அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/166-383
162. திருவனந்தபுர மகாராஜாவும் தேசம்விட்டகற்றிய பத்திராதிபரும்
திருவனந்தபுரத்தில் சுதேசாபிமானியெனும் பத்திரிகையை நடத்திவந்த பத்திராதிபரை யாதொரு விசாரிணையுமின்றி தேசப்பிரஷ்டம் செய்து விட்டார்களென்றும், மகாராஜா யாதொரு விசாரிணையுமில்லாமல் இவ்வகை செய்யலாமோவென்றும் பல பத்திரிகைகள் பேசுவது வீண் பேச்சாக விளங்குகிறதன்றி நியாயவாதம் ஒன்றும் விளங்குவதைக் காணோம்.
இத்தேசத்துப் பூர்வ இந்து அரசர்கள் நடாத்திவந்த ராஜரீகத்தில் ஒருவன் சொற்ப தப்பிதம் செய்தானென்று கேழ்விப்பட்டவுடன் யாதொரு விசாரிணையுமின்றி அவனை மார்கால், மார்கை வாங்கிவிடவேண்டுமென்றும், வசியில் ஏற்றிவிடவேண்டுமென்றும், கழுவில் மாட்டிவிடவேண்டுமென்றும், இயந்திரங்களில் ஆட்டிவிட வேண்டுமென்றும் செய்து வந்ததாகக் கூறுகின்றார்களே அத்தகைய அவநீதம் ஏதேனும் செய்துளரா.
மகமதியர் துரைத்தனத்தில் அரசனே வாளேந்தி வெளி தோன்றி குடிகளைநோக்கி உங்களுக்குக் கொரான் வேண்டுமா, தல்வார் வேண்டுமா என்னும் அரசன் மனங்கெண்டநீதி செலுத்தியுளரா இல்லையே.
அத்தேசத்திலப்பத்திரிகையை நடாத்திய இவர் இராஜாங்க உத்தியோகஸ்தர்களையும், மற்றுமுள்ளோரையும் குறைக்கூறி எழுதிவந்ததாக வதந்தி. அத்தகைய நீதி வழுவால் பத்திரிகையை நடாத்திய விஷயம் சகலருக்கும் பிரியமற்றிருக்க, மற்றும் பத்திரிகைகள் அவற்றை உணராது அரசர் மீது ஆயாசப்படுவது வீண் கூச்சலேயாம்.
மகாராஜா அவர்கள் நீதியும், நெறியும், அன்பும் பாராட்டி அப்பத்திராதிபரை தன்தேசம்விட்டுப் புறதேசம் அனுப்பிவிட்டதே கருணை நிறைந்த செயலென்று கூறல் வேண்டும். காரணமோவென்னில், அரசன் அப்பத்திராதிபரை விசாரிணைக்குக் கொண்டுவந்து தூஷணைக்குத் தக்க தெண்டனையை விதித்துவிட்டிருப்பாராயின் பத்திராதிபரின் பாடு பெரும் பாடாகவே முடிந்திருக்கும். அரசர் தன்னுடைய பெரும் உத்தியோகஸ்தர்களையும், குடிகளையும் சுட்டி தூஷித்து யெழுதிவந்த சங்கதிகள் யாவையும் பொருத்து தேசத்தைவிட்டப்புறப்படுத்தியதானச் செயலுக்கு மற்றயப் பத்திராதிபர்கள் யாவரும் அவருக்கு நன்றியறிந்த வந்தனஞ் செலுத்தல்வேண்டும்.
அங்ஙனம் அவரது கருணைச் செயலைக் கண்டுணராது குறைகூறுவது வீணேயாம். குடிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நேருங்குறைகள் அரசரைச் சார்ந்ததாதலின் குடிகளையுந் தனது அங்கத்தினரையும் குறைக்கூறி தூஷிக்கும் பத்திரிகையைத் தடுத்துவிட்டதுமன்றி அப்பத்திராதிபரையும் தேசத்தைவிட்டு அப்புறப்படுத்திவிட்டார். அதனினும் தற்காலம் அத்தேசத்து மந்திரியாயிருந்து ராஜாங்ககாரியாதிகளை நடாத்துகின்றவர் மிக்க மதியூகியென்றும், நீதியும் நெறியும் அமைந்த விசாரிணைப்புருஷரென்றும், தேச சீர்திருத்த நிபுணரென்றும் சொல்லுகின்றார்கள். அத்தகையோர்காலத்தில் ஓர் பத்திராதிபரை தேசத்தைவிட்டு வீணே அகற்றிவிட்டார்களென்று கூறுவது வீண்மொழியேயாகும். ஆதலின் மற்றைய பத்திராதிபர்கள் அரசர்மீது ஆயாசம் வையாது அவரது கருணைமிகுத்தச் செயலுக்கு ஆனந்திக்கும்படி வேண்டுகிறோம்.
- 4:20; அக்டோபர் 18, 1910 -