அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/164-383
160. வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டுகள்
தற்காலம் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோரால் கிராமங்கள் தோரும் ஒவ்வோர் மாஜிஸ்டிரேட்டுகளை நியமித்து காரியாதிகளை நடத்தலாமோவென்று யோசிப்பதாக விளங்குகின்றது.
இத்தகைய யோசனை வட இந்தியாவில் நடத்துவதாயின் நீதியாக நடைபெறும். அதாவது, அவ்விடத்தில் சாதிபேத அதிகரிப்பில்லாத படியினாலேயாம். இத்தென்னிந்தியாவிலோ நாளுக்குநாள் சாதிகள் அதிகரித்து சாதிபேதமில்லாதோரைப் பல்வகையாலும் இம்சித்துவருகின்றார்கள். அவ்வகை இம்சைபுரிவோர் கையில் கிராமங்கள் தோரும் மாஜிஸ்டிரேட் அதிகாரங்களையுங் கொடுத்து அவர்கள் தெண்டிக்குத் தீர்ப்புக்கு அபீலுமில்லையென்று கூறுவதாயின், அதற்காலம் ஒவ்வோர் கிராமங்களிலுந் தப்பித்தவறி வாசஞ்செய்துள்ள சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் முற்றும் ஒழிந்துபோவதற்கு யாதொரு தடையுமிராது. காரணம், சாதிபேதமில்லார்மீது சாதிபேதமுள்ளவர்களுக்குள்ள பூர்வ விரோதமேயாம்.
பூர்வ விரோதத்தால் நசிந்து பாழடைந்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கருணா நோக்கத்தாலும் நீதியின் பரிபாலனத்தினாலும் சற்றுதலையெடுத்து சிற்சிலர் சொற்ப பூமிகளும் பெற்று உழுது பயிரிட்டு சீவித்துவருகின்றார்கள். இத்தகைய காலத்தில் இவ்வகையான அதிகாரம் கிராமங்களில் ஏற்படுமாயின் கிஞ்சித்து தலையெடுத்துவரும் சாதிபேதமற்றக் குடிகள் யாவரும் ஒழிந்து போகவேண்டியதேயாகும். கிஞ்சித்திய பிரிட்டிஷ் ஆட்சியரின் கண்ணோக்கமும் அவர்களது மேல்விசாரணையுமிருக்கும்போதே கிராமத்தைவிட்டுக் குடியோடிவிடும்படி யானவர்கள் வில்லேஜ் மாஜிஸ்டிரேட் தீர்ப்பிற்கு அபீலில்லையென்னும் துரைத்தன மேல்விசாரணையில்லையாயின் ஏழைக் குடிகளின்மீது அவர்கள் வைத்ததே சட்டம், இட்டதே பிச்சையாக நேர்ந்து உழைப்பாளிக்குடிகள் யாவரும் ஊரைவிட்டோடிப்போவதுடன் பூமிகளும் பாழடைந்து தானியங்களும் விளைவு குன்றி தேசங்களும் பாழடைந்துபோம். அதனால் ராஜாங்கத்தோருக்கு ஆறுதலில்லாமற்போம். ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் ஏழைக்குடிகளின்மீது இதக்கம் வைத்து கிராமங்களில் தற்காலம் உண்டாகிவரும், சிற்சில இடுக்கங்களும் இவர்களைவிட்டு அகலத்தக்க ஏதுக்களைச் செய்துவைக்கும்படி வேண்டுகிறோம்.
சிலகாலங்களுக்கு முன்பு தாசில்தாரர்களுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுத்திருந்தகாலத்தில் கிராமக்குடிகள் யாவரும் அவர்களால் என்னென்ன துன்பங்களை அநுபவித்துவந்தார்களென்பதும் தாசில்தாரர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தைப் பிரித்து விட்டவுடன் குடிகள் என்னென்ன சுகத்தில் நிலைத்திருக்கின்றார்களென்பதும் சகலருக்கும் தெரிந்தவிஷயமேயாம்.
அதனினும் சாதிபேதமில்லாக் குடிகள் சாதிபேதமுள்ள அதிகார உத்தியோகஸ்தர்களால் முன்பு நேர்ந்திருந்த கஷ்டங்களும், தாசில்தாரரை வேறாகவும் மாஜிஸ்டிரேட்டை வேறாகவும் பிரித்ததினாலுண்டாகிவந்த சிற்சில சுகங்களும் அவ்வாறேயாம்.
இவைகள் யாவையும் நாளுக்குநாள் கண்ணுற்றும் விசாரிணைப்புரிந்தும் நீதியளித்தும் வந்த ராஜாங்கத்தார் கிராமங்கடோறும் வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டுகளை வைக்க உத்தேசிப்பது சாதிபேதமற்ற ஏழைக்குடிகளின் தௌர்பாக்கிய காலமென்றே எண்ணவேண்டியதாயிருக்கின்றது.
இத்தகைய துர்பாக்கியத்தை ஏழைகளுக்கு உண்டு செய்யும் வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டென்னும் நியமனங்களையே அகற்றி தற்காலம் நிறைவேறிவரும் கிராம உத்தியோகஸ்தர்களையே செவ்வை நடையில் திருத்தி கிராமக்குடிகளின் விருத்திகளையும் விவசாய விருத்திகளையும் செவ்வை பெறச்செய்ய வேண்டுகிறோம்.
வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டுகளை கிராமங்கள் தோரும் ஏற்படுத்துவதாயின் அவ்உத்தியோகத்தை பெரும்பாலும் சாதித்தலைவர்களே ஒப்புக்கொள்ளுவார்கள், அதினால் சாதிபேதமுள்ளவர்கள் யாவருக்கும் சுகமும், சாதிபேதமில்லாத மற்றவர்களுக்கு அசுகமுமேயாம்.
கிராமம் ஒன்றுக்கு ஒரு வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டை நியமிப்பதாயின் அக்கிராமத்தில் வாழும் ஏழைக்குடிகள் யாவரும் அவருக்கு அடிமைகளென்றே சொல்லவேண்டும். அவனைப்பிடித்துக் கட்டுங்கோள், இவனைப்பிடித்து அடியுங்கோ ளென்றவுடன் அவர்களவர் வாக்கை நிறைவேற்றியே தீரல்வேண்டும். அங்ஙனம் அவர்கள் செய்யாவிடில் அக்குடிகள் அத்தநாசமுற்று அக்கிராமத்தைவிட்டோட வேண்டியதேயாகும். அதிகார பயமே ஏழைக்குடிகளை அலட்டிவைக்கும். இத்தகைய வில்லேஜ் மாஜிஸ்டிரேட் அதிகார உத்தியோகம் கிராமங்கடோரும் நிறைவேறிவிடுமாயின் அவர்கள் என்னென்ன செய்யக்கூடுமோ அவற்றைப் பதுங்கிக்கொண்டே செய்து விடுவார்கள் சிலகாலங்களுக்குமுன் கனந்தங்கிய (காரஸ்டன்) துரையவர்களை செய்துள்ள அக்கிரமம் இத்தகைய அதிகார உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கென்றே சொல்லவேண்டும்.
கிராம அதிகாரிகளின் அக்கிரமங்களை இராஜாங்கத்தோர் தெரிந்துகொள்ளவேண்டுமாயின் கருணை தங்கிய மிஷநெரி பாதிரி துரைமக்களைத் தருவித்து விசாரிக்கின் கிராம் அதிகார உத்தியோகஸ்தர் வாக்குக்கு ஏழைக்குடிகள் எவ்விகையிலடங்கி நடக்கவேண்டியவர்களாயிருக்கின்றார்கள் என்பது தெள்ளற விளங்கும். ஆதலின் நீதியும் நெறியும் கருணையுமமைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் தற்காலம் கிராம உத்தியோகஸ்தர்களுக்குக் கொடுத்துள்ள சொற்ப அதிகாரங்களையும் எடுத்துவிடவேண்டியதே விவசாயவிருத்திக்கு சுகமாகும். காரணமோவென்னில், பூமியை உழுது பண்படுத்தி விவசாயத்தை விருத்தி செய்வோர் சாதிபேதமற்ற ஏழைக்குடிகளேயாகும். அவர்களே பூமியில் கஷ்டப்படும் உழைப்பாளிகளுமாவர். அத்தகைய உழைப்பாளிகளுக்கோர் இடுக்கங்களும் நேராது கார்க்கும்படி வேண்டுகிறோம்.
- 4:19: அக்டோபர் 19, 1910 -