அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/156-383
152. வித்தியாவிருத்தி சாலைகள் விசேஷமுண்டா வேஷவிருத்தி சாலைகள் விசேஷமுண்டா
வித்தியாவிருத்தி சாலைகளாவன - காகிதங்கள் செய்யும் சாலைகளும், பென்சல்கள் செய்யும் சாலைகளும், மைகள் செய்யும் சாலைகளும், இரப்பர்கள் செய்யும் சாலைகளும், பிஸ்கட்டுகள் செய்யும் சாலைகளும், மாச்சிஸ்கள் செய்யும் சாலைகளும், வஸ்திரங்கள் செய்யும் சாலைகளும், தானியங்களை விருத்திசெய்யும் சாலைகளும், இரும்புக்கருவி சாலைகளும், தகரக் கருவி சாலைகளும், நகரக்கருவி சாலைகளும், பொன்சுரங்கச் சாலைகளும், இரத்தின சுரங்கச் சாலைகளும், மரக்கருவி சாலைகளும், மண்ணெய் சுரங்க சாலைகளும், பசும்பால் சுரங்கச்சாலைகளும், பசுநெய் சுரங்கச் சாலைகளும், கனிரச விருத்தி சாலைகளும் மற்றுமுள்ளவைகளேயாம். இத்தகைய சாலைகளையே வித்தியாவிருத்தி பிரஜா விருத்தி, தேசோ விருத்தி, சுக விருத்தி இவற்றிற்கு மூலமென்று கூறப்படும்.
அந்தந்த தேசத்திலுள்ள விவேகவிருத்தி பெற்ற மக்கள் ஒவ்வொரு வரும் தங்களிடம் சொற்ப திரவியமிருப்பினும் அவற்றை மேலுமேலும் விருத்தி செய்யும் பொருட்டு அவரவர்கள் விருத்திக்கு எட்டியப் பொருட்களைக் கொண்டு சாலைகளை நிருமித்து அந்தந்தத் தொழிலாளர்களைச் சேர்த்து அதனதன் விருத்தி முயற்சியினின்று எடுத்தகாரியத்தை தொடுத்து முடித்துத் தாங்கட் குபேர சம்பத்தை அடைவதுடன் தங்களை அடுத்தவர்களையும் குபேர சம்பத்துடையவர்களாகச் செய்து வருகின்றார்கள்.
தெய்வத்தால் ஆகாது தங்கடங்கள் முயற்சியாலாகுமென முயன்று செய்துவரும் தங்களது இடைவிடா சாதனத்தால் புகைக் கப்பல், புகை ரதம், ஆகாய ரதம், டெல்லகிராப், போனகிராப், லெத்த கிராப், டிராம்வே, போட்டோகிராப் மற்றும் அரிய வித்தைகளையும் கண்டுபிடித்து அதற்கு சாலைகளும் வகுத்து அந்தந்த வித்தைகளைப் பெருக்கிவருந் தங்கடங்கள் முயற்சியால் சென்றவிடமெல்லாம் சிறப்புற்று அத்தேசத்தோரையும் தேசத்தையும் சிறப்புப்பெறச் செய்துவருகின்றார்கள்.
நமது தேசத்தோர் இத்தகைய வித்தியாவிருத்திசாலைகளிலும், வித்தியாவிருத்தியிலும் தங்கள் விவேகத்தைப் பெருக்காமல் பெரியசாதி, பெரியசாதி யெனப் பொய்யைச்சொல்லிக்கொண்டு எந்த வித்தையில் பெரியசாதி, எவ்விருத்தி போதனையிற் பெரியசாதி, எத்தகைய சீர்திருத்தத்தில் பெரியசாதி, எவ்வகை அறிவு விருத்தி போதனையிற் பெரியசாதி, எவ்வகை நியாயபோதத்திற் பெரியசாதியென்னும் ஆதாரமுமற்று சிறப்புமற்று பஞ்சபாதகர்களாகும் பொய்யரெல்லாம் பெரியசாதி, குடியரெல்லாம் பெரியசாதி, கள்ளரெல்லாம் பெரியசாதி, விபச்சாரர்களெல்லாம் பெரியசாதி, கொலைஞரெல்லாம் பெரியசாதியென்னும் பட்டப்பெயர்களை வகுத்துக்கொண்டு பெரியசாதிகளென்னும் பெயரைப் பொருந்தும் பெரிய சாதனங்கள் ஏதொன்றுமின்றி வாசஞ்செய்வோர் வேஷவிருத்திசாலைகளும் அதனதன் விருத்திகேடும் யாதெனில்:-
சைவசமய திருப்பணி விருத்திசாலை, மனுஷ சகாயமற்ற வேலுமயிலுந்துணை விருத்திசாலை, பேயாழ்வார் விருத்திசாலை, பெரியாழ்வார் விருத்தி சாலை, எல்லாப் பொருட்களு மித்தையென்று கூறி அவரவர்கள் பொருட்களைப் பரிக்கும் வேதாந்த விருத்திசாலை, எல்லாம் பிரமமயமென்றுகூறி அன்னியதாரத்தைப் பெண்டாளும் அத்துவித விருத்திசாலை, மற்றுஞ் சாலைகளை வகுத்துக்கொண்டு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு கடலை சுண்டலும் காடைவிளக்குமிட்டு நித்திரையுங்கெட்டு, நாளுக்குநாள் புசிப்பும் அடையாமற் பட்டு தன்னை அடுத்தவர்களையும் நடுத்தெருவில் விட்டு நாளுக்குநாள் தங்களுக்குத் தாங்களே அழிந்துபோகும் வேஷச்சாதனைகளை விருத்திசெய்துக்கொண்டு பொய்ப் போதகங்களைப் புலன் கெடக் கூறிவருகின்றபடியால் விவேகமிகுத்தோர் வைத்தாளும் வித்தியா விருத்திசாலைகளும், வித்தியா போதகர்களுமாகிய ஆங்கிலேயர்களைப் போல் சகல வித்தியாவிருத்தியும், சகல சுகவிருத்தியும் பெறாமற் பாழடைந்து தெய்வத்தாலாகும் தெய்வத்தாலாகுமென்னுங் கடைச் சோம்பேறிகளாய் வேஷச்சாலைகளை வகுத்து ஆசைச்சாமிகளையாக்கி வீண்செலவும், வீண்கூத்து ஆடிவரும் வரையில் தேசத்தோர் சீர்பெறப்போகிறதுமில்லை, தேசம் சிறப்படைவதுமில்லை என்பது திண்ணம் திண்ணமேயாம்.
- 4:13; செப்டம்பர் 7, 1910 -