கொண்டுபோய் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு இரண்டொரு மாதம் சென்று வட்டியும் முதலுடன் கொண்டுபோய் கொடுத்து நகையைக் கேழ்ப்பார்களாயின் உடனே கொடாது நாளைக்குவா நாளைக்குவா என்று தவணை கூறி பத்து பனிரண்டு நாள் அலைய வைப்பதினால் ஏழைகள் கையில் வைத்துள்ள பணத்தை சிலவுசெய்து விட்டு ஏக்கங்கொள்ளுவதும் மாறுவாடிகள் மேலும் மேலும் முதலாளிகளாக வழிகள் ஏற்படுகின்றது.
வடதேச மாறுவாடிகள் இத்தகைய ஒரு ஏழை மக்களை பாழாக்குவதுடன் ஒவ்வொரு மாறுவாடிகள் ஏழைகள் வைத்துள்ள சாமானங்கள் யாவையும் சுருட்டிக்கொண்டு சொல்லாமல் ஓடிப்போய் விடுகின்றார்கள். அதினால் மெத்த ஏழைகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை இழந்து தாங்களுங் கவலைகொண்டு தவிக்கின்றார்கள்.
இத்தியாதி ஏழைகளின் கஷ்டங்களையும், மாறுவாடிகளின் மாறுபாடுகளையும் நமது கனந்தங்கிய போலீஸ் கமிஷனரவர்களே கண்டறிந்து சீர்திருத்தல் வேண்டும்.
எவ்வகையிலென்னில், எந்தக் கிராமத்தில் ஓர் மார்வாடி கடை வைக்கின்றானோ அவன் அக்கிராம போலீஸ் ஸ்டேஷனில் தன் பெயரையும், ஊரையும் பதிவு செய்வதுடன் தகுந்த ஓர் ஜாமீன் கொடுத்து கடையை வைக்கவேண்டியது.
மார்வாடி தான் கணக்குவைக்கும் புத்தகத்தை போலீஸ் ஆபீசரிடங் காண்பித்து அப்புத்தகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு அக்கணக்கு புத்தகத்திலேயே தன்னுடைய வரவு சிலவு கணக்குகளை பதிந்துவரவேண்டியது.
பொருள் வைத்துப் பணம் வாங்கிய ஏழைகள் வட்டியும், முதலும் கொண்டுவந்து கொடுத்த இரண்டொரு தினத்தில் நகையை செலுத்திவிட வேண்டியதென்னும் ஏற்பாட்டைக் கருணை தங்கிய கமிஷனரவர்கள் ஏற்படுத்திவைப்பாராயின் ஏழைக் குடிகள் யாவரும் ஈடேறி சுகம் பெறுவார்கள்.
- 3:35; பிப்ரவரி 9, 1910 -