அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/141-383
137. காலஞ்சென்ற ஏழாவது எட்வர்ட் இந்தியதேச சக்கிரவர்த்தியார் மாறா கியாபகக் குறிப்பு
தற்காலம் நமது இந்திய சோதிரர்கள் யாவரும் நமது காலஞ்சென்ற சக்கிரவர்த்தியார் மாறா கியாபக சின்ன (மிமோரியல்) ஒன்று அமைக்கவேண்டுமென்று கூட்டங்கள் கூடி பேசிவருவது இராஜவிசுவாசத்தை வளர்க்கத்தக்க அறிகுறிகளேயாம்.
அத்தகைய மிமோரியல் ஓர் கட்டிடமாயிருக்குமாயின், கட்டிடத்தைக் காணுவோருக்குமட்டிலும் சக்கிரவர்த்தியார் கியாபகந் தோன்றுமேயன்றி ஏனையவிடத்தில் மறைந்துபோம் அல்லது கைத்தொழில்சாலை அமைக்கினும், கல்விசாலையமைக்கினும் அவ்வாறேயாம். ஆதலின் நமது சின்டிகேட் மெம்பர்களாகும் கலாசாலை சீர்திருத்த சங்கத்தார் ஒன்றுகூடி ஏற்படுத்தும் இராஜவிசுவாச மிமோரியல் புத்தகமே இந்தியவாசிகள் சகலர் மனதிலும் பதிய நிலைக்கும். அதாவது பிரிட்டிஷ் இராஜாங்கத்தார் செய்துவரும் சுகாதாரங்களை விளக்கக்கூடிய இராஜவிசுவாச புத்தகம் ஒன்று இயற்றல் வேண்டும்.
புத்தகப்பெயர் : ஏழாவது எட்வர்ட், இந்திய சக்கிரவர்த்தியம் எழுதவேண்டிய குறிப்புகள்.
1-வது இந்தியதேசச் சீரையும், சிறப்பையும், செல்வத்தையும், ஒற்றுமெயையும் கெடுத்தவர்கள் யார்.
2. தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய் பொய்யாகிய சாதிக்கட்டுபாடுகளை ஏற்படுத்தி பிரஜாவிருத்தியின் அன்பையும், ஐக்கியத்தையும் கெடுத்துமன்றி கல்வி விஷயத்தையும் கைத்தொழில் விஷயத்தையும் பெருகவிடாமற் கெடுத்து தங்களுக்குள் அடக்கி ஆண்டுவந்தவர்கள் யார்.
3, அரசர்களுக்குக் குடிகள்மீது துற்போதனைகளைச் செய்து அவ்வார்த்தையை நம்பிய அரசன் தங்களுக்கு உதவிபுரிவானாயின் அவ்வுறத்தால் குடிகளைப் பாழடையச்செய்வதும் அவ்வரசன் உதவிபுரியாது விரட்டுவானாயின் அவ்வரசகுடும்பங்களுக்கே தீங்கை உண்டு செய்வதுமாகியச் செயல்களால் அரசர்களையும் குடிகளையும் கெடுத்து தாங்கள் சுயம்பெற்றால் போதுமென்றெண்ணித் துணிந்தவர்கள் யார் என்பதை தெள்ளற விளக்கி சிறுவர்களுக்குப் போதிக்கவும், அன்னோர் வார்த்தைகளை வீணே நம்பி தங்களை தாழ்ந்த சாதியாரென்றெண்ணி தங்களைத் தாங்களே சீரழித்துக்கொள்ளாமலும் சகல மனிதர்களைப்போல் தாங்களும் மனிதர்களென்னுந் திடங்கொண்டு சகல மனிதர்களும் முன்னேறி விருத்தி பெற்று சுகமடைந்திருப்பதுபோல் தாங்களும் சுகமடையக்கருதி வாழ்க்கைநலந்தரும் வழிகளை சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை உணர்ந்து சீர்பெறும் வழிகளை உணர்த்தி இராஜவிசுவாசத்தில் நிலைக்கும்படிச் செய்யும் நிலைகளை வரைந்திருத்தல் வேண்டும்.
இவ்வகையாய் இந்திய தேசத்தையும் இந்தியதேசக் குடிகளைபம் இந்தியதேசக் கல்வியையும், இந்தியதேசக் கைத்தொழிலையும், இந்திய ஒற்றுமெயையும், இந்தியதேச தனதான்ய விருத்திகளையும் கெடுத்து பாழ்படுத்தியவர்கள் யாவரென்பதை தெள்ளறவிளக்கி அன்னோர்முகத்தினும் விழிக்க விடாமற்செய்து, இந்திய தேசம் முன்போல் சீர்பெற்றதும் சீர்பெற்று வருவதும் இந்தியக்குடிகள் ஒருவருக்கொருவர் அன்புபாராட்டலும், ஐக்கியம் பெற்றுவருதலும் கல்விபெருக்குற்றுவருதலும், கனமடைந்துவருதலும் கைத்தொழில் விருத்திபெற்றுவருதலும், கவலையற்று வாழ்தலும் பிச்சைக்காரர் முதல் கனவான்கள்வரை வண்டி குதிரை ஏறச்செய்ததும் சுகவாழ்க்கைபெற விடுவதும், மேலுமேலும் இரயில்வேசுகம் பெறச்செய்வதும், கப்பல் சுகம் பெறச் செய்வதும், தபாலிலாக்கா சுகம் பெறச்செய்வதும், டெல்லகிராப் சுகம் பெறச்செய்வதும், நீர்பாய்ச்சல் சுகம்பெறச்செய்வதும், பூமிகளின் விருத்திபெறச் செய்வதும், வியாதியஸ்தர்களை ஆதரிக்கும் சாலைகளை வகுத்தலும், கள்ளர்களின் பயங்களை அகற்றிக் கர்த்தலும், சகலசாதியோரும் தன்னவரைப்போல் சுகம் பெற வேண்டுமென்று செய்வோரும், செய்து வருவோருமாகிய பிரிட்டிஷ் துரைத்தனத்தின் காருண்யச் செயல்களை விளக்கித்தெளிவாக எழுதி சிறுவர்கள் மனதிலும் பெரியோர்கள் மனதிலும் பதியவைத்து பிரிட்டிஷ் துரைத்தனத்தார் செய்நன்றி மறவாது இராஜ விசுவாசத்தில் நிலைக்கச் செய்து என்றும் ஒரேசீர்பெற்று நிலைக்க ஏழாவது எட்வர்ட் இந்திய சக்கிரவர்த்தியாரை கியாபிக்க செய்வரேல் கனந்தங்கிய ஏழாவது எட்வர்ட் இந்திய சக்கிரவர்த்தியார் கியாபகமும், இராஜவிசுவாசமும் என்றும் நிலைநிற்கும்.
“ஏழாவது எட்வர்ட் இந்திய சக்கிரவர்த்தியம்” எனும் புத்தகத்தை அச்சிட்டு நாலாவது ஸ்டான்டார்ட் வகுப்பிலிருந்து மெட்டிரிக்குலேஷன் வரையில் வாசிக்கக் கூடிய சகல பாஷையிலும் வரைந்து வாசிக்கச்செய்வதே இராஜ விசுவாசச் சிறந்த மிமோரியலாகும்.
- 3:51: சூன் 1, 1910 -