அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/170-383
166. இந்தியதேச முழுவதும் அன்பினாலும் அதி யூகத்தாலும் ஆளும் வல்லபம் பிரிட்டீஷாருக் குரியதேயன்றி ஏனையோர்க்கு ஆகாவாம்
காரணமோவென்னில் அவர்கள் எத்தேசத்திற்குச் சென்றபோதினும் தங்களைப்போல் ஏனைய மக்களையும் மங்குலத்தோர் என்றெண்ணி அவர்களுக்கு நேரிட்ட ஆபத்தை தங்களுக்கு நேரிட்டதைப்போல் முயன்று காக்கும் அன்பின் மிகுதியேயாம்.
இரண்டாவது, அவர்கள் செல்லும் தேசங்களிலெல்லாம் தாங்கள் சுகத்தை அநுபவிப்பதுபோல ஏனைய மநுமக்களும் அநுபவிக்கவேண்டிய அதியூகத்தால் இரயில்வே சுகம், டிராம்பே சுகம், தபாலாபீசுகளின் சுகம், தந்தியாபீசுகளின் சுகம், ஒரு தேசத்தில் பஞ்சம் பீடித்தால் மறுதேசத்தைக்கொண்டு ஆதரிக்கும் சுகம், புருஷவைத்திய சாலைகளின் சுகம், இஸ்திரீ வைத்திய சாலைகளின் சுகம், ஒரு தேசத்திலில்லா சரக்குகளை மறுதேசத்தினின்று கொண்டுவரக்கூடிய சுகம், நடமாடும் பாதைகளின் ககம், இரவில் உலாவவேண்டிய தீப சுகம், குடிகளுக்கு ஓராபத்துவராது காக்கக்கூடிய போலீசு சுகம், பொய்யர்களையும் கள்ளர்களையும் குடியர்களையும் தீயர்களையும் கொலைஞர்களையும் அடக்கக்கூடிய நியாயஸ்தல சுகம், சகல மநுமக்களும் வண்டி குதிரைகளி லேறிச் செல்லும் சுகம், சகல மநுமக்களும் பேதமின்றி தண்ணீர் மொண்டு அருந்தும் சுகம், பூமிகளை விருத்திச் செய்யும் நீர்ப்பாய்ச்சல்களின் சுகம், தூர தேச கப்பல் யாத்திரை சுகம், காட்டு மிருகாதிகளின் உபத்திரவங்களை நீக்சி ஆதரிக்கும் சுகம், மற்றும் சுகங்களையும் அளித்து சகல மநுமக்களையும் ஆடை சுகம் ஆடாரண சுகம், புசிப்பின் சுகத்திலிருத்தி ஆதரித்து வருகின்றார்கள். இத்தியாதி பேரானந்த சுகங்களை அளித்துவருவதுடன் சகல ஏழை மக்களுக்குத் தங்கள் தங்கள் குடும்பசகிதராய் சுகச்சீர்பெற்று நல்வாழ்க்கை அடைந்துவரும் மற்றொரு சுகத்தையும் காணலாம். அதாவது பிரிட்டிஷ் ஆட்சியாராகும் துரைமக்களில் ஒருவர் ஐன்னூறு ரூபாய் சம்பளத்தில் இவ்விடம் வருவாராயின், அவர் குடியிருக்கும் வீட்டிற்குடையவன் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமடைகின்றான். உரொட்டிக்காரன் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமடைகின்றான். பால்காரன் பெண்சாதி பிள்ளைகளுடன் ககமடைகின்றான். தோட்டக்காரர் பெண்சாதி பிள்ளைகளுடன், சுகமடைகின்றார்கள். மற்றும் அனந்த வியாபாரிகள் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமடைகின்றார்கள். ஆங்கிலேய அரண்மனையின் தலைமெயுத்தியோகஸ்தன் தன் பெண்சாதிபிள்ளைகளுடன் சுகமடைகின்றான். துவிபாஷிபெண்சாதி பிள்ளைகளுடன் சுகமடைகின்றான். மேட்டி பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமடைகின்றான். ஆயாட்களென்னும் தோழிப்பெண்கள் தங்கள் பந்துக்களுடன் சுகமடைகின்றார்கள். சுயம்பாகி தங்கட் பெண்டு பிள்ளைகளுடன் சுகமடைகின்றார்கள். இரத சாரதி பெண்டு பிள்ளைகளுடன் சுகமடைகின்றான். பரியாளன் பெண்டு பிள்ளைகளுடன் சுகமடைகின்றான். குப்பை நீக்குவோன் பெண்டு பிள்ளைகளுடன் சுகமடைகின்றான். வண்ணான் பெண்டுபிள்ளைகளுடன் சுகமடைகின்றான். அம்மட்டன் பெண்டு பிள்ளைகளுடன் சுகமடைகின்றான். ஓர் துரைமகனால் இத்தியாதி குடும்பங்கள் சீருஞ்சிறப்புமடைவதாயின் மற்றும் பத்து துரைமக்களால் எத்தனை குடும்பங்கள் சீருஞ் சிறப்பும் பெற்றுவருகிறதென்பதை உய்த்துணர்ந்து பார்ப்போமாயின் இத்தேசத்தில் நாமடைந்துள்ள சீருஞ் சிறப்புகள் யாவும் ஆங்கில துரைமக்களின் அன்பின் மிகுதியும் அதியூகச் செயல்களென்றே விளங்குவதினால் இந்திய தேசத்தை ஆளுவதற்கும், இத்தேசக் குடிகளை பாரபட்சமின்றி ஆதரிப்பதற்கும் உரியவர்கள் அவர்களேயன்றி வேறொருவராலும் இத்தேசஞ் சீருஞ்சிறப்பும் அடையாதென்பதை அநுபவத்தால் உணர்ந்து இத்தேசத்தை ஆளும் வல்லபம் பிரிட்டீஷார் ஒருவருக்குரியதென்றே துணிந்து கூறியுள்ளோம்.
இத்தேசத்திற்கு தற்காலம் நேரிட்டுள்ள சுகச்சீர்கள் யாவையுங்கண்டு இதற்கு மூலகாரணங்கள் யாரென்று ஒவ்வொருவரும் சிந்திப்பார்களாயின் சுதேசியம், சுதேசியமென்னு மொழியை அன்றே மறந்து பிரிட்டீஷ் ஆட்சியே இங்கு நிலைக்க வேண்டுமென்று வருந்துவார்கள். அங்ஙனம் உணராது “பிள்ளையையுங் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல” ஆட்டும் வஞ்சகர்களின் வார்த்தைகளை நம்பி கருணை நிறைந்த ராஜாங்கத்தை விரோதிப்பதாயின் தற்காலம் அடைந்துவரும் கிஞ்சித்திய சுகமுமற்று பாழடைய வேண்டியதாகும்.
தங்களொரு குடிசீரடைவதற்காக நூறு குடிகளைப் பாழ்படுத்தும் வஞ்சகர்களின் வார்த்தைகளை நம்பி சுதேசியமெனு மொழியைக் கனவிலும் நினையாதிருக்க வேண்டுகிறோம். சகல பாஷைக்காரர்களும் சுகவிருத்திப் பெறவேண்டியதாயின் பிரிட்டிஷ் ஆட்சியே மேலாயதென்றுணர்ந்து அவர்களது இராஜரீகத்தில் விசுவாசத்தையும், அன்பையும் வளர்த்தல் வேண்டும். அத்தகைய வளர்ச்சியே சகல சுகமும் தருமென்பது துணிபு.
- 4:21; நவம்பர் 2. 1910 -