அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/209-383

205. அய்யர் கிளாசென்பவன் யார் சுப்பிரஸ் கிளாசென்பவன் யார்

சருவ வுயிர்களையுந் தன்னுயிர்போல் பாதுகாப்பவன் அய்யர் கிளாஸ், சகல வித்தையிலும் சிரேஷ்டம் பெற்றவன் அய்யர் கிளாஸ், புத்தியில் மிகுத்தவன் அய்யர் கிளாஸ், கையில் சிறந்தவன் அய்யர் கிளாஸ், சன்மார்க்கத்தில் மிகுத்தவன் அய்யர்கிளாஸ், சாதிபேதமென்னும் பொறாமெய் குணங்களை ஒழித்து மநுகுல ஒற்று மெய் அடையச் செய்பவன் அய்யர்கிளாஸ், தன்தாரமிருக்கப் பிறந்தாரம் இச்சியாதவன் அய்யர் கிளாஸ், அன்னியர் பொருள் ஆளின்றி கிடக்கினும் அதனைக் கைப்பற்றாதவன் அய்யர் கிளாஸ், மதுபானத்தைத் தன் பணச் செலவின்றி ஒருவன் இலவசமாகக் கொடுக்கினும் அதனை கைப்பற்றாதவன் அய்யர்கிளாஸ், சீவயிம்சையைக் கனவிலுங் கருதாதவன் அய்யர்கிளாஸ், தன் மனங் கொதிக்கப் பொய்யைச்சொல்லி பொருள்பறியாதவன் அய்யர்கிளாஸ் இதுவே உலகிலுள்ள விவேக மிகுத்தவர்களால் ஓதிவைத்த சிறந்தப் பெயராகும். இவர்களே மக்களில் மேலானச் செயலையுடையவர்களாதலால் மேன்மக்கள் என்றும் பெரியசாதனமுடையவர்களாதலால் பெரியசாதியோரென்றும், சிறந்த குணமுடையவர்களாதலால் மேதாவியரென்றும், சருவசெயலிலுஞ் சிறந்தவர்களாதலால் பெரியோர்களென்றும், நற்செயலில் சிறந்த புருஷர்களாதலால் மகான்களென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

சருவசீவர்களுள் மனிதரீராயசகலரையும் இம்சிக்குங் குணமுடையவர்கள் டிப்பிரஸ் கிளாஸ், யாதொரு வித்தையுமற்றக் கடைச்சோம்பேறிகள் டிப்பிரஸ் கிளாஸ், ஒருவர் சொன்னதை விசாரிணையின்றி நம்பித் திரிவோர் டிப்பிரஸ் கிளாஸ், மேலும் மேலும் பொருளை சம்பாதித்துப் பிறர்க்குதவாது பூமியில் புதைப்போர் டிப்பிரஸ் கிளாஸ், துன்மார்க்கத்திலேயே தொண்டு பூண்டொழுகுவோர் டிப்பிரஸ் கிளாஸ், சாதிபேதமென்னும் பொறாமெயுடைத்து மனிதரூபிகளை மனிதர்களாகப் பாவிக்காது மிருகங்களினுங் கேடாக நடத்துவோர் டிப்பிரஸ் கிளாஸ். தன் தாரமிருக்கப் பிறர் தாரத்தைக் கெடுப்போர் சுப்பிரஸ் கிளாஸ். அன்னியர் பொருளை அடுத்துக் கைப்பற்றுவோர் சுப்பிரஸ் கிளாஸ், சீவராசிகளைக் கொன்றும் மக்களை வதையாமல் வதைத்தும் துன்பஞ்செய்கின்றவர் டிப்பிரஸ் கிளாஸ், பொய்யைச்சொல்லி வஞ்சித்து பொருள்பறிப்பவர் டிப்பிரஸ் கிளாஸ். இதுவே உலகிலுள்ள விவேகமிகுத்தவர்களால் ஓதிவைத்துள்ள இழிந்த பெயர்களாகும்.

அதாவது மக்களுருகொண்டும் இழிந்த செயலை யடைதலால் கீழ்மக்களென்றும், தாழ்ந்த சாதனமுடையவர்களாதலால் தாழ்ந்த சாதியோரென்றும், பொறாமெய் வஞ்சினம், குடிகெடுப்பு முதலிய துற்செயல்கள் நிறைந்துள்ளபடியால் துன்மார்க்கர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள். இத்தகைய டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்துவோர் மேற்கூறியுள்ள அய்யர் கிளாசென்னும் மேன்மக்களே யாவர். மற்றவர் சீர்திருத்தப்போகின்றார்களென்பது மரக்கட்டையில் இரும்பைத் திருத்துவதற்கொக்கும்.

ஏழைகளை சீர்திருத்துவோர் தனவந்தர்களும் யீகையுள்ளோருமாயிருத்தல் வேண்டும். அவிவேகிகளை சீர்திருத்துவோர் தனவந்தர்களும், விவேக மிகுத்தவர்களுமாயிருத்தல்வேண்டும். அங்ஙனம் தன்னிடம் தனமில்லாது ஏனையோரிடமிரந்து சீர்திருத்துகிறோமென்பதும் தனக்கறிவில்லாது ஏனையோருக்கறிவுறுத்தப் போகின்றேனென்பதும் பேரிழிவேயாம். ஆதலின் ஒவ்வோர் சங்கதிகளையும் ஆய்ந்தோய்ந்து செய்வதே அழகைத்தரும். ஆயாது செய்வது இகழைத்தருமென்பது திண்ணம்.

- 4:47: மே 3, 1911 -