அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/205-383

201. ஐரோப்பியர்களுடன் இந்துக்கள் என்போர் ஒத்துவாழ்வார்களோ

அரிது, அரிதேயாம். காரணமோவென்னில் இந்துக்களென்று சொல்லிக் கொள்ளும்படியானக் கூட்டத்தோர்களே ஒருவருக்கொருவர் ஒத்து வாழ்க்கைப்பெறாத சத்துருக்களாயிருக்கும்போது ஆயிரம் மயிலுக்கப்புறமிருந்துவந்துள்ள ஐரோப்பியருடன் ஒத்துவாழ்வார்களோ, ஒருக்காலும் வாழ்கமாட்டார்கள்.

ஆரியவர்த்தத்திலிருந்துவந்த கூட்டத்தோருள் சிலர் இந்திய தேசத்திலும் சிலர் ஐரோப்பாதேசத்திலுங் குடியேறியுள்ளவர்களாதலின் இவ்விருவரும் சிலகால் ஒத்துவாழினும் வாழ்வார்களென்று கூறுவாருமுண்டு. அக்கூறுபாடு பொய்க் கூறுபாடேயாம். ஐரோப்பாவிற்குச் சென்று குடியேறியவர்களும் ஆரியர்கள். இந்தியாவுக்கு வந்து குடியிறங்கியவர்களும் ஆரியர்களே என்பார்களாயின் இந்திய தேசத்தை இராமன் ஆண்டாலென்ன இலட்சுமணன் ஆண்டாலென்னவென்று இருப்பாரன்றோ. அங்ஙனமிராது ஐரோப்பியராளும் இராட்சியத்தை எங்களிடம் ஒப்பிவிக்கவேண்டுமென்பவர்கள் யார்.

இந்தியாவில் வந்துக் குடியிறங்கியவர்களும் ஆரியர்கள். ஐரோப்பாவிற்குக் குடியேறியவர்களும் ஆரியர்களென்பார்களாயின் இவர்களுக்கு மட்டிலும் பிரம்மாவின் முகத்திற் பிறந்தவர்களென்னுங் கதையிருக்க அவர்களுக்கு அக்கதையில்லாதக் காரணமென்னை. இவர்களுக்கு மட்டிலும் மனுசாஸ்திரம் என்னும் ஓர் சாஸ்திரமிருக்க அவர்களுக்கு அச்சாஸ்திரமில்லாதகாரணமென்ன. இவர்களுக்குமட்டிலும் பெரியசாதி பிராமணர்களென்னும் பெயர்களிருக்க அவர்களுக்குள் அப்பெரியசாதி பிராமணர்களென்னும் பெயர்களில்லாத காரணமென்னை. இவர்களிடத்தில் சாதிகர்வத்தையே பெரிதென்றெண்ணி சாதிக்குங்குணங்களிருக்க அத்தகைய சாதிகர்வமே அவர்களுக்கில்லாத காரணமென்னை. இவர்களுக்குள்ள மதகர்வத்தால் பௌத்தர்களை அழிப்பதற்கு சங்கராச்சாரி அவதாரம், சடகோப அவதாரம், சுந்திரமூர்த்தி அவதாரம், சுரக்காய் அவதாரங்களெல்லாம் இந்தவாரியர்களிடத்திலேயே அவதரித்திருக்க அவ்விடஞ்சென்ற ஆரியரிடத்துள் யாவரும் யாதோர் அவதாரமும் எடுக்காத காரணமென்னை.

இவர்களுடைய ஒப்பனை யாதிலும் ஒவ்வாதாயினும் அவர்களுடைய ஒப்பனையிலேனும் ஒவ்வுகின்றதா என்றாராய்வோமாக அவர்களோ ஆயிர வருடங்களுக்கு மேற்பட இராட்சியபாரத் தாங்கி பலதேச அரசர்களை வென்று பராக்கிரமத்துடன் சுகசீவனஞ் செய்துவருகின்றார்கள். இவர்களோ பராக்கிரமமற்ற இரக்கும் சீவனமே இயல்பாகக் கொண்டுள்ளார்கள். அவர்களோ நீராவி மரக்கல வித்தை, இரயில்வே வித்தை, ஆகாயரத வித்தை, டெல்லகிராப் வித்தை, பொட்டகிராப்வித்தை போலாகிராப் வித்தை, மோனகிராப் வித்தை, லெத்தகிராப் வித்தை மற்றும் அரிய வித்தைகளைக் கண்டுபிடித்து தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் சுகவாழ்க்கையைப் பெற்றதுடன் தங்களை அடுத்த அன்னியதேசத்தோரையும் அவ்வித்தைகளைக் கற்று சுகம்பெறச் செய்துவருகின்றார்கள்.

இவர்களோ அவர்கள் வித்தைகளுக்கு முற்று மாறாக குடிமி வளர்ப்பதோர் வித்தை, பூனூலை காதிற் சுருட்டி வைத்துக் கொள்ளுவதோர் வித்தை, பல்லுகுச்சு பதம்பார்த்து விளக்குவதோர் வித்தை, அவர்கள் கம்பளி நூல்போட்டுக்கொள்ள வேண்டும் தாங்கள் பருத்தி நூல்போட்டுக்கொள்ள வேண்டுமென்பதோர் வித்தை, ஆற்றிலிரங்கி அரைமணி நேரம் மந்திரம் பண்ணுவதோர்வித்தை, சூத்திரனுக்கு வேதம் போதிக்கப்படாதென்பதோர் வித்தை, சூத்திரனைக் கண்டால் சோறு தின்னலாகாதென்பதோர் வித்தை, பறையனைக் கண்டால் மட்டிலும் பரிதாபமில்லாமற் கொல்லாமற் கொல்ல வேண்டுமென்பதோர் வித்தை, அமாவாசியிற் பணம் வாங்குவதோர் வித்தை, ஆவணியவிட்டத்தில் பணம் வாங்குவதோர் வித்தை, கல்லுசாமிக்கும் மண்ணுசாமிக்கும் சத்துண்டாக்குவதோர் வித்தை, நோவாது நோன்புபணம் வாங்குவதோர் வித்தை, பிறவிபோக்குங் கருமாதி பணம் வாங்குவதோர் வித்தை இத்தியாதி வித்தைகளின் பலனை எப்போதறிவதென்னில் செத்தப்பின் சிவனிடத்திலும், மரித்தப்பின் மகாவிஷ்ணுவினிடத்திலும் அடைவதே அதன் பலனாகும். இதுவரையிலும் அவனவன் ஏதுகேடுகெட்டு சீரழிந்தாலும் விசாரங் கிடையாத இவர்களது வித்தைகளுக்கும் அவர்களது வித்தைகளுக்கும் ஏறுக்குமாறாய் இருக்கின்றபடியால் இவர்களும் ஆரியவர்த்தனத்தார் அவர்களும் ஆரியவர்த்தனத்தாரென்பது சுத்த பிசகேயாகும். ஆதலின் ஐரோப்பியரும் இந்துக்களென்போரும் ஒருக்காலும் ஒத்து வாழ்கமாட்டார்களென்பது திண்ணம். அதற்குப் பகரமாக சென்னையில் டிராம்பே கம்பனியேற்பட்டபோது ஐரோப்பியருடன் சேர்ந்த இந்துக்கள் தற்காலம் அவர்களுடன் சேர்ந்து உழைக்கின்றார்களா இல்லையாவென்பதே ஒத்துவாழார்களென்பதற்கு உற்ற சான்றாகும்.

- 4:44; ஏப்ரல் 12, 1911 -