அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/211-383
207. தாழ்ந்த சாதியோரை உயர்த்துதலாமே?
தாழ்ந்த சாதியோரை உயர்த்துவதென்னில் தங்களுக்குள் தாங்களே தாழ்ந்து நிலைகுலைந்திருப்பவர்களை உயர்த்துகின்றதா அன்றேல் சத்துருக்களால் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்திருப்பவர்களை உயர்த்துகின்றதா என்னும் விவரம் யாதும் விளங்கவில்லை. எக்காலுங் கிணற்றிலேயே கிடப்பவனை தூக்கிவிடப் போகின்றோமென்பது வீண்மொழியேயாகும். கிணற்றில் தவறி விழுந்தவனை தூக்கிவிடப்போகின்றோமென்பது விவேகிகள் முதல் அவிவேகிகள் வரை ஒப்புக்கொள்ளுவதாகும். கிணற்றில் ஒருவனை தாங்களே தள்ளிவிட்டு தாங்களே தூக்கிவிடப்போகின்றோமென்பாராயின் சகலருக்கும் அஃதோர் விந்தை மொழியும் சிந்தை மொழியாகத் தோன்றுமேயன்றி அன்பின் மிகுத்த சொந்த மொழியென்று நம்பமாட்டார்கள்.
காரணமோவென்னில் ஒருவன்மீது தங்களுக்குள்ள வஞ்சினத்தாலும், பொறாமெயாலும் அவனைக் கிணற்றில் தள்ளிவிட்டு மற்றவர்கள்மீது குறைகூறாமல் தங்களை மெச்சுதற்கு தள்ளப்பட்டவனைத் தூக்கிவிடப் போகின்றோமென்னும் சொல்லும் செயலுமானது அவன் இன்னும் உயிருடனிருக்கலாமா மற்றவர்கள் வந்தும் அவனைத் தூக்கிவிடலாமா, அவனாயினுந் தன்னிற்றானே கிணற்றைவிட்டேறி வந்துவிடலாமா