அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/136-383
132. சென்னை முநிசபில் ஆபீஸ் சுதேசக் கமிஷனர்கள் குடிகள் மீது கண்ணோக்கம் வைத்தல் வேண்டும்
கண்ணோக்கம் வைப்பார்களோ வையார்களோ விளங்கவில்லை. காரணம், சுதேசிகளைக் கமிஷனர்களாக நியமிக்க வேண்டுமெனல் யாதெனில், கனந்தங்கிய ஆங்கிலேய துரைமக்களுக்கு சுதேசிகளின் சுபா அசுப காலங்களில் நடத்திவரும் காரியாதிகளும் காரியாதிகளுக்கடுத்த கால விவரங்களுந் தெரியாதாதலின் அந்தந்த டிவிஷன் சுதேசிகளில் ஒருவரைத் தெரிந்தெடுத்து அங்குள்ள சுதேசக் குடிகளின் குறைவு நிறைவுகளைக் கூட்டத்தில் எடுத்துப் பேசி அவர்களுக்கு வேண்டிய சுகாதாரங்களை செய்துவைப்பதும் மற்றும் வேண்டிய சுகாதாரங்களையும் ஆலோசித்து குறைக்கவேண்டிய விஷயங்களைக் குறைத்தும், பெருக்கவேண்டிய விஷயங்களைப் பெருக்கியும், சுகாதாரக் கூட்டத்தார் எடுத்த விஷயங்கள் சீர்பெறவும் அதனாற் குடிகளுக்கு சுகமும் ஆறுதலடையவும் நியமித்திருக்கின்றார்கள்.
அத்தகைய முநிசபில் கமிஷனராக நியமனம் பெறுவோரை குடிகளே முயன்று நியமிக்காது கமிஷனர்களாக ஏற்படுவோரே வீடுகடோரும் வாடகை வண்டிகளை வைத்துச் சென்று குடிகளை அழைத்துப் போய் என்பெயரை எழுதுங்கள் என்பெயரை எழுதுங்கோளெனத் தங்களுக்குத் தாங்களே தங்களை கமிஷனர்களாக நியமித்துக்கொள்ளுகின்றார்களன்றி குடிகளே முயன்று நியமிப்பதைக் காணோம்.
அங்ஙனம் தாங்களே தங்களை கமிஷனர்களாக நியமித்து கொள்ளுகிறபடியால் குடிகளின் குறைவு நிறைவுகளையும் வேண சுகங்களையும் விரும்பாது தங்கள் சுகங்களைமட்டிலும் பார்த்துக்கொண்டு போவதாக விளங்குகின்றது. குடிகளின் சுகத்தைக் கருதுவோர்களாயின் கமிஷனர்களாகத் தங்களை நியமித்துக்கொள்ள வேண்டுமென்று வண்டி கொணர்ந்து குடிகளை ஏற்றிச்சென்று கையெழுத்து வாங்கிய நாளில் கண்ட கமிஷனரை மற்றும் அந்த டிவிஷனில் கண்டிருப்பார்களா, இல்லையே.
அவர்கள் நியமனம் பெற்ற டிவிஷனில் அந்த வீட்டிற்கு வரியென்ன விதித்திருக்கின்றார், இந்த வீட்டிற்கு வரியென்ன விதித்திருக்கின்றார்களென்னும் விசாரிணையேனுமுண்டோ, அதுவுமில்லை. அந்த வீதிகளுக்கு விளக்கு என்னேரம் எரிகிறது, இந்த வீதிக்கு விளக்கு என்னேரம் எரிகிறதென்னும் பார்வையேனுமுண்டோ, அதுவுமில்லை. அந்த வீதிக்குத் தண்ணீர்க் குழாயுண்டா, தடையிராது நீர்வருத்துண்டா, நீர் சுத்தமுண்டாவென்னும் ஆராய்ச்சியேனுமுண்டா, அதுவுமில்லை. அந்த வீதியைப் பள்ளமேடு நீக்கி மநுக்களும், வண்டி குதிரைகளும் நடப்பதற்கு வசதி செய்துள்ளதா, குப்பைவண்டிகள் நிதம் சென்று சுத்தஞ்செய்துவருகின்றதா என்னும் பார்வையேனும் உண்டா, அதுவுமில்லை. அன்று கண்ட கமிஷனரை மறுவருடம் வரை காணாததினால் குடிகளின் சுகத்தைக் கருதாதவர்களென்றே விளங்குகின்றது.
சுதேசக் கமிஷனர்கள் சுதேசக் குடிகளுக்குள்ள சுபாசுபச் காலவரைகளையும் அதன் செயல்களையும் நோக்காது நடந்துவரும் அநுபவமே குடிகளை மனவருத்தத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது. அம்மனவருத்தங்களி லொன்றை இவ்விடம் விவரிக்கின்றோம். ஓர் குடியானவன் தனது சுபகாலத்தில் பந்தலிடுவதற்கு ஒரு நாளைய முகூர்த்தத்தைக் கண்டு 20 தாம் ஓர் நாளைக்கு ஒரு ரூபா லைசென்சு கட்டி உத்திரவு பெற்று வந்து 19உ பந்தலிட வராம்பித்தவுடன் ஓவர்சியர் வந்து 20உ ஒருநாள் பாஸ்தான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றது 19உயில் பந்தல் ஆரம்பிக்கப்படாதென்று கூறி இரண்டு ரூபா கட்டவேண்டுமென நோட்டீசு அனுப்பி பணம் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வகையாக வாங்கவேண்டிய சங்கதிகள் சுதேசக் கமிஷனர்களுக்குத் தெரிந்த விஷயமோ தெரியாத விஷயமோ விளங்கவில்லை. அவ்வகைத் தெரிந்திருக்குமாயின் கமிஷனர் வீட்டின் ஒருநாளைய முகூர்த்தத்திற்கு முகூர்த்த காரியம் நிறைவேற்றுங்கால் பந்தலும் போட்டுக்கொள்ளுவாரா, தாலிகட்டுங்கால் பந்தலும் போட்டுக்கொள்ளுவாரா, சேஷையிடுங்கால் பந்தலும் போட்டுக்கொண்டிருப்பாரா, பந்திபோசனம் அளிக்குங்கால் பந்தலும் போட்டுக்கொண்டிருப்பாரா, ஒருநாளைய முகூர்த்தமாயிருக்க முகூர்த்தநாளை முன்னிட்டு பந்தலிட ஆராம்பித்தநாளையுங் குறித்து கொள்ளுவதாயின் முகூர்த்தம் முடிந்த மறுநாள் பந்தல் பிரிக்கும் நாளையும் சேர்த்து மூன்றுநாளைய லைசென்சு கட்டவேண்டுமென்று ஓவர்சியர் ரிப்போர்ட்டு செய்துவிடுவாராயின் அவர் கூறுஞ்சட்டமே ஆதாரமாமன்றி சுதேசக் கமிஷனர்களின் விசாரிணையும் செயலுமில்லை போலும்.
சுதேசக் கமிஷனர்களின் செயலும் விசாரிணையும் குடிகண்மீதிருந்திருக்குமாயின் ஒருநாளைய முகூர்த்தத்திற்கு ஒரு ரூபா லைசென்சென்று பெற்றுக்கொண்டு முகூர்த்தத்திற்கு முன்னாள் பந்தலாரம்பிப்பதைக் கண்ட ஓவர்சியர் இரண்டுநாளைய லைசென்ஸ் கட்டவேண்டுமென்று ரிப்போர்ட்டு செய்யவும் அப்படியே செலுத்தவேண்டுமென்றும் அதனதிகாரிகள் கூறி வசூல் செய்து இருக்கமாட்டார்கள்.
இத்தகைய லைசென்சுகளுக்கும் அதன் ஆலோசனை முடிவுகளுக்கும் கமிஷனர்களின் கண்ணோக்கம் இருக்குமாயின் சுதேசிகளால் நிறைவேறும் சுபகாரியங்களில் பந்தல் போட ஆரம்பிக்கும் நாளை கண்டும் லைசென்ஸ் வாங்க வேண்டியதா அன்றேல் முகூர்த்தம் நடாத்தும் நாட்களுக்கு மட்டிலும் பாஸ்வாங்கவேண்டியதாவென்பதை விவரமாக் கண்டு விஷயங்களை நடாத்தச் செய்திருப்பார்கள்.
இது விஷயங்களில் கமிஷனர்களின் கண்ணோக்கமில்லாததால் முகூர்த்தநாளைக்கும் லைசென்ஸ் கட்டுவதுடன் பந்தலிட ஆரம்பிக்கும் நாளைக்கும் லைசென்ஸ் கட்டவேண்டுமென நோட்டீசு அநுப்புகின்றார்கள். சுதேசக் குடிகளின் கஷ்டநஷ்டங்களையும் குறைவு நிறைவுகளையும் கண்டறிந்து சீர்படுத்துவதற்கே சுதேச கமிஷனர்களை நியமித்தும் யாதொரு சுகாதாரமும் சுகமுமில்லாவிடின் இவர்களிருந்தும் குடிகளுக்கு சுகமில்லை, இல்லாமற் போயின் சுகக்கேடில்லை என விளங்குகிறபடியால் இனியேனும் கனந்தங்கிய சுதேச கமிஷனர்களவர்கள் குடிகள் மீது கருணை வைத்து அவர்கள் கஷ்ட, நஷ்டங்களை கண்ணோக்கி சுகாதாரமளிக்கவேண்டுமாய்க் கோருகிறோம்.
- 3:47; மே 4, 1910 -