அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/146-383
142. ஐரோப்பாவில் வாழும் துரைமக்கள் தங்கள்பேரன்பால் வாதிடும் பெரும் வாது
அதாவது நமது இந்திரதேசத்திலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்றுள்ள இந்தியர்களிற் சிலர் பிரிட்டிஷ் ஆட்சியார் எங்களை அப்படியாளுகிறார்கள் இப்படியாளுகிறார்களென்று பலவகைக் கூறுவதுமன்றி, எங்களுக்கு அந்தஸ்தான உத்தியோகங்கள் கொடுக்கிறதில்லை, எங்களைக் கனமாகப் பாராட்டுவதில்லையென்று கூறு மொழிகள் யாவும் மெய்யென்று நம்பிக்கொண்ட ஐரோப்பியர்களிற் சிலர் தங்கள் கருணை மிகுதியால் இந்தியர்கள் மீதில் அன்பு பாராட்டி, தங்கள் சுயசாதி ஐரோப்பியர்களிடம் வாதிட்டு இந்தியர்களுக்கு சுகந்தேடுகிறார்கள். ஈதன்றோ தங்களைப்போல் பிறரை நேசிக்குங் குணம். ஈதன்றோ தங்களைப்போல் சகலருஞ் சுகமடையக் கருதுங் கருணை.
இத்தகையக் கருணையுள்ளோரிடஞ்சென்று இந்தியரைப்பற்றி முறையிடுகிறவர்களும் ஐரோப்பியரின் குணங்களை வகித்திருப்பார்களாயின் இவர்கள் முறைபாடு சகலமுங் கைக்கூடி சுகம் பெறுவார்கள். இவர்களுக்கோ அவர்களுக்குள்ள கருணை கிடையாது. அவர்களுக்கோ இந்தியர்களின் சாதி பொறாமெயும் சமயகோஷ்டமுந் தெரியாது.
தற்காலம் இந்தியர்களுக்காகப் பரிந்து பேசும் ஐரோப்பியர்கள் இந்தியாவில் சாதித்தலைவர்களென்று பெயர் வைத்துக் கொண்டுள்ளவர்கள் மட்டிலும் சுகம்பெறல்வேண்டும் தங்களால் தாழ்ந்தசாதிகளென்று அழைக்கப் பெற்றவர்கள் என்றுந் தலையெடுக்கப்படாதென்று செய்து வருங் கொடூரச் செயல்களையும் இவர்களது வஞ்சகக் குணங்களையும் நேரில் கண்டறிவார்களாயின் அன்பும் சீவகாருண்யமும் அற்ற மூதேவிகள் முகத்திலும் விழிக்கப் போகாவென்று திருப்பிக்கொள்ளுவார்கள். இந்தியாவிலுள்ள சாதிக் கொடூரச் செயலால் அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகள் அல்லல்பட்டழிவதைக் கண்ணாரக் கண்டுவிடுவார்களாயின் இந்தியருக்குள் பெரிய உத்தியோகங்கள் கொடுக்கப்படாது என்றே வாதிடுவார்களன்றி கொடுக்கலாமென்னும் பரிதாபம் என்றுங் கொள்ளமாட்டார்கள். ஆதலின் நமது கருணைதங்கிய இந்திய கவர்ன்மென்றார் தங்களாளுகையிலுள்ள சாதித்தலைவர்கள் தந்திர சுகங்களையும் அவர்களால் தாழ்ந்த சாதிகளென்று வகுக்கப் பெற்றோர் படுங் கஷ்டங்களையும் ஐரோப்பாவிலுள்ள துரைமக்களுக்கு விளக்கிக் காட்டுவார்களாயின் அவர்களுக்குத் தெளிவுபெறும். ஏழைகளின் விருத்திக்கு ஓர் வழி உண்டாகும்.
- 4:5; சூன் 13, 1910 -